நேற்று முன்தினம் (18-07-2016) சென்னை புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை அறிவித்துள்ளது. அவர் மின்சார வயரை பற்களால் கடித்துத் தனது உடலில் மின்சாரத்தை பாய்ச்சிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், இதில் அவரது முகம் மற்றும் மார்பு பகுதிகள் கருகியதாகவும், உடனடியாக அங்கிருந்த சிறைச்சாலை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு, பின்பு மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ராம்குமாரை கொண்டு சென்றதாகவும், ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. ராம்குமாருக்கு இப்படி ஒரு நிலை சிறையில் ஏற்பட்டு விடக்கூடாது என்றுதான் நாம் எல்லோரும் பயந்தோம். பயந்தது போலவே நடந்துவிட்டது. காவல்துறை தனது பணியைச் சிறப்பாக செய்துவிட்டது.

ramkumar dead body

(இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட ராம்குமாரின் உடல்)

 ஆரம்பம் முதலே சுவாதி கொலை வழக்கில் காவல்துறையின் செயல்பாடு மர்மமாகவே இருப்பதாக பல அரசியல் கட்சி தலைவர்கள் சொல்லி வந்திருக்கின்றார்கள். காவல்துறையின் செயல்பாடு மட்டுமின்றி நீதிமன்றத்தின் செயல்பாடும் அப்படித்தான் இருந்தது. தமிழ்நாட்டில் பல சாதி ஆணவக் கொலைகள் தொடர்ச்சியாக நடந்தபோதெல்லாம் வாயே திறக்காமல் கள்ள மெளனம் சாதித்த நீதிபதிகள் சுவாதி கொலை செய்யப்பட்டபோது விழித்தெழுந்து காவல்துறைக்கு ‘கொலையாளியை உடனே  கைது செய்ய வேண்டும்’ என உத்திரவிட்டனர். அப்போதே இது கடும் விமர்சனத்துக்கு ஆளானது. இந்த வழக்கில் ராம்குமார் உண்மை குற்றவாளி கிடையாது; அவர் வேண்டுமென்றே சிக்க வைக்கப்பட்டிருக்கின்றார்  என்று பலபேர் பல ஐயப்பாடுகளை எழுப்பி வந்தனர். ஆனால் தமிழக காவல்துறை அது பற்றி கடைசிவரை வாயே திறக்கவில்லை.

 சுவாதி மதம் மாறியதாகவும், கொலை செய்யப்பட்டபோது கர்ப்பமாக இருந்தாகவும் பல செய்திகள் வலம் வந்தன. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சுவாதி சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்புள்ளதாக கருத்துத் தெரிவித்து இருந்தார். ஆனால் தமிழக காவல்துறை சுவாதியின் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டில் என்ன இருந்தது என்பது பற்றி பொது மக்கள் பார்வைக்குத் தெரியாத மாதிரி மிகப் பாதுகாப்பாக பார்த்துக் கொண்டனர். அவ்வளவு கள்ளத்தனமாக கடுகளவு கூட  செய்திகள் வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இந்தக் குறிப்பிட்ட வழக்கை பொருத்தமட்டும் ஏன் ஏற்பட்டது என தெரியவில்லை. ஒரு வேளை காவல்துறைக்கு அந்த நிர்பந்தம் தமிழகத்தை ஆளும் பார்ப்பன ஜெயலலிதா அரசாலும், மத்தியில் ஆளும் பார்ப்பன பி.ஜே.பியாலும் தரப்பட்டு இருந்திருக்கலாம்.

 கொலை செய்யப்பட்ட சுவாதி ஒரு பார்ப்பன பெண் என்பதால்தான் அரசு இயந்திரம் இந்தச் சம்பவத்தில் இவ்வளவு அவசர அவசரமாக முடுக்கிவிடப்பட்டு கொலையாளி என்ற பெயரில் ராம்குமாரை சிக்கவைத்து வழக்கை விரைந்து முடிக்க காவல்துறை திட்டமிடுவதாக நாம் சொன்ன போது சிலர் கோபித்துக் கொண்டார்கள். இங்கே எங்கே சாதி வந்தது என கூப்பாடு போட்டார்கள். இப்போது ராம்குமார் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார். இதற்குச் சாதி காரணம் இல்லாமல் வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

  ராம்குமார் கைதுசெய்யப்படும் போதே அவர் தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறை தெரிவித்தது. ஆனால் காவல்துறையைச் தேர்ந்தவர்கள்தான் கழுத்தை அறுத்ததாக பின்பு ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ் தெரிவித்தார். இப்போதும் ராம்குமார்தான் தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறை தெரிவிக்கின்றது. நிச்சயம் இது காவல்துறை திட்டமிட்டு நடத்திய படுகொலையாக இருப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. காவல்துறையின் நடவடிக்கைகளை கூர்ந்து நோக்கும் போது ஒரு செய்தி நன்றாகத் தெரிகின்றது. அது என்னவென்றால் குற்றவாளி என்ற பெயரில்  யாரையாவது சிக்க வைத்து அவனது கதையை முடித்துவிட வேண்டும் என திட்டமிட்டு இருந்திருக்கின்றார்கள். ஆரம்பத்தில் ராம்குமாரை கைதுசெய்யும் போதே அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயற்சித்து இருக்கின்றார்கள். ஆனால் அந்த முயற்சி நடக்காமல் போக, மீடியாக்கள் வெளிச்சம் வேறு பிரச்சினையின் மீது விழுந்துவிட, வேறு வழியில்லாமல் இத்தனை நாட்கள் ராம்குமாரை உயிர்வாழ விட்டிருக்கின்றார்கள். நேற்று அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதாக இருந்ததால், ஒருவேளை ராம்குமாருக்கு ஜாமீன் கிடைத்து அவர் வெளியே வந்தால், தங்களது நாடகம் அம்பலமாகி விடும் என்ற பயத்தில் ஆளும்வர்க்கம் காவல்துறையின் துணையுடன் இந்தப் படுகொலையை நிகழ்த்தி இருக்கலாம். அதற்கான வாய்ப்புகளே மிக அதிகமாக இருக்கின்றது. இந்தச் சந்தேகத்தை நாம் மட்டும் எழுப்பவில்லை. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் எழுப்பி இருக்கின்றார்கள். நீதிபதி சந்துரு கூட தனது காவல்துறை மீதான சந்தேகத்தை கூறி இருக்கின்றார்.

  இந்த வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற வேண்டும் என ராம்குமாரின் தாயார் தரப்பில் கேட்கப்பட்ட போது, சென்னை உயர்நீதி மன்றம் அதை நிராகரித்துவிட்டது. இந்தக் கொலையில் தமிழக அரசுக்கும், தமிழக காவல்துறைக்கும் எந்த அளவு பங்குள்ளதோ அதே அளவு பங்கு நீதிமன்றத்துக்கும் உள்ளது. அனைவரும் சேர்ந்து இந்த வழக்கை சாதிய கண்ணோட்டத்திலேயே அணுகி இருக்கின்றார்கள். கோகுல் ராஜ் கொலை வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற வேண்டும்  என பல்வேறு அரசியல் கட்சிகள் வைத்த கோரிக்கையை நிராகரித்து, சி.பி.சி.ஐ.டியே சிறப்பாக விசாரணை செய்வதாக சொன்னது நீதிமன்றம். இப்போது அந்த வழக்கு என்ன நிலைமையில் உள்ளது என அனைவருக்கும் தெரியும். போதாத குறைக்கு நீதிமன்றம் யுவராஜூக்கு ஜாமீன் வேறு கொடுத்தது. இதுதான் நீதிபதிகளின் சாதிய கண்ணோட்டம். இங்கே கவுண்டனுக்கு ஒரு நீதி; தலித்துகளுக்கு ஒரு நீதி.

 தமிழக காவல்துறை மீது நம்பிக்கை அற்று சி.பி.ஐ விசாரணை கேட்கும் போது அதற்கு உத்திரவிடுவதில் நீதிபதிகளுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. ஒரு வேளை உத்திரவிட்டு இருந்தால், இந்தக் கொலை நடக்காமல் கூட போய் இருக்கலாம். இந்தக் கொலைக்கு நீதிமன்றமும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இங்கே நீதிபதிகளும், காவல்துறையும் ஆளும்வர்க்கத்தின் கூலிப்படையாக செயல்படுகின்றனர். தமிழக அரசு எடுக்கும் முடிவைத்தான் நீதிபதிகளும் தங்களது உத்திரவில் அப்படியே செயல்படுத்துகின்றார்கள். அவர்கள் ஆளும் அரசுக்கு எதிராக தீர்ப்பு கொடுத்து, பகையைச் சம்பாதித்துக் கொள்ள எப்போதும் விரும்புவது கிடையாது. பணி ஒய்வுக்கு பின்னால் ஏதாவது அரசு பதவிகளில் ஓட்டிக் கொண்டு கல்லா கட்டமுடியாமல் போய்விடும் என்ற பயம்தான் அவர்களை இதுபோன்ற கீழ்த்தரமான தீர்ப்புகளை வழங்கத் தூண்டுகின்றது.

 இனி  இந்த வழக்கு எந்தப் பாதையில் செல்லும் என நாம் எல்லோருக்கும் தெரியும். ஒய்.ஜி. மகேந்திரன், எஸ்.வி. சேகர், எச்சிக்கலை ராஜா போன்றவர்கள் இந்நேரம் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பார்கள். தமிழக காவல்துறை போன்ற ஒரு மானங்கெட்ட காவல்துறையை உலகத்தில் வேறு எங்குமே பார்க்க முடியாது. இப்படிப்பட்ட தமிழக காவல்துறையை ஸ்காட்லாந்து யார்டு போலீசுடன் ஒப்பிட்டு பேசிய அந்த நாய் யாரென்று தெரியவில்லை. தமிழக காவல்துறையை உலகத்தில் உள்ள எல்லா தீவிரவாத அமைப்புடனும், கொள்ளைக்கார அமைப்புடனும் இனி தொடர்புபடுத்தி பேசுங்கள் - அதுதான் சரியாக இருக்கும். அதுதான் தமிழக காவல்துறைக்கும், ராம்குமாருக்கும் நாம் செய்யும் சரியான மரியாதையாக இருக்கும்.

- செ.கார்கி