tasmac 380

முழு மதுவிலக்கு வேண்டி தமிழ்நாட்டில் மக்கள் வீதியில் இறங்கியிருக்கிறார்கள். நிர்பந்தம் காரணமாக அரசியல் கட்சிகள் வரிசைகட்டி களமிறங்கியிருக்கின்றன. மெல்ல அவர்களது பூனைக்குட்டிகள் வெளியே வந்து கொண்டிருக்கிறது. அரசு ஆதரவு அறிவாளிகளாக இருக்கும் பூனைக்குட்டிகள் "முழு மதுவிலக்கு நியாயம்தான். ஆனால் அது உடனடி சாத்தியமா என்பதை பரிசீலிக்க வேண்டும்" என்று புத்தி சொல்ல ஆரம்பிக்கின்றன.

உங்களுக்கு உலகமயமாக்கல் தொடங்கி அணுஉலை எதிர்ப்பு வரைக்குமாக 'சரிதான். ஆனால் தவிர்க்க முடியாது' என்று மக்களைத் தயாரித்த இந்த மகராச வகையறாக்களை நினைவிருந்தால் சரி.

முழு மதுவிலக்கு உடனடி சாத்தியமில்லையென்று முன்வைக்கும் காரணங்கள்

1. கள்ளச்சாராயம்

2. அண்டை மாநிலங்களில் விற்பனை இருக்கும்போது அங்கு சென்று   குடிப்பார்கள்

3. அரசுக்கு வருவாய் இழப்பு, இலவசத் திட்டங்கள் முடங்கும்

4. குடி நோயாளிகள் சட்டென நிறுத்தினால் ஏற்படும் உயிரிழப்பு வரையிலான எதிர்விளைவுகள்........

இவையெல்லாவற்றையும் சரிசெய்ய முடியும். ஆனால் சரிசெய்ய முடியாத ஒன்றிருக்கிறது. அது இந்த அரசின் பொருளாதாரக் கொள்கை ஏற்படுத்தியுள்ள நிம்மதி இழந்த, நம்பிக்கை இல்லாத மனித வாழ்க்கை.

தற்போது மத்திய உள்துறை அமைச்சக கணக்கின்படி தமிழ்நாட்டில் 2014-ம் ஆண்டில் 68 விவசாயிகள் மற்றும் 827 விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகள் மட்டுமல்ல, பெங்களூரில் தற்கொலை கணக்கு ஒன்று நம்மை மிரட்டுகிறது. இங்கு தற்கொலை செய்பவர்களில் 30 சதவீதத்தினர் பிபிஓ, கால்செண்டர்களில் பணிபுரிகிறவர்கள் என்றும், 45 சதவீதத்தினர் ஐ‌டி துறையினர் என்றும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்த கணக்கு தமிழ்நாட்டிற்குப் பொருந்த பெரிய கால இடைவெளி எதுவும் இல்லை.கடந்த வருடம் மட்டும் இந்தியாவில் 1,35,445 பேர் தற்கொலை செய்திருக்கின்றனர். இதில் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 16,927.தற்கொலைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

இந்த அரசின் பொருளாதாரக்கொள்கை மக்களை தற்கொலையை நோக்கிதான் தள்ளுகிறது. விவசாயிகள், ஐ‌டி துறையினர் என்றில்லை எந்தத் துறையிலும் உத்தரவாதமுள்ள வாழ்க்கையில்லை. எந்தத் துறையிலும் தற்போது நிரந்தரத் தொழிலாளர்கள் பெரிதாகக் கிடையாது. எல்லோரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான். இவர்களின் அதிகப்படியான பணிநேரம் குறைந்த வயதிலேயே உழைக்கும் சக்தியை இழக்கச் செய்து விடுகிறது. முறையான பணி ஓய்வு, ஓய்வூதியம், சேமிப்பு என எதுவும் இல்லாமல் திகைத்து நிற்பவர்களுக்கு நம்பிக்கையென எதுவுமேயில்லை.

சிறுதொழில், வணிகம் எல்லாமே பெரிய லாபமுடையதாக இல்லை. இவையனைத்தும் கடன் முதலீட்டிலேயே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

இப்படி எல்லாவகையிலும் நம்பிக்கையிழந்தவர்களுக்கு மாற்று என்னவிருக்கிறது?

இந்த நம்பிக்கையின்மை வாழ்க்கையின் அனைத்து உறவுகளையும் ஆழமாக பாதிக்கிறது. ஒரு உழைப்பாளியின் வருமானத்தை நம்பி அவனின் தாய், தந்தையாரின் கடைசிக்காலம் இல்லை; சகோதரிகளின் திருமணம் மற்றும் சடங்குகள் இல்லை; பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் இல்லை; மனைவியின் ஆசைகளைக் கூட நினைத்த வேளையில் நிறைவேற்ற முடிவதில்லை.

இன்றைக்கு எவருடைய ஆசைகளும் எளிய செலவிலானதாக இல்லை. ஏற்படுகிற கடினமான செலவுகளும் முன்புபோல் நகை, பண்டபாத்திரம் என சேமிப்பு சார்ந்ததாகயில்லை. நுகர்வு வெறியின் அற்ப விசயங்களுக்கே ஆயிரக்கணக்கில் செலவிட வேண்டியதாக உள்ளது. மொபைல் போன், மாலைநேர சிற்றுண்டி, திரைப்படம் மாதிரியான கேளிக்கைகள் எல்லாமே கையிருப்பை மாயமான முறையில் காலி செய்கின்றன.

கல்வி, வேலைவாய்ப்பு என எல்லாவற்றுக்கும் நகரம் சார்ந்தே வாழ வேண்டிய சூழலில் வாடகை, வாகனம் உள்ளிட்ட பயணச் செலவுகள், கேஸ் - மிக்சி - கிரைண்டர் - வாஷிங் மிஷின் அனைத்திற்கும் கடனில்லா வாழ்க்கை சாத்தியமேயில்லை என்றாக்கிவிட்டது.

நுகர்வு வெறி மிகுந்த வாழ்க்கையின் மீதான கவர்ச்சி ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என எல்லா பருவத்தினரையும் முறையற்ற உறவுகளுக்குத் தள்ளுகிறது; குடும்பங்கள் சிதைக்கின்றன; யாருக்கும் யார் மீதும் நம்பிக்கையற்றத்தன்மை எளிதாக உருவாகி குற்றங்கள் பெருக்கெடுக்கிறது; தாழ்வு மணபான்மையை விளைவிக்கிறது.

என்ன செய்வார்கள் மக்கள்?

இந்த நிலையற்ற வாழ்க்கையை உருவாக்கிய பொருளாதாரக் கொள்கைக்கு சொந்தக்காரர்களான அரசுதான் மக்களின் கோபங்களைத் திசைத்திருப்ப சாராயக் கடைகளைத் திறந்து விட்டிருக்கிறது. சாராயக் கடைகள் கூடுதல் பொருளாதார நெருக்கடிகளையும், இழப்புகளையும்தான் ஏற்படுத்துகிறது. மக்களின் கோபம் அதிகரிக்கவே செய்கிறது.

போராட்டங்கள் தீவிரமடைகின்றன. அரசும், அவர்களின் ஆதரவாளர்களும் சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இலவசங்களுக்கான வருமானத்திற்கு என்பது பொய்!

தமிழகத்தில் அரசுக்கு வருவாய் வருகிற தொழில் மற்றும் வரி வகையினங்கள் பெருநிறுவனங்களிடம் பறிகொடுத்து விட்டார்கள், போகட்டும். ஆனால் மணல், கிரானைட் போன்ற கனிம வளங்களின் விற்பனையை முறைப்படுத்தினாலே சாராய வியாபாரத்தில் வருவதைவிட பலமடங்கு வருமானம் அரசுக்கு கிட்டும்.

உலகில் கனிமங்கள் நிரம்பியுள்ள மணலின் மொத்த இருப்பு தோராயமாக 460 மில்லியன் டன். இதில் 278 மில்லியன் டன் இந்தியாவில் உள்ளது. தமிழகத்தின்தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரைகளில் உள்ளகார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனோசைட் ஆகிய கனிமங்கள் மிகவும்அரிய வகையைச் சேர்ந்தவை. இவை கொரியா, ஐக்கிய அரபு அமீரகம் (அபுதாபி), ஜெர்மனி, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா முதலான வெளிநாடுகளுக்குகேள்விகேட்பாரின்றி கடத்தப்படுகின்றது. உதாரணத்திற்கு இருக்கன்துறைகிராமத்தில் 100 ஏக்கர்கள் அரசு நிலம் ஆண்டுக்கு 16 ரூபாய்க்குவைகுண்டராஜனுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதுபோக கடற்கரை ஓரமுள்ளஏராளமான புறம்போக்கு நிலங்களையும் அவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். உலகச் சந்தையில்ஒரு டன் இல்மனைட் தாது ரூ.11,800, சிர்க்கான் ரூ.75000, ரூட்டைல்ரூ.80000, கார்னெட் ரூ.5600, மோனோசைட் ரூ.5 லட்சம் என்று விற்பனைசெய்துவிட்டு அரசுக்கு ஒரு டன் மணல் ரூ.600-க்கு மட்டும் விற்பனை செய்ததாககணக்கு காட்டியுள்ளனர்.

அதேபோல் கொள்ளிடம், காவிரி, குண்டாறு பகுதிகளில் கிடைக்கும் ஆற்று மணல். இது அன்றாடம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் கடத்தப்படுகிறது.

இவைகளைப் போலத்தான் கிரானைட் குவாரிகளின் நிலைமையும். மதுரை மாவட்ட ஆட்சியராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பணியாற்றிய போது அந்தமாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகள் பற்றி ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கைஅனுப்பினார். அந்த ஒரு மாவட்டத்தில் செயல்படும் குவாரிகளால் மட்டும்அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் அவர்கூறியிருந்தார்.ஒரு மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளால் மட்டும் இவ்வளவு பெரிய நஷ்டம்அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் ஆற்று மணல், கிரானைட், கருங்கல் ஜல்லிகள் மற்றும் பிறகனிமங்கள் இவ்வாறு குவாரி உரிமையாளர்களால் வெட்டி எடுக்கப்படுகின்றன. மொத்த நிலைமை என்னவென்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

ஆகவே அரசுக்கு வருமானம் சாராயத்தில்தான் வரவேண்டுமென்ற அவசியமேயில்லை.

கள்ளச்சாராயத்தை எளிதாக தடுத்துவிட முடியும்!

கள்ளச்சாராயம் வந்தால் பரவாயில்லையா? அதனால் நூற்றுக்கணக்கான சாவுகள் நேர்ந்து பெண்களின் தாலிகள் அறுந்தால் பரவாயில்லையா? என மிரட்டுகிறார்கள் ஆட்சியிலிருப்பவர்களும், அவர்களின் அறிவாளிகளும். இந்த ஆயுதத்தைக் கொண்டுதான் தமிழ்நாட்டில் சாராயக்கடைகள் தொடங்கப்பட்டன. இந்த கேள்வி மக்களை எப்படி அச்சுறுத்துகிறதென்றால், அய்யைய்யோ என் பிள்ளை, எனது கணவன், எம் தந்தை கள்ளச்சாராயத்தைக் குடித்து இறந்து போவதைவிட, அரசு சாராயத்தைக் குடித்து உயிரோடு இருந்தால் போதுமென்ற மனநிலைக்குத் தள்ளுகிறது.

கள்ளச்சாராயப் பூச்சாண்டி காட்டுகிற நமது அரசாங்கம் எப்படியானது தெரியுமா? அடர்ந்த காட்டுக்குள்ளேயிருந்த வீரப்பனை ஒழித்தவர்கள். நாட்டுக்குள்ளே எந்தப் புரட்சியாளர்களையும், போராளிகளையும் விட்டு வைக்காமல் கொன்றொழிப்பவர்கள். வெளிமாநிலத்திலிருந்து போராளிகள் யாராவது வந்தால்கூட விட்டுவைக்க மாட்டார்கள். அவ்வளவு படைபலம் பொருந்தியவர்கள்.

தமிழக அரசின் காவல்துறைப் பிரிவுகள்

1.   சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order)

2.   ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special Police)

3.   பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defence and Home Guards)

4.   பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID)

5.   கடலோர காவல் துறை (Coastal Security Group)

6.   குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID)

7.   பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing)

8.   செயல்பாடு - தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations - T.N. Commando Force & Commando School)

9.   இரயில்வே காவல்துறை (Railways)

10. சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights)

11. சிறப்புப் பிரிவு - உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security)

12. குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)

13. போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic)

14. மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing)

15. குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights)

16. பயிற்சிப் பிரிவு (Training)

 17. பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக்     கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் பிரிவி மற்றும் பெண்கள் மட்டுமே கொண்ட சிறப்பு பெண்கள் ஆயுதப்படை.........

இவைபோக தமிழக அரசுக்குத் தேவையென்றால் இராணுவம் மற்றும் சிறப்பு படைப்பிரிவுகளின் உதவிகள் கிடைக்கும். காஷ்மீரின் போராட்டப்பகுதிகளில் ஒரு குடும்பத்திற்கு ஒரு இராணுவ வீரர் என்ற வகையில் ஏழு இலட்சம் இராணுவத்தினர் ஆதிக்கம் செலுத்தவில்லையா? படைகளெல்லாம் மக்களை அடக்க மட்டும்தானா? மக்களின் விரோதிகளை அடக்காதா?

தமிழ்நாட்டில் காவல்துறையினரின் எண்ணிக்கையைக் காட்டிலும் அவர்களுக்கு உதவுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமானது. இருக்கின்ற அனைத்து கட்சிகளின் வட்டம், ஒன்றியம், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு மாவட்டங்கள் என முழுநேர அரசியல் பிழைப்பு நடத்துகிறவர்கள் இருக்கிறார்கள். அதுவும் தொழிலாளர் அணி, விவசாய அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இளைஞர் அணி, இலக்கிய அணி என பல்வேறுப் பிரிவுகளில் இருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை சில இலட்சத்தை தொடும். இவர்களும், காவல்துறையும் சேர்ந்துதான் பகுதிவாரியாக அதிகாரம் செலுத்துகின்றனர்.

ஆட்சியாளர்களின் அதிகாரம் அனைத்து மக்களிடமும் சென்று சேர்வதற்குதான் கிராம, நகர, மாநகர, மாவட்ட நிர்வாக அலகுகள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் எல்லா மூலைகளும் போக்குவரத்து வசதி மற்றும் நிர்வாக வசதி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அதனால் மாநிலத்தில் எங்காவதொரு அத்துவானக்காட்டில்கூட சிறுப் பிரச்சினை என்றாலும் அடுத்த ஐந்து நிமிடத்தில் காவல்துறை மற்றும் ஆட்சியாளர்கள் வந்து குவிந்து விடுவார்கள்.

இவ்வளவு பலம் பொருந்திய அரசு கள்ளச்சாராயத்தைக் காரணம் காட்டுவது வேடிக்கையாக இல்லை? உண்மை என்னவென்றால் அரசுக்குத் தெரியாமல் யாரும் கள்ளச்சாராயம் காய்ச்ச முடியாது என்பதுதான். கள்ளச்சாராயம் யார் காய்ச்சுவார்கள்? அரசியல் செல்வாக்குடையவர்கள்தான் காய்ச்சுவார்கள். அரசியல் செல்வாக்குடையவர்கள் என்றால் அவர்கள் அரசின் ஒரு அங்கம் என்பதே பொருள். ஆக கள்ளச்சாராயமும் காய்ச்சுவதும் ஒருவகையில் அரசுதான். அப்படித்தான் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களெல்லாம் மந்திரியானார்கள், கல்வி வள்ளல்களானார்கள். அதற்கெல்லாம் காவல்துறைதான் உதவியாயிருந்தது, இனியும் இருக்கும் என்பதே உண்மை.

எனவே மக்களை மிரட்டுவதற்கு அரசு மறைமுகமாக கள்ளச்சாராயம் காய்ச்சாமல் இருந்தால்போதும் என்பதே நமது கோரிக்கை.

அண்டை மாநிலங்களில் போய் குடித்துவிட்டு வந்தால் என்ன செய்வது?

வந்தால் பிடித்து சிறையில் அடை, அபராதம் விதி, தண்டனை வழங்கு. இதிலென்ன பிரச்சினை? இப்போது மட்டும் குடித்துவிட்டு வருகிறவர்களைப் பிடிப்பதில்லையா? பணம் வாங்குவதில்லையா? மூலைக்கு மூலை நின்று வாயை ஊதச் சொல்லி கையை நீட்டுவது நடக்கத்தானே செய்கிறது.

வெளிமாநிலங்களுக்கும், வெளிமாநிலங்களிலிருந்தும் ரேஷன் அரிசி உட்பட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க முடியுமென்றால், காடுகள் வழியாக மரங்கள் கடத்தப்படுவதை தடுக்க முடியுமென்றால் இதையும் தடுக்க முடியும்தானே?

குடியை சட்டென நிறுத்துவதால் வரும் பிரச்சினை

குடிப்பவர்கள் அனைவருக்கும் குடியை நிறுத்துவதால் எதிர்விளைவுகள் உருவாவதில்லை. குடியே கதியென்று ஆகிவிட்டவர்களுக்கு சில சிக்கல்கள் வருமென மருத்துவர்கள் கூறுகின்றனர். சிலபேருக்கு வலிப்பில் தொடங்கி உயிரிழப்பு வரைக்கும் நேரலாமென்று சொல்கின்றனர்.

அப்படியானவர்களைக் கண்டறிவதற்கான முகாம்களும்; கண்டறிந்தபின் அவர்களுக்கான மருத்துவ வசதிகளும் செய்து கொடுப்பதும் அரசின் கடமை. அரசு ஒரு உத்தரவு போட்டால் போதும். அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மாணவர்கள், தன்னார்வ ஊழியர்கள் உதவியோடு இதற்கான ஏற்பாட்டை சிறப்பாக செய்துவிட முடியும். மக்களின் வாழ்க்கையில் விளையாடிவிட்டு அரசு கைகழுவிட முடியுமா?

குடிக்கு அடிமையானவர்களை மட்டுமல்ல, புதிதாய் மக்கள் குடிக்கு அடிமையாக ஆகாமல்கூட தடுக்க முடியும்.

மக்களுக்கு என்ன வேண்டும்?

மக்களுக்குத் தேவை ஒன்றே ஒன்றுதான். உத்தரவாதப்படுத்தப்பட்ட வாழ்க்கை, அதற்குத் தேவையான பொருளாதாரக் கொள்கை. மக்களுக்கு முறையான உழைப்பு இருந்தால்கூட சோர்வு வரும். சில சிக்கல்களும் வரும். அவையெல்லாம் முறையான கல்வி; உடற்பயிற்சி; மக்களுக்கு மகிழ்ச்சியோடு நல்ல விசயங்களைக் கொண்டு சேர்க்கிற கலை - இலக்கியங்கள், இசைப்பாடல்கள், கலாச்சார கூடங்கள் ஆகியவை போக்கிவிடும். இவையெல்லாம் ஊருக்கு ஊர், ஊரின் பரப்பளவுக்கேற்ப எண்ணிக்கையில் இருந்தால் போதும். மக்கள் தங்களது ஓய்வு நேரங்களை, அழகிய மாலைப்பொழுதுகளை உடற்பயிற்சிக் கூடங்களிலும், கலாச்சாரக் கூடங்களிலும் எளிதாகக் கழிக்கிற நிலைமையிருந்தால் போதும். மக்களின் சோர்வுகளையும், கவலைகளையும் இவைகள் முறையே போக்கிவிடும். சாராயம் அவசியமேயில்லை.

ஆனால் நமது அரசுகள் ஐ‌டி முதலாளிகள் போல் செயல்படுகின்றன. தகவல்தொழில்நுட்பம் - ஐ.டிதுறைகளில் வாரத்தில் 5 நாள்தான்வேலை. ஆனால் அது மனஅழுத்தத்தையும், சோர்வையும்தருகிற தன்மையிலானதாகும். ஊழியர்களின் இப்பிரச்சினையைப் போக்குவதற்கு நிர்வாகம் அவ்வப்போதுசினிமா, விருந்து, விழா, கூடிக்கொண்டாடுதல் (get together) போன்றவைகளை நடத்துகிறது. இதனால் பிரச்சினைகள் முடிவதில்லை. மாறாக, ஊழியர்களின் மன அழுத்தமும், சோர்வும், விரக்தியும் அதிகரிக்கவே செய்கிறது.

அரசுகளும் இதைத்தான் செய்கின்றன. வேலை நெருக்கடி, வாழ்க்கை நெருக்கடி, சோர்வு, மன உளைச்சல், விரக்தி, நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளன. துன்பப்படுகிறவர்களுக்கு சாராயத்தை வழங்குகின்றன. மக்கள் மேலும் துன்பத்தையே அடைகின்றனர்.

துன்பத்தால் அழுத்தப்படுகிற மக்கள் வீதிக்கு வருகின்றனர். பிரச்சினையை சாராயம் தீர்க்காது என்று முழக்கமிடுகின்றனர். ஆமாம்... ஆமாம் என்று அரசியல் கட்சிகளும் கூட முழங்குகின்றன. வேறு எது தீர்க்கும் என மக்கள் கேட்கின்றனர். அரசியல் கட்சிகள் மவுனம் சாதிக்கலாம்! அவர்களின் அறிவாளிகள் திசை திருப்பலாம்! ஆனால் காலம் பதில் சொல்லாமலா போய்விடும்?

- திருப்பூர் குணா