Modi vibrant gujarat

"ஆட்சியாளர்கள் அவர்களை குனியத்தான் சொன்னார்கள். ஆனால் அவர்களோ தரையில் தவழ்ந்தார்கள்". இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை காலத்தில் எதிர்க்கட்சிகள் ஊடகங்கள் குறித்து இப்படித்தான் வருணித்தன. இந்திரா நெருக்கடி நிலையை வெளிப்படையாக மக்களுக்கு அறிவித்து விட்டுத்தான் பிரகடனம் செய்தார். மக்களின் மீதும், தன்னை எதிர்த்த அரசியல் கட்சிகளின் மீதும் கடுமையான அடக்குமுறைகளை ஏவினார். ஆனால் மக்களுக்கு அறிவிக்காமல் நெருக்கடி நிலை மூலம் தனது ஆட்சியை தொடர்ந்து நிலைபெறச் செய்வதில் வெற்றி கண்டவர் திருவாளர் மோடி, குஜராத்தில்.

அவருடைய ஆட்சியை நடுநாயகமாக நின்று அலசுபவர்கள் இந்த உண்மையை அறிவார்கள். "யாரும் கேள்வி கேட்க முடியாது. ஊழலை வெளிப்படுத்த முடியாது. போராட முடியாது. அடித்தால் வாங்கிக்கொண்டு இருக்க வேண்டும். இதில் விதிவிலக்காக செயல்படுபவர்கள் சிறப்பு 'கவனிப்பிற்கு' உட்படுத்தப்படுவார்கள். சிலர் கொலைகூட செய்யப்பட்டுள்ளார்கள். அரச பயங்கரவாதத்தையும், இந்துத்துவ குண்டர்களின் பயங்கரவாதத்தையும் ஒருசேர சந்திக்க வேண்டும்" என்பது போன்ற பல நிர்பந்தங்கள் குஜராத்தில் வாழும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு உண்டு.

மோடி அப்படிதான் 'திறம்பட' குஜராத்தை ஆட்சி செய்தார். ஆனால் இவைகள் எல்லாம் வெளியுலகத்திற்கு தெரியாமல் இருக்கும் பொருட்டு ஊடகங்களை தன் கைக்குள் போட்டுக்கொண்டார். ஊடகங்களும் மோடியின் கண் அசைவிற்கு ஏற்ப "குஜராத் வளர்ச்சி அடைந்துவிட்டது, பாலாறும் - தேனாறும் ஓடுகிறது, எல்லா தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள், தீண்டாமை கொடுமை இல்லாமல் செய்துவிட்டார் மோடி" என்று கொஞ்சம் கூட களத்தில் இறங்கி ஆய்வு செய்து பாராமல் மோடி புராணத்தையே பாடிக்கொண்டிருந்தன மோடி எதிர்பார்த்ததை விட.

ஒரு சில ஊடகங்களும், செயற்பாட்டாளர்களும் அவ்வப்போது குஜராத்தின் மறைக்கப்படும் உண்மை நிலையை வெளிக்கொணர்வர். தேசிய அளவில் வெற்றி பெற வேண்டுமானால் தலித்துகளின் வாக்குகளை தொடர்ந்து பெற வேண்டும் என்ற அடிப்படையில் தன்னை தலித்துகளின் பாதுகாவலனாக காட்ட மோடி முயற்சிக்கிறார். "என்னை வேண்டுமானால் தாக்குங்கள்; தலித் சகோதரர்களை தாக்காதீர்கள்" என்கிற அவரது பேச்சு இதைத்தான் உணர்த்துகிறது.

அண்ணல். அம்பேத்கர் அவர்களை தன் தலைவராக முன்னிறுத்தும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கி இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் மோடி குஜராத்தில் ஆட்சி செய்தபோது தலித்துகளின் நிலை என்ன என்பது அறிய வேண்டியது அவசியமானதாகும். குஜராத் மாடல் வளர்ச்சி உண்மையானதுதானா? அங்கு தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டதா? மோடி சொல்வதுபோல் தலித்கள் சமத்துவத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா? என்பதை கீழ்க்கண்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் அறிந்து கொள்ளலாம்.

அவைகளில் சில :

குஜராத்தில் ஆண்டு ஒன்றுக்கு 20 தலித்துகள் கொள்ளப்படுகிறார்கள்.

50 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு தள்ளப்படுகிறார்கள்.

2016 ம் வருடம் ஜனவரி தொடங்கி ஏப்ரல் வரை 406 வன்முறைகள் தலித்துகள் மீது ஏவப்பட்டுள்ளன. தலித்துகள் மீதான வன்முறைகள் நீண்டகாலமாகவே தொடர்ந்து வருகின்றன குஜராத்தில். உதாரணத்திற்கு பனஸ்கந்தா மாவட்டத்தில்-1133 தாக்குதல்கள், ஜீனாகத் மாவட்டத்தில்-830 தாக்குதல்கள், அகமதாபாத் மாவட்டத்தில்-693 தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.

"குஜராத்தில் தலித்கள் ஒடுக்கப்படுவதும், தாக்கப்படுவதும் நீண்டகாலமாகவே நடக்கின்ற ஒன்றுதான்" என்கிறார் செயல்பாட்டாளர் மார்ட்டின் மக்வான். "98 வடிவங்களில் அங்கு தீண்டாமை கடைப்பிடிப்பதாக" மேலும் அவர் கூறுகிறார்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டு அறிக்கையில் : "2012 மற்றும் 2013 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்டவர்களின் மீது நடத்தப்பட்ட கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் இந்தியாவிலேயே குஜராத் தான் முதலிடம் பெற்றது".

தீண்டாமைக் குற்றங்களில் 6% (2015) வழக்குகளில்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். தேசிய அளவில் 23.8% தண்டிக்கப்படுகின்றனர். 2013 ம் ஆண்டு 2.5% வழக்குகளில்தான் தண்டிக்கப்பட்டனர்.

குஜராத்தில் பொதுக்கிணறுகளில் தண்ணீர் எடுக்க தலித்களை அனுமதிப்பதில்லை. ஒரு சில இடங்களில் உயர் சாதியினர் தண்ணீர் எடுத்தபிறகே தலித்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

90% கோவில்களில் தலித்கள் நுழைய முடியாது.

54% பள்ளிகளில் தலித் மாணவர்களை தனியே பிரித்து வைத்துதான் பாடம் நடத்தப்படுகிறது.

மாநில அரசு வேலைகளில் தலித்களுக்கு ஒதுக்கப்பட்ட 64,000 பதவிகளில் வேண்டுமென்றே அவர்களை நியமிக்காமல் காலிப்பணி இடங்களாகவே வைத்துள்ளது.

2012 ல் தாங்கத் எனும் ஊரில் தலித்துகளுக்கும்-உயர் சாதியினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 4 அப்பாவி தலித்துகள் துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதன் விசாரணை அறிக்கைக்கூட இதுவரை வெளியிடப்படவில்லை. அதற்கு என்ன காரணம் சொன்னது தெரியுமா "அறிக்கையை வெளியிடுவது தேசத்தின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஊரு விளைவிக்கும்" அதனால் வெளியிட முடியாதாம். அப்பிரச்சனையில் உயர் சாதியினருக்கு ஆதரவாக நின்றது மோடி அரசு.

இதன் தொடர்ச்சியாகாவே குஜராத் உனாவில் இறந்த மாட்டின் தோலை உரித்ததற்காக நான்கு தலித்துகளை கட்டிவைத்து அடித்திருக்கிறார்கள்.

அப்போது மட்டுமல்ல தற்போதும் தலித்களுக்கு எதிராகவே நடந்து வருகிறது குஜராத் அரசு. ஆனால் இவைகளையெல்லாம் மறைத்து குஜராத் வளர்ச்சி பெற்றதாக, தலித்கள் சமத்துவதுடன் வாழ்வதாக அண்டப்புளுகுகளை தொடர்ந்து அடுக்கி வருகிறார்கள்.

"குஜராத் மாடல் என்பது உண்மையில் 'மோதானி' மாடல். டாடா, அதானி, அம்பானி போன்ற பெருநிறுவன முதலாளிகளின் சொர்க்க பூமிதான் குஜராத். நாங்கள் அகமதாபாத்தில் இருந்து உனா வரை சென்ற வழி நெடுகிலும் கொடிய வறுமையைப் பார்த்தோம். சமூக-பொருளாதாரத் தளத்தில் இருந்து சுத்தமாக ஒதுக்கப்பட்டுள்ள தலித் சமூக இளைஞர்கள் வாழ்க்கையை நடத்தும் பொருட்டு கேரளா, மும்பை, தொலைதூர இலட்சத்தீவு போன்ற இடங்களுக்குச் செல்கின்றனர்" என்கிறார் குஜராத்திற்கு சென்று உனா பேரணியில் பங்கேற்று திரும்பிய இந்திய விவசாய சங்கத்தின் இணை செயலாளர் விஜீ கிருஷ்ணன்.

குஜராத்தின் உண்மை நிலை குறித்து குஜராத் தலித் அரசியல் செயல்பாட்டாளர் ஜிக்னேஷ் மேவானி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

"உண்மையில் இது ஒரு பொய் பிரச்சாரம் ஆகும். குஜராத்துக்கு வாருங்கள். குஜராத் மாடல் வளர்ச்சியை நான் காட்டித் தருகிறேன்; மின்சாரமும், வெளிச்சமும் இன்னும் சேராத கிராமங்களை; உணவுக்கும் இருப்பிடத்திற்கு வக்கில்லாதவர்களை; மல, ஜலம் கழிப்பதற்கான வசதிகள் இல்லாததால் வயலில் இறங்கும் கிராமத்தினரைக் காட்டித் தருகிறேன். இவைதான் பாஜக அரசு பாடி நடத்துகின்ற குஜராத் மாடல் வளர்ச்சி".

குஜராத்தின் இந்த நிலைக்கு காரணம்; அங்கு வாழும் விளிம்பு நிலை சமூகங்கள் தத்தளிப்பதற்கு காரணம் 'இந்து ராஷ்டிரம்' எனும் ஆட்சி முறைதான். குஜராத்தை ஒரு சோதனைக் களமாக சோதித்து பார்த்திருக்கிறார்கள். அதில் வெற்றி பெற்றுள்ளதாகவும்; அதை இந்திய முழுக்க விரிவடைச் செய்ய வேண்டும் என்றும் பல இடங்களில் கூறி வருகிறார்கள். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். 'இந்து ராஷ்டிரம்' கருத்தாக்கம் சிறுபான்மை மக்களுக்கும், தலித்-பழங்குடியின மக்களுக்கும், அவர்களின் சிந்தனையை ஏற்றுக்கொள்ளாத இந்துக்களுக்கும் எதிரானது மட்டுமல்ல ஆபத்தானதும்கூட. இதை தடுப்பதற்கான முயற்சிகளில் ஜனநாயக சக்திகள் ஈடுபட்டாக வேண்டும்.

அண்ணல்.அம்பேத்கர் அவர்களும் இதைத்தான் வலியுறுத்துகிறார்.

"இந்து ராஷ்டிரம் என்பது நடைமுறைக்கு வந்தால் அது இந்த நாட்டுக்குப் பெருங்கொடுமையாக அமையும். இந்துக்கள் என்ன சொன்ன போதிலும், இந்துயிசம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்கு கேடாக அமையும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அது இவ்வாறு ஜனநாயகத்தின் எதிரியாக உள்ளது. இந்து ராஷ்டிரம் எதார்த்தமாவதைத் தடுக்க நாம் எல்லா முயற்சிகளிலும் இறங்க வேண்டும்". (பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை. பக்கம் 358)

- வி.களத்தூர் எம்.பாரூக்