farmer drought

தற்போது தமிழகம் சந்திக்கும் வறட்சி கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத வறட்சி என வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வறட்சியால் உடனடியாகப் பாதிக்கப்படுவது விவசாயிகளாகும். தமிழகத்தில் அணைகள் எதிலும் இந்த ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. கீழ்பவானி பாசனத்தை நம்பியுள்ள 2.40 லட்சம் ஏக்கர் நிலம் நீரின்றி வறண்டு போய்விட்டது.

நிலத்தடி நீரை எடுத்துப் பயன்படுத்த விவசாயிகள் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து கோடிக்கணக்கான ரூபாய் நட்டமடைந்துள்ளனர். கிணறுகளிலும் , ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் வற்றிவிட்டது. இந்த ஆண்டு பொங்கல், அறுவடை இழந்த பொங்கலாக வந்துள்ளது. ஏறக்குறைய ஒரு லட்சம் ஏக்கரில் நெல் விளைச்சல் இந்த ஆண்டு முற்றாக இல்லை. கால்நடைகளுக்குத் தீவனம் இல்லாமல் பரிதவிக்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் காய்ந்து போன வயலைப் பார்த்து கொடுமுடி வட்டத்தைச் சேர்ந்த மஞ்சள் விவசாயிகள் இராமலிங்கம் மற்றும் முத்துசாமி, மொடக்குறிச்சியைச் சேர்ந்த கரும்பு விவசாயி தங்கமுத்து உட்பட 5 விவசாயிகள் இறந்துள்ளனர். இதைப்போலவே திருப்பூர் மாவட்டத்தில் தென்னை விவசாயி சின்னப்பன் மற்றும் தற்கொலை செய்து கொண்ட மரவள்ளிக்கிழங்கு விவசாயி தங்கவேல் ஆகியோர் இறந்துள்ளனர்.

இதில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த முத்துசாமியின் மனைவி இலட்சுமிக்கு, கணவர் இறந்த ஒரு வாரத்திற்குள் வங்கியிலிருந்து வாங்கிய கடனைக் கட்ட சொல்லி நோட்டீஸ் வருகிறது. கணவர் இறந்த சோகத்திலிருந்து மீள்வதற்குள் அவர் மாவட்ட ஆட்சியரிடம் தன்னுடைய நிலையை விளக்கி மனு கொடுத்துப் போராடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். இதைப் பற்றி பேசும் விவசாய சங்கங்களும், ஊடகங்களும் பொய்ப் பிரச்சாரம் செய்வதாகவும், விவசாயிகள் யாரும் மனமுடைந்து சாவதில்லை எனவும் கூறுகிறார் அமைச்சர். இதைப் போலவே விவசாயி தங்கமுத்துவும், தான் வெளியே வட்டிக்கு வாங்கிய கடன் தொகை இரண்டு லட்சத்தை எப்படி திருப்பி செலுத்தப் போகிறோம் என்னும் சோகத்தில் இறந்துள்ளார். மேற்கூறிய இரண்டு விவசாயிகளும் தங்களுக்கு உள்ள சிறுநிலம் போக, தங்கள் உழைப்பின் மேல் நம்பிக்கை வைத்து நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்கள். இவ்வாறு மரணத்திற்குப் பிறகு விவசாயிகள் விட்டுச் செல்லும் சொத்துக்கள் கடனும் , எவ்விதமும் லாபமற்ற விவசாய நிலமுமே ஆகும்.

வறட்சியில் விவசாயிகள் உடனடியாக பாதிக்கப்படுவதற்கான காரணம், இதற்கு முந்தைய சாகுபடிகளில் அவர்களுக்கு உரிய விலை கிடைக்காததே ஆகும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கரும்பு விவசாயிகளின் நிலைமை, கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக அரசு தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் பெருமையாக அறிவிக்கும் கொள்முதல் விலையை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்குவதில்லை, இப்பொழுது அரசு அறிவிக்கும் விலை கட்டுபடியாகாது என போராடி வந்த விவசாயிகள், அரசு அறிவிக்கும் விலையை பெற்றுத்தர வேண்டி போராடும் சூழல் ஏற்பட்டுவிட்டது. தமிழக அரசு வறட்சி ஆய்வுகளை செய்யும் முன், கடன் சுமையில் தத்தளிக்கும் விவசாயிகளுக்கு இத்தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முன்னுதாரணமாக கர்நாடக அரசு இப்பிரச்சனையை முறையாகக் கையாண்டு வறட்சியால் தத்தளிக்கும் விவசாயிகளுக்கு இத்தொகையை பெற்றுத் தந்துள்ளது.

farmers drought

இவ்வறட்சியில் ஆலைகள் முறையான விலை வழங்காததால், ஆழ்துழாய்க்கிணறு அமைத்து மிகுந்த பொருட்செலவில் கரும்பு பயிரைக் காப்பாற்றும் விவசாயிகளுக்கு விலையை ஏற்றிக் கொடுத்து வெட்ட வியாபாரிகள் முன்வருகிறார்கள். இவ்வாறு பதிவில்லா கரும்பு வெட்டும் முறைக்கும் விவசாயிகள் மாறும் பொழுது, கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளர்களும் இத்தகைய வியாபாரிகளிடம் வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இச்சூழலில் இத் தொழிலாளர்கள் தங்கள் வலியை உணரக்கூடிய விவாசாயிகளிடம் வெட்டுக்கூலியை கூட்டி வழங்கச் சொல்லும் உரிமையை இழக்கிறார்கள். முன்பு குறைந்தது டன்னுக்கு ரூ 600 பெற்றுவந்த தொழிலாளர்கள் இப்பொழுது ரூ 300 மட்டுமே பெறக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இவ்வாறு வியாபாரிகளின் தராசில் ஒரு முனையில் தொழிலாளர்களும் மற்றொரு முனையில் விவசாயிகளும் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள்.

வறட்சி நிவாரணம் என்பது ஒரு புறமிருக்க வறட்சிக் காலங்களில் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டுத் தொகை என்பதே முறையாக வழங்கப்படுவதில்லை. பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் பெயர் மட்டும் விளம்பரத்திற்காக மாற்றப்படுகிறதே தவிர செயல்படுத்தப்படும் முறை ஒன்று தான். விவசாயிகள் பிரீமியம் தொகை செலுத்துகிறார்கள் அதற்கு ரசீதோ அத்தாட்சியோ வழங்கப்படுவதில்லை. அரசு பிரீமியத்தில் ஒரு பகுதியை ஏற்று, காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்துகிறது. காப்பீட்டு நிறுனத்தை விவசாயிகள் தொடர்பு கொண்டால் உங்களுக்கு தொகை செலுத்தியதற்கான கடிதம் வரும் என்கிறார்கள், ஆனால் விவசாயிகளுக்கு அத்தகைய கடிதம் எதுவும் வருவதில்லை.

கடுமையான வரட்சியில் வாடும் விவசாயிகளுக்கு தமிழகக் அரசு உடனடியாக வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு குறைந்தது ரூ 30,000/ - கொடுக்க வேண்டும்.

தென்னை மரங்கள் லட்சக்கணக்கில் வறண்டு போகும் அபாயம் உள்ளது. காய்ந்து போகும் தென்னை மரங்களை கணக்கிட்டு சராசரியாக ஒரு மரத்திற்கு ரூ 10,000 /- நட்ட ஈடு வழங்க வேண்டும்.

விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி அளிப்புத் திட்டத்தை விரிவுபடுத்தி வறட்சிக்கால வேலைகள் கொடுக்கப்பட்டு, பட்டினிச் சாவுகள் தடுக்கப்பட வேண்டும்.

இவ்வறட்சியில் பெரும் குடிநீர்த் தட்டுப்பாடு தலை தூக்கி வருகிறது. விவசாயிகளும் பொதுமக்களும் தண்ணீருக்காகப் போராடி வரும் இச்சூழலில் சாயப்பட்டறை அல்லது தோல் தொழிற்சாலை அதிபர்கள் தண்ணீருக்காக போராடுவதில்லை. காரணம் இன்று குடிநீருக்கு மட்டும் உதவக்கூடிய ஆற்றுநீரை இவர்கள் முழுவதுமாக பயன்படுத்தி மாசுபடுத்தி விடுகிறார்கள். இதனால் மக்களுக்கு குடிநீர் என்பதே எட்டாக்கனியாகிவிட்டது. வறட்சிக் காலங்களிலும் முற்றிலும் பயன்படுத்தப்பட்டு மாசடையும் தண்ணீரை அருந்தும் மக்களுக்கு கொடிய நோய்கள் விரைந்து வந்து சேருகின்றன. அரசு போர்க்கால அடிப்படையில் மக்களின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

மாவட்ட நிர்வாகம் விவசாய அமைப்புகளுடன் கலந்து பேசி வறட்சி நிவாரணப் பணிகளை முழு மூச்சுடன் செயல்படுத்த வேண்டுகிறோம்.

- கி.வே.பொன்னையன், தற்சார்பு விவசாயிகள் சங்கம்