மாற்றம் என்ற சொல் மட்டும் எப்போதும் மாறாதது. தமிழகத்தைப் பொறுத்தவரை அது நெடுங்காலமாக பேசப்படும் அரசியல் விவாதப்பொருள். அது தற்போது வீரியமாக பேசப்படுகிறது. அதிலும் ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் தீவிரமாகப் பேசி வருகின்றன. திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக புதிய சக்தி வர வேண்டிய அவசியத்தை, அவசரத்தை ஊடகங்கள்கூட முன்னுரிமை கொடுத்து செய்தி வெளியிடுகின்றன.

thirumavalavan vaiko vijayakanth g ramakrishnan

சமீபத்தில் ஆனந்த விகடனில் ப.திருமாவேலன் அவர்களின் 'எங்கே என் தலைவன்' என்ற கட்டுரையில் தமிழகம் தனது தலைவனை தேடி அலைவதாக எழுதியிருந்தார். இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக வேறு புதிய கட்சி வர வேண்டும் என்பதையும் அதில் வலியுறுத்தியிருந்தார்.

திமுக, அதிமுக இரண்டும் ஒன்றுதான். அவர்களை அப்புறப்படுத்தினால் தான் தமிழகம் செழிக்க வழி என்று பெரும்பாலான கட்சிகள் கூறுகின்றன. இதைத்தான் அன்றே சொன்னார் காமராஜர் "இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்" என்று. அதையேதான் பல காலம் கழித்து இன்றும் பல கட்சிகளும் பேசி வருகின்றன.

இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக வர வேண்டும் என்று இதற்கு முன்பும் பலரும் பேசி இருக்கிறார்கள். ம.பொ.சி., ஆதித்தனார், பழ.நெடுமாறன், மூப்பனார் ஆரம்ப கால கட்டத்தில் இந்த கருத்தின் அடிப்படையில் செயல்பட்டார்கள். ஆனால் அவர்கள் யாரை எதிர்த்து அரசியல் செய்தார்களோ அவர்களிடம் இணைந்தே கரைந்து போனார்கள் என்பது வேதனை வரலாறு.

பல காலம் முன்பு கூட போக வேண்டியதில்லை. சில காலத்திற்கு முன்புகூட பலர் தன்னை இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக முன்னிறுத்தினர். 1989ல் மூப்பனார் தன்னை மாற்றாக நிலைநிறுத்தியதுடன் அதை செயல்படுத்தியும் காட்டினார். அந்தத் தேர்தலில் அவர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி 19.82% வாக்குகளைப் பெற்றதுடன் 26 இடங்களையும் பெற்றது.

1991, 1996 தேர்தலில் பாமக தன்னை மாற்றாக முன்னுறுத்தியது. 91ல் 6% வாக்குகளை பெற்று ஒரு இடத்தில் வென்றது. 96ல் 6% வாக்குகளை பெற்று 4 இடங்களில் வென்றது. 1996 சட்டமன்றத் தேர்தலில் மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக களம் இறங்கியது. அந்தத் தேர்தலில் வெற்றிபெறும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணி மதிமுக அணிதான். ஆனால் கடைசிநேரத்தில் தமாகா உதயமாகி, திமுகவுடன் கூட்டணி அமைத்தது, ரஜினி வாய்ஸ் போன்றவை அந்த தேர்தலில் மதிமுகவிற்கு எதிர்பார்க்காத பலத்த பின்னடைவைத் தந்தது.

அதன்பிறகு 10 வருடம் கழித்து, 2006 தேர்தலில் தேமுதிக, விஜயகாந்த் தலைமையில் தன்னை மாற்றாக அறிவித்து தேர்தலில் களம் கண்டது. 8.4% வாக்குகளை வாங்கியது. அந்தத் தேர்தலில் இளைஞர்களின் சக்தியை ஓரளவிற்குத் திரட்டியது அக்கட்சி. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் இரண்டு கட்சிகளுக்கு தன்னை மாற்றாகக் காட்டி 10.8% வாக்குகளைப் பெற்று 2% வாக்குகளை அதிகம் வாங்கியது.

இதுபோல் ஒவ்வொரு காலத்திலும் ஏதாவதொரு கட்சி தன்னை மாற்றாகக் காட்டி களத்தில் இறங்கித்தான் வருகிறது. அதில் அவர்கள் ஓரளவிற்கு மக்களின் நம்பிக்கையைப் பெற்றனர். அன்று எடுத்த முடிவுகளின்படி அவர்கள் உறுதியாக நின்றிருந்தால், சில காலங்களிலேயே அவர்கள் மாற்றாக வர முடிந்திருக்கும். அந்த வாய்ப்பை அவர்கள் கை நழுவ விட்டதின் விளைவு இன்று வரை திமுக, அதிமுக இரண்டு கட்சிகள் மட்டுமே இங்கு ஆதிக்கம் செலுத்துகிறது. இன்னும் கூடுதலாக தன்னை வலுப்படுத்திக் கொண்டுவிட்டது. இன்றைய அவர்களின் வாக்குவங்கியை சரியாகச் சொல்ல வேண்டுமானால் திமுக 23%, அதிமுக 28% என்பதாக இருக்கிறது.

இந்த வாக்கு விகிதத்தில் இருந்து, வாக்கு சதவீதம் கூட வாய்ப்பு இருக்கிறதே தவிர குறைய வாய்ப்பு இல்லை. ஆக மீதி உள்ள 49% வாக்குகளை ஒரு கட்சியோ அல்லது ஒரு கூட்டணியோ பெறும் பட்சத்தில் அவர்கள் மாற்று சக்தியாக வரமுடியும். இதுதான் கள யதார்த்தம். ஆனால் இதற்கான வாய்ப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால் மாற்றம் வேண்டும் என்று கூறுபவர்கள் இன்று பல வாறாகப் பிரிந்து இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தான்தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து செயல்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து களத்தில் இறங்காதவரை தமிழ்நாட்டில் திமுக, அதிமுக தான் கோலோச்சும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதேபோல் இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். திமுக, அதிமுகவிற்கு மாற்றாக நினைப்பவர்கள், தாங்கள் எந்த வகையில் அவர்களிடத்தில் இருந்து மாறுபடுகிறேன் என்று மக்களிடத்தில் எடுத்துக்காட்டத் தவறுகிறார்கள். முன்பும், தற்போதும்கூட உண்மையான கொள்கை அடிப்படையிலான மாற்று உருவாக்கப்படவில்லை. திமுக, அதிமுகவிலிருந்து தேமுதிக, மதிமுக எவ்வகையில் மாற்றாக அமையும்? அதிமுகவிடம் உள்ள அனைத்து சர்வாதிகார குணாதியம்சம்களும் தேமுதிகவிடம் உள்ளது. திமுக செய்த பல தவறுகளைப் போல, கடந்த காலங்களில் மதிமுகவும் செய்திருக்கிறது. அவர்கள் போற்றும் பெரியாரின் திராவிட கொள்கைக்கு முற்றிலும் எதிராக உள்ள இந்துத்துவத்துடன் கூட்டணி அமைத்துக் குலாவினார்கள். தமிழகத்தில் இந்துத்துவத்திற்கு மேடை அமைத்துத் தந்ததில் திமுக, அதிமுகவிற்கு அடுத்து அந்த பெருமை மதிமுகவையே சேரும்.

அதேபோல காங்கிரசுக்கும், தமாகாவிற்கும் என்ன வேறுபாடு உள்ளது? கடந்த காங்கிரஸ் அரசின் அனைத்து மக்கள் விரோத செயல்களையும் அருகில் இருந்து ஆதரித்தவர் அவர்களல்லவா! இன்னும் பாஜக, பாமக போன்ற கட்சிகளும் தன்னை மாற்றாக முன்னிருத்துகின்றன. அவைகள் ஆட்சிக்கு வருவதாக வைத்துக்கொண்டால் கூட, தமிழகம் ஒரு பிரச்சனையில் இருந்து தப்பித்து வேறொரு பிரச்சனையில் இருந்து சிக்கிக் கொண்டதாகத்தான் அமையும்.

திமுக, அதிமுகவிற்கு மாற்றாக தங்களை முன்னிருத்துபவர்களை மக்கள் பெருமளவில் ஏற்காததிற்குக் காரணம் அவர்கள் மாற்று அரசியல் கட்சியாக இல்லை, மற்றொரு அரசியல் கட்சியாகத்தான் இருக்கிறார்கள் என்பதனால்தான். ஆனால் இவைகள் எல்லாவற்றிற்கும் உணமையான மாற்றாக ஒரு கட்சி இருக்கிறது. அந்த கட்சியை பெரும்பாலான மக்கள் சீண்டுவதில்லை. அவர்களின் உழைப்பு கண்டு கொள்ளப்படுவதில்லை. அவர்களும் தங்களை மாற்றாக முன்னிறுத்திக் கொள்ளவில்லை.

அவர்கள்தான் நாட்டின் நலனுக்காக, சமூக விடுதலைக்காக, முதலாளித்துவ சக்திகளுக்கு எதிராக, தீண்டாமைக் கொடுமைக்கெதிராக நீண்டகாலம் போராடி வருகின்ற இடதுசாரி கட்சிகள், அந்தக் கட்சியில் தன் முனைப்பு இல்லை, தன்னலம் இல்லை, குடும்ப அரசியல் இல்லை, அதேபோல அவர்களிடம் ஒரு மாற்றாக வருவதற்கான எண்ணமும், செயல்பாடுகளும் கொஞ்சம்கூட இல்லை.

உண்மையான கொள்கை அளவிலான மாற்றங்கள் இடதுசாரிகள் கட்சியாலேயே கொண்டு வர முடியும். ஆனால் அதற்கு அவர்கள் தயாரில்லை. அவர்கள் எப்போதும் மற்றவர்களை முன்னிறுத்தி, பின்னிலிருந்து இயங்குவார்கள். அதுதான் அவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. முன்பு எம்ஜிஆரை முன்னிறுத்தினார்கள். பிறகு ஜெயலலிதா, கருணாநிதி என்று பின்னிலிருந்து இயக்கி அவர்கள் செய்யும் அனைத்து தவறுகளுக்கும் இவர்களும் ஒரு காரணம் ஆகிவிட்டார்கள். அதனால்கூட அவர்கள் மக்களிடம் நம்பிக்கை பெற முடியாததற்கு ஒரு காரணம் ஆகிவிடுகிறது.

முன்பு பெருந்தலைகளை பின்னிருந்து இயக்கி, அவர்கள் செய்த தவறுகளுக்கு மௌன சாட்சியாக இருந்த இடதுசாரிகள் இந்த தடவையும் அதே தவறை மீண்டும் செய்கிறார்கள். இப்போது தேமுதிக, தமாகா, மதிமுகவை சுமக்கத் தயாராகிறார்கள். உண்மையில் இவர்கள் எப்படி ஆண்ட, ஆளுகின்ற கட்சிகளுக்கு மாற்றாக முடியும் என்று நினைப்பதில்லை. தமிழகத்தில் நடக்கும் தீண்டாமைக் கொடுமைகள், அநீதிகள், ஆணவப் படுகொலைகள், தனியார் முதலாளிகளுக்கு ஆதரவான செயல்பாடு என்று எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் திமுக, அதிமுகவிற்கு எந்த நிலையோ அந்த நிலையில் அந்த கட்சிகள் இருக்கின்றன.

ஆகவே மேலும் மேலும் செய்த தவறே மீண்டும் செய்யாமல். மற்றவர்களை தூக்கி பிடிப்பதை நிறுத்திவிட்டு இடதுசாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து, களம் இறங்க வேண்டும். உடனே பலன் கிடைக்காததை கண்டு, நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. இன்று இல்லையென்றாலும் ஒருநாள் வலுவான சக்தியாக வர முடியும். அதற்கான தகுதியும், தலைமையும் இடதுசாரிகளுக்கு மட்டுமே உள்ளது. மற்ற மாற்று எல்லாம் வெறும் ஏமாற்று மட்டுமே.

- சனா பாரூக்