kalingapatti 600

கலிங்கப்பட்டியில் மதுவிலக்கு போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டு வீசும் காவல்துறையினர்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தொடர்ச்சியாக தன்னை வருத்திக் கொண்டு, தமிழ் சமுகத்தை பாதுகாக்க பல்வேறு போராட்டத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஈடுபட்டு வந்த சேலம் மாவட்டம் இளம்பிள்ளையைச் சேர்ந்த அய்யா. சசி பெருமாள் அவர்கள் 31-07-2015 அன்று தமிழக அரசின் பாராமுகத்தால், (நீதிமன்ற தீர்ப்பை அமுல் படுத்தாமல், கொடுத்த உறுதிமொழியை அதிகாரிகள் பின்பற்றாமல்) ஒரு வகையில் அரசால் படுகொலை செய்யப்பட்டார் என்றே சொல்ல வேண்டும். அய்யா.சசி பெருமாள் அவர்களின் இறப்பு தமிழக முழுக்க ஒரு எழுச்சி அலையை உருவாக்கி உள்ளது. ஆளும் அ.இ.அ.தி.மு.க தவிர அனைத்துக் கட்சிகளும் மதுவிலக்கு கோரி மக்களின் உணர்வைப் புரிந்து கொண்டு போராடி வருகின்றன.

அய்யா சசி பெருமாள் அவர்களின் குடும்பத்தினர் குறைந்த பட்சம் பள்ளிகளுக்கு, வழிபாட்டுத்தலங்களுக்கு, பெண்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகிலுள்ள மதுக்கடைகளை மட்டுமாவது உடனே அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையையாவது அரசு ஏற்றால் மட்டுமே உடலைப் பெறுவோம் எனக் கூறியும் தமிழக அரசு அதற்கு உடன் படாததால் உடலைப் பெறாமல் சேலம் ஊர் திரும்பி விட்டனர்.

சேலம், நெல்லை-கலிங்கப்பட்டி, குமரி மாவட்டத்தில் பல இடங்கள் உட்பட தமிழகமெங்கும் மாபெரும் எழுச்சிப் போராட்டங்கள் மக்களாலும், பல்வேறு அமைப்புகளாலும் நடத்தப்பட்டு வருகிறது.

அரசு தமிழக மக்களின் உணர்வைப் புரிந்து கொண்டு உடனடியாக மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். தமிழக அரசு தனக்கு 25,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு என பொய்யான வாதத்தை முன் வைக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

மதுபான ஆலை நடத்தும் ஆளும் அ.இ.அ.தி.மு.க கட்சியினருக்கும், ஆண்ட தி.மு.க கட்சியை சேர்ந்தவர்களுக்கும், சில முதலாளிகளுக்கும் மட்டுமே இழப்பு இருக்குமே தவிர அரசுக்கோ, மக்களுக்கோ அல்ல.

தமிழக அரசின் பார்வைக்கு அரசின் வருவாயை முறைப்படுத்த சில விபரங்களை முன் வைக்கிறோம் .

ஆற்று மணல்குவாரி:
=====================

இன்று மணல்குவாரியின் மூலம் அரசுக்கு செல்லும் வருமானம் இல்லாமல், தினமும் எடுக்கும் 90,000 லாரிகள் மூலம் ஒரு லாரி லோடுக்கு 10,000/= வீதம் குறைந்தபட்சம் 90 கோடி ரூபாய் இந்த நாட்டை ஆளும் ஆளும்கட்சியினரும்- அதிகாரிகளும் - மணல் கொள்ளையர்களும் கொள்ளையடித்து பங்கு போட்டு வருகிறார்கள்.

கணக்கு இதுதான்:

ஒரு லாரி லோடு மணல் அரசு விலை 3 யூனிட்டுக்கு ரூ.945 /=;. லோடிங்க் அன்லோடிங்க் ஒரு லாரிக்கு1000/=.;

100 கிலோமீட்டர் தூரம் லாரி வாடகை அதிகபட்சம் ரூ.5,000/=; என வைத்துக் கொண்டாலே, அதிகபட்சம் ஒரு லாரி லோடு ரூ.8,000/= மட்டுமே ஆகும்.

ஆனால் ஒரு லாரி லோடு மணல் மிக, மிக, மிக அதிகமாக
கோவையில் ரூ.15,000/=,,
சென்னையில் ரூ.20,000/=.
அண்டை மாநிலங்களில் ரூ. 80,000/= முதல் ரூ.ரூ. 1,00,000/= வரை விலை வைத்து விற்கப்படுகிறது (எடுக்கும் மணலில் 45 % .அண்டை மாநிலங்களில் விற்கப்படுகிறது)

ஒரு லோடுக்கு சராசரியாக சுமார் 10,000/= வரை கூடுதலாக கிடைக்கிறது என்றாலே தினமும் 90,000 லோடுக்கு 90 கோடி கிடைக்கும்

ஓராண்டில் முறைகேடாக மணல் கொள்ளையில் மட்டும் தமிழகத்தில் சுமார் 33,000 கோடி ரூபாய் பகிரங்கமாக அரசு-அதிகாரிகள்- மணல் மஃபியாக்கள் மூலம் தற்போது கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இது உண்மையில் தமிழகத்தில் மது மூலம் கிடைக்கும் விற்பனை வருவாயை விட அதிகமானது.

ஆற்றுமணல் ஒரு லோடு ரூ.945/= என்பதை ரூ. 5,000/= என மாற்றி முறையாக, சட்டவிரோதமாக இல்லாமல் செய்தாலே, தினமும் எடுக்கப்படும் 90,000 லாரிலோடுக்கு கணக்குப் பார்த்தால், ஒரு லாரிலோடுக்கு சுமார் 4,000/= கூடுதலாக கிடைக்கிறது என்றாலே தினமும் 36 கோடி ரூபாய் வீதம் ஆண்டு ஒன்றுக்கு 13,100 கோடி கிடைக்கும்.

ஆண்டு ஒன்றுக்கு ஆற்றுமணல் விற்பனை மூலம் கூடுதல் வருவாய் 13,100 கோடி கிடைக்கும்.

ஆற்றுமணல் பெரும்பாலும் முறைகேடாக அள்ளப்படுவது என்பதுதான் இன்றைய நடவடிக்கை ஆக உள்ளது. இதை மாற்றி முறையாக அலுவலர்களை நியமித்து, ஒவ்வொரு மணல் குவாரியையையும் கண்காணிக்க உள்ளுர் மக்கள்-சூழல் ஆர்வலர்கள்-அரசுத் துறையினர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இவர்களை கண்காணிக்க சிறப்புக்குழுக்களை அமைத்து செயல்படுத்த வேண்டும். 2010 ஆம் ஆண்டு நீதிபதி பானுமதி-நாகமுத்து குழு கொடுத்த தீர்ப்பு அறிக்கையை செயல்படுத்தும் வகையில் அரசு செயல்பட வேண்டும்.

நீர் நிலைகள் போன்றவை அரசால் தூர் வாரப்படுதல் :

மணல், கிராவல் போன்றவை சட்ட விரோதமாக எடுப்பதைத் தடுக்க தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக அணைகள், நீர் நிலைகள் போன்றவை அரசால் தூர் வாரப்படாமலேயே உள்ளது. தமிழகத்தில்....

-39,200 ஏரிகள், கண்மாய், குளங்கள், போன்ற நீர் நிலைகள்
- 5000 கோவில் குளங்கள்
- 33 ஆறுகளில் 100 க்கு மேற்பட்ட அணைகளும், தடுப்பணைகளும் உள்ளன.

எனவே, அரசு இதை முறைப்படுத்தினாலே மணல், வண்டல் மண் போன்றவை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 10,000/= கோடி வரை கிடைப்பதுடன், தண்ணீர் சேமிப்பு இப்போது உள்ளது போல் 2 மடங்காக பெருகும்.

தாது மணல் குவாரிகள்:
=======================

தாது மணல்குவாரியின் மூலம் தினமும் சுமார் 2500 லாரி லோடு தாது மணல் (சுமார் 10,000 டன்) தினமும் சட்டவிரோதமாக பல ஆண்டுகளாக உற்பத்தி செய்யப்படுகிறது.

அரசுக்கு செல்லும் வருமானம் என்பது
கார்னட் -1 டன் 5000/=
இல்மனட் -1 டன் 5000/=
சிர்கான் -1 டன் 42, 000/=
ரூட்டைல் -1 டன் 43,000/=

சராசரி 1 டன் தாதுமணல் விலை :ரூ .10,000/= மட்டுமே

உண்மையில் சந்தை விலை :
கார்னட் -1 டன் 20,000/=
இல்மனட் -1 டன் 80, 000/=
சிர்கான் -1 டன் 1, 32, 000/=
ரூட்டைல் -1 டன் 1, 80,000/=

உண்மையில் சந்தை விலை, சராசரியாக 1 டன் தாதுமணல் விலை :ரூ .1,00,000/ ஆகும்

சராசரியாக 1 டன் சந்தை விலை மிகக் குறைவாக ரூ.50,000/= வீதம் என கணக்கிட்டாலும் கூட கூடுதலாக 1 டன் ரூ.40,000/= வீதம் தினமும் குறைந்தபட்சம் ரூ.40,000* 10,000= 40 கோடி ரூபாய் வீதம் கூடுதலாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.14,560 கோடி கிடைக்கும்.

உண்மையில் அரசுக்கு கடற்கரையில் பெரும்பாலும் எடுக்கப்படும் தாதுமணலில் கிடைப்பது என்பது விற்கும் விலையில் 3% மட்டுமே ஆகும். ஒரு டன் 5000 ருபாய் என அரசு நிணையித்த விலையில் விற்கப்படும் கார்னெட், இல்மனெட், தாதுமணல் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் என்பது ரூ.150/= மட்டுமே ஆகும். இதை முறைப்படுத்தினாலே ஆண்டு ஒன்றுக்கு கூடுதல் வருவாய் : ரூ.14,560 கோடி ரூபாய் கிடைக்கும் .

கிரானைட் குவாரி:
===================
இன்று கிரானைட் குவாரியின் மூலம் தினமும் 500 குவாரிகளில் சுமார் 4 கற்கள் மூலம் சுமார் 2,000 கிரானைட் கற்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. 1 கிரானைட் கல் சுமார் 5 கன மீட்டர் முதல் 12 கன மீட்டர் வரை இருக்கும். 1 கிரானைட் கல் சுமார் 5 கன மீட்டர் இருக்கிறது என வைத்தால் கூட தினமும் 10,000 கன மீட்டர் உற்பத்தி செய்யப்படுகிறது.

கிரானைட் கல் மூலம் அரசுக்கு செல்லும் வருமானம்:

ஒரு கிரானைட் கல் 1 கன மீட்டர் சராசரியாக ரூ.2,500/= வரை மட்டுமே விற்கப்படுகிறது .

உண்மையில் சர்வதேச சந்தை விலை:

ஒரு கிரானைட் கல் 1 கன மீட்டர் சராசரியாக ரூ.50, 000/= வரை விற்கப்படுகிறது. (தமிழகத்தில் கிடைக்கும் மேலூர் ஒயிட் மற்றும் எல்லோ ஒயிட் கற்கள் முதல் தரம் 1 கன மீட்டர் விலை=1,25,000 [ஒரு 1 கிரானைட் கல் சுமார் 5 கன மீட்டர் முதல் 12 கன மீட்டர் வரை இருக்கும் என்பதை நினைவில் கொள்க] காசுமீர் ஒயிட் கற்கள் முதல் தரம் 1 கன மீட்டர் விலை=80,000 ஆகும்.)

ஒரு கனமீட்டர் ரூ.33,000/= விற்கப்பட்டாலும் கூட ஒரு கனமீட்டர் ரூ.30,000/= கூடுதலாக விற்கப்படும். இதன் மூலம் தினமும் ரூ.30 கோடிவீதம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.10,950 கோடி கிடைக்கும்.

கிரானைட் கற்களின் சர்வதேச சந்தை விலை மூலம் ஆண்டு ஒன்றுக்கு கூடுதல் வருவாய் ரூ.10,950 கோடி கிடைக்கும்.

கிராவல் மண்:
===============
கிராவல் மண் தினமும் 2,00, 000 லட்சம் லாரி லோடு மூலம் எடுக்கப்படுகிறது. ஒரு லோடு கிரவல் மண் அரசுக்கு செலுத்தும் தொகை ரூ.90/= ஆகும். அனால் பல்வேறு வகையில் முறைகேடாக எடுக்கப்பட்டும், விற்கப்பட்டும் வருகிறது.

கிராவல் மண் ஒரு லோடு ரூ.200/= என அரசு சீனியரெஜ் தொகையை நிர்ணயம் செய்தாலே ஒரு நாளைக்கு கூடுதலான ரூ.110 வீதம் 2,00, 000*110= ரூ.2 கோடியே 20 லட்சம் வீதம் சுமார் 800 கோடி கூடுதலாகக் கிடைக்கும்

கிராவல் மண் மூலம் ஆண்டு ஒன்றுக்கு கூடுதல் வருவாய் 800 கோடி கிடைக்கும்.

மொத்தமாக,

ஆற்று மணல் ஆண்டு ஒன்றுக்கு கூடுதல் வருவாய் : ரூ. 13,100 கோடி
தாதுமணல் ஆண்டு ஒன்றுக்கு கூடுதல் வருவாய் : ரூ. 14,560 கோடி
கிரானைட் கல் ஒன்றுக்கு கூடுதல் வருவாய் : ரூ. 10,950 கோடி
கிராவல் மண் மூலம் கூடுதல் வருவாய் : ரூ. 800 கோடி

என ரூ.38,610/= கோடி கூடுதலாக அரசுக்கு கிடைக்கும்.

இதுமட்டும் இல்லாமல் பாக்சைட், சுன்னன்பு, இரும்பு, நிலக்கரி உட்பட எண்ணற்ற கனிமங்கள் இங்கு கிடைக்கிறது.

தமிழகத்தில் உள்ள எந்த ஒரு கணிமத்தையும் தனியாருக்கு கொடுக்காமல், சுற்றுசூழல் விதிப்படி இயற்கையோடு இயைந்த வகையில் தமிழக அரசு எடுத்து விநியோகித்தாலே ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடிக்கு குறையாத வருவாய் கிடைக்க வாய்ப்பு உண்டு. நாங்கள் இதை கற்பனையாக கனவில் இருந்து சொல்லவில்லை. பல்வேறு பட்டறிவில் இருந்தே சொல்லுகிறோம்.

ஆனால் தமிழக அரசு இதைச் செய்யுமா என்றால் கட்டாயம் செய்யாது. காரணம் கனிம கொள்ளை நடத்துபவர்கள் அனைவரும் ஒன்று ஆளும் கட்சியின் பினாமியோ, அல்லது கொள்ளையில் பங்கு தருபவர்களாகவோ இருக்கின்றனர்.

இவ்வளவு நாள் மக்கள் நலனில் அக்கறையில்லாமல் இருந்தாலும் கூட இப்போது தமிழக அரசுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே தன்னை திருத்திக் கொண்டு எலைட் மதுக்கடைகள் திறப்பது என்ற முடிவை கைவிட்டும், இருக்கும் அனைத்து மதுக்கடைகளை மூடியும் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் .

நேற்று கூட கலிங்கப்பட்டியில் அமைதி வழியில் வைகோ அவர்களின் தாயார் (94 வயது) தலைமையில் போராடிய, கலிங்கப்பட்டி ஊர் மக்களின் உணர்வை மதித்து மதுக்கடையை மூடாமல், அரசு அடாவடியாக கடையைத் திறந்து வைத்தது. இதனால் ஆத்திரமுற்ற மக்கள் தன்னெழுச்சியாக திரண்டு அந்தக் கடையை நேற்று சூறையாடி உள்ளனர். இது போல் தமிழகம் முழுக்க பரவலாக கடந்த சில மாதமாகவே பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

எனவே தமிழக அரசு, போராடும் மக்களை பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து, 'அவர்கள் பொது சொத்தை சேதாரம் செய்தார்கள், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தார்கள்' என்பது போன்ற வழக்குகளைப் பதிவு செய்து மிரட்டாமல் தேசத்தின் நலனை, மக்கள் நலனை பாதுகாத்தவர்கள் என அவர்களைப் போற்ற வேண்டும். அடக்குமுறை செய்து அச்சுறுத்தக் கூடாது.

அரசின் கவனத்திற்கு ஒன்று கொண்டு வருகிறோம். கடந்த 2013-2014 ஆம் ஆண்டில் மட்டும் குமரி-நெல்லை -தூத்துக்குடி மாவட்டத்தில் பலமுறை பா.ஜ.க. -இந்து முன்னணி -ஆர்.எஸ்.எஸ் கும்பலால், அவரது கட்சியினர் தாக்கப்பட்டதாகக் கூறி சுமார் 400 பேருந்துகளுக்கு மேல் உடைத்து, எரித்தும் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளார்கள். இதன் காரணமாகவே குமரி மாவட்டத்தில் ஓடும் பல பேருந்துகள் காயலாங்கடை வண்டிகளாகவே உள்ளதை இன்றும் பார்த்து வருகிறோம். இதற்கான இழப்பாக ஒரு ரூபாயைக் கூட அரசு இதுவரை யாரிடமும் வசூல் செய்தது இல்லை என்பதுடன், யாரையும் கைதுசெய்து நடவடிக்கை கூட பெரிதாக எடுத்தது இல்லை என்பதை தகவல் உரிமை சட்டம் மூலம் பெற்று வைத்து உள்ளோம். தமிழக அரசு ஒரு வகையில் பா.ஜ.க. -இந்து முன்னணி -ஆர்.எஸ்.எஸ் கும்பலோடு கள்ளக் கூட்டு வைத்துக் கொண்டு செயல்படுகிறது என்றே சமுக அக்கறையுள்ளவர்கள் அவதானிக்கிறோம்.

எனவே மதுவை அகற்ற வேண்டும் எனப் போராடுபவர்களை காவல்துறையை வைத்துக் கொண்டு கைது, சிறை, சித்திரவதை, வீடு புகுந்து மிரட்டுவது, போராடுபவர்களின் குடும்பத்தாரை மிரட்டுவது மட்டுமின்றி, போராடும் மக்களை காவல்துறையை வைத்து தடியடி, துப்பாக்கி சூடு, கண்ணீர் புகைகுண்டு என மிரட்டி தாக்காமல் இப்போவாவது திருந்தி பூரண மதுவிலக்கைக் கொண்டு வந்து அய்யா சசிபெருமாள் அவர்களின் தியாகத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

மதுவிலக்கை அமுல்படுத்தவில்லை என்றால் மக்களின் எழுச்சிமிக்க போராட்டம் தொடரும்; வரலாற்றின் குப்பைத் தொட்டியில் மக்களால் தூக்கி ஏறியப்படுவீர்கள் எனத் தெரிவித்துக் கொள்கிறோம். மக்களின் போராட்டம் வென்றே தீரும்

தமிழக அரசே! மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடு!
போராடும் மக்களை கைது செய்து மிரட்டாதே!!
மதுக் கடைகளை உடனே இழுத்து மூடு!!!

- முகிலன்