நாராயணசாமி நாயுடு தலைமையில் அரசுகளை மண்டியிட வைத்த போர்க்குணம் எங்கே?

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் விவசாயிகள் கொத்துக்கொத்தாக செத்து விழுகிறார்கள். அளவில்லா வறட்சி இதற்கு முக்கியக் காரணம். ஆனால், அதுமட்டுமே காரணமல்ல.

இந்தியாவில் விவசாயிகளை சாவுக்குத் தள்ளுவது 1980-லேயே தொடங்கிவிட்டது. இந்த 27 ஆண்டுகளில் 6 இலட்சத்திற்கும் மேலான விவசாயிகள் பலி கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். பரவலாக இந்தியாவில் மராட்டியம் (விதர்பா), உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரம், கர்நாடகம் என நடந்த விவசாயிகளின் சாவுகள் 2000-க்குப் பிறகு தமிழ்நாட்டிலும் தொடங்கியது.

drought 620ஆனால் இப்போதைய நிலைமை நம்மை கதிகலங்க வைக்கிறது. இரண்டாவது மாதத்திலேயே எண்ணிக்கை இருநூறை எட்டுகிறது.

வறட்சியின் போதெல்லாம் விவசாயி சாகவா செய்தான்?

ஒருபோதும் இல்லை. அடுத்த வெள்ளாமையில் சரிசெய்யலாம் என்று கடன் வாங்குவான். அதுவும் முடியாதென்றால் கையில் நாலு காசோடு வருகிறேன் என்று பிழைப்புத்தேடி புலம்பெயருவான்.

இப்படித்தான் ஒருகாலத்தில் தருமபுரியிலிருந்து கூட்டம்கூட்டமாக பெங்களூருக்கு விவசாயக் குடும்பங்கள் குடிபெயர்ந்தன. இப்போதும் சென்னை, திருப்பூர் மற்றும் கோவை போன்ற பெருநகரங்களில் நிறைந்துகிடப்பது தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலிருந்தும், மதுரை மற்றும் நெல்லை மாவட்டங்களிலிருந்தும் பிழைப்பிற்காக புலம்பெயர்ந்துள்ள விவசாயக் குடும்பங்களேயாகும்.

உழைப்பும், தன்னம்பிக்கையும் மிகுந்த விவசாயி சாவை நோக்கித் தள்ளப்படுவது ஏன்?

முதலாவதாக ஆத்திர அவசரத்திற்கு மக்கள் கடன் வாங்கி உயிர் பிழைத்துக்கொள்வதை மோடி அடியோடு தடுத்து விட்டார். சாதாரண மக்களின் மருத்துவம் முதலான அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமல்லாது சிறு உற்பத்தியாளர்கள், சில்லறை வணிகர்கள் மற்றும் விவசாயிகளின் தொழில் நடவடிக்கைகளுக்கேகூட அருகில் உள்ளவர்களிடம் கடனாகப் பெறுகின்ற கைமாற்று மூலதனம் இன்றியமையாததாகும்.

வணிகர்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் பண்டிகை முதலான சிறப்பு காலங்களையொட்டி கூடுதலாக செய்ய வேண்டிய கொள்முதல் தேவையை நிறைவு செய்வது இந்த கைமாற்று மூலதனம்தான். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைந்து போகும்போது கைகொடுப்பதும் இந்த கைமாற்று மூலதனமேதான். இது இல்லையென்றால் சிறு உற்பத்தியாளர்கள், சில்லறை வணிகர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை நிலைகுலைந்தே போகும்.

அதுதான் இப்போது விவசாயிகளுக்கு நடந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு கடன் கொடுக்கும் வாய்ப்புள்ளவர்களின் பணம் அனைத்தும் மோடியால் பறிமுதல் செய்யப்பட்டு முடக்கப்பட்டிருக்கிறது. நகரங்களைவிட கிராமங்களில் வங்கிகளின் பண பரிவர்த்தனை குறைவாக இருக்கிறது.

ஆனால் இப்போது கிராமங்கள் பெருஞ்செலவை எதிர்கொள்கிற காலம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வழமையின் அடிப்படையில் திருமணம் முதலான நிகழ்வுகளை நடத்துதல், ஏற்கனவே திருமணமான தம்பதியருக்கு சீர் செய்தல் என பெருஞ்செலவுகள் செய்கிற காலம். இந்த செலவுகளுக்காக வங்கியிலிருந்து கொஞ்சம்கொஞ்சமாக கிடைக்கிற பணத்தை சேகரித்து கையிருப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டிய நிலையில்தான் கிராமத்தில் செல்வந்தர்கள் உள்ளனர். ஆதலால் வசதி உள்ளவர்களாலும் கூட வறியவர்களுக்கு கடன் வழங்கி உதவ முடியாத நிலைதான் உள்ளது.

விவசாயிகளுக்கு உதவிகள் கிடைக்கிற அனைத்து வாசல்களையும் மோடி அடைத்து விட்டார்.

அடுத்து விவசாயிகள் நகரங்களுக்குச் சென்று நாலு காசு சம்பாதித்துவிட்டு திரும்பி வந்து விவசாயம் பார்க்கலாம் என்பதிலும் பண பறிப்பு நடவடிக்கை மண்ணை போட்டுவிட்டது.

விவசாயிகளுக்கான உடனடி வேலை வாய்ப்பு என்பது தினக்கூலி மற்றும் வார கூலி வழங்குகிற தொழில்கள்தான். நகரங்களில் இதுபோன்ற வாய்ப்புள்ள கட்டுமான வேலைகள் முதல் திருப்பூர் பனியன் தொழில் வரைக்கும் பணமில்லாத நிலையில் தேக்கமடைந்துள்ளன. இவ்வேலைகளில் ஏற்கனவே ஈடுபட்டிருக்கும் கிராமத்தார் சிரமத்தோடு ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இவ்வேலைகளை நம்பி புதியவர்கள் புறப்பட முடியாத சூழலே உள்ளது.

ஆக விவசாயி வாழ்வதற்கான நம்பிக்கையை அடியோடு இழந்து சாவை நோக்கித் தள்ளப்பட்டுள்ளான்.

செத்தவனுக்கு இழப்பீடு வாங்கி கொடுக்கவா சங்கங்கள்?

சம்பள உயர்வு, போனசு போன்ற பொருளாதார தேவைகளுக்கு மட்டுமேயென சுருங்கிவிட்ட தொழிற்சங்கங்களை விட மோசமாக சீரழிந்துவிட்டது விவசாய சங்கங்கள்.

விவசாயிகளின் நிலை அதலபாதாளத்திற்குள் தள்ளப்பட்டு வெகுகாலமாயிற்று. மழைக்காடுகளை அழித்த எஸ்டேட்டுகள் தொடங்கி, பேருந்து நிலையங்கள் முதல் அரசு அலுவலகங்கள் மற்றும் வளாகங்கள் என நீர்நிலைகளை குறிவைத்தே கட்டப்பட்ட கட்டுமானங்கள், இயற்கையை அழிக்கிற நகரமயமாக்கல்; மண்ணை மலடாக்குகிற விவசாய முறைகள்; மீத்தேனுக்காக டெல்டா பகுதியை பாலைவனமாக்குகிற மத்திய அரசும், தமிழக மற்றும் கர்நாடக மாநில அரசுகளும் இணைந்து மேற்கொள்கிற காவிரி நீர் முதலான துரோகங்கள் என விவசாயிகள் விஷச்சுழலில் சிக்க வைக்கப்பட்டு வெகுகாலமாயிற்று.

இவற்றை எதிர்கொள்வதற்காக சங்கங்கள் செய்தது என்ன? ஒன்றுமேயில்லை. வெறும் அடையாளப் போராட்டங்களையும், சட்டவாதத்தையும் மட்டுமே சங்கங்கள் வழிமுறையாகக் கொண்டிருக்கின்றன. வீரியமிக்க மக்கள் போராட்டங்களை கைகொள்ளாமல் சட்ட உரிமைகளை பெற முடியாது என்பதை சங்கங்கள் மறந்துவிட்டன.

நாராயணசாமி நாயுடு தலைமையில் தமிழக விவசாய சங்கம் வீறுபெற்று எழுந்ததென்பது அடையாளப் போராட்டங்களாலும், சட்டவாதத்தாலும் மட்டுமே அல்ல. விவசாயத்தை அழிக்கிற மின்கட்டண உயர்வை அனுமதிக்க மாட்டோமென களமிறங்கியது அவரது தலைமையில் விவசாய சங்கம். கட்டண உயர்வு ஒரு பைசாவாக இருந்தாலும் அது விவசாயியை அழித்துவிடும் என விவசாயிகள் களமாடினர். மின்கட்டணம் கட்டவில்லையென்று கம்பங்களில் ஏறி இணைப்பைத் துண்டித்த மின்சார வாரிய ஊழியர்களை கீழே இறங்க விடாமல் முள்வேலி அமைத்து கையில் ஆயுதங்களோடு நின்றனர் விவசாயிகள். மீண்டும் இணைப்பை தந்துவிட்டே மின்சார வாரிய ஊழியர்கள் இறங்கி தப்பித்தனர். எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் உட்பட எந்த அரசியல் பிரமுகர்களும் விவசாயிகள் பகுதியில் நடமாட முடியாத நிலை உருவாக்கப்பட்டது.

தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகளுக்கு விவசாயிகளுக்கு பாதுகாப்பளிக்கும் திட்டங்களை நிறைவேற்ற நிர்பந்திக்கப்பட்டது. இந்திராகாந்தியும், எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் நாராயணசாமி நாயுடுவை அவர் இல்லம் தேடிச் சென்று ஆதரவு திரட்டும் நிலை உருவானது.

தமிழகத்தில் விவசாயிகள் இலவச மின்சாரம் பெற்றது இப்படித்தான்.

ஆனால் இப்போது விவசாயிகள் கொத்துக்கொத்தாக செத்துக்கொண்டிருக்கும் போதும்கூட சங்கங்கள் இழப்பீடு கேட்டு ஒப்பாரி வைக்கின்றனவே தவிர மக்களைத் திரட்டி அரசை அடிபணிய வைக்க முயலவில்லை.

இந்திரா காந்தியையும், எம்.ஜி.ஆரையும், கருணாநிதியையும் வீடு தேடி வரவைத்த நாராயணசாமி நாயுடு எங்கே? செத்துக் கிடக்கும் விவசாயியின் பிணத்தைப் பார்க்க வாருங்கள் அய்யா என எம்.எல்.ஏ-க்களிடமும், எம்.பி-க்களிடமும், அரசியல் கட்சிகளிடமும் கெஞ்சுகிற இப்போதைய தலைவர்கள் எங்கே?

விவசாயிகள் ஒருபோதும் நிவாரணங்களால் உயிர் பிழைக்க முடியாது. அவர்கள் முதலில் தங்களின் வலிமையை அரசுக்கு உணர்த்த வேண்டும். தங்கள் பகுதிசார்ந்த எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-களை பதவி விலக வைக்க வேண்டும். தங்களுக்கான அரசியல் தீர்வையும், நடைமுறையையும் கொண்டிராத அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒழித்து கட்ட வேண்டும். இதற்காக விவசாயிகள் தெருவில் இறங்கி நாட்டையே ஸ்தம்பிக்க வைக்க வேண்டும்.

தங்களுக்காக மட்டுமில்லாமல் சமூகத்தின் ஒட்டுமொத்தப் பிரச்சினைகளுக்காகவும் போராடுகிற பண்பைப் பெற வேண்டும். அப்போதுதான் மற்ற பிரச்சினைகள் கூட தங்களையும் பாதிக்கும் என்கிற உண்மையை விவசாயிகளால் உணர முடியும். மோடியின் பண பறிப்பு தங்களை காவு வாங்குவதை புரிந்துகொள்ள முடியும்.

- திருப்பூர் குணா