பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போவதோ நாங்கள் சாவதோ என்றான் பாரதி. தமிழகத்தில் அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. மீத்தேன் என்ற திட்டத்தை மாற்றி ஹைட்ரோ கார்பன் என்று பெயர் வைப்பதன் மூலம் மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறது. தமிழகத்தை பாலைவனமாக்கத் துடிக்கிறது மத்திய அரசு.

பெயரை மாற்றினால் தெரியாது என்று எவரேனும் நினைத்தால், அவர்கள் முட்டாள்களின் தேசத்தில் முழுநேர ஊழியர்கள் என்றுதான் பொருள். ஆளை மாற்றியவர்கள் கொண்டையை மறைக்க மறந்த கதை போன்றது.

Hydrocarbon plan approval

பாஜக ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலை பேஷனாகிவிட்டது என்று அமைச்சர் ஒருவர் பேசினார். மன்மோகன் சிங் ஆட்சி காலத்திலோ விவசாயிகளே, விவசாயத்தை விட்டு வெளியேறுங்கள் என்றார்கள்.

கூடங்குளம், கெயில், நியூட்ரோனோ, மீத்தேன் இந்த வரிசையில் இப்பொழுது ஹைட்ரோ கார்பன்.

பாஜகவின் தலைவர்களில் ஒருவராக இருந்த மல்லிகார்ஜுனப்பா-வின் "ஜெம் லபோரட்டரி" என்கிற நிறுவனத்திற்குத்தான் நெடுவாசலில் அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவர் இரண்டு முறை எம்.பி யாகவும் இருந்திருக்கிறார்.

மத்திய சுற்றுச்சுழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே "இந்தத் திட்டத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து பொது மக்களின் கருத்தை அறிய கூட்டம் நடத்தப்படும். பொது மக்கள் கூறும் கருத்துக்களின் அடிப்படையிலேயே சுற்றுச் சூழல் அமைச்சகம் தன்னுடைய பரிந்துரையை அளிக்கும்" என்று கூறுகிறார்.

1965லேயே தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெட்ரோலியம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டு முதல் நரிமணம் பகுதியில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இங்கிருந்து எரிவாயு மற்றும் பெட்ரோலியம் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மூவாயிரம் அடிக்கு மேல் துளை போட்டு, அதற்குள் அறுநூற்றுக்கும் மேற்பட்ட வேதியியல் பொருட்களை கலந்து வேகமாக அனுப்பும்போது எரிவாயு, பெட்ரோலியம் போன்றவை வெளியே எடுக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள நரிமணம் உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் தாராளமாகக் கிடைக்கிறது. திருவாரூர் மாவட்டம் குத்தாலத்தில் கேஸ் கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் இவ்வளங்களை கொள்ளையிட்டுச் செல்கின்ற இந்திய அரசு, கச்சா எண்ணெய் விலை உயர்வதைக் காரணமாகக் காட்டி இதே பெட்ரோலுக்கு அதிகமாக விலையை வைத்து நம்மிடையே விற்பனை செய்கின்றன. எவ்வளவு பெரிய மோசடி இது.

மேகங்கள் குளிர்ந்த காற்று அடிக்கும் போதுதான் மழை வரும். நூற்று ஐம்பது அடி உயரத்திற்கு மேல் குழாய்களை நிறுத்தி அதன் மூலம் வாயுக்களை எரியவிடுகிறார்கள். அப்படி எரிய விடும் போது காற்றில் வெப்பம் அதிகரித்து மழை பெய்வதைக் குறைத்து விடுகிறது.

தஞ்சை டெல்டா மாவட்டங்களில் மழை பொய்த்துப் போனதற்கு நரிமணம் உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோலியம் எடுப்பதும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதனால் தனியார் நிறுவனங்களுக்கு நாற்பதாயிரம் கோடி ரூபாய் இலாபம் கிடைக்கும் என்றும், அதில் அரசுக்கு ஒன்பதாயிரத்து அறுநூறு கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் கிட்டத்தட்ட மூன்று மடங்கு இலாபம் சம்பாரிக்கின்றன. இதில் ஐந்து வெளிநாட்டு நிறுவனங்கள், ஐந்து பொதுத்துறை நிறுவனங்கள், மீதமுள்ள அனைத்தும் தனியார் நிறுவனங்கள்.

ஆழ்குழாய் மூலம் துளையிட்டு எரிவாயு கிடைக்குமா என்று பரிசோதிக்க தமிழ்நாட்டில் 207 இடங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.(Environmental Clearance Certificate)

இந்தத் திட்டத்தால் பொது மக்களுக்கு கொடிய நோய்கள் வரும் என்றும், நிலத்தடி நீர் பாதிக்கப்படும், விவசாய நிலம் பாதிக்கப்படும், குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படும், சுற்றுச்சூழல் பிரச்சினை ஏற்படும், பூகம்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், பாதிக்கப்பட்ட குழாய்கள் சரியாக பராமரிக்கப்படாமல் எண்ணெய்க் கசிவு ஏற்படுகிறது போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன.

நெய்வேலித் திட்டத்தால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாய நிலங்கள் பாதிப்பு அடைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த பிறகு மனிதர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்கிற எண்ணம் சிறிதும் இல்லாமல் வாழ்ந்தவர் ஜெயலலிதா. அவரின் ஆட்சியைத் தொடர்ந்து நடத்தும் இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- தங்க.சத்தியமூர்த்தி