டெல்லி ஜந்தர்மந்தரில் 14 நாட்களையும் கடந்து தமிழக விவசாயிகள் கோவணத்துடன் போராடிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் வெட்கம் கெட்ட, சூடுசுரணையற்ற மத்திய அரசும், மாநில அரசும் இதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், மேற்கொண்டு எப்படி விவசாயிகளை விவசாயத்தில் இருந்து விரட்டி அடிப்பது என்பதிலேயே குறியாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன. தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள், கண்மாய்கள் என அனைத்தையும் ஆக்கிரமித்து ஆளும்வர்க்கமும், அதிகார வர்க்கமும் தங்களுக்குள் பட்டா போட்டுக் கொள்ள, குடிப்பதற்குக் கூட குடிநீர் இன்றி மக்கள் தினம் தினம் செத்துப் பிழைக்கின்றார்கள். தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாதவகையில் கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றது. பார்த்த இடமெல்லாம் பொட்டல் காடுகளாக காட்சியளிக்கின்றது. விவசாயத்தைத் தவிர வேறு எந்தத் தொழிலும் தெரியாத விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றார்கள். கால்நடைகளுக்குத் தீவனம் கூட கிடைக்காமல் கிடைத்த விலைக்கு அதை அடிமாடுகளாக சந்தையில் விற்று வருகின்றார்கள். இன்னும் வரும் காலங்களில் ஒரு வேளை சாப்பாட்டிற்கே கையேந்தும் நிலையை தமிழக விவசாயிகள் எதிர்நோக்கி காத்திருக்கின்றார்கள்.

TN farmers at delhi 1

 இப்படி ஒரு அவலமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டுதான் தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்திவரும் போராட்டத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்வதற்கு இனி வேறு எந்த வழியும் இல்லை என்ற சூழ்நிலையில்தான் அவர்கள் ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் முகமாக அங்கு ஒன்றுகூடி போராடிக் கொண்டு இருக்கின்றார்கள். விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உரிய வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு விதமான போராட்ட வடிவங்களை அவர்கள் கையாண்டு போராடி வருகின்றார்கள். கழுத்தில் மனித மண்டை ஓடுகளையும், தூக்குக் கயிறுகளையும் மாட்டிக்கொண்டும், ஒப்பாரி போராட்டங்களையும், அவர்கள் செய்து வருகின்றார்கள். இந்நிலையில் வெள்ளியன்று திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு விவசாயிகள் மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்கள். இத்தனையும் நடந்த பின்பும் மத்திய அரசும் மாநில அரசும் வாய்மூடி கள்ளமெளனம் சாதித்து வருகின்றன. மத்திய அரசு போராடும் விவசாயிகளைப் பற்றி கவலைப்படாமல் அவர்களை நிரந்தரமாக கொல்வதற்கு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்டத்தில் கையெழுத்திட்டு இருக்கின்றது. மாநில அரசோ ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மன்னார்குடி மாஃபியாவின் தொப்பியை எப்படி வெற்றிபெற வைப்பது, தலைக்கு எவ்வளவு பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குவது என விவாதித்துக் கொண்டு இருக்கின்றது.

யாருமே கண்டுகொள்ளாத நிலையில் நிராதரவாக தமிழக விவசாயிகள் விடப்பட்டு இருக்கின்றார்கள். மத்திய அரசும், மாநில அரசுகளும் விவசாயிகளை ஒரு பொருட்டாகவே நினைப்பது கிடையாது. அப்படி விவசாயிகளின் மேல் கொஞ்சமாவது கரிசனமாக நடந்துகொண்டிருந்தால் இத்தனை லட்சம் விவசாயிகள் இந்தியாவில் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். 2014 ஆம் ஆண்டைவிட 2015 ஆண்டு விவசாயிகள் தற்கொலை 42 % அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2014 ஆம் ஆண்டு 5650 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டு 8007 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். பி.ஜே.பி ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 3030 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். இது மொத்த தற்கொலையில் 37.8 சதவீதம் ஆகும். இரண்டாவது இடத்தில் தெலுங்கான மாநிலம் உள்ளது. இங்கு 1358 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். அடுத்து 3வது இடத்தில் கர்நாடக மாநிலம் உள்ளது. இங்கு 1197 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். சட்டீஸ்கரில் 854 விவசாயிகளும், மத்திய பிரதேசத்தில் 516 விவசாயிகளும் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். தெலுங்கானா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் ஆகிய 6 மாநிலங்களில் மட்டும் 94 சதவீத தற்கொலைகள் நடந்துள்ளன.

 மேலும் விவசாயிகள் தற்கொலையைப் போன்றே விவசாயக் கூலிகளின் தற்கொலையும் அதிகரித்துள்ளது. அதிலும் பி.ஜே.பி ஆளும் மகாராஷ்டிராதான் முன்னிலையில் உள்ளது. அங்கு 1261 விவசாயக் கூலிகளும், மத்தியப் பிரதேசத்தில் 709 விவசாயக் கூலிகளும், தமிழ்நாட்டில் 604 விவசாயக் கூலிகளும் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் என அனைவரையும் சேர்த்து 2014ம் ஆண்டு 12360 பேரும், 2015ம் ஆண்டு 12602 பேரும் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். மேலும் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் 72.6 சதவீத விவசாயிகள் 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்கள். அது மட்டும் அல்லாமல் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் 80 சதவீதம் பேர் வங்கிகளில் வாங்கிய கடனை கட்டமுடியாமல் வங்கிகள் கொடுத்த கடுமையான நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கந்துவட்டி, மைக்ரோ பைனான்ஸ் போன்றவற்றில் கடன் வாங்கிய விவசாயிகளை விட வங்கிகளில் கடன் வாங்கிய விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்துகொண்டது உள்ளபடியே வங்கிகள் யாருக்காக செயல்படுகின்றன என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

 கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிலவரப்படி பாரத ஸ்டேட் வங்கியின் வராக்கடன் மட்டும் 5.59 லட்சம் கோடியாகும். அம்பானிக்கும், அதானிக்கும், மல்லையாவுக்கும் கதவைத் தட்டி கடன் கொடுத்துவிட்டு, நாயைப்போல வாசலில் காத்திருந்து கெஞ்சிக் கூத்தாடி கூட கடனை வசூல் செய்யத் திராணியின்றி இருக்கும் பொதுத்துறை வங்கிகள், ஏழை விவசாயிகளை கடும் நெருக்கடிக்கு உட்படுத்தி, அவர்களின் மானமரியாதையை வாங்கி, தூக்குக்கயிறை நோக்கி ஓடவைக்கும் அயோக்கியத்தனத்தை செய்கின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் விவசாயிகள் குறைந்த பட்சம் உயிரோடாவது இருக்க வேண்டும் என்றால், பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்வது மட்டுமே ஒரே வழியாக இருக்கமுடியும். பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் பெரும் பணக்காரர்களுக்கு லட்சக்கணக்கான கோடிகளை மானியமாக வழங்கி அவர்களின் காலை நக்கி, மகிழும் ஆளும்வர்க்கம் விவசாயிகளைத் தூக்குக்கயிறுக்குக் காவு கொடுத்து மகிழ்கின்றன.

TN farmers at delhi 2

தமிழ்நாட்டில் நீராதரமாக உள்ள ஆறுகள் அனைத்தும் மணல்கொள்ளையர்களின் பிடியில் மாட்டி தொடர்ந்து சுரண்டப்படுகின்றன. பல ஆறுகள் சுத்தமாக அழிக்கப்பட்டுவிட்டன. இதை எல்லாம் எந்தக் கேடுகெட்ட அயோக்கியர்கள் செய்தார்களோ, அவர்களையே தமிழக மக்கள் ஆட்சிப் பீடத்தில் அமர வைக்கின்றார்கள். அதைத் தட்டிக்கேட்கும் அரசியல் கட்சிகளை மக்களே டெபாசிட் இழக்க வைக்கின்றார்கள். பிறகு தண்ணீர் வரவில்லை என்று குடத்தைத் தூக்கிக்கொண்டு, அதே அயோக்கியர்களுக்கு எதிராக சாலையில் அமர்ந்து போராட்டம் செய்கின்றார்கள். இந்த முரண்பட்ட அரசியல் கண்ணோட்டம் தான் இன்று தமிழக மக்களைத் தொடர்ந்து அழித்து வருகின்றது. யார் விவசாயிகளுக்கு நண்பன், யார் விவசாயிகளுக்கு எதிரி என்பதைக்கூட அவர்களால் இன்னும் அறிய முடியவில்லை. பொறுக்கித் தின்பதற்காகவே அரசியல் கட்சி நடத்தும் கழிசடைகளை அவர்கள் இன்னும் தங்களுடைய மீட்பானாக நினைக்கும் போக்கு இருந்துவருகின்றது. தமிழக மக்களிடம் உள்ள இந்த அரசியல் அறியாமையை இங்கிருக்கும் முற்போக்கு இயக்கங்கள் எவ்வளவு விரைவாக ஒழிக்கின்றார்களோ அந்த அளவு ஒரு சிறந்த முற்போக்கு அரசியல் பாரம்பரியத்தை நம்மால் தமிழ்நாட்டில் வளர்த்தெடுக்க முடியும்.

 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி உச்சநீதி மன்றம் உத்திரவிட்ட பிறகும், அதை அமைக்காமல் ரவுடியைப் போல நடந்துகொள்கின்றது மத்திய அரசு. மேலும் வறட்சி நிவாரணமாக 39565 கோடி கேட்டால், வெறும் 1748 கோடியை பிச்சையாகப் போடுகின்றது. காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடச் சொல்லி உச்சநீதி மன்றம் உத்திரவிட்டாலும், முடியாது என்று அடாவடித்தனம் செய்கின்றது கர்நாடகா. தமிழக அரசு என்ற ஒன்று செயல்படுகின்றதா என்பதே தெரியவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் என்னதான் செய்வார்கள் தமிழக மக்கள். “சரி, உன்னால முடியலைனா தமிழ்நாட்ட தனியா பிரிச்சு கொடுத்திருங்க” என்று யாராவது சொன்னால் அவர்களை தேசத்துரோகி என்று பார்ப்பன நரிகள் ஊளையிடுகின்றன. தமிழக மக்கள் அழிந்து நாசமாய்ப் போக வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம் மட்டும் அல்லாமல், மாநில அரசின் நோக்கமாயும் உள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் மாநிலம் தழுவிய போராட்டமாக மாற்றப்பட வேண்டும். மாணவர்களும், இளைஞர்களும் வாழ்வாதாரமான விவசாயித்தைக் காப்பாற்ற களத்தில் இறங்கிப் போராட வேண்டும். தமிழ்மக்களின் மீது கொஞ்சம் கூட அக்கறையில்லாத கொள்ளைக்கூட்டத்திற்கு எதிராகப் போராடுவதைத் தவிர நமக்கு வேறு எந்த வழியும் இப்போதைக்கு இல்லை.

- செ.கார்கி