attack on dalits 500

‘நாய்வாலை நிமிர்த்த முடியாது’ என்பது எப்படி வரலாற்று உண்மையோ அதற்கு சற்றும் குறைந்ததில்லை பி.ஜே.பி தலித்துகளுக்கும், முஸ்லீம்களுக்கும் ஆதரவாக இருக்கும் என்பதும். தன்னை எவ்வளவுதான் தலித்துகளின் தோழனாக காட்டிக்கொள்ள இந்து மதவெறி கூட்டம் மெனக்கெட்டாலும் அதனுடைய இயல்பான குணம் அதை அப்படி இருக்க விடுவதில்லை. வரலாறு முழுவதிலும் தலித்துகளின் ரத்தத்தை குடித்தே தன்னை வளர்த்துக்கொண்ட பார்ப்பனியம் இன்று திடீர் என்று ஓட்டரசியலுக்காக அவர்களின் உற்ற தோழனாக காட்டிக்கொள்ள எவ்வளவுதான் முயன்றாலும் முடியாமல் இன்று அம்பலப்பட்டிருக்கின்றது.

  ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தலித்துகளை அடக்கி ஒடுக்கியே பழக்கப்பட்ட பார்ப்பன கும்பல் இன்று ஓட்டரசியலை தேர்ந்தெடுத்த பின்னால் வேறு வழியின்றி அவர்களை அரவணைத்துப்போக வேண்டிய தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதற்காக பார்ப்பன அமித்ஷா தாழ்த்ததப்பட்ட மக்களின் வீடுகளில் சாப்பிடுகின்றார். சூத்திர தமிழிசையோ தான் சார்ந்து இருக்கும் நாடார் சமூகம் முன்பொருகாலத்தில் பார்ப்பனியத்தால் கீழ்த்தரமாக நடத்தப்பட்டதை வெட்கம் கெட்டுபோய் மறந்து விட்டு “எங்கள் தலைவர் அமித்ஷாவின் ஆணைக்கிணங்க தினம் ஒரு தலித் வீட்டில் சாப்பிடுவேன்” என கூச்சமே இல்லாமல் சொல்கின்றார். தலித் வீட்டில் சாப்பிடுவதே ஒரு பெரும் புரட்சியாக இந்தப் புண்ணாக்குகளுக்குத் தெரிகின்றது. பார்ப்பன கூட்டமும், அரசியல் ஆதாயத்திற்காக அவர்களை நக்கிப்பிழைக்கும் சூத்திர வகையாறக்கலும் என்னதான் இப்படி நாடகம் போட்டாலும் அவ்வப்போது தனது உச்சிக்குடிமியை வெளியே பார்ப்பனியத்தால் ஆட்டிக்காட்டாமல் இருக்க முடிவதில்லை.

 தாழ்த்தப்பட்ட மக்கள் என்ன உடுத்த வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், எங்கு தங்க வேண்டும் என அனைத்தையும் தீர்மானிக்கும் உரிமை கடவுள் தங்களுக்கே கொடுத்துள்ளதாக ஒவ்வொரு சாதி இந்துவும் நினைத்துக் கொள்கின்றார்கள். அந்த அல்பத்தனமான உணர்வுதான் அவர்கள் தாங்கள் விதித்த விதிகளை மீறும்போது அவர்களைத் தாக்கவும் அவர்களைக் கொலை செய்யவும் தூண்டுகின்றது. மனுதர்மத்தின் ஒவ்வொரு வரியையும் புனித கடமையாக நினைத்து அதை அப்படியே கடைபிடிக்கும் இந்த மதவெறியர்கள் இந்துக்களின் ஒற்றுமை பற்றி பேசுவதுதான் வரலாற்றின் முரண் நகையாகும்.

 அதுவும் இந்துக்களின் தன்னிகர் இல்லாத தலைவராக அவதாரம் எடுத்திருக்கும் நவீன கால புஷ்யமித்தரனான மோடியின் ஆட்சியில் தலித்துகளின் மீது கரிசனப் பார்வையை ஏற்படுத்தும் முயற்சிகள் நாடக பாணியில் மேற்கொள்ளப்பட்டாலும் அவரது அடிப்பொடிகள் அந்த நாடக காட்சியைக்கூட மக்கள் உண்மையா, பொய்யா என உய்த்து உணரும் அளவுக்குக் கூட நேரத்தை வழங்குவது கிடையாது. தொடர்ச்சியாக திட்டமிட்ட முறையில் அவர்களின் மீது தாக்குதல் கட்டவிழ்த்து விடப்படுகின்றது. குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உனா தாலுக்காவுக்கு உட்பட்ட மோட்டா சமாதியாலா கிராமத்தில் தோலுக்காக பசுவை கொன்றதாக கூறி பசு பாதுகாப்பு அமைப்பினர் என்று சொல்லிக்கொள்ளும் இந்துமதவெறி காலிகள் இளைஞர்களை நிர்வாணமாக்கி ஊரார் முன்னிலையில் மிகக்கொடூரமாக தாக்கியுள்ளனர். பின்பு நடந்த சிஜடி விசாரணையில் அந்த பசு பேடியா கிராமத்தில் சிங்கத்தால் கொல்லப்பட்டது எனவும் அப்படி கொல்லப்பட்ட அந்த பசுவைதான் சமாதியாலா கிராமத்திற்குத் தலித் இளைஞர்கள் கொண்டு சென்றதாகவும் தெரியவந்துள்ளது. இந்துமதவெறி காலிகளின் மனதில் பசுவுக்கு இருக்கும் மரியாதை கூட தலித்மக்கள் மீது கிடையாது என்பதைத்தான் இது காட்டுகின்றது.

 மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள மாண்டசர் ரயில் நிலையத்தில் பசு இறைச்சியை வைத்திருந்ததாக கூறி இரண்டு முஸ்லீம் பெண்களை இந்துமத வெறியர்கள் போலீஸ் பாதுகாப்போடு தாக்கினர். ஆனால் அந்தப் பெண்கள் வைத்திருந்தது பசு இறைச்சி அல்ல, அது எருமை மாட்டின் இறைச்சி என தற்போது தெரியவந்துள்ளது. இருப்பினும் அந்தப்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடுமுழுவதும் ஒரு அச்ச உணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பார்ப்பனியத்திற்குப் புனிதமான மாட்டின் கறியைத் தின்பவர்கள் இனி இந்தியாவில் வாழவே முடியாது என்ற பயத்தை அவர்கள் ஏற்படுத்துகின்றார்கள். அவர்கள் தங்களைத் தலித்துகளுக்கும் மற்ற சிறுபாண்மை மக்களுக்கும் மேலான அதிகாரம் படைத்தவர்களாக கருதிக்கொள்கின்றார்கள். தாங்கள் அடித்ததை படம் பிடித்துச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு மற்றவர்களுக்கும் இதே நிலைமைதான் ஏற்படும் என சவால்விடுகின்றனர்.

 தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை உத்திர பிரதேச மாநில பாரதிய ஜனதா துணைத் தலைவர் தயாசிங் என்பவர் ‘விலை மகளை விட மிகவும் மோசமானவர் மாயாவதி’ என கூறியுள்ளார். ஒரு முன்னால் முதலமைச்சரையே தலித் என்ற ஒரே காரணத்திற்காக இப்படி கீழ்த்தரமாக பேசமுடியும் என்றால் மற்றவர்களை பற்றி நாம் சொல்லவே தேவையில்லை.

 தலித்துகளுக்கு எதிராகவும் சிறுபாண்மை மக்களுக்கு எதிராகவும் தினம் தினம் இந்துமதவெறி காலிகளால் நிகழ்த்தப்படும் வன்முறை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இது திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படுகின்றது.மோடி பதவியில் இருக்கப்போகும் ஐந்தாண்டுகளுக்குள் ஒட்டுமொத்த இந்தியாவையும் பார்ப்பனிய சித்தாந்தத்தை ஏற்று அதற்குக் கீழ்ப்படிந்து நடக்கும் நாடாக மாற்றிவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்து கொண்டு இருக்கின்றார்கள். இதற்கு எதிராக குறுக்கே யார் வந்தாலும் சரி ஒன்று அவர்கள் கொடூரமாக தாக்கப்படுவார்கள் இல்லை கொலையே கூட செய்யப்படுவார்கள்.

 தாங்கள் என்ன செய்தாலும் தங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என திமிரெடுத்துத் திரிந்த காவி பயங்கரவாதிகளுக்குச் சரியான பாடம் புகட்டி இருக்கின்றார்கள் குஜராத் தலித் மக்கள். அவர்கள் நடத்திய போர்குணம் கொண்ட போராட்டமானது காவி பயங்கரவாதிகளைக் கலக்கமடையச் செய்திருக்கின்றது. இந்தப் பயம் எதுவரை சென்றிருக்கின்றது என்றால் ஆனந்திபென் படேலை முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி ஓடும் வரை சென்றிருக்கின்றது.

 அளவு ரீதியான மாற்றங்கள் பண்பு ரீதியான மாற்றங்களுக்கு இட்டுச்செல்லும் என்பதுதான் அறிவியல். தலித் மக்களின் மீது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பார்ப்பனியம் தொடுத்து வந்த தாக்குதல்கள் எல்லாம் இப்போது ஒன்றாக சேர்ந்து அவர்களை பண்புரீதியான மாற்றத்தை நோக்கி உருமாற்றத் தொடங்கி இருக்கின்றது. ஆயிரக்கணக்கான தலித் மக்கள் கலந்துகொண்ட அந்த வரலாற்று சிறப்புமிக்க போராட்டமானது இனி இந்தியாவில் பார்ப்பனியத்துக்கு நடக்கப்போகும் இறுதிச்சடங்குக்குக் கட்டியம் கூறுவதாய் உள்ளது.

 குஜராத்தில் மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் தலித் மக்கள் இதுபோன்ற மாபெரும் போராட்டங்களைக் கட்டியமைத்துத் தங்களுடைய பலம் என்னவென்று பார்ப்பனியத்திற்குக் காட்டவேண்டும். இனி தங்கள் மீது தாக்குதல் நடந்தால் எதிர்வினை எப்படி இருக்கும் என்று அந்த வெறிபிடித்த நாய்களுக்குப் புரியவைக்க வேண்டும். இதெல்லாம் ஒரு தற்காலிக தீர்வை அவர்களுக்குக் கொண்டுவரலாம். ஆனால் நிரந்தரமான தீர்வு என்பது அம்பேத்கர் சொன்னது போல இந்து மதத்தில் இருந்து வெளியேறுவதில் தான் உள்ளது. அது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நடப்பது நல்லது.

- செ.கார்கி