tumblr data

சர்ச்சைக்கும் ஜியோவிற்கும் ரொம்பவே நெருக்கம் தான்! ரிலையன்ஸ் ஜியோவை அறிமுகப்படுத்தியதில் இருந்தே ஏர்டெல், ஏர்செல், வோடபோன் எனப் போட்டி நிறுவனங்கள் அனைத்தும் ஜியோ தொலைத் தொடர்பு விதிகளை மீறி வருவதாகக் குற்றம் சாட்டின. ஆனால் 'அப்படியெல்லாம் இல்லை, பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவை நனவாக்குவது தான் தனது இலட்சியம்' என்று மோடியையே விளம்பரத்தில் பயன்படுத்தியது ரிலையன்ஸ்.

சரி, ஏதோ செல்போன் நிறுவனங்களுக்கு இடையே போட்டி, பொறாமை - நமக்கேன் வம்பு! இந்தப் பிரச்சினையை எல்லாம் தொலைத் தொடர்பு ஒழுங்கு ஆணையம் (டிராய்) பார்த்துக் கொள்ளும் என்று நினைத்தால் - ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இப்போது மனிதனைக் கடிக்கும் கதையாகி விடும் போல் இருக்கிறது.

ஜியோ - தன்னுடைய வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களை அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள விளம்பர நிறுவனங்களுக்கு விற்கிறது என்கிறது அனான் இந்தியா. ஜியோவின் மைஜியோ, ஜியோ டயலர் ஆகிய செயலிகள், மாட்-மி என்னும் விளம்பர நிறுவனத்திற்குத் தன்னுடைய பயனர்களின் தகவல்களை விற்பதாகச் சொல்கிறது அனான் இந்தியா. ‘நாங்கள் மறக்கவும் மாட்டோம் – மன்னிக்கவும் மாட்டோம்’ என்று சொல்லும் அனான் இந்தியாவின் இந்தக் குற்றச்சாட்டுகளை ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

anonymousindiaஇந்த மறுப்புக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ‘நாங்கள் ரிலையன்சின் ஜியோவை மட்டும் சோதனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. எல்லா நெட்வொர்க் நிறுவனங்களின் செயலிகளைச் சோதித்ததில் ஜியோ செயலிகள் மட்டும் தான் வெளிநாட்டு விளம்பர நிறுவனங்களுக்குப் பயனர் தகவல்களை விற்கிறது என்பது தெரிய வந்தது’ என்று சொல்லும் அனான் இந்தியா அமைப்பு, தன்னுடைய https://anonymousindia.tumblr.com/ தளத்தில் அதற்கான வீடியோ இணைப்பையும் செய்முறையையும் விளக்கமாக வெளியிட்டிருக்கிறது.

ஜியோ செயலியின் மூல நிரல்களில் சீன மொழி பயன்படுத்தப்பட்டிருப்பதை ஒரு வருடத்திற்கு முன்பே வெளிக்கொண்டு வந்த அனான் இந்தியா, ஒரு புறம் ‘டிஜிட்டல் இந்தியா’வை வளர்ப்பதாகச் சொல்லும் ரிலையன்ஸ் நிறுவனம், சீனக் கணினி வல்லுநர்களைப் பயன்படுத்தியது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

‘ஒரு வருடத்திற்கு முன்னரே ஜியோவைச் சொன்ன பிறகு இப்போது மீண்டும் ஜியோவை ஆராயக் காரணம் என்ன?’ என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, ‘நெட் நியூட்ராலிட்டி எனப்படும் இணையச் சமநிலையை எதிர்த்த நிறுவனங்கள் எப்படி மக்களின் தகவல்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று ஆராய்ந்தோம். அதில் தான் இந்தத் தகவல் திருட்டு தெரியவந்தது’ என்கிறது அனான் இந்தியா.

ஜியோவைச் சுற்றி இவ்வளவு சர்ச்சைகள் இருக்க - ஆறு மாதத்திற்கு முன் தேர்தல் சமயத்தில் ‘இலவசங்கள் வேண்டாம் – இலவசம் கொடுக்கும் கட்சிக்கு ஓட்டு போட வேண்டாம்’ என்று இணையத்தில் மீம்ஸ்கள் வெளியிட்டுக்கொண்டிருந்த இளைஞர்கள் கூட ‘மூன்று மாதம் இணையம் இலவசம்’ என்றதும் ஜியோ சிம் கார்டிற்கு வரிசை கட்டி நின்றது தான் இதில் முரண் நகை. 

- முத்துக்குட்டி