டிசம்பர் 26, 27 தேதிகளில் எப்பகுதியிலும் அரசு எந்திரத்தின் ஒரு நட்டு போல்ட்டைக் கூட பார்க்க முடியவில்லை. அதன் பிறகும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அரசு அலுவலர்களை மட்டுமே கிராமங்களில் பார்க்க முடிந்தது. 2 நாள் கழித்து ராணுவத்தை அரசு அனுப்பியது. துப்பாக்கிகளுடன் வந்த அவர்கள் எந்த ஊரில் என்ன நிவாரணப்பணி செய்தார்கள் என்பது இன்றுவரை நமக்குப் புரியாத புதிராகவே உள்ளது. ராணுவத்தை அழைத்ததன் மூலம் கிராமங்கள் போர்க்களம் போல் காட்சியளித்தன. ஆனால் மக்களுக்கு அது தேவைப்படவிலை. போர்க்கால நடவடிக்கைதான் தேவைப்பட்டது. அதைக் காணோம். பிற மாவட்டங்களிலிருந்து அரசு அதிகாரிகளை குவித்திருக்கலாம்.

மந்திரிகளுக்கு பாதுகாப்புக் கொடுக்க ஊர்ப்பட்ட போலீசையெல்லாம் ஒரு ஊருக்கு அனுப்புவதுபோல காவல்துறையின் அத்தனை பட்டாலியன்களையும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு டிசம்பர் 26 மதியமே அனுப்பியிருந்தால் எத்தனை உதவியாக இருந்திருக்கும். ஏன் ஆட்சியாளர்களுக்கு இது தோன்றவில்லை என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. பிணங்களை அப்புறப்படுத்தும் பணியில் அரசு எந்திரம் ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை என்பது எவ்வளவு கேவலம்! மக்களும் தொண்டு நிறுவனங்களும் வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகளும்தான் சடலங்களை எடுத்தனர். அரசு எந்திரம் போட்டோ எடுத்து பதிவு செய்கிற பணியை மட்டுமே செய்தது. எந்த ஊரிலும் ஒரு சமையல் கூடம் கூட அரசு நடத்தவில்லை. ஓட்டல்கள் மூலம் கட்டாய நன்கொடையாக மட்டமான உணவுப்பொட்டலங்களே அரசால் மக்களுக்கு சில நாள் வழங்கப்பட்டது. பிளீச்சிங் பவுடர் கூட 31 ஆம் தேதிதான் ரோடுகளில் கண்ணில் பட்டன.

30 ஆம் தேதி அரசு அதிகாரிகளும் அலுவலர்களும் ஓடிய ஓட்டத்தைப் பார்த்தால் அரசாங்கம் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் என்றே நமக்குத் தோன்றும். மக்களுக்கு சேவை செய்ய அரசு எந்திரத்தைப் பயன்படுத்துவதே இல்லை. எக்காலமும் அப்படிப் பழக்கப்படுத்தவே இல்லை. வர்க்கக் கருவியாக மட்டுமே இங்கு அது பயன்பட்டு வருவதன் ஒரு வெளிப்பாடுதான் சுனாமி போன்ற காலங்களில் அதன் செயலற்ற தன்மைக்குக் காரணம். பிற நாடுகளில் சேமநல அரசு என்கிற படம் காட்டவாவது அரசு எந்திரம் மக்களுக்குச் சேவை செய்கிறது. ஆபத்து காலங்களிலாவது துரிதமாகச் செயல்படுகிறது. அங்கெல்லாம் அப்படிப் பழக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில்-தமிழகத்தில் அரசு எப்போதுமே ஒரு ஒடுக்குமுறைக் கருவியாக மட்டுமே பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறது. இது உண்மையிலேயே ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டிய ஒரு பிரச்னை அல்லவா?

சில மனச்சாட்சியுள்ள அதிகாரிகள் தனியாக விடப்படும் நிலைதான் இங்கு உள்ளது. ஆனால் ஒரு அரசு நினைத்தால் எத்தனையோ கடுமையான பணிகளை எளிதாகச் செய்துவிட முடியும். 26 ஆம் தேதி முதல் வெற்று அறிக்கைகள் மட்டும் விட்டபடி செயல்பாட்டு மௌனம் காத்த அரசு எந்திரம் ஜனவரி 4 மற்றும் 5 தேதிகளில் முழு வேகத்துடன் இறங்கியது. புல்டோசர்களும் பொக்ளின்களுமாக இறங்கி அத்தனை கிராமங்களையும் ரெண்டே நாளில் சுத்தம் செய்து முடித்தது. பார்த்தாலே பிரமிப்பாக இருந்தது. ஆகவே வாலிபர் சங்கம் அரசு எந்திரத்தை இறக்கிவிட கடுமையான போராட்டத்தை நடத்த முடிவு செய்தது.

வாலிபர் சங்கம் மட்டுமில்லை. சுமார் 160க்கு மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் அவரவர் பேனர்களுடன் களத்தில் வந்து நின்றன. அரசாங்கம் தான் செய்ய வேண்டிய ஒவ்வொரு வேலையையும் ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்துக்கு ஏலம் விட்டுக்கொண்டிருந்தது. தினசரி கலெக்டர் அலுவலகங்களில் தொண்டு நிறுவனங்களுக்கு அரசின் கடமைகளை ஏலம் விடும் வேலை நடந்துகொண்டே இருந்தது. கோடிகோடியாக மக்கள் வாரிக் கொடுத்த பணம் எவ்வளவு அதில் எங்கெங்கு எவ்வªவு பணத்தை அரசு செலவு செய்துள்ளது என்பது யாருக்கும் தெரியாது. மத்திய அரசு கொடுத்த பணமும் மக்கள் கொடுத்த பணமும் மொத்தம் இவ்வளவு இதில் எதெல்லாம் அவசரச் செலவு எதெல்லாம் தொண்டு நிறுவனம் மூலம் செய்யலாம் என பாதிக்கப்பட்ட பகுதிகளின் மக்கள் பிரதிநிதிகளைக் கூட்டி வைத்துப் பேசித் திட்டமிட்டுச் செயலாற்றியிருக்க வேண்டும். அரசு அதைச் செய்யத் தவறி விட்டது. சுனாமி வரவு-செலவு குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை அரசு மக்கள் முன் வைக்கக் கடமைப்பட்டுள்ளது. அறுபது கோடிக்கு மேல் ஒன்றும் அரசு செலவழித்ததாக நமக்குத் தெரியவில்லை.

தொண்டு நிறுவனங்களில் பல ஒரு வாரத்தில் காணாமல் போய்விட்டன. அவர்களுக்குத் தேவையான புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்து முடித்து விட்டதும் போய்விட்டார்கள். பெரிய தொன்டாற்றுவதாக எப்போதும் பீத்திக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் தன் படைகளை மீடியாக்கள் அதிகமாக நடமாடிய ஒருவார காலம் மட்டும் இறக்கி விட்டுப் பிறகு போய்விட்டது. நாகையில் பல இடங்களில் வாலிபர் சங்கத் தோழர்கள் பிணங்களைத் தேடி எடுத்துப் புதைத்து எரியவிட்டுப் புறப்பட்ட பிறகு ஆர்.எஸ்.எஸ்காரர்கள் ஓடி வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

குளச்சல் நகரத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸார் காக்கி உடுப்புகளோடு டப் டுப் என்று வந்து ரெண்டுநாள் வேலை செய்து விட்டு படம் எடுத்துக்கொண்டு போய்விட்டனர். அப்பகுதியில் வாலிபர் சங்கம்போல தொடர்ந்து பணியாற்றியது தமுமுகதான். ஆகவே குளச்சலுக்கு அத்வானி வருகிறார் என்று சொல்லி தமுமுகவினரை அப்புறப்படுத்த போலீசார் முயன்றபோது மக்கள் தகராறு செய்து மறித்தனர். ஆகவே அத்வானி குளச்சல் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டிய நிலைதான் ஏற்பட்டது. ரெண்டுநாள் வேலை செய்தாலும் தாங்கள் வேலை செய்வது எல்லோருக்கும் அடையாளம் தெரியும்படியாக சகல ஏற்பாடுகளுடனும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் வேலை செய்தார்கள். ஆனால் வாலிபர் சங்கத்தினர் மனிதர்கள் பாதிக்கப்படும்போது ஓடோடிச் சென்று உடனே உதவ வேண்டும் என்று நினைத்தார்களே தவிர போட்டொ எடுக்கவேண்டும் என்றோ சீருடை அணிந்துகொண்டு தெரியும்படியாக வர வேண்டுமென்றோ அவர்களுக்குத் தோன்றவே இல்லை. பலநாட்களுக்குப் பிறகே பேட்ஜ் அணிந்து கொள்ளத் துவங்கினார்கள்.

இன்றுவரை களத்தில் நிற்கும் சில தொண்டு நிறுவனங்கள் நம் மரியாதைக்குரியவை.

- ச.தமிழ்ச்செல்வன்