மனிதனது உழைப்பை ஒரு சரக்காக பாவித்தார் மார்க்ஸ். அந்த சரக்கை முதலாளி பணம் கொடுத்து வாங்கிக் கொள்கின்றார். மனித உழைப்பால் உற்பத்தி செய்யப்பட்ட சரக்கானது அவனுக்கே அந்நியமாக மாறுகின்றது. அந்த சரக்கின் மீது அவனுக்கு எந்த உரிமையும் கிடையாது. அது அவனை ஆட்சி செய்கின்றது. இதை முதலாளித்துவத்தின் தனிச்சிறப்பான ஒன்றாக மார்க்ஸ் கருதினார். ஏறக்குறைய நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மார்க்ஸ் சொன்னது எவ்வளவு உண்மை என்பதை இன்றும் நாம் பார்த்துக்கொண்டே இருக்கின்றோம். நாம் உற்பத்தி செய்த பொருள்கள் எப்படி நமக்கு சொந்தமில்லாமால் முதலாளிகளால் அபகரிக்கப்படுகின்றதோ அதே போல இன்றைய முதலாளித்துவம் உற்பத்தி செய்திருக்கும் பல பொருட்கள் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன. ஒரு பொருளின் மீது கட்டாய தேவை உருவாக்கப்பட்டு அந்தப் பொருளை அடைவதற்காக எந்த எல்லைக்கும் செல்ல அது நம்மைத் தூண்டுகின்றது.

 consumerismஒரு பக்கம் தான் உற்பத்தி செய்த நுகர்வுப்பொருட்களை நாம் கட்டாயம் வாங்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் முதலாளித்துவம் மறுபக்கம் அதை வாங்குவதற்கான பொருளாதாரத்தை நம்மிடமிருந்து காணாமல் போகச் செய்கின்றது. நுகர்வு வெறியால் தூண்டப்பட்ட மனிதன் தான் நினைத்த பொருட்களை வாங்குவதற்காக, அதற்கான பணத்தை ஈட்டுவதற்காக கடுமையாக போராடுகின்றான். ஆனால் ஆடம்பரமான பொருட்களை உற்பத்தி செய்யும் முதலாளித்துவம் தான் உற்பத்தி செய்த பொருட்களை வாங்கும் அளவுக்கு தன்னுடைய தொழிலாளிக்கு ஆடம்பரமான கூலியைக் கொடுப்பதில்லை. சரி அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும் தொழிலாளி அல்லது அந்தப் பொருளை வாங்க நினைக்கும் நபர் ஒரு தீர்மானகரமான முடிவை எடுக்கின்றார். அது, தான் நினைத்த ஒன்றை வாங்குவதற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்பதே! அந்த ஒன்று கொள்ளையாக இருக்கலாம் ஏன் கொலையாகக்கூட இருக்கலாம்!

 சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்துவந்த டாக்டர் சத்யா தான் வைத்திருந்த ஐபோனுக்காக கொலை செய்யப்பட்டிருக்கின்றார். அவர் வசித்துவந்த அதே குடியிருப்பில் வசித்துவந்த ஹரிந்தம் என்ற நபரால் மிகக் கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருக்கின்றார். படித்துவிட்டு வேலை கிடைக்காமால் சுற்றிக் கொண்டிருந்த அந்த நபர் ஐபோன் வாங்கவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கின்றார். வேலையே இல்லாத ஹரிந்தம் எப்படி ஐபோன் வாங்க வேண்டும் ஆசைப்பட்டார்? இந்த முதலாளித்துவ சமூகத்தில் நீங்கள் ஒரு பொருளை வாங்குவதற்கு வேலையோ, பணமோ முன்நிபந்தனை கிடையாது. நீங்கள் ஆசைப்பட வேண்டும் அந்தப் பொருளைப் பார்த்துக் கிளர்ச்சி அடைய வேண்டும். பின்பு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அந்தப் பொருள் பார்த்துகொள்ளும். அந்தப்பொருள் தான் ஹரிந்தரை சத்யாவின் வீட்டுக்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே போகச்சொன்னது, அந்தப் பொருள்தான் சத்யாவின் ஐபோனை அபகரிக்கச் சொன்னது, அந்தப் பொருள்தான் சத்யாவை கழுத்தறுத்து கொலையும் செய்யச் சொன்னது.

 எப்படி சத்யா ஐபோனுக்காக கொலை செய்யப்பட்டாரோ அதே போல கடந்த மே மாதம் மருத்துவர் சங்கீதா தான் அணிந்திருந்த 12.5 பவுன் தங்கச்சங்கிலிக்காக கொலை செய்யப்பட்டார். அதே போல ஜூன் மாதம் மல்லிகா என்ற பெண் தான் வைத்திருந்த 1 கோடி மதிப்பிலான சொத்துக்களுக்காவும் 3 லட்சம் மதிப்பிலான நகைகளுக்காவும் அவரது கார் டிரைவரால் கொலை செய்யப்பட்டார். 5 கோடி சொத்துக்காக தன்னுடைய சொந்த சகோதரி மகனாலேயே மனநல மருத்துவர் எம்மா கோன்சல்வெஸ் கொல்லப்பட்டார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

 ஒருவர் கொலை செய்யப்படுவதற்கு முன் விரோதம், பரம்பரை பகை போன்றவை எல்லாம் இப்போது தேவையில்லை. நீங்கள் எதற்காக கொலை செய்யப்படுவீர்கள் என்பது நிச்சயம் உங்களுக்குத் தெரியாது. உங்களிடம் இருக்கும் ஒரு நூறு ரூபாய்க்காக கூட நீங்கள் கொலை செய்யப்படலாம். உங்களைச் சுற்றி இருக்கும் யாரால் வேண்டும் என்றாலும் நீங்கள் கொலை செய்யப்படலாம். இந்த முதலாளித்துவ சமூகத்தில் நீங்கள் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்றால் அனைவரையும் சந்தேகிக்க வேண்டும். மனித விழுமியங்களை எல்லாம் முதலாளித்துவம் அறுத்தெறிந்து நெடுநாட்கள் ஆகிவிட்டது.

 நுகர்வு கலாச்சாரத்தால் ஆட்கொள்ளப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தன்னை தான் இருக்கும் வர்க்கத்தில் இருந்து வர்க்க நீக்கம் செய்துகொள்கின்றான். அண்டர்வியர் வாங்க காசு இல்லை என்றால் கூட ஆன்ட்ராய்டு போன் வைத்திருக்க விரும்புகின்றான். இந்த சமூகத்தில் தன்னை மேன்மையானவனாக காட்டிக்கொள்ள அவனுக்கு அது தேவைப்படுகின்றது. தினம் தினம் அறிமுகப்படுத்தப்படும் புதிய புதிய செல்போன் பிராண்டுகளும், தங்க, வைர நகைகளும் நம்முடைய மூளைக்குள் உட்கார்ந்துகொண்டு நம்மை வாங்கு வாங்கு என்று வம்பிழுக்கின்றது. ஒன்று என்னை வாங்கி நீ அடிமையாக்கிக்கொள்; இல்லை என்றால் நீ எனக்கு அடிமையாகிவிடு என்று நமக்கு அது சவால் விடுகின்றது.

 உண்மைக்கும் நேர்மைக்கும் மிக அருகில் வாழ ஒவ்வொரு மனிதனும் கற்றுக்கொள்ளும் போது மட்டுமே அவனிடம் இருந்து நுகர்வு வெறியை நம்மால் வெளியேற்ற முடியும். அப்படிப்பட்ட உண்மையும், நேர்மையும் முதலாளித்துவ சமூக அமைப்பில் இருந்து நம்மால் ஒரு போதும் எடுத்துக் கொள்ள முடியாது. பொய்யும், வஞ்சகமும், சுயநலமும், அற்பவாதமும், தன்னுடன் வாழும் சக மனிதனையே கழுத்தறுக்கும் கொடூரமும் நிறைந்தது இந்த அமைப்புமுறை. மனித உறவுகள் இங்கே பணத்தால் அளவிடப்படுகின்றது. அது இல்லாத போது அது அனைத்து உறவுகளையும் மறுதலிக்கின்றது. இதற்கு நேர்மாறாக இருப்பது பொதுவுடைமை சிந்தனைகள். அது மனிதனை மனிதனாக பார்க்கின்றது. நுகர்வு என்பது உயிர் வாழ்வதற்கே ஒழிய அடுத்தவனின் உயிரைக் கொல்வதற்கு அல்ல என அது நமக்குச் சொல்லிக் கொடுக்கின்றது. அது இன்று நாம் நாகரிகம் என கருதும் அனைத்து விழுமியங்களுக்கும் நேர் எதிரானது.

 சக உயிரின் மீதான அன்பையும், கருணையையும் ஒரு ஐபோனால் கொல்ல முடியும் என்றால் அப்படிப்பட்ட சமூக அமைப்பைக் கொல்வதை தவிர நமக்கு வேறு என்ன தான் வழி இருக்கின்றது.

- செ.கார்கி