school children india

இங்கு ஒரே தெருவில் 10 பள்ளிக் குழந்தைகள் வசித்தால், 10 தனியார் பள்ளி வாகனங்கள் வந்து, 10 பள்ளிகளிகளுக்கு குழந்தைகளை ஏற்றிச் செல்லும். அவரவருக்குப் பிடித்தமான SCHOOL BRAND-ஐ நமது வசதிக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து குழந்தைகளை அனுப்புவோம்.

எல்லா இட்டிலியும் அரிசி மாவில் இருந்து சுட்டுக் கொடுத்தாலும் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கடையின் இட்லிதான் சுவையாக இருக்கும் என்று முடிவு செய்திருப்போம். அது போலத்தான் பள்ளிக்கூடத்தையும் முடிவு செய்கிறோம். ஆனால் எல்லாப் பள்ளிக் கூடக் கல்விக்கும் ஒரே ABCD தான். எல்லா பள்ளிக்கூடக் கணக்கும் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் தான் என்பதைப் பற்றி நாம் யோசிப்பதில்லை. ஒரே பள்ளியில் ஒரே பாடம் சொல்லிக் கொடுக்கும் இரண்டு ஆசிரியர்களால் ஒரே மாதிரி சொல்லிக் கொடுக்க முடியாது. எனவே இந்தப் பள்ளிதான் நல்ல பள்ளி என்று முடிவு செய்வதும், அந்தப் பள்ளி 30 கிலோமீட்டருக்கு தொலைவில் இருந்தாலும், அந்தப் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவதும், அதற்காக பள்ளி வாகனக் கட்டணமே பெரிய தொகையாகக் கட்டுவதும் தேவையில்லாதது.

மக்கள் இப்படி யோசிக்காமல் எதையாவது செய்வார்கள் என்பதால் தான் குழந்தைகள் நலனில் , கல்வி நலனில், மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் நாடுகள் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு சேர்க்கைப் பகுதியை எல்லையாக வைத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் பணக்காரக் குழந்தையும் பணக்காரர் வீட்டில் வீட்டு வேலை செய்யும் குடும்பத்துக் குழந்தையும் ஒரே பள்ளியில் தான் படிப்பார்கள்.

இப்படி சேர்ந்து படிப்பதால் வசதியுள்ள குழந்தையும், வசதியற்ற குழந்தையும் ஒன்றுகொன்று சகோதரத்துவ உணர்வை வளர்த்துக் கொள்ளும். சேர்ந்து படிப்பதால் ஏழைக் குழந்தைகள் மோசமானவர்கள் என்ற எண்ணம் பணக்காரக் குழந்தையின் மனதில் உருவாகாது. பணக்காரக் குழந்தைகளைப் பார்த்து ஏக்கமும், காழ்ப்புணர்ச்சியும் ஏழைக் குழந்தைக்கு உருவாகாது. ஒருவருக்கொருவர் பரிவு கொள்வார்கள்; உதவிக் கொள்வார்கள். ஏழைக் குழந்தைக்கு எளிதில் கணக்கு புரியும், பணக்காரக் குழந்தைக்கு கணக்கு எளிதில் புரியாமல் இருக்கலாம். பணக்காரக் குழந்தைக்கு அறிவியல் எளிதில் புரியலாம். ஏழைக் குழந்தைக்கு அறிவியல் எளிதில் புரியாமல் இருக்கலாம். புரியாத பாடங்களை ஒருவருக்கொருவர் உதவுவதன் மூலம் கற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கும். ஏழைக் குழந்தையின் கையெழுத்து அழகாக இருந்தால் கூட பணக்காரக் குழந்தைக்கு அந்த ஏழைக் குழந்தையைப் பிடித்துப் போகலாம். மொத்தத்தில் ஒரு நட்புணர்வுள்ள நல்ல குழந்தைகள் சமூகம் உருவாகும். ஏற்றத்தாழ்வும், பாகுபாடும், காழ்ப்புணர்வுகளும் ஒழிந்து போகும்.

பள்ளி என்பது ஜனநாயகப் பண்புகளை குழந்தைகளிடம் வளர்க்க வாய்ப்பளிக்க வேண்டும். அதனால் தான் பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதில் அருகமைப் பள்ளி முறையை பல்வேறு நாடுகளிலும் கல்விக் கொள்கையாகப் பின்பற்றுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் எல்லாக் குழந்தைகளும் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் தான் சேர்ந்து படித்தாக வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

ஆனால் நாம் அருகமைப் பள்ளியில் தான் எல்லாக் குழந்தைகளையும் சேர்க்கவேண்டும் என்று விதிமுறையை வகுக்க வில்லை. இங்கு ஏழைக்கு ஒரு பள்ளி, வசதிக்கேற்ற பல வித கட்டணப் பள்ளி என்ற நிலை உருவாகி விட்டது. இப்படிப்பட்ட கல்வியின் மூலம் நாம் சமூகப் பிரிவினைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். நமது ஆட்சியாளர்கள் குழந்தைகளின் நலனுக்காக பள்ளிகளை நடத்தாமல் கல்வி வணிகர்களின் நலனுக்காக பள்ளிக்கூடங்களை நடத்துவது தான் இதற்குக் காரணம்.

இப்படிப்பட்ட நிலை நீடிப்பதைப் பற்றி கவலை இல்லாமல் நாம் அமைதியாக இருந்தால், ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த அடுத்த தலைமுறை அமைதியாக வாழ முடியாது. பள்ளிகளில் ஜனநாயக நெறிகளை வளர்க்காமல் நாம் ஜனநாயக அமைப்பை வளர்க்க முடியாது. அதனால் தான் இப்படிப்பட்ட கல்வி முறை ஜனநாயக விரோதமானது என்று 1966 ஆம் ஆண்டிலேயே டாக்டர் கோத்தாரிக் கல்விக் கொள்கை அறிவித்தது. என்வே, கல்வியில் மாற்றத்தை உருவாக்க சிறைக்கு செல்ல வேண்டாம். வீதிக்கு வந்தால் கூட போதும். யார் வரப் போகிறீர்கள்?

- சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு