திராவிட மொழி, இலக்கியம், பண்பாடு முதலியவற்றை மையப்படுத்திய திராவிடவியல் ஆய்வைத் மது உயிர் மூச்சாகக் கொண்டு தம் வாணாள் முழுதும் பாடுபட்டவர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் மூதறிஞர் வ.அய்.சுப்பிரமணியனார். துணைவேந்தராகும் முன்பே, தமிழியல், மொழியியல் ஆய்வுகளில் ஈடுபட்டு, பல அறிஞர்களை உருவாக்கியவர்.

 அவரது திட்டமிடும் பாங்கும், செயல் திறனும் அவரது தலைமையில் செயல்பட்ட சில நிறுவனங்கள் நன்கு வளர்ச்சியுற்றுப் பெருமையுறக் காரணமாயின. தமிழ்ப் பல்கலைக்கழகமும் அவற்றுள் ஒன்றாகும். 1981 முதல் 1986 வரையுள்ள ஐந்தாண்டு காலம் அவர் யார்க்கும் அஞ்சாது, குறிக்கோளை விட்டுத்தராது, துணிவோடும், நேர்மையோடும் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக செயல்பட்டார். பன்னாட்டுத் தமிழறிஞர்கள், மாணவர்களை மட்டுமின்றி, பிறமொழியினரையும் பல்கலைக்கழகம் தன்பால் ஈர்க்க அவரது செயல்முறை உதவியது. போலந்து, ஜெர்மனி, மலேசியா, சீனா, மொரீசியஸ் எனப் பல நாடுகளைச் சார்ந்தவர்களும், இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து தமிழ் கற்கவும், ஆய்வு மேற்கொள்ளவும் முனைந்தனர். இவ்வாறு தமிழ்ப் பல்கலைக்கழககத்துக்கு ஒரு உலகளாவிய பெருமையை பெற்றுத் தந்த அந்தப் பெருமகன் நம்மை எல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்தி 29.06.2009 அன்று இயற்கை எய்தினார்.

தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பிறமொழி அறிவும் தேவை என்பதைக் கருத்தில் கொண்ட அவர் பிராகிருதம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, மலாய் ஆகிய மொழிகளைக் கற்க மாணவர்களை உரிய இடங்களுக்குச் சென்று பயிற்சி பெறச் செயதார். அவர்களுள் சிலர் இன்று நல்ல மொழி பெயர்ப்பாளர்களாகச் செயல்பட்டு  வருகின்றனர். இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் பிற நாட்டிலிருந்தும் வந்து தமிழ் கற்றவர்கள் தமிழ் இலக்கியங்களை அவர்தம் மொழிகளில் மொழிபெயர்த்ததோடு, இருமொழி அகராதிகளையும் உருவாக்கினர். பல ஆண்டுகளாகச் செயலற்றுக் கிடந்த தமிழ்ப் பேரகராதி, கலைக் களஞ்சியப் பணிகள், இவரது முயற்சியால் முழுவீச்சில் செயல்படத் தொடங்கின. தகுதியானவர்களை அமர்த்தி இத்திட்டங்களைச் செயல்படுத்திய காரணத்தால் இன்று பல்கலைக்கழகம் மூலம் பெருஞ்சொல்லகராதிகள் (5 தொகுதிகள்) 2, கலைக்களஞ்சிங்கள் (30 தொகுதிகள்), சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம்(3), பல துறைசார் கலைச் சொல்லகராதிகள்(12) வெளிவந்து பலருக்கும் பயன்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆய்வாளர்களின் தரமான படைப்புகளும் வெளிவந்து, தமிழியல் ஆய்வின் பரப்பை விரிவுபடுத்தியுள்ளன. பிறமொழி யாளர்களும் தமிழின் சிறப்பை உணரும் வகையில் தமிழிலக்கியங்களும் மொழியாக்கம் செய்யப்பட்டு ‘தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் நிலை’ ஏற்பட்டுள்ளது. கிடைத்தற்கரிய பல அரிய தமிழ் நூல்களைப் பதிப்பிக்கத் திட்டமிட்டுச் செயல்படுத்தினார். அயல்நாடுகளில் வாழ் தமிழர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் பண்பாட்டுத் தொடர் வகுப்புகளைத் தொடங்கி வைத்தார்.

பல்துறை அறிவு வளர்ச்சிக்குத் தாய்மொழிவழிக் கல்வியே முதன்மையானது என்பதை ஏற்று, பொறியியல்,  மருத்துவம், இரண்டையும் தமிழ் வழிக் கற்பிக்கும் திட்டத்தில், அதற்கான பாடநூல்களை உருவாக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (9 மாதம் முதல் ஓராண்டு வரை) 27 நூல்கள் (பொறியியல் 13, மருத்துவம் 14) பெறப்பட்டு, அவை தொடர்ச்சியாக வெளிவரத் தொடங்கின. பொறியியலைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலேயே பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து கற்பிப்பிப்பதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், தஞ்சை மருத்துவக்கல்லூரியுடன் சேர்ந்து மருத்துவப் படிப்பைத் தமிழ் வழிச் செயல்படுத்தும் திட்டமும் இருந்தது. பல்வேறு காரணங்களால் இவை இரண்டும் செயல்படுவதில் தயக்கம் ஏற்பட்டது. இத்திட்டத்தின் மூலம், தமிழில் இத்துறைகளுக்கான நூல்களை ஆங்கில நூல்களின் தரத்துக்கிணையாகத் தமிழில் எழுதித்தரும் வல்லுநர்கள் உள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டது. ‘தமிழில் எதையும் சொல்ல முடியும்’ என்ற இவரது கருத்து. இதன் மூலம் வலுப்பெற்றது. தமிழியல் ஆய்வு பரவலாக்கப்படும் நோக்கிலும், தக்கவர்களை இனங்காணும் விருப்பிலும் இவர் பல கருத்தரங்குகள் நடத்தினார். எந்தத் துணைவேந்தரும் மேற்கொள்ளாத ஒரு நடைமுறையை இவர் மேற்கொண்டார். கருத்தரங்கின் தொடக்கம் முதல் இறுதிவரை, பேராளர்களோ ஒரு பேராளராக அமர்ந்து, கருத்தரங்கில் கவனம் செலுத்தி, ‘இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல்’ என்பதற்கேற்ப, தகுதியானவர்களைத் தெரிவு செய்து, அவர்களைப் பணியமர்த்தி, ஆய்வை மேற்கொள்ளச் செய்வதுதான் அந்த நடைமுறை. கருத்தரங்கக் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடும் திட்டத்தையும் செயல்படுத்தினார்.

நாட்டுப்புறக் கலைகளைப் பேணிக்காக்கும் திட்டத்தின் அடிப்படையில் கரகாட்டம், தப்பாட்டம் முதலியவற்றை நாடகத்துறை வழி வளர்த்தெடுக்கும் பணியும் நடைபெற்றது. இன்று தப்பாட்டம் திரையுலகிலும், மேலை நாடுகளிலும் அரங்கேற்றப்படக் காண்கிறோம். இதற்கு அடித்தளமிட்ட பெருமகன் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர்தான்.

திராவிடவியல் பணிகள்

மூதறிஞர் வ.அய்.சுப்பிரமணியனாருக்குத் தமிழ் மீது எவ்வளவு காதல் உண்டோ அதற்குச் சற்றும் குறையாத அளவு பிற திராவிட மொழிகளிடத்தும் உண்டு. அவர் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்குத் துணை வேந்தராக வரும்முன் கேரளப் பல்கலைக்கழக மொழியியல் துறைத்தலைவராக இருந்தார். திராவிட மொழியியல் ஆய்வை வளர்த்தெடுத்தார். இலக்கிய இலக்கண  ஆய்வோடு அமையாது, கிளைமொழி ஆய்விலும் கருத்தூன்றி, பல ஆயுவேடுகள் வெளிவரத் துணை நின்றார். இதன் விளைவாக 1971இல் திராவிட மொழியியல் கழகம் (Dravidian LanguisticsAssociation) தோன்றியது. இக்கழகத்தின் சார்பாக, ஆண்டுதோறும் இந்தியாவின் பல மாநிலங்களிலும், கருத்தரங்குகள் நடத்தப்பெற்றன. 2009 ஜூன் மாதம் திருவனந்தபுரத்தில் நடந்த கருத்தரங்கு 37வது கருத்தரங்காகும். எவ்வித இடையூறுமின்றி, ஆண்டுதோறும் தொடர்ந்து கருத்தரங்குகளை நடத்தும் ஒரு சில அமைப்புகளில் திராவிட மொழியியல் கழகமும் ஒன்று என்பதும், அதற்கான உந்து சக்தியாக இருந்தவர் பேராசிரியர் என்பதும் உறுதி. திராவிட மொழியியல் ஆயு்வை உலக அளவில் கொண்டு செல்லும் நோக்கில்  1972இல் பன்னாட்டுத் திராவிட மொழியியல் இதழ்(International Journal of Dravidian Linguistics) ஒன்று இவரால் தொடங்கப்பெற்றது. ஆண்டுக்கு இருமுறை வெளிவரும் இவ்விதழ் இன்றுவரை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

திராவிட மொழியியல் கழகம் தொடக்கம் முதல் இன்று வரை நூல் வெளியிடும் பணியிலும் ஈடுபட்டு நூற்றுக்கும் மேலான நூல்களை வெளியிட்டுள்ளது. திராவிடக் களஞ்சியம் -3 தொகுதிகள் (Dravidian Encylopaedia –3 Vol ), திராவிடப் பழங்குடி மக்கள் களஞ்சியம் - 3 தொகுதிகள் ( Encyclopaedia of Dravidian Tribes – 3 Vols ), மேற்கு வங்காளம் - ஒரு கையோடு – 2 தொகுதிகள் ( A handbook of West Bengal 2 Vols), தொல்காப்பிய மூலபாட வேறுபாடுகள் (Textual vanation of Tolkappiyam), தொல்காப்பியச் சொல்லடைவு (Index of Tolkappiyam), தென்னிந்தியாவில் சமணம் ( Jainism of South India ), தெலுங்கு இலக்கணக் கோட்பாடுகள் (Theories of Telugu Grammer), கிரந்த எழுத்துக்கள் (The Grantha Script ) என்பன அக்கழக வெளியீடுகளில் சிலவாகும். சமஸ்கிருதம், பிராமி மொழிகளிலுள்ள இலக்கணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது போல, திராவிட மொழிகள் சிலவற்றின் இலக்கணமும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களைத் தோற்றுவிக்கும்முன் இவர் கேரள பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் பேரா. வையாபுரிப்பிள்ளையின் கீழ் ஆய்வுப் பணியையும், அடுத்து ஆசிரியப் பணியையும் தொடங்கினார். துறைத் தலைமைப் பொறுப்பு ஏற்றதும், வையாப்புரிப்பிள்ளையின் திட்டமான சங்க இலக்கியச் சொல்லடைவு, சங்க இலக்கிய ஆய்வு ஆகியவற்றில்  கருத்தூன்றி, தக்க மாணவர்களைக் கொண்டு அத்திட்டத்தைச் செயல்படுத்தலானார். புறநானூறு சொல்லடைவு இவரது ஆக்கம் ஆகும். தொடர்ந்து இவரது மாணவர்கள் எட்டுத் தொகை, பத்துப்பாட்டுக்கான சொல்லடைவுகளைத் தயாரித்து, அவற்றை ஆதாரமாகக் கொண்டு, இந்த இலக்கியங்களின் மொழிக் கட்டமைப்பை ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்றனர். அவற்றுள் சில ஏற்கனவே கேரளப் பல்கலைக்கழகம் மூலம் வெளிவந்துள்ளன. தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்த சிலர், மொழியியலில் முனைவர்பட்டம் (இந்தியானா பல்கலைக்கழகம், அமெரிக்கா) பெற்றிருந்ததால் இரண்டையும் இணைத்து ஆய்வுத் தளத்தை விரிவுபடுத்தினார். இதன் பலனாக,  புளும்ஃபீல்டின் அமைப்பியல் மொழிக் கோட்பாடுகளோடு சோம்ஸ்கியின் மாற்றிலக்கணக் கோட்பாடு, பைக்கின் டாக்மிமிக் கோட்பாடு, ஹெம்சிலேவின் கிளாஸமாட்டிக் கோட்பாடு என அன்று புதிதாகக் களமிறங்கிய பல மொழியியல் கோட்பாடுகளைத் தமிழுக்கும் பொருத்திப் பார்த்து அதன் வன்மை மென்மைகளைக் காணச் செய்தார். 1960களில் இவ்வகை ஆய்வு வேறு பல்கலைக்கழகங்களில் விரிவான அளவில் இடம் பெறவில்லை. மொழியியலில் ஆழக்கால் பதித்தவர் என்பதற்கு இப்பன்முறை ஆய்வு ஒரு சான்றாகும்.

பிற பணிகள்

இவரது கல்வி சார் நிறுவனப் பணியின் அடுத்தக் கட்டம் இறுதிக்கட்டம் ஆந்திராவிலுள்ள குப்பத்தில் தோற்றுவிக்கப்பட்ட திராவிடப் பல்கலைக்கழகமாம். அதன் இணை வேந்தராக அதன் தோற்றம் முதல் சில ஆண்டுகள்(1997-2001) பணியாற்றினார். திராவிடம் என்ற சொல்லுக்கேற்ப தமிழகம், ஆந்திரம், கருநாடகம் சார் பகுதியிலுள்ள குப்பத்தைத் தேர்ந்தெடுத்தார். பல்வேறு கருத்தரங்குகள் நடத்தப்பெற்றன. நல்ல நூலகம் ஒன்று அமைக்கப்பெற்றது. பல்கலைக்கழகத்துக்கான பொலிவுடன் பல கட்டடங்களையும் உருவாக்கினார். இன்றும் அப்பல்கலைக்கழகம் செவ்வனே செயல்பட்டு வருவதற்குக் காரணம் இவரது திட்டவரைவு தான்.

இவ்வாறு பன்முக நோக்கில் யாவரும் போற்றும் வண்ணம் செயல்பட்ட இவரது வாழ்வியல் முறை பற்றிய சில குறிப்புகள்:

நாகர்கோவிலுள்ள வடசேரியில் 18.02.1926 இல் அய்யம்பெருமாள் - சிவகாமி இவர்களுக்கு மூத்த மகனாகப் பிறந்தார். 83 ஆண்டுகள் வாழ்ந்து தாம் மேற்கொண்ட பணிகளைக் குறைவேதுமின்றிச் செயலாற்றிய மனநிறைவோடு தமது 84வது வயதில் 29.06.2009 அன்று நீள்துயிலில் ஆழ்ந்தார். அவர் துயின்றார். ஆனால், அவரது வழிகாட்டுதலில் இன்று வரை பணியாற்றி வரும் பலரும் துயிலின்றித் தவிக்கின்றனர். வடசேரி அய்யம்பெருமாள் சுப்பிரமணியம் என்பது தமிழில் வ.அய்.சு. என்றும், ஆங்கிலத்தில் VIS என்றும் சுருக்கமாகக் கூறப்படும். அவர் மாணவர் ஒருவர் (Very Important Subramoniam) என்று மிகப்பொருத்தமாக அழைத்து, ஒரு கட்டுரையும் எழுதியுள்ளார். இவரது குடும்பம் பெரியது பொருளாதார நெருக்கடிக்குட்பட்டது. இதைப் புரிந்து கொண்டதால், அதற்கேற்பத் தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். மனைவி பெயர் இரத்தினம். மக்கள் நால்வர். மூத்தவர்கள் இருவரும் இவரை முந்திக் கொண்டனர். இளைய மகனும், மகளும் உள்ளனர். வடசேரியிலுள்ள எஸ்.எம். ஆர்.வி. பள்ளியிலும் (1941), நாகர்கோவில் ஸ்காட் கிறித்துவக் கல்லூரியிலும் (1943) படித்த பின், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆனர்ஸ் (1946) பட்டம் பெற்றார். அமெரிக்காவிலுள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் மொழியியலறிஞர் ஹவுஸ் ஹோல்டர் (House Holder) நெறிப்படுத்துகையில் மொழியியலில் முனைவர் பட்டம் (1957) பெற்றார். இந்த இடைப்பட்ட காலத்தே (1946-57) திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், புது  தில்லியில் அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகவும், கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

1958-67 முதல் அப்பல்கலைக்கழகத்தில் தமிழ், மொழியியல் துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றி, பின்னர் 1967 முதல் மொழியியல் துறைத்தலைவராகவும், பேராசிரி யராகவும் பணி தொடர்ந்தார். 1981-86 காலகட்டத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தரானார். 1997-2001 குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர், இடைப்பட்ட காலங்களில் பன்னாட்டுத் திராவிட மொழியியல் பள்ளியின் மதிப்புறு இயக்குநராக இருந்து தொண்டாற்றினார். 2001-2009 வரை இந்த இயக்குநர் பணி தொடர்ந்து நடைபெற்றது. பேராசிரியர் பொருளா தார நெருக்கடிக்காளான குடும்பத்தில் பிறந்தவர். சிலகாலம் திருவனந்தபுரத்தில் மாமனார் வீட்டில் வசித்தவர். அங்கும் சில பொருளாதாரச் சிக்கல் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. இது இவரது வாழ்வில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் பொருளாதார வசதி இல்லாத மாணவர்களுக்கு தக்க உதவி செய்து அவர்கள் கல்விப் பணி தொடர வழி வகுத்தார். மாணவர்கள் என்றில்லாது மற்றவர்களுக்கும் அவரது கொடைக்கரம் நீண்டது. தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்தகாலத்தில், சில பதிப்பகத்தார் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான போது, உரிய விலை கொடுத்து அவர்களது நூல்களை நூலகத்துக்கு வாங்கினார். இது பின்னரும் தொடர்ந்தது.

இவர் அடக்கமானவர்் இறுக்கமானவர்் யாரோடும் நெருங்கி உறவாடாதவர்் துணிச்சலும் நேர்மையும் கொண்டவர்் தமக்குச் சரியென்று பட்டதை எப்பொழுதும் எவருக்காகவும் விட்டுக் கொடுக்காதவர் என இவரது பண்பு நலன் குறித்துப் பரவலாகப் பேசப்படுவது உண்டு. விட்டுக் கொடுத்தல், நெருங்கிப் பழகுதல் முதலியவை தமது குறிக்கோளை நிறைவேற்றத் தடையாகிவிடுமோ என்கிற எண்ணத்தால் அவற்றைத் தவிர்த்தார். வெளித்தோற்றத்துக்குக் கெடுபிடி யாளராகத் தோன்றினாலும், உரிய சமயங்களில் தமது மனநெகிழ்வை உணர்வு வூர்வமாக வெளிப்படுத்தத் தயங்கமாட்டார். பல துறைசார் ஆயு்வுகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் 150க்குக் குறையாத கட்டுரைகள். சில மதிப்புரைகளும் எழுதியுள்ளார். 215 நூல்கள் வெளியிட்டுள்ளார். Index of Puranaanuuru, Survey of Malayalam Dialects முதலியன சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவை. இவரது ஆய்வின் மையம் திராவிடவியலாகும். இவரது மறைவுக்குப் பின் இவரைப் பற்றி எழுதிய ஒரு மலையாள அறிஞர் "இவரது உடலும் உயிரும் திராவிடவியலே" என்று குறிப்பிட்டார்.

Pin It