முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் நேற்று முன்தினம் (27-07-2015) அன்று மரணமடைந்துவிட்டார். அதையொட்டி மத்திய அரசு 7 நாள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. நாடே கண்ணீரில் மிதப்பதாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. பாஜக, காங்கிரசு உட்பட அனைத்துக் கட்சிகளும் அவருக்காக கண்ணீர் வடிக்கின்றன. நமக்கு ஆச்சரியமாக உள்ளது, ஒருவர் எப்படி அனைவருக்கும் நல்லவராக இருக்க முடியும்! முற்போக்குவாதிகளும் அவரைக் கொண்டாடுகின்றார்கள், பிற்போக்குவாதிகளும் அவரைக் கொண்டாடுகின்றார்கள். இது எப்படி சாத்தியமானது?

 Abdul Kalamஅப்துல் கலாம் என்ற நபர் கோடானகோடி இந்திய மக்களுக்கு அப்படி என்னதான் செய்துவிட்டார்? ஏவுகணைகளை உருவாக்கினார், அணுஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார். கனவு காணுங்கள் என்று சொன்னார், குழந்தைகளுடன் கலந்துரையாடினார், 2020ல் இந்தியா வல்லரசு ஆகும் என்று சொன்னார். அப்புறம் ஏழையாக இருந்து சிரமப்பட்டு, படித்து, மிக உயர்ந்த நிலையை அடைந்தார். ஒரு மனிதரைக் கொண்டாட இது மட்டும் போதுமா?. அவர் கண்டுபிடித்த ஏவுகணைகளும் இன்னும்பல அறிவியல் கண்டுபிடிப்புகளும் யாருக்கானவை? நிச்சயமாக அவை ஒருபோதும் சாமானிய மக்களுக்கானது அல்ல. அவை ஆளும் வர்க்கங்களுக்கானவை. சாமானிய மக்களுக்கு அவர் எதையாவது செய்திருக்கின்றாரா என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. பின்பு ஏன் சாமானிய மக்கள் அப்துல் கலாமின் மறைவிற்காக அழவேண்டும்? உங்கள் விலைமதிப்பில்லா கண்ணீரை சமர்ப்பனமாக பெரும் தார்மீக தகுதி கலாமுக்கு இருக்கின்றதா?

 அவர் ஒரு அறிவியல் அறிஞராக இருந்திருக்கலாம்; அதைப் பற்றி மட்டுமே பேசுபவராக இருந்திருக்கலாம். அப்படி இருந்திருப்பாரேயெனில் அவரைப் பற்றி பேசுவதற்கு நம்மிடம் எதுவும் இல்லை. ஆனால் அவர் தன்னை ஒரு பன்முக ஆளுமைமிக்க நபராகவே எப்போதும் அடையாளப்படுத்தி வந்தார். பொது அரங்கங்களில் பங்கேற்று பல சமூகம் சார்ந்த செய்திகளை பேசியிருக்கின்றார். எனவே நாம் அவரைப் பற்றி பேசுவதற்கு உரிமை உள்ளது.

 ஆளும் வர்க்கங்கள் ஒரு மனிதரைக் கொண்டாட பெரிய காரணங்கள் எதுவும் தேவையில்லை. அவர் ஆளும்வர்க்கத்தின் கைக்கூலியாக, அவர்களுக்கு பயன்படுபவராக இருந்தாலே போதும். ஆனால் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்துக்காகப் போராடுபவர்களும் அவ்வாறே ஒருவரைக் கொண்டாட முடியுமா? அப்படி கொண்டாடும் பட்சத்தில் அவர்களை எப்படி சாமானிய மக்களுக்காகப் பாடுபடுபவர்கள் என்று சொல்லமுடியும்? அப்துல் கலாம் எப்போதாவது சாமானிய மக்களின் பிரச்சினைகளுக்காக ஆளும் வர்க்கங்களுக்கு எதிராகப் பேசியிருக்கின்றாரா? அவருடைய சமகாலத்தில் பல பிரச்சினைகளை இந்தியா சந்தித்து இருக்கின்றது. இந்திரா காந்தியால் நாட்டில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது, அவரது மறைவையொட்டி சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரும் மனிதப் படுகொலை, போபால் விஷவாயு கசிவால் 25000 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டது, ஈழமக்கள் படுகொலை, குஜராத் கலவரம், பாபர் மசூதி இடிப்பு, பசுமை வேட்டை, விவசாயிகள் தற்கொலை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதைப் பற்றியெல்லாம் கலாமின் கருத்து என்ன? தனது உதவியாளர்களிடமும், நெருக்கமானவர்களிடமும் தனிமையில் அவர் ஆதங்கப்பட்டிருக்கலாம், சில கருத்துக்களைச் சொல்லியிருக்கலாம். பொதுவெளியில் என்ன செய்தார்? ஆளும்வர்க்கங்களுக்கு எதிராக சுண்டு விரலைக்கூட நீட்டாத வீரர்தான் கலாம் அவர்கள்.

அவர் பள்ளி மாணவர்களை சந்திக்கும் போதெல்லாம் அவர்களிடம் ஒரு பத்து உறுதிமொழிகளை எடுக்ச் சொல்லுவார். அந்த உறுதி மொழிகளை நீங்களே படியுங்கள்.

நான் எனது வாழ்க்கையில் நல்ல லட்சியத்தை மேற்கொள்வேன்.

நன்றாக உழைத்துப் படித்து என் வாழ்க்கை லட்சியத்தை அடைய முற்படுவேன்.

நான் எனது விடுமுறை நாட்களில் எழுதப் படிக்கத் தெரியாத ஐந்துபேருக்காவது எழுதப் படிக்க சொல்லித் தருவேன்.

நான் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ குறைந்த பட்சம் ஐந்து செடிகளையாவது நட்டு அதைப் பாதுகாத்து மரமாக்குவேன்.

மது, சூதாடுதல் மற்றும் போதைப் பழக்கங்களுக்கு ஆளாகி துயருரும் ஐந்து பேரையாவது மீட்டு அதில் இருந்து நல்வழிப்படுத்த முயற்சி செய்வேன்.

துயர்படும் ஐந்துபேரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் அளித்து அவர்களது துயரை துடைப்பேன்.

நான் சாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, மொழியின் பெயராலோ எவ்வித பாகுபாடும் பாராட்டாது எல்லோரிடமும் சமமாக நடந்து கொள்வேன்.

நான் வாழ்க்கையில் நேர்மையாக நடந்துகொண்டு மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க முயல்வேன்.

என் தாய் மற்றும் தாய் நாட்டை நேசித்து பெண்குலத்துக்கு உரிய மரியாதையும் கண்ணியத்தையும் அளிப்பேன்.

நான் நாட்டில் அறிவு தீபத்தை ஏற்றி அணையா தீபமாக சுடர்விடச் செய்வேன்.

 ஒருவன் நன்றாகப் படித்து உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதெல்லாம் அப்பட்டமான முதலாளித்துவ சிந்தனையே அன்றி வேறல்ல. நாட்டில் கோடானகோடி இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் இருப்பதற்கு நன்றாக படிக்காமல் போனதோ, உழைக்க முடியாததோ காரணம் அல்ல. உண்மைப் பொருளாதாரத்தை கட்டியமைக்காமல் பங்குசந்தை சார்ந்த ஊகப் பொருளாதாரத்தை கட்டியமைத்து அதைக் காப்பாற்றி வரும் இந்த அரசே காரணமாகும். இது கலாமுக்குத் தெரியாதா அல்லது தெரிந்தும் மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டாரா?. சாதியைப் பற்றி, மதத்தைப் பற்றி எல்லாம் பேசும் கலாம் அவர்கள் இந்தியாவில் சாதிக் கலவரங்களும், மதக் கலவரங்களும் நடந்த போது அதை குறைந்தளவு கண்டித்தாவது பேசி இருக்கின்றாரா? பெண்களுக்கு மரியாதையும், கண்ணியத்தையும் அளிக்கவேண்டும் என்று சொன்ன கலாம் எப்போதாவது பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராகப் பேசியிருக்கின்றாரா?

 இப்படி எதுவுமே பேசாத, செய்யாத கலாமுக்காக சாமானிய மக்கள் எதற்காக அழவேண்டும்? அவர் இதுவரை எத்தனை தனியார் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களிடம் பேசியிருக்கின்றார், எத்தனை அரசு பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களிடம் பேசியிருக்கின்றார் என்று கணக்கிட்டுப் பார்த்தால் அவர் எந்த வர்க்கத்தைச் சார்ந்த குழந்தைகளுக்கு ஆதரவானவர் என்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம். கலாம் தமிழ்நாட்டில் பிறந்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவரைத் தூக்கிவைத்துக் கொண்டாடுவது என்பது மிக அபத்தமானதாகும். காவிரிப் பிரச்சினையாகட்டும், மீத்தேன் வாயு திட்டமாகட்டும், தமிழ்நாட்டையே அழித்துக் கொண்டிருக்கும் டாஸ்மாக் பிரச்சினையாகட்டும் அல்லது வேறு எந்த பிரச்சினையாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அவர் எப்போதாவது தமிழ்நாட்டு மக்களுக்காக குரல் கொடுத்து இருக்கின்றாரா? மீனவ சமூகத்திலே பிறந்து அந்த மீனவ சமூகத்திற்கே துரோகம் செய்த கலாமின் கதையை கூடங்குளத்தில் உள்ள குழந்தைகளிடம் கேட்டுப் பாருங்கள்!.

 கார்ப்ரேட் சாமியார்களின் காலில் விழுந்து ஆசிவாங்கும் ஒரு அறிவியல் மேதையே அப்துல் கலாம் அவர்கள். சமஸ்கிருதத்தைப் பற்றியும், வேதங்களைப் பற்றியும் பெருமையாகப் பேசியும் எழுதியும் வந்தவர் தான் கலாம் அவர்கள். அதர்வண வேதத்தில் விமான அறிவியல் உள்ளதாக கண்டுபிடித்து காவிக்கூட்டத்திற்கு கருத்தியல் ஆயுதமாக பயன்பட்டவர்தான் கலாம் அவர்கள்.

 அப்துல் கலாம் ஏழையாகப் பிறந்தார். இந்திய ஆளும்வர்க்கத்தின் கனவுத் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்து அவர்களின் செல்லப்பிள்ளையாக வாழ்ந்தார். அதற்காக குடியரசுத் தலைவர் பதவியை பரிசாகப் பெற்றார். அப்பட்டமான முதலாளித்துவ நச்சுக் கருத்துக்களை இளைஞர்கள் மத்தியிலே விதைக்க முயற்சித்தார். கலாமிடம் இருந்து இன்றைய இந்திய இளைஞர்கள் கற்றுக்கொள்ள ஒன்று இருக்கின்றது. அது என்னவென்றால் அவரைப்போல இல்லாமல் இருப்பதே!

- செ.கார்கி