ருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் உலகம் முழுவதும் சோதனைக் களங்களாக அமைந்தன. Russo-Japanese war (1904-1905), Sino-Japanese war (1894/95-1935),1911 ல் சீனப்புரட்சி, 1914 முதல் 1918 வரை முதல் உலகப்போர், 1919 ல் கிலாபத் இயக்கம், தொடர்ந்து 1920 களில் பொருளாதார மந்தம் போன்றவை உலகினை அலைக்கழித்தன. இச்சூழலில்தான் வரலாற்றுக்கான காரணங்களை அறிவதற்கு, ஒரு முழுமையான வரலாற்றினை எழுதுவதற்கு அனைத்துவகையான சான்றுகளையும் பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கில் அன்னல் சிந்தனைப்பள்ளி (Annales school of thought) பிரான்சில் உருவானது. இச்சிந்தனைப்பள்ளியின் வரலாற்று ஆசிரியர்களே, பிறதுறை அறிவும் வரலாற்றினை அறிதற்கு தேவை என்று உணர்த்தினர். அவர்கள் அளித்த கருத்துகள் ஆங்கிலத்தில் உப தலைப்புகளில் தரப்பட்டுள்ளன. அவர்களின் சிந்தனை மார்க்சிய சிந்தனையின் தொடர்ச்சியாக அமைந்திருந்தது. அப்பள்ளி வகுத்தளித்த சில கருத்துகளின் பின்னணியில் தமிழக வரலாற்றின் சில கூறுகளை இனம்காணும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

Fernand Braudel bookமனிதர்கள் தமக்குத் தெரியாமலே வரலாற்றினை உருவாக்குகிறார்கள் என்ற கார்ல் மார்க்சின் கருத்து ஒன்று உண்டு. இக்கருத்தில் சொல்லப்பட்ட மனிதர் யாவர்? என்று அறியவேண்டும். அவர்களில் முதன்மையானவர்கள் வேலையாட்கள், போர்வீரர்கள், குழந்தைகள், பாலியிலில் ஈடுபடுவோர், மாணவர்கள், தற்கொலைப்படையினர் என்று வரையறுக்கலாம். இவர்கள் யாவரும் பிறரால் இயக்கப்படுவோர். இவர்களுடன் மனப்பிறழ்வுற்றோர், கவிஞர், கலைஞர்கள் போன்றோரையும் சேர்க்க வேண்டும். ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று பாரதியார் பாடினார். ஆனால், சுதந்திரம் அடைந்தது அவருக்குத் தெரியாது. அவரால் கவித்துறையில் ஒரு பரம்பரை உருவானது. ஆனால், அது அவருக்குத்தெரியாது. சென்னையில் பள்ளிப் பேருந்தின் ஓட்டையிலிருந்து விழுந்து இறந்த குழந்தைக்கு தமிழ்நாடுஅரசு பள்ளிப்பேருந்துகளை சரிபார்ப்பதற்கு ஆணையிடும் என்று தெரியாது. ஆனால், அவ்வாணைப் பிறப்பதற்கு உடனடிக் காரணம் அக்குழந்தையின் இறப்பாகும். கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் கருகி இறந்த குழந்தைகளுக்கு தமிழகம் முழுக்க பள்ளிக்கூரைகளை சரிபார்க்க தமிழக அரசு ஆணையிடும் என்று தெரியாது. குழந்தைகளைப் பலியிட்டு பெரிய வேலைகளைத் தொடரும் மரபு இந்தியாவில் உண்டு என்பதனைப் பயணிகள் குறித்துள்ளனர். இப்படி ஒவ்வொருமுறையும் பலரைப் பலியிட்டபிறகே நல்லகாரியங்கள் நாட்டில் நடப்பது அவலம். இலங்கை அரசு, குழந்தைகளையும், சிறுவர்களையும் பலியிட்டு போரினை முடித்தது. போர் முடியும் என்பது அவர்களுக்குத் தெரியாது. தமிழக வரலாற்றில் திருப்பு முனையினை உருவாக்கிய இந்தித் திணிப்பு-எதிர்ப்புப் போராட்டத்தில் இறந்த மாணவர்களுக்கு 2014 நாடாளுமன்றத்தேர்தலில் திமுக தலைவர் இந்தியில் பேசி வாக்குசேகரிக்கப்போவது தெரியாது. ஜப்பான் அணுகுண்டு வீச்சில் இறந்தோருக்குத்தெரியாது இரண்டாம் உலகப்போர் முடிவிற்கு வரப்போவதும், ஜப்பான் அமெரிக்கவசமாகப் போவதும். இப்போரில் இறந்த இருகோடி சோவியத் படையினருக்கு போரில் இட்லர் இறக்கப்போவதும் தெரியாது. தமிழகத்தின் பக்தி இயக்கத்தில் கோயில் பெண்டிராகச் சேர்ந்த பெண்களின் சந்ததியினரின் கற்பு கடவுளின் பெயரால் சூறையாடப்போவது அவர்களுக்குத் தெரியாது.

பொதுப்போக்கு (common phenomenon)

            உலகில் ஒரு பொதுவான வரலாற்றுப்போக்கு அவ்வப்போது நிகழ்வதுண்டு. அது வெவ்வேறு காலக்கட்டத்திலும் நிகழலாம். ஒரேமாதிரி சமூகச்சூழல்கள் போன்றவற்றால் இதனை அறியலாம். இலக்கியத்தினை ஆய்வதற்கு இது மிகப்பொருத்தமானது. இதில் ஒற்றுமைக்கூறுகளும் அமையலாம்; வேற்றுமைக் கூறுகளும் அமையலாம். சீதையினை ராமனும் துன்புறுத்தினான், ராவணனும் துன்புறுத்தினான்: இது ஒற்றுமை. ராமன் தம் மனைவியினைத் துன்புறுத்தினான்; ராவணன் பிறன் மனைவியினைத் துன்புறுத்தினான்: இது வேற்றுமை. மணிமேகலையினைத் தாய்தெய்வம் வான்வழியே கடத்தினாள் : இன்புறுத்தலுக்கு. ராவணன் சீதையினை வான்வழியே கடத்தினான் : துன்புறுத்தலுக்கு. இத்தலைப்பின் கீழ் Heroic poetry, bridal mysticism, oral poetry, peasant culture போன்றவற்றை ஆராயலாம். Finland அரசு, ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றால் பெற்றோரை மிகவும் ஆதரிக்கிறது. சீனஅரசு ஒரு பிள்ளைப் பெற்றால் ஆதரிக்கிறது. இவ்வேறுபாட்டினை ஆய்வின் கருப்பொருளாகக் கொள்ளலாம்.

வரலாற்றில் ஓர்மை (historical resemblances)

          அரசியலில், சமூகப்போக்குகளில் வரலாற்று ஓர்மைகள் அமைகின்றன. பிரஞ்சுப் புரட்சியும், ரஷ்யப்புரட்சியும் அரசகுடும்பத்தினர் கொல்லப்பட்டவுடன் முடிந்தது. ஆனால், முன்னது சில ஆண்டுகளிலேயே தோற்றது; பின்னது பல ஆண்டுகளுக்குப்பின் தோற்றது. இவ்விரு புரட்சியிலும் உண்டான அரசியல், சமூக மாற்றத்தினைக் காணும் வாய்ப்பினை அரசகுடும்பத்தினர் பெறவில்லை. சீனப்புரட்சியில் அரச குடும்பத்தினர் கொல்லப் படாததால் அவ்வாய்ப்பினைப் பெற்றனர். இந்தியாவில் புரட்சியே நிகழவில்லை; விடுதலைப் பெற்றோம். பண்ணையாரும், அரசகுலத்தினருமே தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இதில் ஏழைப்பங்காளர்கள் என்று தம்மைச் சொல்லிக்கொண்டவர்கள் மக்களை பலியிட்டு செல்வந்தர்களின் பங்காளியாயினர். ஆசிய நாடுகளில் ஏன்? பெண்தலைவர்கள் கொடுமைக்கு ஆளாகின்றனர். இந்த்ரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். பெனாசிர் புட்டோ குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். Ang-sui பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். நோபல் பரிசுபெற்ற மலாலாயூசுஃப்சாய் சுடப்பட்டு உயிர் தப்பியுள்ளார். காளிவணக்கம் பிரபலமாயிருந்த வங்காளத்தில்தான் சதிவழக்கம் மிகுந்திருந்தது. பாலர்திருமணம் வழக்கில் இருந்தது. வங்காளத்தில் forward bloc party உண்டு. உசிலம்பட்டியிலும் உண்டு. அங்கு பெண்சிசுக்கொலையும் உண்டு. ஆனால், காளி வழிபாடு இல்லை. பெண்களின் மீதான ஆசிய ஆண்களின் கருத்து என்ன?

பெண்மொழி (Communication of women)

            பெண்மொழி சமூகத்தில் தாக்கத்தினை உருவாக்கும். அவர்கள் கருத்தினை வாய்ப்பேச்சிலும், செய்கைகளிலும் வெளிப்படுத்துவர். இந்தியாவின் பெண்சிற்ப வடிவங்களும், ஓவிய ரூபங்களும் இந்தியப்பெண்களின் உளநிலையினை வெளிப்படுத்துகின்றன. மனத்தினை நேர்த்தியாக பாவங்களின்மூலம் வெளிப்படுத்தவும், மறைக்கவுமே உயர்குடியினர் நாட்டியக்கலையினைப் போற்றி வளர்த்தனர். இக்கலையினைக் கொஞ்சிக்கூத்தாடிய தஞ்சைத்தரணியில் இருந்துதான் சந்தானலக்‌ஷ்மி, ராஜலக்‌ஷ்மி, ராஜகுமாரி, ஜோதிலட்சுமி போன்ற நடிகைகள் உதித்தனர். இவரில் ராஜகுமாரி கனவுகன்னியகவே வாழ்ந்து முடித்தார். தமிழ்த்திரையில் முதன்முதலில் flying kiss கொடுத்தவர் அவரே. ஒருமுறை புரோத்திமா பேடி என்ற நாட்டியமணி மும்பை கடற்கரையில் நிர்வாணமாக ஓடினார். அவர் ஒடும் படத்தினை அடுத்தநாள் பெரும்பாலான ஆங்கிலநாளிதழ்கள் வெளியிட்டன. பேட்டியில் அது என் அவா என்றார். அவரின் நிர்வாணத்திற்கும், வடகிழக்கில் அதிகாரத்திற்கு எதிராக பெண்கள் நிர்வாணமாக கைகோர்த்து நின்றதற்கும் வேறுபாடு உண்டு. முன்னவர் உடலழகினை ஆராதித்தார்; பின்னவர் தம் தன்மானத்தினை நிலைநிறுத்த நின்றனர்.

பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸிற்கு இந்திய வருகையின்போது பத்மினி கோலாபூரி என்ற இந்தி நடிகை முத்தமிட்டார். மும்பையில் ஜொளித்த (Michael Jackson) மைக்கேல் ஜாக்சனிடம் முத்தம் பெற பெண்கள் வரிசையில் நின்றனர். முத்தம் பெற்ற ஒருபெண் பலநாள்கள் குளிக்காமல் இருந்தார் என்பது செய்தி. இது ஓர் இந்திய உளவியல். பழங்குடித்தன்மை எனலாம். வேற்று இனத்தின் ஆடவரை கவரவேண்டும் என்ற உள்ளெழுச்சியே காரணமாகலாம். இந்தியப்பெண்கள் வசீகரத்தினையும், பிரகாசத்தினையும் விரும்புகிறவராய் உள்ளனர். இது, குந்தியிலிருந்து தொடங்குகிறது. அவர் பிரகாசமான சூரியனில் மயங்கினாள். யார்? என்று அறியாமலே சகுந்தலை துஷ்யந்திடம் கலந்தாள். மிதிலையில் ராமனை யார்? என்று அறியாமலே மைதிலி தோளும் கண்டாள், தாளும் கண்டாள். கண்டவுடனேயே ராமன்மேல் சூர்ப்பநகை காமுற்றாள். ஊரறியாமல், பேரறியாமல், தாயறியாமல் செம்புலப்பெயல்நீரில் கலந்தனர் தமிழ்க்காதலர். கறுப்பினக் குத்துச்சண்டை வீரர் முகமது அலி இந்தியவருகையில் அவரை எந்தப்பெண்ணும் முத்தமிடவில்லை. சிவாஜிகணேசன் சாயலில் தம் மணமகன் இருந்ததால் அவரை மணந்தேன் என்று ஒரு டி.வி.ஷோவில் ஆனந்தக்கண்ணீர் வடித்தார் ஓர் ஆசிரியை. தாமும் கணவரும் சிவாஜி-பத்மினியாகவே வாழ்கிறோம் என்றார் ஒரு தாயார். இது, ஆண்டாள் வகுத்த bridal mysticism என்ற மரபின் தொடர்ச்சியே. நடிகை ஷில்பா ஷெட்டி பொது நிகழ்ச்சியில் எதிர்பாராமல் ஒரு ஹாலிவுட் நடிகரிடம் நீநீநீண்ட வாய்முத்தம் பெற்றார். ஒருமுறை துபாயில் நடந்த சினிமா நடன நிகழ்ச்சியில் பதின்மூன்று வயது தமிழ்ப்பெண் முத்துராமன் கார்த்திக்கிடம் (அப்போது அவர் நடுவயதினைக் கடந்திருந்தார்) முத்தம் கேட்டார். கார்த்திக் மறுத்ததுடன் அப்பெண்ணைக் கண்டித்தார்.

மேலீட்டுணர்ச்சி (sensibility and emotions)

            உணர்ச்சிமேலீடு வரலாற்றினை மாற்றுகிறது. இது அதிகாரத்தினை எதிர்க்கவும் பயன்படுகிறது. John F. Kennedy யை ஒருமுறை Fidel Castro உணர்ச்சியுற்றுப் பேசினார். Chavez Hugo, George Bush II னை உணர்ச்சியுற்று devil என்றார். ராவணன் கயமையால் உணர்ச்சிமேலிட்டு அழிந்தான்; துரியோதனன் ஆணவத்தால் உணர்ச்சி மேலிட்டு அழிந்தான்; தசரதான் அவசரத்தால் உணர்ச்சி மேலிட்டு இறந்தான். திமுக தலைவர் தேர்தலில் தோற்கும்போதெல்லாம் உணர்ச்சியுற்று இனித்தமிழரைக் காப்பாற்றமுடியாது என்பார்.

            உணர்ச்சிமேலீடு தொற்றிப் பரவும். சிவாஜிகணேசன் நடிப்பினை மிகை என்பர். ஆனால், அவரை imitate செய்து பலர் நடிகராயினர். ஒருவர்/ஒருவரை ragging செய்தால் கூட்டமாக சேர்ந்து செய்வது, ஊரேகூடி ஒருவரை அடிப்பது, ஊரே திரண்டு விபத்துக்குள்ளான சரக்கு வண்டியின் சரக்கினைத் திருடுவது, கூட்டமாக சாமியாடுவது, டிஸ்கொதே ஆடுவது எல்லாம் மிகையுணர்வின் தொற்றுத்தன்மையே. கயமை காரியங்களுக்கு உடன்படும்போதே ஊரோடு ஒத்துப்போ என்ற தொடரினைப் பயன்படுத்துகிறோம்; நற்காரியங்களுக்கு அன்று. இதுவும் உணர்ச்சிமேலீட்டின் தொற்று. Spartans, பரம்பரை நோயாக போரில்மட்டுமே ஈடுபட்டதால் அவர்களின் பிற பண்பாட்டுக்கூறுகள் வரலாற்றில் பதியப்படாமல் மறைந்தன.

உளவியலும் வரலாறும் (Psychology and history)

          தமிழரின் உளவியல் வினோதமானது: வசந்தபவனில் திருடியது என்று தம்ளரில் பொறித்து வைப்பது, தம்ளரை சங்கிலியால் அண்டாவுடன் கட்டுவது போன்றவை. சம்பந்தர், குமரகுருபரர், சீராளன் மூவருமே பக்தியோடு தொடர்புடையவர். இளம்பிராயத்திலேயே வாய்பாடிய முன்னவர் இருவரும் வாழ்வுற்றனர்; வாய்பேசாத சீராளன் துண்டாடப்பட்டான். வாயுள்ளபிள்ளை பிழைக்கும் என்பது இதுதானோ? இளங்கோஅடிகள், துறவு பெருமையுற துறவுற்றார்; மணிமேகலை, குலம் பெருமையுற துறவுற்றார். TESMA, ESMA சட்டங்கள் பயன்படுத்தப்படும் போது லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மனோநிலை சரியில்லையென்று மன்னிப்புக் கடிதம் எழுதவைத்தது rule of law. அவமானத்தினைத் தாங்குபவன் அடுத்தவனை அவமதிப்பான். இது எஸ்கலேட்டர் படிக்கட்டுகள் போல் மேலிருந்து கீழும் கீழிருந்து மேலுமாக இயங்கும். அடுத்தவனுக்குக் கைகொடுப்பவன் அவனை அடுத்தவனுக்குக் கைகொடுக்க வைக்கிறான். இது வரலாற்றினை ஆலின் விழுது போன்றும் அருகம்புல் போன்றும் அமைக்கும். மனிதர்கள் நேசக்கைகளை உருவிக்கொள்கையில் வரலாறு சீட்டுக்கட்டுபோல் சரியும்.

சமூகநிலை புள்ளியியல் (Demography)

            ஒரு குறிப்பிட்ட நிலவட்டத்தின் அல்லது ஊரின் மக்கள்தொகை விபரங்கள் அங்கு மக்கள் இயங்கிவரும் தன்மைக்கேற்ப மாறும். பிறப்புநிலை, இறப்புநிலை, ஊடுருவல், போர், அமைதி, புலப்பெயர்வு போன்றவை இவற்றை மாற்றலாம். இடைக்காலத்திய ஐரோப்பாவில் சில நகரங்களின் சர்ச்சுகளில் மேற்சொல்லப்பட்ட விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இடைக்காலத்திய தமிழகத்தில் இதுபோன்ற சான்றுகள் கிடைப்பதரிது. ஆனால், கல்வெட்டுகளில் அவற்றைப்பொறித்தோர், அவற்றில் பதிக்கப்பட்டுள்ள வரிப்பொத்தகம் போன்ற அலுவலர்களின் குறிப்புகளின் அடிப்படையில் எழுத்தறிவு பெற்றிருந்த மக்களின் புள்ளிவிபரங்களை ஓரளவு அறியலாம். போரின்போதும், ஆக்கிரமிப்பிற்குப் பிறகும் சமூகநிலைப்புள்ளி மாறும். இனக்கலப்பு உருவாகும். இது மொழி, பண்பாட்டுக் கலப்பிற்கு இட்டுச்செல்லும். இந்தியாவில் கடற்கரை நகரங்களில் இது நிகழ்ந்தது. இந்தியாவின் வடமேற்குப்பகுதியில் இது அடிக்கடி நிகழ்ந்தது.

குறுகியகாலத்தின் வரலாறு (short term history)

            சில சந்தர்ப்பங்களில் ஒரு குறுகியகால நிகழ்வு வரலாற்றுமாற்றங்களை உண்டாக்குகிறது. தேர்தல்நாள்கள், ஊரடங்குநாள்கள், MISA காலம் போன்றவற்றை இதற்குள் அடக்கலாம். வாகீசர் என்ற சமணர் சூளை நோயினால் துயருற்றது சிலகாலமே. திருநீற்றால் குணம்பெற்றது ஒரு சிறுநேரமே. இது அவரை அப்பர் என்ற சைவராக மாற்றியது. இதனால் தமிழக வரலாற்றுப்போக்கே மாறியது. குழந்தைகளுக்கு சொட்டுமருந்து கொடுக்கும் நேரம் சிறிது. ஆனால், கோடிக்கணக்கான குழந்தைகள் இதனால் முடத்தினின்றும் விடுபடுகின்றனர். தொற்றுநோய் இருப்பது குறுகியகாலமே. ஆனால், அது ஏற்படுத்தும் விளைவு விபரீதமானது.

            WTO சிதைக்கப்பட்டது ஒரு சில கணத்தில். ஆனால், அது உலக அரசியல் கொள்கைகளை மாற்றியது. இந்தியா விடுதலை பெற்ற அடுத்த கணத்தில் வன்முறை பரவியது. 1968 கீழ்வெண்மணி தீயிடல் ஒரு micro time தான். ஆனல், 44 பேர் உயிருடன் கருகினர். நிமிடத்திற்குள் பிரதமர் இந்த்ரா காந்தி சுடப்பட்டார். விளைவு மூன்றாம் உலக நாடுகள் வலுவிழந்தன. உலக வரலாற்றில் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு போர் நடக்கிறது. சென்ற நூற்றாண்டில் முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், வியட்நாம் போர், இந்தோ-பாக் போர், 1990 களில் ஈரான் - ஈராக் போர், ஈழப்போர், செசன்ய போர், ஆப்கன் போர். 2000 களில் ஈரானுடனான் போர், ஈழப்போர், லிபியப்போர்.

ஒப்பாய்வு (Comparative methodology)

            ஒப்பாய்வு உடனடித் தேவையானது. ஆனால், வரையரைக்கு உட்பட்டது. ஒற்றுமை-வேற்றுமைகளையும், (similarity and dissimilarity; likeness and differences) ஒத்த-மாறுபட்ட தன்மைகளையும் இதில் ஆயலாம். ஒரு வரலாற்றுப் போக்கின் (trace the evolution) படிமலர்ச்சியினையும், இரு அல்லது அதற்குமேற்பட்ட நடப்பியல் (two or more phenomenon) கோட்பாடுகளையும், பல சமூக நிலைபாடுகளையும் இம்மாதிரியான ஆய்விற்கு பயன்படுத்தலாம்.

            இந்தியாவில் கடவுளர்கள் பற்றிய ஒப்பாய்வு பயன் தரும். கடவுளரை இரு வகைக்குள் வைக்கலாம் : (1) வான் கடவுளர்கள் (2) மண் கடவுளர்கள். இதனை வேறுமாதிரியாக அரசு கடவுளர்கள், மக்கள் கடவுளர்கள் எனலாம். முதல்வகை கடவுளர்கள் ஆள்வோர் விரும்பியபடி உருவாக்கப்பட்டோர். இரண்டாம் வகையினர் மண்ணில் வாழ்ந்து மாண்டோர். வானின்று தோன்றிய கடவுளர்க்கு வரலாறில்லை;கதைகள் உண்டு. மண்ணில் வாழ்ந்து மடிந்த கடவுளர்களுக்கு வரலாறும் உண்டு, கதைகளும் உண்டு. இவ்விரண்டினையும் இணைத்து ஆட்சியாளர்கள் நன்மை கண்டனர். இதற்காகத்தான் சமயங்கள் உருவாக்கப்பட்டன. மண்கடவுளர்கள், வான்கடவுளர்களுக்கு காவலர் ஆக்கப்பட்டனர். மண்கடவுளர்களுக்கு பலியிடும் முறையினை விடுத்து மென்மையான சடங்குகளுக்கு மாற்றியதாக சொல்வதுண்டு. இவர்களை வன்கடவுளர்களாகச் சொல்வாரும் உண்டு. வான்கடவுளரை, மென்கடவுள் என்பர். ஆனால், மென்கடவுளுக்கான மகாமகம் திருவிழாவில் நீரிலும், தஞ்சை பெரியகோயில் நெரிசலிலும் பக்தர்கள் பலியாயினர். ஆண்டுதோறும் பனிலிங்கத்தினைக் காணப்புறப்படும் சிலர் நெரிசலில் பலியாகின்றனர். வேட்டைச்சமூகம், வேளாண்சமூகமாக மாறியபோது பலியிடும் பொருள்களும் மாறின. ஆனால், அதிகாரவர்க்கம் மக்களைத் தூக்குமேடையிலும், துப்பாக்கிச்சூட்டிலும், போரிலும் பலியிடுதலை தொடர்கிறது.

            ஒரு கலையின் படிமலர்ச்சியினை அல்லது ஒரு கதையின் படிமலர்ச்சியினை ஒப்பாய்வு செய்யலாம். மனத்தின் கற்பனைக்கலைதான் ஓவியமாகவும், கைவினையால் பொம்மையாகவும், உலோகப்படிமமாகவும், கல்லுருவாகவும், கணிணித்தொழில் நுட்பத்தில் digital ரூபமாகவும் உருமாறுகிறது. மீசைவைத்த புத்தர்சிலையினை பா.ஜம்புலிங்கம் வேட்டைச்சமூகம் மிகுந்து வாழ்ந்த கரூர் பகுதியில் கண்டார். மீசையுடன் கூடிய சிவனின் காலண்டர் படம் பஞ்சாப் பகுதியில், ம்காரஷ்ட்ரா பகுதியில் பிரபலம். இது, வட்டாரப்பண்பாட்டின் கலைமீதான தாக்கமாகும். இந்தியா முழுக்க உள்ள சரஸ்வதி சிலைகளில் வீணை ஒரேமாதிரியாக இல்லை. சரஸ்வதியின் வீணையும், வீணாதரரின் வீணையும் ஒன்றன்று. இவற்றை, ஆணுக்கும் பெண்ணுக்குமான தனித்தனியான இசைக்கருவிகளாகக் கருதலாம். தன் புலப்பட்டவற்றையே மனிதன் கலைவடிவமாக மாற்றுகிறான். இது, ஒரு பொருள்முதல்வாதக் கோட்பாடாகும்.

 வெவ்வேறு சமூகங்கள் பற்றிய மேலதிகப்புரிதலுக்கு ஒப்பாய்வு பயனுள்ளது. ஆய்விற்கான நிலவட்டங்கள் வெவ்வேறு திணைப்புலங்களாகவும் இருக்கலாம். இந்திய விடுதலைப்போராட்டம் ஆயுதக்கலகத்தில் தொடங்கி மிதவாதத்தில் முடிந்தது. இந்தியர் வென்றனர். நெல்சன் மண்டேலா கம்யூனிசப் போராட்டதினின்றும் காந்தியப்போராட்டத்திற்குத் திரும்பினார். அப்பிரிக்கர் வென்றனர். மாறாக, இலங்கையில் போராட்டம் அகிம்சையில் தொடங்கி ஆயுதத்தில் முடிந்தது. தமிழர் தோற்றனர். இந்தியாவும் இலங்கையும் temperate நாடுகள் எனப்படும்.

பைபிள் கதையில் கல்லடிபட்ட பெண்ணைக் கர்த்தர் காப்பாற்றினார். கல்லான பெண்ணுக்கு ராமர் உயிரூட்டினார். ஒருமுறை இந்த்ராகாந்தி அம்மையாரின் தமிழக விஜயத்தின்போது ஒரு கட்சியின் தொண்டர்கள் அவர்மேல் கல்லெறிந்தனர். ஒரு தாய்பறவை தம் சிறகுகளால் குஞ்சுகளை சேகரிப்பதுபோல் அவரை அன்று பெரியவர் பழநியப்பன் நெடுமாறன் காப்பாற்றினார். கிறித்துவிற்குப்பிறகு ஒரு பெண்ணைக் கல்லெறியிலிருந்து காப்பாற்றிய பெருமை இவரையே சாரும். தமிழக வரலாற்றில் இப்படியொரு பதிவு இதற்கு முன்பு இல்லை. கல்லிற்கும் பெண்ணிற்கும் தொடர்புண்டு. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்பது பழமொழி. கல்வைத்து விளையாடும் பெண்விளையாட்டு பலவுண்டு. கல்வைத்த நகைகள் பெண்களுக்கு பிடித்தமானவை. பூப்படைந்தபெண் கல்லுரலில் அமர்த்திவைக்கப்படுகிறாள். குளவிகல்லினை அவள் மடியில்வைத்து சடங்கு செய்வர். கல்லினைத்தலையில் போட்டு கணவரைப் பழிவாங்கியப் பெண்கள் பற்றிய கதைகள் உண்டு.

மண்ணில் முளைத்த கடவுளர்க்கு பலியில் சில இடங்களில் விலங்குகளின் கழுத்தினை அறுத்தும், வெட்டியும், விலாவில் ஈட்டியால் குத்தியும், தீயில் சுட்டும் பலியிடுகின்றனர். இதற்கானச் சமூகக்காரணிகள் என்ன? இவற்றைப் பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் சிறப்பாக ஆய்ந்துள்ளார். அறிவியலிலும் நோயினைப்போக்குதல் நோக்கமெனினும், அதற்கான மருத்துவமுறைகள் வேறுபடுகின்றன. தாவரங்களின் வகைகள் நிறைந்த இந்தியாவில் அது ஆயுர்வேதம் / சித்தவைத்தியம்; போர்மலிந்த அரபிய, மத்திய ஆசியப்பகுதியில் அது அறுவை சிகிச்சை என்ற யுனானி; தனிமவகைகள் நன்கு அறியப்பட்ட ஐரோப்பாவில் அது ஹோமியோபதி என்பதில் வியப்பில்லை. மீனவர், மீனை மருந்தாக உண்பர்; வலையர் எலியிலும், பறவையிலும் மருந்தினைக் காண்பர். நண்டிலும் நத்தையிலும் மருந்துண்டு என்பர்.

பாட்டிகளும் சூனியக்காரிகளும் (witches)

            தமிழர் மரபில் பாட்டிகளுக்கு தனித்த மரியாதை உண்டு. பாட்டிகதைகள், பாட்டிவைத்தியம் என்ற மரபுகள் உண்டு. தமிழ்மரபில் ஒருவீட்டில் குழந்தையின் பிறப்பினையும், ஒருவரின் இறப்பினையும் அவ்வீட்டின் மூதாட்டியே அறிவிப்பார். குடும்பத்தில் அனைத்துவகை சிக்கல்களுக்கும் தீர்வு சொல்வபராக பாட்டி இருப்பார். இதனை முதுவாய்பெண்டிர், கணிச்சி என்று அவ்வை வழிவந்த பாணர் மரபுடனும் shamanism த்தோடும் இணைத்துப்பார்க்கலாம். இந்திய மரபில் மந்த்ரா என்ற ராமாயணக் கிழவி முக்கியமானப் பாத்திரமாகும். சித்திராபதி மணிமேகலையில் ஒரு புதிரான பாத்திரமாகும். இந்திய வரலாற்றில் கிழவிகள் கொல்லப்பட்டதாகக் குறிப்புகள் இல்லை. மாறாக, தமிழ்த்திரைகளில் பாட்டிகளைத் திருடிகளாக, குழந்தைகளைக் கொல்பவராகச் சித்தரித்துள்ளனர். கல்கி எழுதிய அலைஓசை நாவலில் ஒரு மூதாட்டி வஞ்சகியாகச் சித்தரிக்கப்படுள்ளார். எம்ஜிஆர் திரையில், பொதுமேடைகளில் பாட்டிகளை வணங்கிக் கொஞ்சுவார். ஆனால், ஐரோப்பிய வரலாற்றில் வயதுபோன பாட்டிகள் சூனியக்காரிகள் என்று எரித்துக் கொல்லப்பட்ட்டுள்ளனர். 15-16 ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் 5 லட்சம் பேர் சூனியக்காரிகள் என்று எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் எரிக்கப்பட்டபின் விசாரணைக்கான செலவினை அக்குடும்பத்தினரே ஏற்கவேண்டும். அவரின் முழுச்சொத்தினையும் அபகரிக்கலாம். சூனியக்காரிகளுக்கான சித்திரவதைகளை போப் அனுமதித்தார். ஏனெனில், சூனியக்காரிகள் எனப்பட்டோர் தேங்கியிருந்த தாய்வழிச் சமூகமக்களின் shamanists ஆவர். எனவே, நிறுவன சமயங்கள் இவர்களை எதிர்த்தன. நான்குமுறை திருமணம் செய்துகொண்ட 54 வயது சூனியக்காரி ஒருவர் பிரான்சில் கால்நடைகளைக் கொன்றதாக குற்றம்சாட்டிக் கொல்லப்பட்டார். அண்மையில் மறைந்த நடிகை Elizabeth Taylor பலமுறை திருமணம் செய்தார். நடிகைகள் ஜயந்தியும், ஜெயசித்ராவும் நடுவயதினைக் கடந்தபிறகு இளவயது இளைஞர்களை மணந்தனர். இவையெல்லாம் உலகமெங்கும் தேங்கியிருக்கும் shamanism த்தின் தொடர்ச்சியே. பலரை மணப்பது, பலமுறை மணப்பது ஒருவகையான தன்னம்பிக்கை. அவர்களிடம் ஒருவகையான படைப்பாற்றலைக் காணமுடியும்.

குடும்பம் (Family)

            இடைக்காலத்தமிழக வரலாற்றில் குடும்பம் பற்றிய போதிய சான்றுகளைக் கண்டறிய வேண்டும். புராணங்களில், இதிகாசங்களில் சிலமாதிரி குடும்பங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. சோமாஸ்கந்தர் என்ற அளவான குடும்பத்தினுடைய சிற்பம் பல்லவர் காலத்தில்தான் முதலில் சிலையுருவாக வடிக்கப்பட்டது. இதனை தெய்வீகக் குடும்பம் (divine family) எனலாம். சிலப்பதிகாரத்தின் கோவலன் கண்ணகி குடும்பம் ஒரு (aristocratic family) மேட்டுக்குடிக் குடும்பம். கல்வெட்டுகளின் வாயிலாக பேரா.கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி சில அரசகுடும்ப நபர்களைக் கணக்கெடுத்தார். தமிழ் இலக்கியத்தில் George L. Hart III குடும்ப அமைப்பினைக் கண்டார். நிலவுடைச் சமூகத்தின் குடும்ப உறவுகளை (kinship of land owning family) உத்தரமேரூர் கல்வெட்டுகளில் அறியலாம். 16-17 ஆம் நூற்றாண்டுகளில்தான் ஐரோப்பாவில் குழந்தைகள் குடும்ப உறுப்பினர்களாக கருதப்பட்டுள்ளனர். இதே காலக்கட்டத்தில் இங்கிலாந்தில் ஜின் அருந்தி போதைகண்ட தாய்மார்கள் குழந்தைகளை தேம்ஸ் நதியில் வீசி எறிந்தனர். பெண்சிசுக்கொலை ஒரு பழங்குடித்தன்மை. சமூகத்தில் பெண்களின் எண்ணிகையினைக் குறைத்து ஆண்களிடையே போட்டியினை உருவாக்கி போருக்கும், சண்டைக்கும் அவர்களைத் தயார்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதன் வெளிப்பாடுதான் சுயவரம் நடத்துவதும், வில்லினை ஒடிப்பதும், மல்யுத்தம் புரிவதும், காளைகளுடன் சண்டையிடுவதும். இன்றைக்குப் போட்டித்தேர்வுகளில் மொக்கை போடுவதும்.

இடைக்காலத்திய ஐரோப்பாவில் ஒரு knight-ன் குடும்பம் என்பது 10-20 போர் வீரர்கள், குழந்தைகளுடன் கூடிய இரு ஜோடிகள், நைட்டின் சகோதரர்கள், அவரின் மணமாகாத சகோதரிகள், இவர்களை அடைகாக்கும் மாமன் என்று பலபேரைக் கொண்டது. இந்திய இலக்கியக் கதாபாத்திரங்களில் மாமன்களுக்கு தகுந்ததோர் இடமுண்டு. கம்சன் போன்று பொல்லாத மாமன்களும் உண்டு; சகுனி போன்று மறுமகன்களுக்காக பொறுத்துக்கொள்ளும் மாமன்களும் உண்டு.

விலைமகள் (Prostitutes)

            இடைக்காலத்தின் ஐரோப்பாவில் விலைமகளிர் பலவாறாக வகைப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்கள் வழுக்கி விழுந்தோர் (slipped girls) எனப்பட்டனர். அவர்கள் பொது இடங்களில் கூட்டாக கற்பழிக்கப்பட்டுள்ளனர் (collective rape and public rape). இதுபோன்ற நிகழ்வுகள் இருவேறு பண்பாட்டு நிலவட்டங்களின் எல்லைப்பகுதில் (frontier area) பெரும்பாலும் நடந்தன. தமிழ் இலக்கியம் போரில் பிடிக்கப்பட்ட பெண்களைக் கொண்டிமகளிர் என்று வருணிக்கிறது. வள்ளுவர் பொருட்பெண்டிர் என்பார். மராட்டியர் காலத்தில் தஞ்சாவூரில் அரசர்கள் தம் வைப்பாட்டிகளை கல்யாணமகால் போன்ற இடங்களில் வைத்துப் பயன்படுத்தினர். கோவாவில் டச்சுக்காரர்கள் பெண்களைக் கூட்டாகக் கற்பழித்து விபச்சாரத்திற்கு விட்டனர். மாத்தம்மா என்று சிறுமிகளை பொட்டு கட்டும் முறை இன்றும் ஆந்திராவில் வழக்கில் உண்டு.

உணவு (food)

            உணவிற்கும், சமயப்பண்பாட்டிற்கும் நெருக்கமானத்தொடர்பு உண்டு. அப்பம் கிறித்தவத்தோடும், கஞ்சி இஸ்லாத்தோடும், பிரசாதம் சனாதனத்தோடும் தொடர்புடையன. தமிழர் மரபில் கடவுளுக்கு இடும் உணவினை படையல் போடுதல் அல்லது பள்ளயம் போடுதல் என்பர். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு உணவு அடையாளமாக உள்ளது. செந்தூர் முருகன்–இஞ்சிமறைப்பான்; பழநி முருகன்–பஞ்சாமிர்தம், திணை மாவு; மாரியம்மன் - மாவிளக்கு; வெங்கடேஸ்வரர்–இலட்டு; கருகாவூர்–தைலம். இப்படிப் பல. அநுமாருக்கு வடைமாலை; விநாயகருக்கு கொழுக்கட்டை. இருவருமே பலம் பொருந்திய பயில்வான் சாமிகள். இந்திய உணவினை (divine food, royal food, public food) தேவர் உணவு, அரச உணவு, பொது உணவு என்று வரையறுக்கலாம்.

            இந்தியாவில் தொடக்கத்தில் பிராமணர்கள் பூண்டு, வெங்காயம் இரண்டினையும் தவிர்த்தனர். தென்னிந்தியாவில் மாரிக்காலத்தின் பண்டிகைத்தினங்களில் பருப்புவகைகளில் வழிபாட்டிற்காக உணவு வகைகள் அடிக்கடி செய்யப்படுகின்றன. குளிரினைத்தாக்குப்பிடிக்க இனிப்பும், புரதமும் மிகத்தேவை. மனோநிலையினை அமைதிபடுத்தும் magnesium மிகுந்துள்ளதாலேயே முக்கனியில் முக்கிய கனியாக வாழை உள்ளது போலும். அழுதபிள்ளைக்கு வாழைப்பழம் என்பது சரிதானோ?

            மனித வரலாற்றில் தொடக்கத்தில் பால்படு பொருள்களே முதன்மையான உணவாகும். கண்ணன் வெண்ணை திருடியதனை இங்கு நினைவுகூர வேண்டும். 1572 இல் பதப்படுத்தப்பட்ட வெண்ணை திருட்டுத்தனமாக ஸ்பானிஷ் அமெரிக்காவிற்கு ஏற்றுமதியானது. 1698 ல் இத்தாலியிலும், ஜெர்மனியிலும் இருந்த பிரஞ்சு வீரர்களுக்கு குடியானவர்கள் வெண்ணையினை அனுப்பித்தர வேண்டியிருந்தது. தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஆட்சியில் காவலர்களுக்கு மலிவுவிலையில் மளிகைப்பொருள்கள் வழங்க ஏற்பாடானது.

            உப்பு உணவில் மிக முக்கியமானது. தமிழ் இலக்கியம் இதனை நெல்லிற்கு இணையாக சுட்டுகிறது. உப்பளங்களைக் கொண்ட மத்தியதரைக்கடல் நாடுகள் கத்தோலிக்க நாடுகளாகும்; மீன்பிடி தொழில்கொண்ட நாடுகள் புராடஸ்டண்ட் நாடுகளாகும். உப்பு 16 ஆம் நூற்றாண்டுவரை ஐரோப்பாவில் சொகுசான உணவாகும். 17 ஆம் நூற்றாண்டுவரை மிளகு சொகுசான உணவாகும். 15 ஆம் நூற்றாண்டுவரை ஐரோப்பாவில் சமையல்முறை அவ்வளவு வசதியாக இல்லை. 17 ம் நூற்றாண்டில் மேசையில் உணவினை வைத்து உண்பது சொகுசாகக் கருதப்பட்டது. உணவுமேசை என்பது மேசை விரிப்பு, மெழுகுவர்த்தி ஸ்டாண்ட், கழுத்துத் துணி, ஸ்பூன் போன்றவையாகும். அப்போது நாற்காலி ஒரு சொகுசுப்பொருளாகும். அதனால்தான் Jackson துரை வீரபாண்டிய காட்பொம்முவிற்கு நாற்காலி தராமல் நிற்கவைத்துப் பேசினார். 18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஆமைசூப் விலையுயர்ந்த பண்டம். லண்டனில் கிளிஞ்சலுடன் கூடிய ஆட்டிறைச்சி வறுவல் புகழ்பெற்றது. சீனத்து உணவு சுவையானது என்றும், உடலிற்கு வலுதரும் என்றும் அறியப்படுகிறது. அங்கு உணவுவகைகள் அதிகம்.

பருவகாலம் (seasons and climate)

          அன்னல்பள்ளியின் மிகமுக்கியமான கூறு பருவகாலமும், தட்பவெப்பமும் ஆகும். பருவகாலங்கள் மாறுகையில் வரலாறும் மாறும் என்பதனை நிரூபித்துக் காட்டியுள்ளனர். ஒவ்வொரு அரசகுலத்தின் எழுச்சிக்கும், வீழ்ச்சிக்கும் பருவகாலமாற்றத்திற்கும் தொடர்பு உண்டு. மலையின்றி விளைச்சல் குறைந்து போனதாலேயே வீரபாண்டிய கட்டபொம்மனால் வரிகட்ட இயலாமல் ஆனது. பிரஞ்சு புரட்சிக்கு மழையின்மையும், குறைவான பயிர்விளைச்சலும் ஒரு காரணமாகும். பருவகாலமும், தட்ப வெப்பமும் வணிகத்திற்கும், படை நகர்விற்கும் மிக முக்கிய மாகும். ஸ்காட்லாந்திலும் அயர்லாந்திலும் பருவமாற்றத்தினால் உருளைக்கிழங்கு விளைச்சல் பாதித்தது. இதனால், மக்கள் கணிசமாக அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்தனர். வேளாண்குடிகள், படையினர், வணிகர் மூவருக்குமே பருவகால அறிவு (calendar knowledge) முக்கியமனது. ஹுமாயுன் போரில் தொடர்ந்து தோற்றதற்கு பெரும்பாலும் அவர் மாரிக்காலத்தினைத் தெரிவு செய்தது காரணமாகும். பருவகாற்றினை அறிந்திருந்ததாலேயே ரோமானியர் தென்னகத்தோடு வணிக உறவு கொண்டிருந்தனர்.

            இந்தியர்கள் தூரக்கிழக்கு நாடுகளுடன் வணிகம், பண்பாடு இரண்டிலும் உறவுகளைக் கொண்டதற்குக் காரணம் தட்பவெப்பமே. மிதமான இந்திய தட்பவெப்பத்தினை அனுபவித்தவர்கள் அரபு பாலைவனத்தினைத் தாண்டிச்செல்லத் துணியவில்லை. கிழக்கே பாலித்தீவுவரை சென்ற இந்திய இதிகாசக்கூறுகள் மேற்கே காந்தாரத்தினைத்தாண்டவில்லை. இந்திய இலக்கியங்களை பிற நாட்டினர் இங்கு பயணித்து, கற்று தம் தம் மொழிகளில் மொழிபெயர்த்தனர். இதற்கு, இந்தியாவின் இதமான தட்பவெப்பமே காரணமாகும். இருந்தும் பிரிட்டிஷார் கோடைக்காலத்தில் தம் அலுவலகங்களை பசுமையான மலைப்பகுதிகளுக்கு மாற்றிக் கொண்டனர்.

புவியியலும் நிலப்பரப்பியலும் (geography and topography)

            புவியியலும் நிலப்பரப்பியலும் வரலாற்றினை உருவாக்குதற்கு பெரும்பங்கு வகித்துள்ளன. இமயத்தினைத்தாண்டி பட்டுநெசவுத்தொழில் இந்தியாவிற்கு வந்தது; பவுத்தம் சீனத்திற்குச் சென்றது. இங்கு மனிதன் இயற்கையினையும், நிலப்பரப்பியலையும் வென்றான். நதிதீரங்களில்தான் நாகரிகங்கள் தோன்றும் என்று படித்தோம். ஆனால், மாயன் நாகரிகம் கட்டாந்தரையில்தான் உருவானது. நைஜீரியாவில் மண்ணில் கட்டப்பட்ட மசூதிக்கு வயது 500 ஆண்டுகள். இந்தியாவின் கரடு, முரடான மராட்டியர் நிலப்பிரதேசத்தினை கடைசிவரை முகலாயரால் கைப்பற்றமுடியவில்லை. வரட்சியான இராமநாதபுரம், சிவகங்கை வட்டாரத்தில் இருந்துதான் பிரிடிஷாருக்கு எதிரான முதல் குரல் எழுந்தது. பொன்னர்-சங்கர் இரட்டையரை கொங்கின் கரட்டுப்பகுதிகள்தான் உருவாக்கின. முதலாம் ராஜேந்திரன் தலைநகரினை வளமையான பகுதியிலிருந்து வரட்சியான பகுதிக்கு மாற்றியதற்குக் காரணம் நிலப்பரப்பியல் மட்டும் அன்று, இனப்பரப்பியலும் ஆகும்.

இயற்கையோடு போராடும் மக்கள்தான் அதிகாரத்தோடும் போராடுபவராய் உள்ளனர். பயிர்விளையாத பனிபடர்ந்த பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்கள் மீனைத்தான் பிரதான உணவாக்கக் கொள்ளமுடியும். வறண்ட, விளைச்சலற்ற டச்சின் மேற்குப்பகுதியில் இருந்து புறப்பட்ட டச்சுக்காரர்கள்தான் கடல்களைத் தம் வசம்கொண்டு உலகின் கடல்வணிகத்தினை மேற்கொண்டனர். தொடக்கத்தின் மீன்பிடித்தொழில்தான் பிறகு இவர்களின் நிலம்பிடித்தொழிலாக மாறியது. பிரிட்டிஷ் இந்தியாவின் உயர் அலுவலர்கள் கடுங்குளிரும், கரடுமுரடுமான நிலவியல் கொண்ட ஸ்காட்லாந்து, அயர்லாந்து பகுதிகளில் இருந்து வந்தோரே. ராபர்ட் கால்ட்வெல்லும், ஜி.யூ.போப்பும், அன்னி பெசண்டும், மவுண்ட் பேட்டனும் அய்ரிஷ்காரர்களே. காரணம் :இந்தியா மிதமான தட்பெவெப்பம் கொண்ட நாடாகும். சீனமக்களுக்கு அபினை விற்பதற்காக, அதற்கான பயிரினை பிரிட்டிஷார் இந்தியநிலப்பிரதேசத்தில் விளைவித்தனர். கருங்கற்கள் இல்லாத காவிரிபுகும்பட்டினத்திலும், நாகபட்டினத்திலும் புத்த விகாரைகள் செங்கற்களில் கட்டப்பட்டன. கருங்கல் பாறைகள் நிறைந்த உள்நிலப் பிரதேசங்களில்தான் சமணர்குடைவரைகள் உருவாக்கப்பட்டன. இரும்பினை விற்ற கொழுவணிகன் பற்றிய கல்வெட்டுப்பொறிப்பு சமணர் குடைவரையில்தான் பொறிக்கப்பட்டுள்ளது. காவிரிச்சமவெளியில் தென்னங்கீற்றிலும், வைக்கோலிலும் கூரைகளை வேய்வர்; கொங்குப் பகுதியில் பனைமட்டையிலும், கம்பந்தட்டையிலும் வேய்வர்.

            இப்படி அன்னல் சிந்தனைப்பள்ளி வரலாற்று நிகழ்வுகளுக்குக் காரணமாகும் அனைத்துக் காரணிகளையும் சான்றுகளாகப் பயன்படுத்திக்கொள்ள வரலாற்று ஆய்வாளர்களுக்குக் கற்றுத் தந்தது. இச்சான்றுகளை மேலும் கூட்டலாம். அது நம் சிந்தனையின் விசாலத்தினைப் பொறுத்தது. இங்கு அன்னல்பள்ளி வகுத்தளித்த சில தலைப்புகளை விளங்கிக்கொள்ள வரலாற்று நிகழ்வுகள் மாதிரிகளாகக் காட்டப்பட்டுள்ளன.

…………………………………………………..

15/11/2014 அன்று இடைக்காலத்திய தமிழகச் சமூகம் என்ற தலைப்பில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் நடத்திய ஒரு நாள் தேசியக்கருத்தரங்கின் ஓர் அமர்விற்கான தலைமையுரை. இக்கட்டுரைக்காக தன் நூல்களைத் தந்து உதவிய பேரா.எ.சுப்பராயலு அவர்களுக்கு இங்கு நன்றியுரைப்பது என் கடப்பாடாகும். 

பயன்பட்ட நூல்கள்

1.மார்வின்,ஹாரிஸ்,(மொர்:துகாரம் கோபால்ராம்),பசுக்கள்,பன்றிகள்,போர்கள், சூனியக்காரிகள், கலாசாரபுதிர்கள், இரு பாகங்கள், எனி இந்தியன் பதிப்பகம், 2005.

2. Fernand Braudel, Civilization and Capitalism 15-18th century, 3 Vols. (translated from French by Sian Reynolds) University of California Press,1992.

3. Maurice Aaymands and Harbans Mukhia, French Studies in History, 2 Vols. Orient Longman, 1992