neduvasal protest

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி 15 நாட்களுக்கும் மேலாக அந்த மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த நெடுவாசல் கிராமப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையில் ஆய்வு நிலையில் உள்ள இந்தத் திட்டத்திற்கு மாநில அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது என தெரிவிக்கப்பட்டதாக போராட்டக்குழு தலைவர் வேலு கூறியிருக்கின்றார். இருந்தாலும் போராட்டம் தற்போதைக்கு விலக்கிக் கொள்ளப்படாது என்பது தெரிகின்றது. போராடும் கிராம மக்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று, நிரந்தரமாக இந்தத் திட்டத்தை கைவிடும்வரை போராட்டத்தை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள். மேலும் நெடுவாசலைச் சுற்றியுள்ள கோட்டைக்காடு, வாணக்கன்காடு, வடகாடு, கல்லிக்கொல்லை, கருக்காகுறிச்சி, கருநல்லாண்டார் கொல்லை ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்பது இந்த ஊர்களில் ஓ.என்.ஜி.சி கைப்பற்றியுள்ள நிலங்களை திரும்ப ஒப்படைக்கக் கோரியும் அவர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

பெட்ரோல் எடுக்கின்றோம், மண்ணெண்ணெய் எடுக்கின்றோம், அதில் உங்களுக்கும் பங்கு தருகின்றோம் என சாமானிய மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, 1990களில் இருந்தே ஓ.என்.ஜி.சி அவர்களின் நிலங்களை ஏமாற்றி குத்தகைக்கு எடுத்துள்ளது. கொடுக்காதவர்களை மிரட்டியும், சட்டத்தின் துணைகொண்டும் பணிய வைத்திருக்கின்றது. நிலத்தடி நீரை மட்டுமே முக்கிய ஆதாரமாகக் கொண்டு விவசாயம் நடைபெறும் பூமி என்பதால் நெடுவாசல் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள் இந்தத் திட்டத்தை அனுமதித்தால் ஒட்டுமொத்த நிலத்தடி நீரும் பறிபோய் நிலம் பாலைவனமாக மாறிவிடும் என்ற அச்சத்தில் விழிப்புணர்வு பெற்று, இப்போது இந்தத் திட்டத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி இருக்கின்றார்கள். போராடும் மக்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இருந்து ஆதரவுக் குரல்கள் கிடைத்து வருவது மகிழ்ச்சி அளிக்கின்றது. குறிப்பாக பல கல்லூரிகளில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, போராட்டங்களை நடத்தியுள்ளனர். நேற்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு நடந்துள்ளது.

ஆனால் இதிலே மிக வருத்தமளிக்கும் செய்தி என்னவென்றால், இந்தப் போராட்டமும் அரசியல் கட்சிகளின் தலைமையை ஏற்காமல் நடைபெறுவதுதான். நிச்சயமாக நம்மூர் மக்களுக்கு இது தெரியாத ஒன்று. அவர்கள் எந்தப் பிரச்சினை என்றாலும் அரசியல் கட்சிகளைச் சார்ந்தே போராடப் பழக்கப்பட்டவர்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அளவில் புற்றீசல் போல பெருகி இருக்கும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இந்தப் போக்கை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகின்றன. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரசு அதை நிறைவேற்றும் வரை போராடும் வழக்கமான பாணி போராட்டத்தில் இருந்து ஒற்றை முழக்கத்தை முன்வைத்து அரசியல் கட்சிகளின் துணையின்றி தக்கையாக நடைபெறும் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. நிச்சயமாக இந்தப் போக்கு இங்கிருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் இருத்தலுக்கும் அச்சுறுத்தலானதாகும். தேர்தல் பாதையில் இருக்கும் கட்சிகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் தேர்தல் அரசியலில் இருந்து விலகி, மக்களின் நலன் சார்ந்து மட்டுமே செயல்படும் அமைப்புகளையும் புறக்கணிப்பது என்பது அபாயகரமான போக்காகும்.

கூடங்குளம் போராட்டத்தில் இருந்து தற்போது நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டம் வரை போராடும் மக்களை என்.ஜி. ஓக்கள் தங்கள் வசப்படுத்தி, அந்தப் போராட்டத்தை நீர்த்துப்போக வைத்துள்ளன. தற்போது அதே சக்திகள் நெடுவாசல் போராட்டத்தை கபளீகரம் செய்து, அதை அரசியல் அற்ற போராட்டமாக மாற்றி, இங்குள்ள புரட்சிகர சக்திகளை ஒழிக்கும் சதிவேலையில் ஈடுபட்டுள்ளன. போராட்டத்தின் வெற்றியை மட்டுமே ஒரு அளவீடாக வைத்து, நாம் அரசியல் கட்சிகளைப் பார்க்கத் தேவையில்லை. வேண்டும் என்றால் அதை ஒரு காரணியாக எடுத்துக் கொள்ளலாம். சில சமயம் கடுமையான மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி நிச்சயமாக இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது தொலைநோக்குப் பார்வையில் தங்களது இருத்தலுக்கே அச்சுறுத்தல் என்ற நிலையை ஏற்படுத்தும் என ஆளும் வர்க்கம் நினைக்கும் போது, அவர்களே அது மாதிரியான திட்டங்களை செயல்படுத்துவதில் இருந்து பின்வாங்கிவிடுவார்கள். இல்லை, அது போன்று எதுவும் நடக்காது என நினைத்தால் அரசு பயங்காரவாதத்தைப் பயன்படுத்தி அதை ஒடுக்குவார்கள். பிரச்சினை என்னவென்றால் மக்களிடம் இருக்கும் இந்தப் போராட்ட உணர்வை எப்படி இல்லாமல் செய்வது என்பதுதான்.

அரசியல் கட்சிகளைப் போராட்ட களத்தின் உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லும் நபர்களை நாம் நிச்சயம் சந்தேகக் கண்கொண்டுதான் பார்க்க வேண்டும். யார் அவர்கள்? அவர்களின் பின்னணி என்ன? என்பது பற்றி உடனே அறிந்து மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும். தேர்தல் அரசியல் கட்சிகளின் மீதுள்ள மக்களின் வெறுப்பு, புரட்சிகர சக்திகளின் பின்னால் அவர்கள் அணிதிரள்வதற்கு இட்டுச் சென்றுவிடக் கூடாது என்பதுதான் உலகப் பெருமுதலாளிகளின் ஏவல் நாய்களான அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் நோக்கம். அதற்காகத்தான் இப்படி போராட்டத்தின் முதல் கட்டத்திலேயே அழையா விருந்தாளியாக உள்ளே நுழைந்து, அதை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுகின்றன. அந்த மக்களையும் தங்களது கோட்பாடுகளுடன் ஒருங்கிணைத்து விடுகின்றன.

neduvasal protest 400

ஒரு கட்டத்தில் இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தங்களது கைக்கூலிகளை அவர்களே அரசியல் கட்சிகளாக பரிணமிக்க உற்சாகப்படுத்துகின்றன. அப்படித்தான் ஊழலுக்கு எதிராகப் போராடுவதாய் சொல்லி மக்களிடம் செல்வாக்கு பெற்ற கேஜ்ரிவால் போன்றவர்கள் ஆம் ஆத்மி ஆரம்பித்து, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. தமிழ்நாட்டில் கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்ட உதயகுமார் போன்றவர்கள் பின்னாளில் ஆம் ஆத்மியில் இணைந்தது, பின்பு அவரே பச்சைத் தமிழகம் என்ற கட்சியை ஆரம்பித்ததும் வரலாறு. மேலும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சிகளை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று சொன்ன நபர்கள் அதற்குக் கிடைத்த ஆதரவைப் பார்த்து, “என் தேசம் என் உரிமை” என்ற கட்சியை ஆரம்பித்து இருக்கின்றார்கள். இதே நிலை நீடித்தால் இனி தமிழ்நாட்டில் எந்த ஒரு மக்கள் பிரச்சினைக்கான போராட்டத்தையும் நடத்த அரசியல் கட்சிகள் தேவையில்லை என்ற நிலை ஏற்படும். அப்படியே ஒரு தேவை வந்தால் என்.ஜி.ஓக்களே அந்த அவதாரத்தையும் எடுக்கும்.

எனவே தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் அவை தேர்தல் பாதையில் இயங்கும் கட்சிகளாக இருந்தாலும் சரி, தேர்தல் பாதையைப் புறக்கணிக்கும் கட்சிகளாக இருந்தாலும் சரி, உடனடியாக இந்தப் போக்கை மனதில் வைத்து, தங்களது அரசியல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் காறித்துப்பும் அளவுக்கு உள்ள தங்களது கேவலமான அரசியல் வரலாறுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, அவை மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி போராட வேண்டும். அவர்கள் என்ன காரணத்திற்காக ஒதுக்கித் தள்ளுகின்றார்களோ, அந்தக் காரணங்கள் இல்லாமல் செய்ய வேண்டும். இது யாருக்குப் பொருந்துகின்றதோ, இல்லையோ, தேர்தல் அரசியல் சாராத கட்சிகளுக்கு மிகவும் பொருந்தும். ஒவ்வொரு மக்கள் போராட்டத்தையும் முழுவதுமாக உள்வாங்கிக்கொண்டு, அவர்களது கோரிக்கைகள் வென்றெடுக்கும் வரை போராட்டத்தை வளர்த்தெடுத்து அதற்கு நிரந்தரத் தீர்வை பெற்றுத் தர வேண்டும். அப்போதுதான் மக்கள் நம்புவார்கள், தாங்களாகவே முன்வந்து போராட உங்களை அழைப்பார்கள். இல்லை என்றால் போராட்டக் களத்திற்கு வெளியே அந்நியப்பட்டு ஒரு பார்வையாளனாய் அறிக்கைவிட்டு ஆதரவு கொடுப்பதைத் தவிர உங்களால் ஒன்றும் செய்துவிட முடியாது.

இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதற்கு எதிரான போராட்டமாக இருக்கட்டும், ஆதிக்க சாதி வெறியர்களுக்கு எதிரான போராட்டமாக இருக்கட்டும், சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான போராட்டமாக இருக்கட்டும், அடிப்படைவாதிகளுக்கு எதிரான போராட்டமாக இருக்கட்டும், இல்லை நாசகார பன்னாட்டு தொழிற்நிறுவனங்களுக்கு எதிரான போராட்டமாக இருக்கட்டும், அனைத்திற்குமே இது பொருந்தும். தங்களது இருந்தலை அவை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால், நிச்சயம் தங்களது நேர்மையை மக்களுக்கு அவை நிரூபித்தால் மட்டுமே அது முடியும். இல்லை மேலே கூறிய அனைத்திற்கும் உடந்தையாக இருந்துகொண்டு ஊரை ஏமாற்றும் கழிசடைகளாக, பொறுக்கித் தின்பதையே கட்சியின் கொள்கையாக வைத்திருந்தால் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தில் நீங்கள் அடித்துச் செல்லப்படுவதை நிச்சயமாக உங்களால் தடுக்க முடியாது.

- செ.கார்கி