admk supporters

நிம்மதியாக தூங்கி பல நாட்கள் ஆகிவிட்டது. கண்ணை மூடி படுத்தால் ஒவ்வொரு கட்சி தலைவர்களின் தேர்தல் வாக்குறுதிகளும் மண்டைக்குள் புகுந்து படு பயங்கரமான கனவுகளை எல்லாம் கூட்டிக்கொண்டு வருகின்றது. ஒரு கனவில் ஜெயலலிதா வாயில் ரத்தம் ஒழுக கையில் மதுபாட்டில்களை பிடித்தபடி ‘உங்களை சும்மா விடமாட்டேன்டா, மது விலக்குக் கொண்டுவரேன்னு என்னோட வாயிலேயே சொல்லவைச்சிடீங்களே, செத்துபோன எம்.ஜி.ஆர் மேலே சத்தியமா சொல்றேன்டா அடுத்து ஜென்மத்திலேயும் சாராய வியாபாரியா பொறந்து விஷ சாராயம் காய்ச்சி அதை உங்களுக்குக் கொடுத்துக் கொல்லாமா விடமாட்டேன்டா’ என கூந்தல் முடியாமல் சபதம் போடுகின்றார்.

 இன்னொரு கனவில் வீல்சேரில் சிரித்தபடியே வரும் கருணாநிதி ‘93 வயது ஆனால் என்ன 103 வயது ஆனாலும் ஸ்டச்சரில் வந்தாவது ஜெயலலிதாவிடம் இருந்து தமிழகத்தைக் காப்பாற்றி ஜனநாயகத்தை நிலைநாட்டாமல் விடமாட்டேன்’ என்றும் ‘தி.மு.க ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மது ஒழிப்புதான்’ என்றும் டி.ஆர். பாலுவை பார்த்துக் கண்ணடித்தபடியே ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கின்றார். என்ன பயங்கரமான கனவு என்று பார்த்தீர்களா!.

 ஆனால் சில கனவுகள் வந்தால் சிரிப்பு சிரிப்பாக வருகின்றது. குறிப்பாக கேப்டன், சீமான், சீரியஸ் பேச்சாளர் வைகோ போன்றவர்கள் வந்தால் சிரித்தே தூக்கம் கெட்டுவிடுகின்றது. நமக்கு மட்டும்தான் இப்படியா இல்லை மற்றவர்களுக்கும் இது போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றதா என தெரியவில்லை.

 ஆனால் ஒன்று எப்படித்தான் மக்கள் இவர்களை நம்புகின்றார்கள் என்றே தெரியவில்லை. நமக்கெல்லாம் இந்தக் கருமம் பிடித்ததுகளை பார்த்தாலே குமட்டிக்கொண்டு வருகின்றது. ஒருவர் என்னடா என்றால் ‘நான் சொன்னதையும் செய்தேன் சொல்லாததையும் செய்தேன்’ என்கின்றார். இன்னொருவர் என்னடா என்றால் ‘நான் செய்வதை தான் சொல்வேன் சொல்வதைதான் செய்வேன்’ என்கின்றார். இன்னும் சிலர் என்ன பேசுகின்றார்கள் என்று அவர்களுக்கும் புரியவில்லை; கேட்கும் நமக்கும் புரியவில்லை.

 மக்களை ஆள்வதற்குத் தனக்கு மட்டுமே உண்மையான தகுதி உள்ளது என சொல்லி வீதிவீதியாக ஓட்டு கேட்டு வரும் இந்தத் தலைவர்களின் வர்க்க நலன் எப்படிப்பட்டதாய் உள்ளது? யாராவது ஒரு தலைவர் சாமானிய மக்களின் பண்பாட்டை பிரதிநிதித்துவம் செய்வது போல இருக்கின்றாரா?

 ஆடம்பரமான உல்லாசமான சொகுசு வாகனங்களில் நின்றுகொண்டு சாமானிய மக்களின் வாழ்க்கையை நினைத்து கண்ணீர் வடிக்கின்றார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் குடிநீரை குடித்தபடி உங்கள் ஊருக்குக் குடிநீர்வசதி செய்து தருவேன் என்கின்றார்கள். ஆடம்பரமான ஐந்து நட்சத்திர விடுதிகளில் இரவு ஓய்வு எடுத்துக்கொண்டு குடிசை மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றப் போவதாக வாய்ச்சவடால் அடிக்கின்றார்கள். ஏன் இவர்கள் இப்படி முரண்பாடாய் நடந்து கொள்கின்றார்கள்?. காரணம் அவர்களின் வர்க்க நிலைதான்.

 உங்களை சந்தித்து ஓட்டுகேட்க வரும் தலைவர்கள் யாரும் உங்களைப் போல அன்னாடம்காய்ச்சிகள் கிடையாது. இவர்கள் சிலர் தமிழ்நாட்டின் குறு நில மன்னர்கள். இன்னும் சிலரோ தமிழ்நாட்டையே விலைக்கு வாங்கும் அளவிற்குத் தங்களது கஜானாவை செழிப்பாக வைத்திருப்பவர்கள். இவர்களைத்தான் நீங்கள் உங்களது தன்மானத்தை விட்டுவிட்டு கையெடுத்துக் கும்பிடுகின்றீர்கள், ஒரு அடிமை தன்னுடைய எசமானனை பார்த்துக் கும்பிடுவது போல.

 சட்டமன்றத் தேர்தலில் போட்டி இடுவதற்காக இவர்கள் தாக்கல் செய்த சொத்துக்களின் மதிப்பை பார்த்தாலே இவர்களின் வர்க்கத் தன்மை எப்படி பட்டது என்பது உங்களுக்குத் தெரிந்துவிடும். ஆனால் அதை உண்மையான சொத்துமதிப்பாக நாம் எடுத்துக்கொள்ள தேவையில்லை. உண்மையான சொத்துமதிப்பு அதைவிட பல ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும்.

 திமுக தலைவர் கருணாநிதி இந்தத் தேர்தலில் தனது சொத்தாக ரூ. 62 கோடியே 99 லட்சம் இருப்பதாக தெரிவித்து இருக்கின்றார். 2011 சட்டமன்றத் தேர்தலின் போது 44.14 கோடிகள் இருந்ததாக தெரிவித்து இருந்தார். தலைவர் வீல் சேரில் உட்கார்ந்து இருந்தாலும் இந்த ஐந்து ஆண்டுகளில் ஏறக்குறைய 18 கோடிகள் சம்பாதித்து இருக்கின்றார். ஒரு வேளை ராமானுஜர் சீரியலுக்குக் கதை வசனம் எழுதி சம்பாதித்து இருப்பார் என நினைக்கின்றேன்.

 அடுத்து ஜெயலலிதாவின் சொத்துமதிப்பாக ரூ 118.58 கோடிகளை காட்டி இருக்கின்றார். இதை நீங்கள் குமாரசாமியின் கணக்குப்படி என்று எடுத்துக் கொள்ளலாம். சென்ற 2011 சட்டசபை தேர்தலில் போது ரூ 51.4 கோடிகள் இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதன்படி பார்த்தால் இந்த ஐந்து ஆண்டுகளில் ஏறக்குறைய 68 கோடிகள் வருமானம் ஈட்டி உள்ளார். ஜெயலலிதா எப்படி இந்த வருமானத்தை ஈட்டினார் என்று தமிழ் நட்டில் உள்ள குழந்தையைக் கேட்டால் கூட சொல்லிவிடும்.

 மேலும் விஜயகாந்த் தனது சொத்துமதிப்பாக ரூ 19.37 கோடிகளும் அவரது மனைவி பிரேமலதாவின் சொத்துமதிப்பு ரூ. 17.0 கோடிகள் என்றும் தெரிவித்து உள்ளார். சீமான் தனது சொத்து மதிப்பாக ரூ. 35.36 லட்சம் இருப்பதாகவும் அவரது மனைவி பெயரில் ரூ 52.25 லட்சம் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கின்றார். தொல். திருமாவளவன் தனது சொத்து மதிப்பாக ரூ 68.22 லட்சம் இருப்பதாக தெரிவித்து இருக்கின்றார். அன்புமணி தனது சொத்து மதிப்பாக ரூ. 30 லட்சம் உள்ளதாகவும் தனது மனைவி சவுமியா மற்றும் மகள்களின் பெயரில் ஏறக்குறைய 12 கோடிகள் உள்ளதாகவும் வேட்பு மனுவில் தெரிவித்து இருக்கின்றார்.

 சில அரசியல் தலைவர்களின் சொத்துமதிப்பு அவர்களின் மனைவியின் சொத்துமதிப்பைவிட குறைவாக இருப்பது கவனிக்கத்தக்கது. இது தற்செயலான ஒன்றா... இல்லை மக்களை ஏமாற்றச் செய்த திட்டமிட்ட சதியா என தெரியவில்லை.

 இப்படி பல கோடிகளை கையில் முதலீடாக வைத்துக்கொண்டு ‘என்னால் மட்டும்தான் தமிழ்நாட்டைக் காப்பற்ற முடியும்’ என புற்றீசல் போல புறப்பட்டிருக்கும் இந்த பணக்கார முதலாளிகளின் உண்மையான நோக்கம் தான் என்ன?. இவர்களை விட்டால் தமிழ்நாட்டில் அரசியல் ஆளுமைகளே கிடையாதா? இல்லை சாமானிய மக்களின் வாழ்க்கையை மட்டுமே கருத்தில் கொண்டு போராடும் அரசியல் கட்சிகள் கிடையாதா? ஏன் மக்கள் இந்த அயோக்கியர்களை மட்டுமே தனது அரசியல் தலைவர்களாக ஏற்றுக்கொள்கின்றார்கள். இது ஒரு விந்தையான மனநிலை.

 தன்னுடைய தலைவர்கள் தங்களை ஏமாற்றிதான் இவ்வளவு பெரிய சொத்துக்களை சேர்த்துள்ளார்கள் என தெரிந்தும், இன்று தங்களைப் பார்த்துக் கும்பிடு போடும் தலைவர்கள் நாளை ஏதாவது அடிப்படை வசதிகள் செய்துதர சொல்லிப் போராடினால் காவல்துறையை வைத்து குண்டாந்தடிகளால்தான் பேசுவார்கள் என்பதும் இந்த மக்களுக்கு நன்றாக தெரியும். அப்படி தெரிந்திருந்தும் தான் இந்த மக்கள் இவர்களை தேர்தெடுக்கின்றார்கள். சாதி, மதம், மொழி, இனம் மற்றும் பணம் என அனைத்தையும் ஆயுதமாகப் பயன்படுத்தி இந்த மக்களை அவர்கள் வீழ்த்தி வைத்திருக்கின்றார்கள். மக்களின் மனங்களில் நஞ்சை ஏகத்துக்கும் விதைத்து வைத்திருக்கின்றார்கள். அவர்களின் சிந்தனைகளுக்கு வரப்புகட்டி விட்டிருக்கின்றார்கள். அதற்குமேல் அவர்களால் ஒருபோதும் சிந்திக்க முடிவதில்லை.

 தன்னை ஆள்வதற்குத் தன்னைப்போல ஒரு சாமானிய மனிதனை தேர்தெடுக்க அவர்கள் விரும்புவதில்லை. அவர்களுக்கு மீஉயர் ஆற்றல் வாய்ந்த ஒரு மனிதன் தேவைப்படுகின்றான். அவன் யாராக இருந்தாலும் அவர்களுக்குப் பிரச்சினை இல்லை. திருடன், கொள்ளைக்காரன், கொலைகாரன் என யாராக வேண்டுமென்றாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அவர்களுக்கு கைதட்டுவதற்கும், ஜே போடுவதற்கும் ஒரு வசீகரமான தலைவன் இருந்தால் போதும். அவன் பின்னால் அணி திரள்வதற்கு தயாராக இருக்கின்றார்கள்.

 சித்தாந்தம் பேசும் தலைவனைவிட சில்லரை தரும் தலைவனே அவர்களுக்குப் பிரச்சினை இல்லாதவனாக தெரிகின்றார்கள். தங்கள் வாழ்க்கை தரத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கிஞ்சித்தும் அவர்களிடம் இல்லை. எப்போதும் போல அரசியலற்ற காலி மூளைகளை எடுத்துக்கொண்டே வாக்குச் சாவடிகளுக்குப் போகின்றார்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் இரட்டை இலை, அதைவிட்டால் உதயசூரியன் இன்னும் சில பேருக்கு பம்பரம், மாம்பழம், கதிர் அருவா, அருவா சுத்தி போன்றவை எல்லாம் தெரியும். புதிய தலைமுறை வாக்களர்களுக்கு இன்னும் சில கூடுதல் சின்னங்கள் தெரிந்திருக்கலாம். அதனால் எந்த மாற்றமோ, திருப்புமுனையோ ஏற்படப் போவதில்லை. தன்னுடைய தாத்தாவும் தன்னுடைய அப்பாவும் என்ன அரசியல் அறிவில் இருந்து ஓட்டு போட்டார்களோ அதே அரசியல் அறிவில் இருந்தே அவனும் ஓட்டு போடப்போகின்றான்.

 இதோ இந்த காவிரியையும், பாலாறையும், தாமிரபரணியையும் யார் மனித பயன்பாட்டுக்கு உதவாத வகையில் நாசம் செய்தது என அவர்களுக்குத் தெரியாது, அந்த மண்ணை எல்லாம் கொள்ளையடித்து தங்களது கஜானாவில் நிரப்பிக் கொண்டவர்கள் யார் என்று அவர்களுக்குத் தெரியாது. கிரானைட் கொள்ளை பற்றியோ, தாதுமணல் கொள்ளை பற்றியோ, சாதி ஆணவ படுகொலைகளை பற்றியோ, அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. அவர்களுக்கு இப்போது தெரிந்தது எல்லாம் தன் கண்முன்னால் உள்ள சின்னங்கள் தான். அதில் ஏதாவது ஒன்றை அவர்கள் இப்பொழுது அழுத்தியே ஆகவேண்டும். அழுத்திவிட்டார்கள் என்றால் அடுத்த ஒரு பேரழிவிற்கான ஒப்புதலை வழங்கிவிட்ட மகிழ்ச்சியில் அவர்களது முட்டாள் மனது பெருமிதப்பட்டுக்கொள்ளும்.

 இன்னும் சில நாட்களுக்கு ஊடகங்களை குறிப்பாக காட்சி ஊடகங்களைப் பார்ப்பதில்லை என முடிவு செய்திருக்கின்றேன். ஏனெனில் பயங்கர கனவுகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேறு எந்த வழியும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

- செ.கார்கி