jallikattu protest in america

இந்தியாவிற்கு வெளியில் வாழும் தமிழர்களுக்கு தமிழ், பாரம்பரியம், பண்பாடு, கிராமம் என்ற வார்த்தைகள் உணர்ச்சியைத் தூண்டக்கூடியனவாக உள்ளன. அந்த அடிப்படையில் வெளிநாடு வாழ் தமிழர்கள் ஜல்லிக்கட்டை மிகத் தீவிரமாக ஆதரிக்கின்றனர்.

தைப்பொங்கலின் போது சிங்கப்பூர் லிட்டில் இந்தியப் பகுதியில் ஒரே ஒரு மாட்டை காட்சிப்பொருளாக கட்டி வைத்திருப்பர். தைப்பொங்கல் கொண்டாட்டத்தைக் காண வரும் சிங்கப்பூர் தமிழ்மக்கள் அங்கு கட்டிப் போடப்பட்டிருக்கும் மாட்டை வியப்பு மிகுதியோடு தொட்டுப் பார்ப்பார்கள். "இது தான் பசு மாடு, இது குட்டி போடும், பால் தரும், ஆண் கன்றுகள் ஏர் உழ பயன்படும்" என்ற ரீதியில் தமது குழந்தைகளுக்கு பசு பற்றிய பால பாடத்தை சொல்லித் தருவர். மாடு தான் தமிழர்களின் பண்பாடு போன்ற உணர்ச்சிக் குவியல்களாக அந்தக் காட்சிகள் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் தான் ஜல்லிக்கட்டு, பண்பாடு, தமிழ்ப் பாரம்பரியம் என்ற உடன் பொங்க ஆரம்பித்து விடுகின்றனர். ஏனெனில் அவர்கள் தமிழ் அடையாளத்தை விட்டுப் பிரிந்திருப்பதால், தமிழ், தமிழர், தமிழ்ப்பண்பாடு என்றவுடன் உணர்ச்சிவயப்புகின்றனர்.

கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சி என்றால் கற்பனை வளர்ந்துவிடும்.

1990களில் வெளிவந்த ஒரு பாடலில் வரிகள் இவை. தமிழ்நாட்டை விட்டு விலகி இருக்கும் மக்களுக்கு, தன்னை தமிழ்நாட்டோடு இணைத்துப் பார்க்க ஒரு புள்ளி தேவை. அந்தப் புள்ளியின் மைய இழையாக எப்பொழுதும் இருக்கும் கருத்தாக்கமே கலாச்சாரம் மற்றும் பண்பாடு போன்ற சொல்லாடல்கள். அரிசி மாவில் கோலம் போடுவதை பூரித்து எழுதிக் கொண்டாடும் சமுகம் நம் சமுகம், அதில் வெளி நாடுவாழ் தமிழர்களும் அடக்கம். இப்படியாக மண்ணில் இருந்து பிரிந்து விட்ட மக்களுக்கு ஓர் இணைப்புப் புள்ளியாக ஜல்லிக்கட்டும் மாடுகளும் இங்கே எடுத்தாளப்படுகின்றன.

மற்றபடி அந்த மாடு சாணி போட்டுவிட்டால், உடனடியாக மூக்கை கைத்துணியால் பொத்திக்கொண்டு ஓடும் வகையினர் தான் அவர்கள்.

இவர்களும் சேர்ந்துகொண்டுதான் விவசாயத்தை, நாட்டு மாடுகளைக் காக்க வேண்டும் எனவும், இதை ஜல்லிக்கட்டால் மட்டுமே சாத்தியமாக்க முடியும் என விவாதமும் செய்கின்றனர். ஆனால் ஜல்லிக்கட்டு நடக்கவில்லையெனில் "நேரலையாக தொலைக்காட்சிகளில் தமிழன் தன் வீரத்தை பறைசாற்றுவதைக் காண முடியாது" என்பதே இவர்களின் உண்மையான அக்கறை.

மேலும் விவசாயம் தமிழர்களுக்கு மட்டுமே உரிய செயல் போன்று உரிமை கொண்டாடும் முட்டாள்தனத்தை என்ன செய்வது?

உலகத்திற்கே அரிசி ஏற்றுமதி செய்யும் நாடு தாய்லாந்து, அங்கே விவசாயம் எப்படி குறையாமல் நடந்து வருகிறது? வளர்ந்த மேலை நாடுகளில் விவசாயம் இல்லையா? அதற்கு அந்தந்த நாட்டின் நாட்டு மாடுகள் தான் உதவிகரமாக இருக்கின்றனவா?

தமிழர்களே, மீண்டும் பலமுறை அய்யா தந்தை பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் சொல்லியதை சொல்கிறேன். "எதற்கும் உன் புத்தியை பயன்படுத்து. அது உன் பண்பாட்டைவிட, மொழியைவிட, இனப்பெருமையைவிட, வெங்காயத்தைவிட பன்மடங்கு மேலானது" என்பது தான் அய்யா சொன்னது.

jallikattu 463

புத்தியைப் பயன்படுத்திப் பார்த்தால் விவசாயத்தை, விவசாயியை மேம்படுத்தத் தேவையானது ஜல்லிக்கட்டல்ல, மாறாக நீர், குறைந்த/நியாயமான விலையில் இடுபொருட்கள், சரியான கொள்முதல் விலை, விவசாய வேலையை குறைக்க உதவும் தொழில்நுட்பம், விதைப்பாதுகாப்பு, பயிர்க்குத் தேவையான உரங்களை எளிதில் கிடைக்கச் செய்வது போன்ற செயல்களே விவசாயியை மரணத்திலிருந்து காப்பாற்றும்.

ஜல்லிக்கட்டு விவசாயியைக் காப்பாற்றவில்லை, மாறாக மாட்டுக்கொம்பால் முட்ட வைத்து, மரணப் பிடிக்கு விவசாயியைத் தள்ளுகிறது.

அப்படியானால் நாட்டுமாடுகளை எப்படி காப்பது? நாட்டு மாடுகளை மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் இதே கதிதான்.

"தக்கன தப்பிப் பிழைக்கும்" என்ற டார்வினை நினைத்துக் கொள்ளுங்கள்.

இதற்கு மேலும் assurance வேண்டுமெனில் கோழியை நினைத்துக் கொள்ளுங்கள். மனிதனுக்குப் பயன்படும்வரை கோழி இனத்தை மனித இனம் அவ்வளவு எளிதில் அழியவிடாது. அறிவியலின் அத்தனை தர்க்கங்களையும் பயன்படுத்தி கோழி இனத்தின் அழிவைத் தடுப்பதில் மனிதன் முன்னணியில் நிற்பான். இதே போன்று மாடும், மனிதனுக்கு அத்தியாவசியத் தேவையென்றால் இயற்கையோடு மல்லுக்கட்டி மாட்டைக் காப்பான். எனவே நீங்கள் மாட்டைக் காப்பாற்ற மாட்டோடு மல்லுக்கட்ட வேண்டாம்.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில், ஒரு உயிரினம் நீடித்து வாழ இரண்டு அடிப்படைக் காரணங்கள் உள்ளன.

ஒன்று, எதெல்லாம் மனிதனுக்குப் பயன்படுமோ, அவற்றைக் காக்க மனித இனம் முயற்சிக்கும். ஏனெனில் இயற்கையை அறிவியல்ரீதியாக தெரிந்துகொண்ட ஒரே ஒரு விலங்கினம் மனித இனம் தான்.

இரண்டு, எதெல்லாம் செயற்கை அல்லது இயற்கை அழிவிற்கு எதிராக தப்பிப் பிழைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதோ, அந்த உயிரினங்கள் வாழும், மற்றவை சாகும்.

திரைகடல் தாண்டி, திரவியம் தேட ஒடியிருக்கும் வெளிநாடு வாழ் தமிழர்கள் செய்ய வேண்டியது அந்தந்த நாடுகளில் உள்ள வர்க்க, இன, பொருளாதார, சமுக, அரசியல் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்வதும், உரிமைக்குப் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கெதிராகப் போராடுவதுமே, வாழ்வில் வசந்த்ததை ஏற்படுத்தும். மற்றவை எல்லாம் அழிவையே ஏற்படுத்தும்.

- சு.விஜயபாஸ்கர்