இந்த இணையதளம் இவ்வளவு பெரிய இணையதளமாக மாறும் என்றோ, பத்தாண்டுகள் கடந்து இயங்கும் என்றோ நிச்சயம் 24/07/2005 அன்று காலை கீற்றினை வெளிக்கொணர்ந்தபோது நாங்கள் (நான், பாஸ்கர், எனது தம்பி சுரேஷ்) நினைக்கவில்லை. தினமும் 4 படைப்புகளை வெளியிட்டால் போதும் என்றே நினைத்திருந்தோம். ஆனால், மாற்று அரசியலை, இலக்கியத்தை விரும்பும் செயல்பாட்டாளர்களும், படைப்பாளிகளும் கீற்றினை இன்றைய நிலைக்கு வளர்த்து விட்டீர்கள். கடந்த பத்தாண்டுகளில் கீற்று அடைந்த அத்தனை வளர்ச்சியும், பெயரும் நீங்கள் அதற்கு அளித்த ஆதரவினால் மட்டுமே.

இன்றுடன் பத்தாண்டை நிறைவு செய்து, பதினோராவது ஆண்டில் நுழைகிறது கீற்று. இன்னொரு வகையில் பார்த்தேன் என்றால், இது கீற்றிற்கு மட்டும் பிறந்த நாள் அல்ல… எனக்கும்தான். பிறந்தோம், வாழ்ந்தோம் என்று சென்று கொண்டிருந்த எனது வாழ்க்கைக்கு ஓரளவேனும் அர்த்தம் சேர்ந்தது கீற்று உதயமான பின்புதான். இரமேஷ் மறைந்து, இச்சமூகத்திற்கு ஒரளவேனும் பயன் செய்ய முயலும் கீற்று நந்தனாக நான் பிறப்பெடுத்தது 24/07/2005 அன்றுதான். கீற்றுடன் சேர்ந்துதான் எனது அரசியல் அறிவும், சமூகப் பார்வையும் வளர்ந்தது. எனவே, என் வயதும் பத்துதான். கீற்றின் நிறை, குறைகளை மதிப்பிடுபவர்கள், இதை நடத்துபவன் பத்து வயது சின்னப் பையன் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

ஒரு நாளைக்கு குறைந்தது 4 மணி நேரம், ஆண்டிற்கு 1460 மணி நேரங்கள், பத்தாண்டுகளில் 14600 மணி நேரங்கள் - நாட்களில் குறிப்பிட வேண்டுமெனில், என் வாழ்க்கையின் 608 முழு நாட்களை கீற்று விழுங்கி வளர்ந்திருக்கிறது. சொந்த பந்தங்களுடனும், பால்ய நண்பர்களுடனுமான எனது தொடர்புகளை பல மடங்கு சுருக்கி விட்டது. மேலும், பொருளாதாரத் தேவைக்கு நான் பார்த்துக் கொண்டிருந்த வேலைகளில் சில இலட்சங்கள் ஊதிய உயர்வையும், ஓரிரு பதவி உயர்வுகளையும் காவு வாங்கிக் கொண்டது.

கீற்றின் மூலம் நான் இழந்தது இவற்றை. ஆனால், பெற்றவைகளைக் கணக்கிடும்போது, இழந்தவை சொற்பமே. எந்த ஊர் சென்றாலும், தோழமையுடன் கைகுலுக்குவதற்கு நண்பர்களை அள்ளித் தந்திருக்கிறது. பாஸ்கர், பிரபாகரன்,முத்துக்குட்டி, நரேந்திரன், சண்முகசுந்தரம் என அற்புதமான நண்பர்களை கீற்றுதான் தந்தது. (இதில் பாஸ்கர், எனது தம்பி சுரேஷின் உழைப்பை கீற்றிற்காக நான் சுரண்டியது அதிகம். அப்போது மூவரும் ஒரே வீட்டில் இருந்தோம். திருமணம் ஆகி, பாஸ்கர் தப்பித்தார்; சுரேஷ் வெளிநாட்டு வேலை கிடைத்து தப்பித்தார். இந்த அறுவரும் பொருளாதார ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் இன்றுவரை கீற்றிற்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.)

எனது தொடர்பு வட்டத்தில் இருக்கும் பல தோழர்களை நான் இதுவரை நேரில் சந்தித்ததில்லை. முகமறியா இத்தகைய நட்பையும், இதேபோலான பகையையும் கீற்று தந்திருக்கிறது. வெறும் நாத்திகனாக மட்டும் இருந்தவனுக்கு, பல்வேறு முகாம்களின் சித்தாந்தங்களைப் பரிச்சயப்படுத்தியது. நான் பெற்றிருக்கும் கொஞ்ச நஞ்ச அறிவும் கீற்றின் மூலமே. இவை அனைத்திற்கும் மேலாக, சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் எனக்குக் கிடைத்திருக்கும் மதிப்பான ஓர் இருக்கை. அவரவர்கள் தங்கள் சொத்துக்களை இழந்து, குடும்பத்துடன் செலவழிக்க நேரமின்றி, ஊர் ஊராக அலைந்து, போராடி, சிறைக்குச் சென்று, உடலை வருத்தி, உண்மையாக உழைத்து, ‘மாற்று அரசியல் செயற்பாட்டாளர்’ என்று பெற்ற நற்பெயரை, நோகாமல் நொங்கு தின்று, பெற்றிருக்கிறேன். இவர்களுடன் ஒப்பிடும்போது, இவர்களுக்குச் சமமான ஓர் இருக்கையில் அமர்வதற்கு நான் ஒன்றுமே செய்யவில்லை. அலுவலக வேலையும் பார்த்துக் கொண்டு, அதன் மூலம் நல்ல ஒரு சம்பளத்தையும் பெற்றுக் கொண்டு, காலையிலும், மாலையிலும் ஓய்வான நேரங்களில் வீட்டில் சொகுசாக கணினி முன் உட்கார்ந்து கொண்டு, சில மணி நேரங்களைச் செலவழித்து விட்டு, நானும் ஒரு மாற்று அரசியல் செயற்பாட்டாளனாக மதிக்கப்பட்டுள்ளேன். எவ்வளவு பெரிய திருட்டுத்தனம் இது! இன்னொரு வகையில் பார்த்தேனென்றால், இந்த சொகுசான ‘அரசியல் செயற்பாட்டாளன்’ பெயருக்காகவே கீற்றினை இத்தனை ஆண்டுகள் விடாமல் நடத்தி வந்துள்ளேன் என்றும் சொல்லலாம். எனது உழைப்புக்கும், தகுதிக்கும் மீறிய இடத்தை கீற்று எனக்கு அளித்திருக்கிறது.

கீற்று இந்த பத்தாண்டுகளில் என்னவாக வளர்ந்திருக்கிறது என்று பார்த்தால், அதன் வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாகவே உள்ளது. இதையும் எனது தனிப்பட்ட அனுபவ அடிப்படையில் சொல்கிறேனே தவிர, வெளியுலகப் பார்வையிலிருந்து அல்ல… கீற்று தொடங்கப்பட்ட நாளில் அதிலிருந்த கட்டுரைகள் 50 இருக்கலாம். அதற்குத் தெரிந்த படைப்பாளிகள் ஒரு 10 பேர். அதற்கான செலவு ஆண்டுக்கு 2500 ரூபாய். இன்று ஆயிரக்கணக்கான கட்டுரைகள், நூற்றுக்கணக்கான படைப்பாளிகளை தன்னகத்தே கொண்டு, தனது செலவையும் மாதத்திற்கு 5000 ரூபாயாக உயர்த்திக் கொண்டுள்ளது.

மாற்று அரசியல் பத்திரிக்கைகளை படிப்பதற்கான, அத்தகைய அரசியலை விவாதிப்பதற்கான தளமாக கீற்று உள்ளது. புதிதாக எழுத வருபவர்களை வளர்த்தெடுக்கும் இடமாக கீற்று இருந்து வருகிறது. கீற்றில் எழுத ஆரம்பித்து, இன்று குறிப்பிடும்படியான படைப்புகளைத் தந்தவர்கள் எனக் குறைந்தது 100 பேரையாவது சொல்ல முடியும் என்று கருதுகிறேன்.

படைப்பாளிகள், செயற்பாட்டாளர்கள், பேச்சாளர்கள் பலருக்குத் தகவல்களை அளிக்கும் தளமாக கீற்று இருப்பதை அவர்கள் சொல்லக் கேட்க முடிகிறது. சமூக வலைத்தளங்களில் கீற்று படைப்புகளைக் குறிப்பிட்டு ஆயிரக்கணக்கானோர் விவாதிப்பதைப் பார்க்க முடிகிறது. பல மாணவர்கள் கீற்றில் தகவல்களைத் தேடி, பயன்படுத்துவதை அவர்களுடனான தனிப்பட்ட சந்திப்புகளில் அறிய முடிகிறது.

ஒரு மென்பொருள் வல்லுனராக கீற்றின் physical growth-யைப் பார்க்கும்போது, ஒரு மெல்லிய இறகைப் போல் பறந்து கொண்டிருந்த கீற்று, இன்று தனது வயதுக்கு மீறி, தனது உடலை தானே தூக்கிச் செல்ல முடியாத அளவுக்குப் பருத்துக் காணப்படுகிறது. இந்த உடல் வீக்கமே அதற்கான செலவையும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கீற்றிற்குத் தேவைப்படும் server திறன் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கீற்றின் இந்த வளர்ச்சி அனைத்தும் இதில் தங்களது பத்திரிக்கைகளை, படைப்புகளை வெளியிட்ட அரசியல் செயல்பாட்டாளர்கள் மற்றும் அதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்திய வாசகர்கள் மூலமாகவே சாத்தியப்பட்டிருக்கிறது. நீங்கள் தான் இத்தளத்தினைப் பின்னிருந்து இயக்குகிறீர்கள். இத்தளத்தின் வெற்றி உங்களுடைய வெற்றியே. வெறுமனே இதில் பேர் வாங்கிக் கொண்டிருப்பவன் என்ற வகையில் உங்களிடம் திருப்பிச் செலுத்த முடியாத அளவிற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்பதை இந்தக் கணத்தில் உணர்கிறேன். தொடர்ந்து கீற்றை தொய்வின்றி நடத்துவதன்மூலம் அந்தக் கடனில் கொஞ்சத்தையாவது திருப்பிச் செலுத்த முடியுமா என்று பார்க்கிறேன்.

குடும்பத்துடன் செலவிட வேண்டிய காலை, மாலை நேரங்களில் கீற்றுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதைப் பொறுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், தானும் கீற்றில் பங்கெடுத்து, எனது வேலைப்பளுவை சரிபாதியாக பகிர்ந்து கொள்ளும் எனது வாழ்விணையர் ஹேமாவிற்கு, கீற்று பிறந்த நாளில் அன்பாக சில முத்தங்களையும், இதேவிதமான வாழ்க்கைதான் இனியும் தொடரும் என்ற கொடுமையான செய்தியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள்! உங்களால்தான் இந்த வெற்றிப் பயணம் சாத்தியமானது!!

- கீற்று நந்தன்