அரசு பயங்கரவாதம் அதன் கடைசி எல்லையைத் தொட்டிருக்கின்றது. ஒரு பக்கம் மனுவையும், மற்றொரு பக்கம் தேசியத்தையும் கலந்து முதலாளித்துவ தேசியமாக வர்க்க சுரண்டலை முதன்மைப்படுத்தும் ஒரு கேடுகெட்ட பார்ப்பனிய ஆட்சியில் நிலபிரபுத்துவ தன்மைவாய்ந்த கொடிய தீர்ப்பை ஆளும் வர்க்கத்தின் அமைப்பான நீதிமன்றம் வழங்கியுள்ளது. பொதுவாக நீதித்துறையும், நிர்வாகத்துறையும் தனித்தனியாக செயல்படுவதாக நாம் நம்ப வைக்கப்பட்டிருந்தாலும் இரண்டும் ஒன்றை ஒன்று ஒத்திசைந்துபோகும் தன்மை வாய்ந்தது. அரச பயங்கரவாதத்தின் துணைக்கருவியான நீதிமன்றத்தின் உண்மையான பணி, அரசு மேற்கொள்ளும் அனைத்து அடாவடித்தனமான மக்கள் விரோத செயல்களுக்கும் சட்ட ரீதியான அங்கீகாரத்தை வழங்குவதுதான். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதெல்லாம் இந்திய நீதி அமைப்பைப் பொருத்தவரை பாரபட்சம் பார்க்காமல் அனைவரிடமும் ஊழல் செய்வதற்கு மட்டுமே பயன்படுகின்ற வெற்று உத்திரவாதமாக மட்டுமே உள்ளது.

saibaba professor

 சமூகத்தின் வளங்களைப் பயன்படுத்துவதில் கடைகோடியில் இருக்கும் எளிய மக்களான தலித்துகள் மீது இந்திய அரசு ஆண்டாண்டு காலமாக தனது கட்டற்ற வன்முறையைப் பிரயோகித்து வருகின்றது. அவர்களுக்காக யார் குரல் கொடுத்தாலும் அவர்களை தீவிரவாதிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் முத்திரை குத்துகின்றது. பன்னாட்டு பெருந்தொழில் நிறுவனங்களின் இலாப வெறிக்காக இந்திய அரசு அப்பாவி பழங்குடியின மக்களை, அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வந்த காடுகளில் இருந்து அடித்து விரட்டுகின்றது. அவர்களது வாழ்வாதாரத்தை அழித்தும், குடிசைகளை எரித்தும், பழங்குடியினப் பெண்கள் மீது பாலியல் அத்துமீறலை நிகழ்த்தியும், அவர்களைக் கொன்று போட்டும் இந்த அரசு தனது கோரமுகத்தைக் காட்டி அவர்களை வலுக்கட்டாயமாக காடுகளில் இருந்து வெளியேற்றுகின்றது. அப்படி காடுகளில் இருந்து வெளியேறிய அந்த மக்களை உள் நாட்டிலேயே அகதிகளாக்கி, ஒரு வேளை சோற்றுக்காக கையேந்தும் பிச்சைக்காரர்களாய் மாற்றி வைத்திருக்கின்றது. அரசைப் பொருத்தவரை இதுவும் கூட நாட்டைக் காப்பாற்ற நடத்தப்படும் போர்தான். இந்தியாவின் இயற்கை வளங்களை பன்னாட்டு தொழிற்நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பது என்பது கூட தேசபக்தியின் ஒரு வெளிப்பாடுதான்.

 இந்திய அரசின் இந்தத் தேசபக்தியை எதிர்த்துப் போராடிய தேசவிரோதிதான் பேராசிரியர் சாய்பாபா அவர்கள். 90 சதவீத மாற்றுத்திறனாளியான அவர் சாதாரண மனிதர் அல்ல. இந்திய அரசின் பார்வையில் மிகவும் மோசமான தீவிரவாதி. இந்தத் தீவிரவாதி செய்த தவறு என்னவென்றால், மாவோயிஸ்ட் வேட்டை என்ற பெயரில் தண்டகாரண்ய காடுகளில் இந்திய அரசு நடத்திய அயோக்கியத்தனங்களை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு எதிராக பழங்குடியின மக்கள் மத்தியில் செயல்பட்டு, அவர்களைக் காடுகளில் இருந்து வெளியேற்றியது. இதுதான் சாய்பாபா செய்த தேசவிரோதச் செயல்கள். இந்திய அரசால் பழங்குடியின மக்களை கொல்வதற்காகவே உருவாக்கப்பட்ட சல்வாஜூடும் என்ற கொலைகார பாசிசப் படை தண்டகாரண்ய காடுகளில் நடத்திய அட்டூழியங்களை உண்மையென்று ஒப்புக்கொண்டு உச்சநீதி மன்றமே அதைக் கலைப்பதற்கு உத்திரவிட்டது. ஆனால் அதே சல்வாஜூடும் குண்டர்படையின் அட்டூழியங்களுக்கு எதிராகப் போராடிய, அதைப் பற்றி மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திய சாய்பாபாவிற்கு மகாராஷ்டிர மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கின்றது. அவருக்கு மட்டும் அல்லாமல் அவருக்கு உதவியதாக ஹெம்மிஸ்ரா, மகேஷ் திர்கே, பாண்டு நாரோட்டி, பிரசாந்த் ராஹி ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விஜய் திர்கேவுக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டடுள்ளது. அரசு குண்டர் படைகளை உருவாக்கி மக்களைக் கொல்வதை உச்சநீதி மன்றமே ஏற்றுக்கொண்டிருக்கும் போது அதற்கு எதிராகப் போராடியது எப்படி குற்றமாகும் என்று தெரியவில்லை.

 தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பில் உறுப்பினராக இருந்தார், மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு ஆள் பிடித்துக் கொடுத்தார், உணவுப் பொருட்களை சப்ளை செய்தார் என பல்வேறு குற்றசாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2014 ஆண்டு மே மாதம் 9-ம் தேதி கைது செய்யப்பட்ட பேராசிரியர் சாய்பாபா நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு கடும் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தக் கைதுக்குக் காவல்துறை கூறிய காரணம் சாய்பாபாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென்டிரைவில் மாவோயிஸ்ட் தலைவர்கள் சிலரின் செய்தியாளர்களுக்கான அறிக்கை இருந்ததாகவும், மாவோயிஸ்ட் தலைவர்கள் சிலருக்கு சாய்பாபா எழுதிய கடிதம் இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் கடைசிவரை சாய்பாபா அவர்களிடமிருந்து கைப்பற்றியதாக சொல்லப்பட்ட ஆவணங்களை போலீசார் காட்டவே இல்லை.

 உண்மையில் அரசுக்கு சாய்பாபாவை முடக்க வேண்டும் என்பது மட்டுமே ஒரே குறிக்கோளாக இருந்துள்ளது. கைது செய்யப்படுவதற்கு முன்பே அவர் பலமுறை காவல்துறையால் மிரட்டப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய செயல்பாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளார். அவர் செய்ததெல்லாம் பழங்குடியின மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்ததுதான். அவர்களுக்கு இந்திய அரசு காடுகளில் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எப்படி நாளை அவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும் எனப் புரிய வைத்ததுதான். இப்படிப்பட்ட புரிதல் தான் காடுகளை அபகரிக்க வந்த பன்னாட்டு தொழிற்நிறுவனங்களுக்கு எதிராக அந்த மக்களைப் போராட உற்சாகப்படுத்தியது. இது பன்னாட்டு தொழிற்நிறுவனங்களிடம் பெரும் தொகையைக் கமிசானக வாங்கிக்கொண்டு இந்தியாவின் வளங்களைச் சூறையாட அனுமதிக்கும் ஆளும் வர்க்க கைக்கூலிகளுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது. பல ஆயிரம் கோடிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவாகியது. அது மட்டும் அல்லாமல் பேராசிரியர் சாய்பாபாவிற்கு பழங்குடியின மக்களிடையே இருக்கும் செல்வாக்கு அளப்பரியது. அவர்கள் உதவி இல்லாமல் சாய்பாபாவால் இயங்கியிருக்கவே முடியாது. இதை அவரே பலமுறை சொல்லி இருக்கின்றார். அவர்கள் சாய்பாபவை தங்களை மீட்க வந்த மீட்பானாகப் பார்த்தார்கள். அவரைத் தோள்களில் சுமந்துகொண்டு தங்கள் பகுதியில் வலம் வந்தார்கள். 90 சதவீதம் மாற்றுத்திறனாளியான சாய்பாபாவை தங்களில் ஒருவராக அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதுதான் இந்திய அரசுக்கு பேராசிரியர் சாய்பாபா மீது அச்சம் ஏற்படக் காரணம்.

 சாய்பாபா போன்றவர்களை இந்தத் தீர்ப்பு எந்த வகையிலும் அச்சுறுத்த முடியாது என்பது நம்மால் புரிந்து கொள்ளக்கூடியதுதான். தன்னுடைய 90 சதவீத ஊனத்தை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், சக்கர நாற்காலி இன்றி இயங்க முடியாத நிலையிலும் இந்திய சமூகத்தில் கடைகோடி எளிய மனிதர்களுக்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்த அந்த மனிதரை இந்தத் தீர்ப்பு நிச்சயம் முடக்கிவிடாது. இதை எல்லாம் எதிர்பார்த்துதான் பொதுவாழ்வில் சாய்பாபா போன்றவர்கள் பணியாற்றுகின்றார்கள். நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், பொருளாதார வசதியுடனும் உள்ள பல பேர் அரசின் பயங்காரவாத செயல்களுக்கு ஜால்ரா அடிப்பவர்களாய், பழங்குடியின மக்கள் மீது அரசு நடத்தும் வன்முறை வெறியாட்டத்தைக் கண்டும் காணாத கோழைகளாய் அற்பப்பிறவிகளாய் வாழும் போது அவரது துணிச்சல் அசாத்தியமானது.

 சாய்பாபா தன்னுடைய வாழ்க்கையை எப்போதுமே போராட்டக் களமாகவே வைத்துக்கொண்டவர். அரச பயங்கரவாதத்தைக் கண்டு அஞ்சாத களப்போராளி. வெளியே புரட்சி பேசி, உள்ளே வேசித்தனமாக நடந்து கொள்ளும் ஊரை ஏமாற்றும் பல போலியான புரட்சியாளர்களுக்கு மத்தியில் தன்மீது அரசால் ஏவப்பட்ட கடும் சித்தரவதைக்கு மத்தியிலும் தன்னுடைய நேர்மையை நிரூபித்தவர். இது மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பு என்பதால் இன்னும் இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கூடிய விரைவில் தோழர் சாய்பாபா அவர்கள் வெளியே வருவார் என நாம் நம்புவோம். இல்லை அப்படி நடக்காமல் கூட போகலாம். எப்படி இருந்தாலும் இது போன்ற தீர்ப்புகள் போராளிகளை ஒருநாளும் அச்சுறுத்தாது என்பதை ஆளும் வர்க்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

மாவோயிஸ்ட்களை உருவாக்குவது சாய்பாபா போன்றவர்கள் அல்ல. அரசு தான் அவர்களை உருவாக்குகின்றது. சில நூறு பேர்களாக இருந்த மாவோயிஸ்ட்களை இன்று லட்சக்கணக்கில் பெருகச் செய்தது அரசின் பசுமை வேட்டையும், பழங்குடியின மக்களைக் கொல்வதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஆயுதக் குழுக்களும் தான். அரசு ஒருபோதும் தன்னுடைய வர்க்கச் சார்பை மாற்றிக் கொள்ளப் போவதுகிடையாது. அது எப்போதுமே பெரும்முதலாளிகளின் ஏவல் நாயாகவே செயல்படுகிறது. எனவே சாய்பாபா போன்றவர்களை முடக்கிவிட்டால் மாவோயிஸ்ட்களை அழித்துவிடலாம் என அரசு நினைப்பது கேலிக்கூத்தானது ஆகும்.

- செ.கார்கி