"ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள்" ப.கு ராஜனின் அரை விமர்சனத்திற்கு ஒரு மறுப்பு

தோழர் ப.கு.ராஜன்! "ஸ்டாலின் குறித்த குருச்சேவின் பொய்கள்" என்ற ஆய்வு நூலுக்கு நீங்கள் "புதிய புத்தகம் பேசுது" ஆகஸ்ட் 2016 இதழில் எழுதியுள்ள விமர்சனத்தைப் படித்த நாங்கள் ஏமாந்து போனோம். அதைப் படித்த பெரும்பாலானவர்களும் கூட. ஒரு ஆய்வு நூலை விமர்சிக்கும் முறை ஒன்று உண்டல்லவா? அதாவது, அந்த நூலாசிரியர் எடுத்துக்கொண்ட தரவுகளையும், ஆதாரங்களையும் பரிசீலித்து; அதில் சரி, தவறுகளை சுட்டிக்காட்டும் முறை ஒன்று உண்டல்லவா? அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

ஆனால், உங்களது விமர்சனத்தில் உங்களுக்கு இருக்கிற வேறொரு கவலையும், பதட்டமும் அப்பட்டமாக தெரிந்துவிட்டது. ஸ்டாலினைப் பார்த்து கம்யூனிச விரோதிகள் கவலைப்படுவதில் நியாயமிருக்கிறது. அதே கவலையும், பதட்டமும் உங்களுக்கு வந்ததற்கான காரணம் என்ன தோழர்?

இன்னும்…இன்னும்…

இவை எல்லாம் நூல் விமர்சனம் என்றபேரில் நீங்கள் எழுதிதள்ளிய அபத்தங்கள்.

se natesan bookஇவ்வாறான அவதூறுகளைத்தான் நூல் ஆதாரபூர்வமாக மறுக்கிறது. ஆனாலும் ஏற்கனவே ஸ்டாலின் பற்றிய கம்யூனிச விரோத கருத்துக்களால் பீடிக்கப்பட்டிருக்கிற உங்களைப் போன்றவர்களை கருத்தில் கொண்டே நூலாசிரியர் குரோவர்ஃபர் தனது முன்னுரையில், ‘இதை நீங்கள் ’நம்ப வேண்டாம்’ என்று வலியுறுத்துகிறேன். கம்யூனிஸ்டுகள் மார்க்சீயர்கள். மார்க்சீயர்கள் பொருள்முதல்வாதிகள். நாம் உண்மை அல்லது பொய் என்பதை ஆதாரங்களின் அடிப்படையிலேயே முடிவு செய்கிறோம். எல்லா ஆதாரங்களையும் அதற்கேற்ற எந்தவிதமான நம்பிக்கைகளும் இல்லாமல் ஆய்வு செய்யுங்கள்.’ என்கிறார்.

அரை உண்மை என்பது முழுப்பொய்யைவிட ஆபத்தானது. அதைப்போன்றதே அரை விமர்சனமும். ஒரு படைப்பை, ஓர் ஆய்வை, ஒரு நூலை எந்தவித ஆழ்ந்த பரிசீலனையுமின்றி, ஏற்கனவே தான் வகுத்துக்கொண்ட தனது முன்கூட்டிய அனுமானங்களின் அடிப்படையில் விமர்சனம் செய்வது அரைவிமர்சனமே.

மனிதகுல வரலாற்றில் வாழும் காலத்தில் தெய்வமாகப் போற்றப்பட்டு, மரணத்துக்குப்பின் சீடர்களாலும், எதிரிகளாலும் கேவலமாக தூற்றப்பட்டவர்கள் வெகுசிலரே. ஒருவர் கௌதமபுத்தர். இதுபோன்ற மற்றொரு மாமனிதர் ஸ்டாலின். அவர் வாழ்ந்து பணியாற்றியபோது வானளாவப் புகழப்பட்டார். ஆனால், அவர் மறைந்த உடனேயே அவர் ஒரு வில்லனாகவும், போக்கிரியாகவும் தூற்றப்பட்டார். இதற்கு குருச்சேவ் தலைமை தாங்கினார். ஸ்டாலின் வாழ்ந்தபோது குருச்சேவ் அவரின் வளர்ப்பு நாய்போல் குழைந்து, அவரை வானளாவப் புகழ்ந்தார்.

தெலுங்கானா ஆயுதப்போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் முன்னாள் மத்தியக்குழு உறுப்பினருமான நந்தூரி பிரசாதராவ் கூறுகிறா:’ ஸ்டாலினை குருச்சேவ் ஏன் பழி கூறினார் என்பதைப் புரிந்துகொள்வது இப்போது எளிது. வரலாற்றுச் சக்கரங்களைப் பின்னுக்கு இழுத்து முதலாளித்துவத்தை மீண்டும் கொண்டுவருவதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். குருச்சேவின் பாழாய்ப்போன சீர்திருத்த முயற்சிகள் ரஷ்யாவில் 70 ஆண்டுகாலம் கட்டிக்காக்கப்பட்ட சோசலிசத்தைக் கைவிட்டு, முதலாளித்துவத்தை மீண்டும் கொண்டுவரவும், சோவியத் யூனியன் சிதறுண்டு போகவும் வழிவகுத்தன. குருச்சேவ் ஒரு திருத்தல்வாதி. அவர் ஒருபோதும் மார்க்சீயவாதியாக இருந்ததில்லை. மார்க்சியத்தின் அடிப்படைகளைச் சீர்குலைக்கும் கொள்கையற்ற அரசியல்வாதியாகவே அவர் இருந்தார்.’

இத்தகைய குருச்சேவைப்பற்றி உங்களின் விமர்சனம் என்ன கூறுகிறது? ‘அவர்மீது ஆயிரம் குற்றச்சாட்டுகள் கூறலாம். ஆனால், ஒடுக்குமுறையாளர்’, ‘அடக்குமுறையாளர்’ என்ற குற்றச்சாட்டு அவர்மீது ஒட்டாது. அவரது காலமே ‘சகிப்புத்தன்மைக்காலம்’ என்றுதான் அறியப்படுகிறது.’

மாஸ்கோ மாவட்ட முதன்மைச்செயலாளராக இருந்த குருச்சேவ்தான் ’பிரிவு ஒன்று’ என உருவாக்கி அதில் 20,000 பேரைப் பெயர் குறிப்பிடாமல் அவர்களை மரணதண்டனைக்குள்ளாக்க வேண்டும் என்று அனுமதி கேட்டார். 41,000 பேர்களை ‘இரண்டாம் பிரிவில் கொண்டுவர குருச்சேவ் கேட்டுக்கொண்டார். ஆனால், ஸ்டாலினும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களும் அதை கடுமையாகத் தடுக்க முயன்றனர். இதை ஜுகோவ் மற்றும் கெட்டி சுட்டிக்காட்டினர்.’ குருச்சேவ் உரையின் முக்கிய நோக்கமே தன்னைப்போலவே இரத்த தாகம் கொண்ட முதன்மைச்செயலாளர்களின் குற்றங்களை மூடிமறைத்துப் பாதுகாப்பதுதான். இவர்மீதுதான் ‘ஒடுக்குமுறையாளர்’, ‘அடக்குமுறையாளர்’ என்ற குற்றச்சாட்டு ஒட்டாதாம்.

குருச்சேவும், அவரது கூட்டாளிகளும் கொத்துக்கொத்தாக கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் கொல்வதற்கு முனைப்பு காட்டிய நேரத்தில் தோழர் ஸ்டாலின் கொல்வதால் பிரச்சினைகள் தீராது; கட்சி கல்வியும்; வேலைமுறைகளில் மாற்றமுமே தீர்வளிக்கும் என்று கூறி அதற்காகப் போராடினார். இது நூலில் ஆதாரத்தோடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அப்படியெல்லாம் கிடையாது, ஸ்டாலின் சர்வாதிகாரிதான் என நீங்கள் நிறுவ வேண்டுமானால், இனி இந்த நூலில் உள்ள ஆதாரங்களை மறுத்து, உங்களின் வாதங்களுக்கான ஆதாரங்களை முன்வைத்தேயாக வேண்டும். மனம்போன போக்கில் பேசிவிட முடியாது என்பதே இந்த நூல் அடைந்த முதல் வெற்றி. ஆனாலும் நீங்கள் ஆதாரங்களை யார் கேட்கப் போகிறார்கள் என அசட்டு துணிச்சலில் இறங்கியிருப்பதை என்ன சொல்ல?

உலகம் முழுவதிலும் ஏகாதிபத்திய, முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சக்திகள் ‘ஸ்டாலின் எதிர்ப்பை’ ஒரு வேலைத்திட்டமாக வரையறுத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றன... இது அவர்களது வர்க்க நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள இன்றியமையாதது என்று எண்ணுகிறார்கள். தமிழ்நாட்டிலும் பொதுவுடமையாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர்கூட இதைத்தொடர்வது விநோதமாக உள்ளது. சுரண்டல்சக்திகளின் ‘முதலாளித்துவ சர்வாதிகாரத்தை ஒழித்து, ‘எல்லார்க்கும் எல்லாமும்’ என்ற சோசலிச பூமியைக் கட்டமைக்க மார்க்சீய மூலவர்களால் கட்டமைக்கப்பட்டதுதான் ‘பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்’. இதை முதலாளித்துவ சர்வாதிகாரத்தோடு இணைத்து ‘இரண்டு சர்வாதிகாரங்களும் ஒழிக்கப்பட வேண்டும்’ என்பவர்கள் ‘டிராட்ஸ்கியர்கள்’. டிராட்ஸ்கியர்களின் ‘ஸ்டாலின் எதிர்ப்பு’ இங்கும் தொடர்கிறது என்பதன் வெளிப்பாடுதானா ‘ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள்’ என்ற நூலுக்கான விமர்சனம்?

இந்தியாவின்  தலைசிறந்த புரட்சியாளர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாடு ’ப்ரண்ட் லைன்’ 1995 ஜூன் 3 இதழில், ‘ஸ்டாலினின் ஆளுமையில் இருந்த நேர்மறை மற்றும் எதிர்மறை குணாம்சங்கள்’ என்ற  கட்டுரையை எழுதியுள்ளார். அதில், 1979ல் ஸ்டாலின் பிறந்த நூற்றாண்டுவிழாவில் தொடங்கி தோழர் ஹிரேன்முகர்ஜி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான ‘ஸ்டாலின் பாரம்பரியம்’ நூலைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக்கட்டுரையின் முதல்பத்தியிலேயே ஹிரேன்முகர்ஜி, ‘வரலாற்றில் மிக அதிகமாக எழுதப்பட்ட ஒருபுகழ்பெற்ற மனிதர் ஸ்டாலின்: உலகின் பெரும்பாலான பத்திரிக்கை வெளியீட்டாளர்களால் நிந்திக்கப்பட்ட, கேலிசெய்யப்பட்ட மற்றும் கண்டனம் செய்யப்பட்ட , அதேசமயம் அவரை வியந்து எண்ணிலடங்காதவர்களால் வானளாவப் புகழப்பட்டவருமாவார். அத்துடன் தன்னுடைய வாழ்நாளிலேயே புதிய, கொந்தளிப்பான, கண்ணிவெடிகள் நிறைந்த சூழலில் மனித வரலாற்றுக் கூர்முனைப்போடும், அசைக்கமுடியாத மனத்தின்மையோடும் செலுத்திய ஒருவருமாவார்’ என எழுதியதை ஈ.எம்.எஸ். குறிப்பிடுகிறார்.

இதைத்தொடர்ந்து வந்த கட்டுரைகள் ஸ்டாலினின் முக்கியத்துவம் வாய்ந்த சித்திரத்தை, ஸ்டாலின் என்ற மனிதனையும், அவர் ஆற்றிய பணிகளையும் ஆய்வு செய்தன. அவைகளில் ஒரு அத்தியாயத்துக்கு ‘தந்தத்தில் ஒரு குறை இருந்தாலும்கூட அது தந்தமே’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது. அது அந்த முழுநூலுக்குமே துணைத்தலைப்பாக ஆக்கப்பட்டது. இதன் உள்ளார்ந்த கருத்து என்னவென்றால் ‘ஸ்டாலின் சிலதவறுகளையும், ஏன் சிலகுற்றங்களையும் இழைத்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தன் வாழ்நாளின் துவக்கம் முதல் இறுதிவரையிலும் அவர் ஒருகம்யூனிஸ்டாகவே இருந்தார்’ என்று இ.எம்.எஸ். விவரிக்கிறார். அவர் மேலும் எழுதுகிறார்:

‘தனது கரங்களில் ஒப்படைக்கப்பட்ட லெனினின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல அவசியமானது என்னும் தவறான கருத்தில்தான் அந்தத்தவறுகள் நேர்ந்தன. அந்தப்பாரம்பரியத்தை அவர் முன்னெடுத்துச் சென்றார் இதுவரை பின்தங்கியிருந்த ஒரு ஜாரிஸ்ட் சாம்ராஜ்யத்தை ஒரு முன்னேறிய நவீன சோசலிச நாடாக மாற்றுவதை அது சாத்தியமாக்கியது. உலகிலேயே மிகவும் பணக்கார நாடான அமெரிக்காவுக்கு இணயான நாடாக அது மாறியது.’

‘சோவியத் கம்யூனிஸ்ட்கட்சியின் 20ஆவது மாநாட்டில் ஸ்டாலின்மீது வைக்கப்பட்ட விமர்சனத்தின்மீது அன்று ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட்கட்சியாக இருந்தபோது அதன் மத்தியக்குழு நிறைவேற்றிய தீர்மானம் எனது நினைவுக்கு வருகிறது. அந்த விமர்சனத்தை மத்தியக்குழு ஏற்றுக்கொண்டாலும், அதில் இரண்டு முக்கியமான குறைகள் இருப்பதாகவும் கூறியது’

முதலாவது, ஸ்டாலினின் தவறுகளைப்பற்றிய ஒருதலைப்பட்சமான விமர்சனத்தில் தொழில்மயமாக்குதல், விவசாயத்தை நவீனப்படுத்துதல், கலாச்சாரத்தில் செய்தபுரட்சி ஆகியவற்றில் சோவியத்யூனியன் மற்றும் சோவியத் கம்யூனிஸ்ட்கட்சி ஆகியவை அளித்த வரலாற்றுச்சிறப்புமிக்க பங்களிப்பையும், அதனால், நாஜிப்படையெடுப் பாளர்களைப்  படுதோல்வியடையச் செய்து, பாசிசத்திடம் அப்போது அடிமைப்பட்டு தவிடக்கூடிய அச்சுறுத்தல்களிலிருந்து மனிதகுலத்தை விடுதலை செய்வதற்கு சோவியத் மக்களால் சாத்தியமாயிற்று என்பதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இரண்டாவதாக, அந்த விமர்சனம் நடந்த தவறுகளுக்கு (தனிப்பட்டமுறையில்) ஸ்டாலின் மட்டுமே பொறுப்பு என்பது போலவும், சோசலிச கட்டுமானத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளுக்கும், நாஜிப்படையெடுப்பாளர்களைத் தோற்கடித்ததற்கும் சோவியத் கூட்டுத்தலைமைதான் காரணம் என்பதுபோலவும் ஒருதோற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், மறுபக்கம், சாதனைகள் தவறுகள் இரண்டுக்கும் கூட்டுத்தலைமைதான் என்பதும் அந்தக் கூட்டுத்தலைமைக்கு தலைவராக ஸ்டாலின் இருந்தார் என்பதும்தான் உண்மை. ஸ்டாலின் நூற்றாண்டு விழா கட்டுரையில் முகர்ஜி குறிப்பிட்டிருப்பதைபோல் ஸ்டாலின் வாழ்நாளில் அவரைக் கடவுளாகத் தூக்கிக்கொண்டாடிக் கொண்டிருந்த அதேநபர்கள்தான் அவரை ‘சாத்தானின் மொத்த உருவம்’ என்று இகழ்ந்தவர்களாவர். எனவேதான் ஸ்டாலினைப்பற்றிய நேர்மறை, எதிர்மறை அம்சங்களை மாத்திரம் மதிப்பீடு செய்யாமல், அவர் தலைவராக இருந்த சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையைப்பற்றியும் முறையாக மதிப்பீடு செய்யப்பட வேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கோரியது’ என்றும் ஈ.எம்.எஸ். சுட்டிக்காட்டுகிறார்.

அவர் மேலும் எழுதுகிறார்: ’.சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்டாலினைப்பற்றிய விமர்சனம் மேலெழுந்தவாரியானது’ என்று இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பால்மைரோ டோக்கிலியாட்டி தெரிவித்த ஆழ்ந்தகருத்தும் என் நினைவுக்கு வருகிறது. அவர் சொன்னார்: ‘கேள்வி என்னவென்றால், ஸ்டாலின் செய்ததாகக் கூறப்படும் தவறுகள் நிகழ்ந்ததா? இல்லையா? என்பதல்ல. ஆனால், அவற்றின் தத்துவார்த்த அரசியல் ஸ்தாபன வேர்கள் எவை? எவை? என்பதுதான்.’

‘டோக்கிலியாட்டி மேலும் சொன்னார். ‘இதைத் தெரிந்துகொள்ளாமல் உலக கம்யூனிஸ்ட் இயக்கம் ஸ்டாலினின் தலைமையில் செய்யப்பட்ட சோசலிச கட்டுமானம் தரும் பாடங்கள் பற்றிய சரியான முடிவுகளுக்கு வரமுடியாது.

’சோவியத் நாட்டின் உன்னதமான புதல்வர்கள், புரட்சியை நடத்திய வீரர்கள் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு போலிவழக்குகள் நடத்தபட்டு …….. ’ என நெஞ்சை உருக்கும் வரிகளை இந்த விமர்சனம் கொண்டுள்ளது. இது உண்மையா?

டிராட்ஸ்கி தவிர சோவியத் யூனியனிலிருந்து நாடுகடத்தப்பட்ட மற்ற அனைவரும் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த விசாரணை வெளிப்படையாக நடந்தது. அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் தூதர்களும், அன்னாலூயி ஸ்ட்ராங், டி.என்.ப்ரீத் போன்ற மேற்கத்திய முன்னணி நாளேடுகள் மற்றும் இதழ்களின் பிரதிநிதிகளும் இந்த விசாரணையை கவனித்தனர். இந்த விசாரணைகளில் அமெரிக்க தூதர் டேவிஸ் உணர்வுபூர்வமாக மனதைப் பறிகொடுத்தார். அன்றாடம் விசாரணைக்குச் சென்ற இவர் உதவிக்கு ஒரு மொழிபெயர்ப்பாளரை வைத்துக்கொண்டு விசாரணையை உன்னிப்பாகக் கவனித்தார். அவர் ஒரு வழக்கறிஞரும்கூட. அவர் தனது நினைவுக்குறிப்புகளில் ‘அரசைக்கவிழ்க்க சதி நடந்தது இந்த விசாரணையில் தெளிவாக நிறுவப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சந்தேகத்துக்கிடமின்றி குற்றவாளிகள்தான். விசாரணையைக் கவனித்த நாங்கள் எல்லாரும்கூட அதனை வெளிப்படையாக ஒப்புக்கொண்டோம். இருப்பினும் பத்திரிக்கைகளில் வெளியாகும் செய்திகளைக்கொண்டு வெளியுலகினர், ‘இது திட்டமிடப்பட்ட நாடகம்’ என்று நினைக்கக்கூடும். என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல வழக்கறிஞருமான டி.என்.ப்ரீத் தனது சுயசரிதையில் எழுதினார்: ‘மற்ற நாடுகளின் விசாரணைமுறைகளைவிட சோவியத்முறைகளை நான் நன்றாக அறிவேன். இந்த விதிமுறைகள் மேற்குஐரோப்பிய  நாடுகளில் உள்ளதைப் போன்றவை என்றாலும், சில அம்சங்களில் ஆங்கிலேய விதிமுறைகளைவிட குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்சம் சாதகமானவை. இந்த விசாரணை பொதுவாக நேர்மையுடன் நடத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள்தான் என்பது நிரூபிக்கப்பட்டது.

உலகில் பிரபலமான செய்தி ஏடுகள் மற்றும் சஞ்சிகைகளின் நிருபர்கள் விசாரணை முழுவதும் கவனித்தபின் ‘இது நேர்மையாகவும், நியாயமாகவும், சட்டப்படியும் நடந்ததாக’ கூறினர். குருச்சேவும் மற்றவர்களும்தான் இந்த விசாரணையை,’ஜன நாயகமற்றது: கொடுங்கோன்மையானது’ என்றனர். இந்த விசாரணையை முழுமையாகக் கவனித்த எந்த அயல்நாட்டினரோ, ராஜீயவாதிகளோ, பத்திரிக்கையாளர்களோ, வழக்கறிஞர்களோ இதனை நியாயமற்றது என்று ஒருபோதும் சொல்லவில்லை.

இந்த விசாரணை ’திட்டமிட்ட நாடகம்’ எனப்படும் பொய்ப்பிரச்சாரத்தை மற்றவர்களும்கூட அம்பலப்படுத்தினர். ஆனால், சோவியத் யூனியனில் சோசலிசத்தை உடைத்தெறிய வேண்டும் என்ற நோக்கத்துடனிருந்த முதலாளிகள் மட்டும் இந்தப் பிரச்சாரத்தை வேதவாக்குபோல நடத்தி வந்தனர். இந்த மறைமுக சதி நீடித்திருந்தால், ஹிட்லரின் படைகள் சோவியத் யூனியனைத் தாக்கியிருந்தால் என்ன நேரிட்டிருக்கும் என்பதை இப்போது கொஞ்சம் நினைவுகூர்ந்து சிந்திக்கவேண்டும்.

தேசிய இனங்கள் மீதான தோழர் ஸ்டாலினின் மார்க்ஸிய அணுகுமுறையை நீங்கள் புரிந்துகொள்ளவே முடியாது ப.கு.ராஜன்!. முதலாளித்துவம் வாய்க்கிழிய தேசியம் பேசும். அது சந்தையை அடிப்படையாகக் கொண்டது. ஆதலால்தான் முதலாளித்துவம் தன் சொந்த சந்தையை உறுதிப்படுத்தியப்பின் அகண்ட சந்தைக்கான அகண்ட தேசம் பேசும். ஆனால் மார்க்ஸியம் மட்டுமே மக்கள் தேசியம் பேசும். தேசியம் பற்றிய அந்த மார்க்ஸிய வரையறையை நமக்கு தந்தவர் தோழர் ஸ்டாலின்.

அவர் எந்த தேசிய இனத்தையும் வலுக்கட்டாயமாக சோவியத் ஒன்றியத்தில் அடைத்துவைத்து நசுக்கியதில்லை. ஆனால் தோழர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் அணுகுமுறையால் எண்ணற்ற தேசிய இனங்கள் சோவியத் யூனியனோடு விரும்பி இணைந்தன.

பின்லாந்து, எஸ்டோனியா, லாட்வியா, வித்துவேனியா ஆகிய நாடுகள் புரட்சிக்குப் பின்பு தனியாக சென்றன. ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இந்நாடுகளில் மக்கள் சோவியத் யூனியனோடு இணைய வேண்டுமே குரல்கொடுத்தனர். இந்நாடுகள் மக்கள் வேண்டுகோளுக்கு செவிமடுத்து பொதுவாக்கெடுப்பு நடத்தி மக்களின் விருப்பத்தால் சோவியத் யூனியனில் இணைந்தன.

இரண்டாம் உலகப் போரில் தோழர் ஸ்டாலினின் தலைமையிலான செம்படை பல நாடுகளை அந்நிய ஆதிக்கத்தில் இருந்து விடுவித்தது. ஹங்கேரி, ஆஸ்திரியா, யுக்கோஸ்லோவ்கியா, ருமேனியா, செக்கோஸ்லோவியா என பல நாடுகள் செம்படையால் விடுதலை அடைந்தன. அவை ஒரு போதும் சோவியத் யூனியனில் இணைய வலியுறுத்தப்படவில்லை.

இவையெல்லாம் தெரியாமல் ஸ்டாலின் தேசிய இனங்களை நசுக்கினார், பிழிந்தார் என கதை விடக்கூடாது. தோழர் ஸ்டாலின் காலமானது உலகின் சமாதான காலமாக இருக்கவில்லை; கடும் நெருக்கடி காலமாகவே இருந்தது. முதலாம் உலகப் போர் எனும் பேரழிவில் இருந்துதான் இரசியா புரட்சியின் மூலம் எழுச்சி பெற்றது. அது தனது பழைய காயங்களை ஆற்றும் முன்னே இரண்டாம் உலகப் போர் மூண்டெழுந்தது. இரசியா இதில் எப்போதும் ஆபத்தான நிலையிலேயே இருந்தது. உலகு தழுவிய முதலாளித்துவப் பயங்கரவாதிகளை எதிர்கொண்டு சோவியத் இரசியாவையும், புரட்சியையும், பல பின்தங்கிய நாடுகளின் எதிர் காலத்தையும் காக்கிற கடமை தோழர் ஸ்டாலினின் அரசுக்கு இருந்தது. இந்த நிலையில் இருந்துதான் சோவியத் யூனியனுக்குள் அனைத்துச் சிக்கல்களும் எதிர் கொள்ளப்பட்டன. தேசிய சிக்கலும் அவ்வகையில்தான் எதிர் கொள்ளப்பட்டது. தோழர் ஸ்டாலினுக்கு மட்டுமல்ல கம்யூனிஸ்டுகள் அனைவருக்குமே உலக நலனுக்கு உட்படாத எந்த நலனும் இல்லை.

ஸ்டாலின்மீது கற்பிக்கப்பட்ட களங்கங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் துடைத்தெறியப்படுகிறதே என்ற ஆதங்கத்தில், டிராட்ஸ்கி மற்றும் குருச்சேவின் அபிமானியாக, ஸ்டாலின் மீதான வெறுப்புணர்வை அடிநாதமாகக்கொண்டு இங்கு குரோவர்ஃபர் நூலைப்பற்றியும், மொழிபெயர்ப்பாளரைப் பற்றியும் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் ப.கு.ராஜன் டி. (ராட்ஸ்கிய) கு. (ருச்சேவிய) ராஜனாக மாறிவிட்டாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. இருந்தபோதிலும், இந்த விமர்சனம் சில உண்மைகளை வெளிக்கொண்டுவர உதவியுள்ளமைக்கு நன்றி கூறத்தான் வேண்டும்.

விமர்சனக்காற்று வீசட்டும்! வெளிச்சத்தில் உண்மைகள் மிளிரட்டும்!!.

- செ.நடேசன், குரோவர்ஃபர் நூலின் மொழிபெயர்ப்பாளர்.