factory pollution

ஒரு சமூகத்தில் நிலவும் உற்பத்தி முறைதான் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவையும், மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவையும் தீர்மானிக்கிறது என்கிறது மார்க்சியம்.

இலாப நோக்கத்தையே அடிப்படையாகக் கொண்டு செயல்படும் முதலாளிய உற்பத்தி முறை இயற்கை மீதும், மனித குலத்தின் மீதும் ஏற்படுத்தி வரும் பேரழிவுகள் பற்றி மார்க்ஸ் மூலதனம்  நூலில் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். முதலாளியம் தனது இளமைப் பருவத்தில் இருந்தபோது எழுதப்பட்ட கருத்துக்கள் அவை. முதலாளியம் உலகு தழுவிய அளவுக்கு வளராத காலகட்டம் அது. இப்பொழுது உள்ள அளவுக்கு உலகு தழுவிய அளவில் இயற்கை மீது முதலாளியம் பேரழிவுகளை ஏற்படுத்தாத காலகட்டம் அது. இருப்பினும் முதலாளியம் உலகு தழுவிய அளவுக்கு வளரும் என்றும், அது தனது இலாப வேட்டைக்காக உலகு தழுவிய அளவில் இயற்கையைக் கையகப்படுத்தும் என்றும் அவர் முன்னுரைத்தார்.

இன்று நமது நாட்டில் வேளாண்மையில் மண் வளம் இழத்தல், செயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரித்தல், கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்குக் குடி பெயர்தல், நகரங்களில் கழிவுகளாலும், குப்பைகளாலும் சுற்றுப்புறமும், நீர் நிலைகளும் மாசுபடுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொண்டுள்ளோம். 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பிரிட்டனிலும், ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் இருந்த வளர்ந்து வந்த முதலாளிய நாடுகளில்  மண் தனது வளத்தை இழந்து வரும் பிரச்சனை அச்சத்தை உருவாக்கியது. ‘அந்தக் கால கட்டத்தில் ஐரோப்பிய உழவர்கள் நெப்போலியனின் யுத்தக் களங்களான வாட்டர்லூ, ஆஸ்டர்லிட்ஸ் ஆகிய இடங்களிலிருந்த அடிநிலக் கல்லறைகளைத் தோண்டி அங்குள்ள எலும்புகளை எடுத்து வந்து வந்து தங்கள் வயல்களில் தூவும் அளவுக்கு வெறி கொண்டிருந்தனர். பிரிட்டன் 1837 ல் மட்டும் 2,54,600  பவுண்டுகள் மதிப்பு கொண்ட எலும்புகளை இறக்குமதி செய்தது.

தமது நிலங்களை வளப்படுத்த கடற்பறவை எச்சங்களுக்காகப் பிரிட்டனும் அமெரிக்காவும் கடும் போட்டியில் இறங்கின. பெருவின் கடற்பறவை எச்சங்களைப் பெறுவதில் பிரிட்டன் ஏக போக ஆதிக்கம் பெற்றிருந்தது. கடற்பறவைகளின் எச்ச்சத்திற்காக 1856க்கும் 1903க்கும் இடைப்பட்ட காலத்தில் அமெரிக்க முதலாளிகள் உலகம் முழுவதும் தொன்னுற்று நான்கு தீவுகளையும் பவளப் பாறைத் தீவுகளையும் கைப்பற்றினர். இழந்த மண் வளத்தை மீட்டெடுக்கப் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. செயற்கை உரங்களின் தேவை அதிகரித்த அளவில் உணரப்பட்டது.

இந்தச் சூழலில்தான், மண் தனது வளத்தின் இழப்பிற்கு முதலாளிய உற்பத்தி முறை எவ்வாறு காரணமாக அமைந்துள்ளது என்பதை மார்க்ஸ் விளக்குகிறார். முதலாளிய உற்பத்தி முறை எவ்வாறு வேளாண்மை நிலங்களை வளம் இழக்கச் செய்கிறது, கிராமங்களை அழித்து வருகிறது என்பது பற்றி மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் உயிர்ப் பொருளாக்கச் செயல்பாட்டில் (Metabolic process) ஏற்பட்டுள்ள பிளவு என்ற கருத்தாக்கத்தின் மூலம் மிகவும் தெளிவாகவும், விரிவாகவும் விளக்குகிறார். அதன் மூலம் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள பிளவை விவரிக்கிறார். மனிதர்களின் வாழ்வுக்கு அடிப்படையாக இருக்கும் இயற்கையிலிருந்து  முதலாளிய சமூகத்தில் மனிதன் அந்நியப்படுத்தப்படுவதை விளக்குகிறார்.

மார்க்ஸ் தனது கருத்தாக்கத்தை விளக்க stoffwechsel  என்ற ஜெர்மன் வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அதன் பொருள் ‘பருப்பொருள் சார்ந்த பரிமாற்றம்’ என்பதாகும். அதற்குச் சமமான ஆங்கில வார்த்தை metabolism  ஆகும். அது உயிரியல் சார்ந்த வளர்ச்சி மற்றும் சிதைவு என்ற ஒருங்கிணைந்த நிகழ்வுப் போக்கைக் குறிக்கிறது. அது சுருக்கமாக வளர்சிதை மாற்றம் எனவும் குறிக்கப்படுகிறது. ஆனால் வளர்சிதை மாற்றம் என்னும் சொல் metabolism  என்ற சொல்லின் ஆழமான பொருளை வெளிப்படுத்துவதில்லை. அதற்கான விரிவான பொருள் இயற்பொருளான உணவுப் பொருள் உயிர்ச்சத்தாக மாறுவதும், மீண்டும் உயிர்ச்சத்து இயற்பொருளாக  மாறுவதுமான உயிர்ப் பொருளாக்கச் செயல்பாடாகும். எனவே metabolism  என்ற வார்த்தைக்குச் சமமாக இக்கட்டுரையில் உயிர்ப் பொருளாக்கச் செயல்பாடு என்பது பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு உடலில் நடை பெறும் உயிர் வேதியியல் சார்ந்த நிகழ்வுப் போக்காகும். இந்தக் கருத்தாக்கத்தை மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவுக்கு மார்க்ஸ் பயன்படுத்துகிறார். மனிதன் தனது உயிர் வாழ்க்கைக்குத் தொடர்ந்து இயற்கையுடன் இடையறாத பரிவர்த்தனையில், உயிர்ப் பொருளாக்கச் செயல்பாட்டில் இருக்க வேண்டும். மார்க்ஸ் இங்கு இயற்கையையும் மனிதனையும் ஒரே உடலின் இரு கூறுகளாகப் பார்கிறார்.

முதலாளிய உற்பத்தி முறையில் பெரும் நகரங்களில், பெரும் தொழிற்சாலைகளைச் சுற்றிலும் உழைப்புக்காக மக்கள் ஒன்று குவிக்கப்படுகிறார்கள். கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்குச் செல்வதால் மனிதனுக்கும் புவிக்கும் இடையிலான உயிர்ப்பொருளாக்கச் செயல்பாடு சீர்குலைகிறது. உணவுப் பொருட்கள், உடைகள் தயாரிக்கத் தேவையான பருத்தி போன்ற மூலப் பொருட்கள் கிராமங்களில் உள்ள விளை நிலங்களில் உற்பத்தி செய்யப்பட்டு  நகரங்களில் குவிந்துள்ள மக்களுக்காக எடுத்துச் செல்லப்படுகின்றன. அவை வெறும் பொருட்கள் மட்டுமல்ல. அவை மண்ணின் ஊட்டச் சத்துகளால் உருவாக்கப்பட்டவை. எனவே அந்தப் பொருட்களின் வடிவில் மண்ணின் வளமும் நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அவை மனிதர்களின் நுகர்வுகளுக்குப் பிறகு கழிவுகளாக மாற்றம் பெறுகின்றன. அவை கிராமங்களில் உள்ள மண்ணுக்குத் திரும்புவதில்லை. அதனால் மண்ணின் வளம் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுகிறது. மண் வளம் இழக்கிறது, மலடாகிறது. இன்னொரு புறமோ மனிதனின் கழிவுகள் நகரங்களை அசுத்தமாக்குகின்றன. நகரக் கழிவுகள் நகரங்களை ஒட்டிய பகுதிகளில் மலை போலக் குவிக்கப்பட்டுச் சுற்றுப் புறத்தையும், வாழ்விடங்களையும், காற்றையும் துர் நாற்றம் எடுக்க வைக்கின்றன. நோய்களைப் பரப்பி வருகின்றன. நீர் நிலைகளையும், நதிகளையும் சாக்கடைகளாக மாற்றுகின்றன. பொதுவாக நகர வாழ்க்கையை நரகமாக மாற்றுகின்றன.

இந்த நிலையைப் பற்றி மார்க்ஸ், “இலண்டனில், மாபெரும் செலவில், 45 இலட்சம் மக்களால் உற்பத்தியான கழிவுகளைக் கொண்டு தேம்ஸ் நதியை அசுத்தப்படுத்தியதைத் தவிர சிறப்பாக எதையும் அவர்கள் செய்யவில்லை.” என தனது மூலதனம் மூன்றாவது தொகுதியில் குறிப்பிடுகிறார். 

மேலும் எங்கல்ஸ் இது பற்றி “இலண்டனில் மட்டும், ஆங்கில இன மரபினரின் ஆட்சிப் பகுதி முழுவதும் உற்பத்தி செய்யப்படுகிற உரங்களின் அளவை விட அதிக அளவிலான கழிவு பெரும் செலவுடன் கடலில் ஒவ்வொரு நாளும் கொட்டப்படுகிறது.” எனக் குடியிருப்புப் பிரச்சனை என்னும் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

தொழிற்துறை உற்பத்தி மற்றும் நுகர்வால் ஏற்பட்ட கழிவுடன் “மனிதனின் இயற்கையான உயிர்ப் பொருளாக்கச் செயல்பாட்டில் உற்பத்தியான கழிவையும்” மண்ணுக்குத் திரும்பக் கொண்டு வந்து சேர்ப்பது முழுமையான உயிர்ப் பொருளாக்கச் செயல்பாட்டின் ஒரு பகுதியாகும் என மார்க்ஸ் குறிப்பிடுகிறார். கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிளவு இந்த உயிர்ப் பொருளாக்கச் செயல்பாட்டில் பிளவை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவே ஒரு பக்கம் கிராமங்களில்  மண்ணின் வளத்தின் இழப்பாகவும், இன்னொரு பக்கம் நகரங்களில் சுற்றுச் சூழல் பிரச்சனையாகவும் உருவெடுக்கிறது.  

நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையிலான பிளவை மார்க்ஸ் உலகு தழுவிய அளவில் பார்த்தார். ஏகாதிபத்திய நாடுகள் குடியேற்ற நாடுகளின் நிலங்களையும், மூல வளங்களையும், மண்ணையும் தம்முடைய தொழில்மயமாக்கலுக்காகக் கொள்ளையடித்தன.  “மாபெரும் பிரிட்டன் அனைத்து நாடுகளிலும் அவற்றின் வளங்களைக் கொள்ளையடிக்கிறது” என்றார் மார்க்ஸ்.

இன்றும் நமது நாட்டில் இருந்து நமது மண்ணின் வளங்களும், நீர் வளமும் உணவுப் பொருட்கள் வடிவிலும், ஆடைகள் வடிவிலும், கனிமப் பொருட்கள் வடிவிலும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதைக் காணுகிறோம். அவை தொடர்ந்து நமது மண்ணின் இழப்புகளுக்குக் காரணமாக உள்ளன.

எனவே முதலாளிய உற்பத்தி முறை மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையில் பெரும் பிளவை ஏற்படுத்தி உள்ளதால், உயிரின வாழ்க்கைச் சூழலைக் காத்துப் பேணுவது என்பது இந்த உற்பத்தி முறை நீடிக்கும் வரை வெறும் கனவாகவே இருக்க முடியும்.

இதைத்தான் மார்க்ஸ், “முதலாளிய வேளாண்மை முன்னேற்றம் என்பது தொழிலாளியைக் கொள்ளையடிக்கும் கலையில் ஏற்பட்ட முன்னேற்றம் மட்டுமல்ல. கூடவே மண்ணைக் கொள்ளையடிக்கும் கலையில் ஏற்பட்ட முன்னேற்றமும் கூட...தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தித் திறனை மட்டும் வளர்ச்சியுறச் செய்யும் முதலாளிய உற்பத்தி அதே சமயத்தில் அனைத்துச் செல்வங்களுக்கும் உண்மையான ஆதாரமாக இருக்கும் மண்ணையும், தொழிலாளியையும் அழிக்கிறது” என்கிறார்.  

மார்க்ஸ் விவரித்த நிலைமைகளை நமது நாட்டில் இன்று நாம் கண் கூடாகக் கண்டு வருகிறோம். கிராமங்களிலிருந்து வெளியேறிய  மக்கள் குவிந்துள்ள பெரும் தொழிற்சாலைகள் நிறைந்த நகரங்கள் ஒரு பக்கம்; ஒப்பீட்டளவில் மக்கள் தொகை குறைந்து வெறிச்சோடிக் கிடக்கும் கிராமங்கள் இன்னொரு பக்கம். இதனால் மார்க்ஸ் குறிப்பிட்ட மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உயிர்ப் பொருளாக்கச் செயல்பாட்டில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் நமது நாடு இன்று உள்ளது.

கிராமங்கள் உணவுப் பொருட்கள், பழங்கள், மலர்கள், பருத்தி, கரும்பு போன்ற வடிவங்களில் தமது மண்ணின் வளத்தையும், நீரையும் நகரங்களுக்கு அனுப்பி விட்டு வளத்தை இழந்து நிற்கின்றன. இன்னொரு பக்கமோ நகரங்கள் கழிவுகளால் நாறிக் கிடக்கின்றன. இழந்த வளத்தை மீட்டெடுக்க செயற்கை வேதியியல் உரங்கள் மண்ணில் கொட்டப்படுகின்றன. அவை மண்ணில் உள்ள மண் புழுக்களையும், பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களையும் அழித்து உயிர்ச் சூழலின் சமநிலையைக் குலைக்கின்றன. வேதியியல் உரங்களால் தொடக்கத்தில் விளைச்சல் அதிகமாவது போலத் தோன்றினாலும், தொடர்ச்சியாக மற்றும் பாகுபாடற்ற முறையில் மண்ணில் கொட்டப்படும்போது, அவை மண்ணை விசமாக்குகின்றன. மண்ணை வேளாண்மைக்குத் தகுதியற்றதாக மாற்றுகின்றன. மண்ணை மலடாக்கி, விசமாக்கும் இந்த வேளாண்மை முறை இறுதியில் மண்ணை நம்பியுள்ள விவசாயியையும் அழிக்கிறது. இந்த வேளாண்மை முறையில் பயனடைபவர்கள் செயற்கை வேதியியல் உரங்களைத் தயாரிக்கும் முதலாளிகளும், அவற்றை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் முகவர்களான உரக் கடை வியாபாரிகளும்தான்.  

வேளாண்மை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக இயற்கை விவசாயத்தை (organic farming), அதாவது செயற்கையான வேதியியல் உரங்கள், பூச்சிக் கொல்லிகள், களைக் கொல்லிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தாத விவசாய முறையை இயற்கை ஆர்வலர்கள் முன் வைக்கின்றனர். ஆனால் ஆண்டு தோறும் பெரும் அளவில் மண் இழந்து கொண்டிருக்கும் வளத்தை இயற்கை ஆர்வலர்கள் கூறும் மண் புழு உரம், பஞ்ச காவ்யா, அமிர்தக் கரைசல் போன்ற உழவியல் முறைகளால் (Agronomic pratices) ஈடு கட்ட முடியாது. மேலும் இங்கு நிலவும் சந்தைக்கான உற்பத்தி முறையில்  அவர்களால்  போட்டியில் நிலைத்து நிற்கவும் முடியாது. மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உயிர்ப் பொருளாக்கச் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள பிளவை நீக்குவதன் மூலமே மண் வளம் இழந்து வருவதைத் தடுக்க முடியும்.

உயிர்ப் பொருளாக்கச் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவை நீக்க வேண்டுமானால் இலாப அடிப்படையிலான உற்பத்தி முறையைக்  கொண்டிருக்கும் முதலாளிய சமூகத்திற்குப் பதிலாக மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறையைக் கொண்டிருக்கும் சோசலிச சமூக அமைப்பு நிறுவப்பட வேண்டும்.

2010-2011 மக்கள் தொகைக் கணக்கின்படி நமது நாட்டில் உள்ள மொத்த விவசாயிகளின் எண்ணிக்கையில் சிறு, குறு விவசாயிகளின் எண்ணிக்கை 85 விழுக்காடாகும். ஆனால் மொத்தச் சாகுபடி நிலத்தில்  அவர்கள் 44 விழுக்காட்டு நிலத்தை மட்டுமே  கொண்டிருக்கின்றார்கள்.  அதே சமயத்தில் விவசாயிகளில் 15 விழுக்காட்டினர் மொத்தச் சாகுபடி நிலத்தில் 56 விழுக்காடு நிலத்தைக் கொண்டுள்ளனர். இவர்கள் போக கிராமங்களில் வாழும் பெரும்பான்மையான மக்கள் கூலி விவசாயிகளாக உள்ளனர்.

கிராமங்களில் வாழும் கூலி விவசாயிகளுக்குத் தொடர்ந்து வருடம் முழுவதும்  விவசாயத்தில் வேலை கிடைக்காததாலும், வேலை கிடைத்தாலும் வாழ்க்கையை நடத்துவதற்கு ஏற்ற கூலி கிடைக்காததாலும் நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளை  நோக்கி அவர்கள் பெரும் எண்ணிக்கையில் செல்கின்றனர். அதன் காரணமாக் கிராமங்களில் சாகுபடிக்குத் தேவையான உழைப்பாளிகள்  பற்றாக் குறை கடுமையாக நிலவுகிறது.   

பெரும் பண்ணைகளின் உடைமையாளர்கள் கூலி விவசாயிகளைக் கொண்டே தங்கள் சாகுபடியைச் செய்து வருகின்றனர். நவீன முதலாளிய வேளாண்மை முறைகளைப் பின்பற்றி இவர்கள் சாகுபடி செய்து வந்தாலும், வேதியியல் உரங்கள், பூச்சிக் கொல்லிகள் போன்ற இடுபொருட்களின் விலை உயர்வு காரணமாகவும், கூலி விவசாயிகளின் பற்றாக் குறையினாலும் இவர்கள் தங்களுடைய நிலத்தை முழுமையாகச் சாகுபடி செய்வதில்லை, அல்லது தமக்கு இலாபம் அளிக்கும், அதே சமயத்தில் உழைப்பு அதிகம் தேவைப்படாத சவுக்கு, தேக்கு, மலை வேம்பு போன்ற தொழிற்சாலைகளுக்குத் தேவையான மரங்களைச் சாகுபடி செய்து வருகின்றனர். சாகுபடி செய்வதை விடத் தரிசாகப் போடுவது இலாபம் என அவர்கள் கருதினால் நிலங்களைத் தரிசாகப் போடவும் அவர்கள் தயங்குவதில்லை. இதனால் நமது மண்ணின் வளத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நமது ஒட்டு மொத்த வேளாண்மை உற்பத்தியும் கடுமையாகப்  பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் மக்களுக்கு இன்றியமையாத தேவையாக இருக்கும் உணவுப் பொருட்களின்  உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கு ஒரு முரண்பாடு நிலவுவதைப் பார்க்கின்றோம். ஒரு பக்கம் சாகுபடி நிலத்தின் பெரும் பகுதி ஒரு சிறு பான்மையினரின் கரங்களில் குவிந்து கிடக்கிறது. அதில் வேலை செய்யப் போதுமான உழைப்பாளிகள் இல்லாததால் நிலம் தரிசாக விடப்படுகின்றன  அல்லது அவர்களுக்கு இலாபம் அளிக்கும் மரப் பயிர்கள் போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன. அதனால் நிலத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலைமை நிலவுகிறது. நமது நாட்டின் வேளாண்மை உற்பத்தியே ஒட்டு மொத்தமாகப் பாதிக்கப்படுகிறது. இன்னொரு பக்கம் நிலத்தைச் சார்ந்து வாழும் நிலம் இல்லாத கூலி உழைப்பாளிகள் பிழைக்க வழியின்றி இன்றி, வேலை தேடி நகரங்களை நோக்கி ஓடும் அவல நிலை ஏற்படுகிறது. கிராமங்கள் மக்களின்றி வெறிச்சோடிப் போகின்றன. உழைப்பைப் பயன்படுத்த முடியாத  நிலங்கள் ஒரு பக்கம்; நிலங்களைப் பயன்படுத்த முடியாத உழைப்பு ஒரு பக்கம்.

நமது வேளாண்மை நிலம் அனைத்தின் வளமும் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டுமானால், கிராமங்களில் வாழும் விவசாயக் கூலி உழைப்பளிகள் நகரங்களுக்குச் செல்லாமல் தொடர்ந்து கிராங்களிலேயே வாழ வேண்டுமானால், நகரங்கள் அசுத்தங்கள் நிறைந்த நகரங்களாக மாறாமல் இருக்க வேண்டுமானால், மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையில் நிலவும் உயிர்ப் பொருளாக்கச் செயல்பாட்டில் பிளவு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் இந்த முரண்பாடு தீர்க்கப்பட வேண்டும். பெரும் பண்ணையாளர்களின் கரங்களில் உள்ள மிகையான நிலங்கள், அதாவது ஒரு சராசரிக் குடும்பத்திற்கு எவ்வளவு நிலம் தேவையோ அது போக மீதி உள்ள  நிலங்கள், நிலத்தை நம்பியுள்ள கூலி விவசாயிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். தமக்காக நேரடியாக வேலை செய்யும் விவசாயிகளின்  கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அந்தக் கூட்டமைப்பு    அறிவார்ந்த முறையில்  வேளாண்மை நடைபெறுவதைச் சாத்தியமாக்கும். அது ஜனநாயக ரீதியாகத் திட்டமிடலின் மூலம் சமூகத்திற்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும்.    

“முதலாளிய உற்பத்தி முறை அறிவார்ந்த வேளாண்மைக்கு எதிராக உள்ளது. வேளாண்மை வளர்ச்சியில் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தினாலும் கூட அறிவார்ந்த வேளாண்மை முதலாளிய அமைப்போடு பொருந்திப் போகாது. அறிவார்ந்த வேளாண்மைக்குத் தமக்காக வேலை செய்யும் சிறு உழவர்கள் அல்லது ஒன்றிணைந்த உற்பத்தியாளர்களின்  மேலாண்மை தேவைப்படுகிறது” என மார்க்ஸ் தனது மூலதனம், தொகுதி மூன்றில் கூறுவதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே அனைத்துப் பொருளாதார உற்பத்தியும் சோசலிச அடிப்படையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். பெரும் தொழிற்சாலைகளைக் கொண்டிருக்கும் நகரங்களை மையமாகக் கொண்ட, முதலாளிகளின் இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கும் முதலாளிய உற்பத்தி முறைக்குப் பதிலாக,  நேரடி உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பின் கீழ் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதை மட்டுமே நோக்கமாக் கொண்ட, நாடு முழுவதும் ஒரே சீராக மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் வகையில் வேளாண்மையுடன் இணைந்த தொழிற்துறை உற்பத்தி இருக்க வேண்டும். அது ஜனநாயகரீதியாகத் திட்டமிடலுடன் இணைந்திருக்க வேண்டும்.  

நிலம் சமூக உடைமை ஆக்கப்பட்டு அனைவருக்கும் சொந்தமாக்கப்படும்போது மட்டுமே மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான பிளவு நீங்கும். மனிதன்  இயற்கையிடமிருந்தும், தனது உழைப்பிலிருந்தும் அந்நியமாதல் ஒழிக்கப்படும். இயற்கைக்கும்  மனிதனுக்கும் அப்பாற்பட்ட சக்திகளின் தலையீடு  எதுவுமின்றி இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையில்  இயல்பான உறவு ஏற்படும். இயற்கையின் படிமுறை வளர்ச்சியின் ஒரு வடிவமே தான் என்பதையும்,  இயற்கையின் ஒரு பகுதியே தான் என்பதையும், இயற்கை தனது நீட்டிக்கப்பட்ட உடலின் ஒரு பகுதியே என்பதையும், இயற்கையினால்தான் தான் உயிர் வாழ்கிறான் என்பதையும்  மனிதன் உணர்வான். அங்கு மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான இயல்பான உயிர்ப் பொருளாக்கச் செயல்பாடு நிலை நாட்டப்படும். மண்ணின் வளமும், சுற்றுச் சூழலும் காத்துப் பேணப்படும்.

- மு.வசந்தகுமார்