கடவுள் நம்பிக்கையால் மனித குலம் சீரழிவதைக் கண்ட பெரியார் "கடவுளை மற; மனிதனை நினை." என்ற முழக்கத்தை முன்வைத்தார்.

பார்ப்பன / முதலாளித்துவ ஆதிக்கத் தேர்தல் முறையினால் ஏற்படும் சீரழிவுகளைக் கண்டால், இத்தேர்தல் முறையைத் தேர்ந்தெடுத்த "அண்ணாவை மற!" சமூக விழிப்புணர்வுக்குப் பாதை வகுத்த, "பெரியாரை நினை" என்ற முழக்கத்தை முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது.

anna rajaji 600

ஏடறிந்த இந்திய வரலாறு முழுமையும், பார்ப்பன ஆதிக்க வரலாறு தான். முடியாட்சிக் காலத்தில் மனு அநீதி வெளிப்படையாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டு இருந்தது. முதலாளித்துவம் முகிழ்த்த பின், பார்ப்பனர் அல்லாதார் இயக்கங்கள் தோன்றி போராடிக் கொண்டு இருந்த போது, மனு அநீதியை வெளிப்படையாகச் சரியானது என்று சொல்ல வெட்கமாக இருந்த நிலையிலும் பார்ப்பனர்கள் அந்த அநீதியைக் கைவிட ஒப்பவில்லை. ஆகவே தங்கள் கையில் இருந்த / இருக்கும் அரசதிகார வலிமையை வைத்துக் கொண்டு, சூழ்ச்சியான முறைகளில் அதே அநீகளை நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்த அரசதிகார வலிமையை முறியடிக்க வேண்டும் என்றால், அரசு, சமூக, பொருளாதாரக் களங்களில் அனைத்து நிலைகளிலும், அனைத்து வகுப்பு மக்களும், அவரவர் மக்கள் தொகையின் விகிதத்தில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். இப்பொழுது இருப்பது போல், அதிகாரம் உள்ள உயர்நிலை வேலைகளில் பார்ப்பனர்கள் அளவுக்கு அதிகமாக இருக்கும் நிலை உருத் தெரியாமல் அழித்து ஒழிக்கப்பட வேண்டும்.

அதனால் தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இந்திய சமூகத்தைப் பற்றி விளக்கிக் கூறும் போது, மகாத்மா சோதிராவ் ஃபுலே, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு, கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டால் தான், அவர்களுக்கு உரிய பங்கில் சிறிதளவேனும் அடைய முடியும் என்ற கோரிக்கையை வைத்தார். அதனைத் தொடர்ந்து பெரியாரும் அம்பேத்கரும் அதே கோரிக்கைக்காகப் போராடினார்கள். இவர்கள் யாருமே தேர்தல் அரசியல் மூலம் இக்கோரிக்கையை வென்றெடுக்க வேண்டும் என்று முயலவில்லை; எண்ணவும் இல்லை. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே வென்றெடுக்க முயன்றனர். தேர்தல் அரசியலில் ஈடுபடுவதற்கு முன், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்குச் சார்பான கருத்தியலை வளர்த்து, விழிப்ணர்வைப் போதுமான அளவிற்கு ஏற்படுத்துவது அவசியம் என்று எண்ணினர். இது ஓரளவிற்குப் பயனைத் தரவே செய்தது.

ஆனால் காலம் கனிவதற்கு முன்பாகவே, அதாவது தேவையான அளவு விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படும் முன்னரே, தேர்தல் அரசியலில் ஆசைப்பட்டு அண்ணா பெரியாரை விட்டுப் பிரிந்து, தி.மு.க.வை ஆரம்பித்தார். அப்படிப பிரிந்த பின் தி.மு.க. குறுகிய காலத்திலேயே வளர்ச்சி பெற்று ஆட்சியையும் பிடித்தது. ஆனால் "கடவுள் இல்லை" என்ற கொள்கையில் இருந்து சறுக்கி "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்று சொல்ல நேரிட்டது.

ஒரு அரசியல் கட்சி ஆட்சியைப் பிடித்தால், அதன் அடிப்படைக் கொள்கையை உடனே செயலாக்க வேண்டும்.

லெனின் ஆட்சியைப் பிடித்த மறு கணமே, நிலம் அனைத்தும் இனி தனியார் உடைமையில் இருக்காது; மக்கள் அனைவருக்கும் உடைமையாக இருக்கும் என்று கூறும் 'நிலம் பற்றிய அரசாணை'யை எழுதினார். அது போல தி.மு.க.வும் ஆட்சியைப் பிடித்த உடனேயே, அனைத்து வகுப்பு மக்களும், அவரவர் உரிமைகளைப் பெறும் வகையில் விகிதாச்சாரப் பங்கீட்டுக் கொள்கையை அமலாக்கி இருக்க வேண்டும். அப்படி முடியாத நிலையில், ஆட்சியைப் பிடித்து இருக்கவே கூடாது.

மக்களுடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் ஆட்சியைப் பிடித்ததன் விளைவாக, இன்று அக்கட்சியினர் பல ஊழல் வழக்குகளில் சிக்சி உள்ளனர். அனைத்து வகுப்பு அரசியல்வாதிகளும் ஊழல் செய்கிறார்கள். ஆனால் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தான் ஊழல் வழக்குகளில் சீரழிக்கப்படுகிறார்கள்; மேலும் மிரட்டப்பட்டு, தங்கள் வகுப்பு மக்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்படும்படி கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்.

ஆனால் பார்ப்பனர்களின் ஊழல்கள் கண்டு கொள்ளப்படுவது இல்லை. ஆனால் அப்படிக் கண்டு கொள்ளப்படாமல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டைத் தவிர்ப்பதற்காகப் பெயருக்குச் சில வழக்குகள் பதியப்பட்டு, இறுதியில் ஒரு பிரச்சினையும் இல்லாமல் தப்ப விடப்படுகிறார்கள். மறைக்கவே முடியாத கூட்டல் கழித்தல் தவறுகளை, வேண்டும் என்றே செய்து விட்டு, ஒரு தவறும் நேரவில்லை என்பது போன்ற முகபாவனையுடன் வெற்றி விழாவும் கொண்டாடுகிறார்கள்.

இது போன்ற தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் 25.5.2015 அன்று வ்ணடுகோள் விடுத்தார். அதற்கு உடனடியான எதிர்வினையும் தென்படாமல் போகவே 26.5.2015 அன்று தங்கள் கட்சிக்கு மேல் முறையீடு செய்யும் கடமை உண்டு என்று அறிவித்தார்.

மேல் முறையீடு செய்தால் நீதி கிடைத்து விடுமா? அதிகார மையங்களில் பெரும்பாலாகப் பார்ப்பனர்களும், பார்ப்பன அடிமைகளும் நிரம்பி வழிகையில் அவர் நீதியை எப்படி எதிர்பார்க்கிறார்?

அதிகார மையங்களில் பார்ப்பனர்கள் 3% மட்டுமே இருந்து மீதமுள்ளோர் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாய் இருந்திருந்தால் / இருந்தால் இப்படிப்பட்ட தீர்ப்புகள் / முடிவுகள் வர முடியாது.

பெரியாரும் அம்பேத்கரும் தேர்தல் அரசியலுக்கு வெளியில் இருந்து பணி புரிந்து தான், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு இன்று கிடைத்து இருக்கும் சிறதளவு உரிமைகளைப் பெற்றுத் தந்தார்கள். பார்ப்பனர்களின் அரசதிகார வலிமை போதுமான அளவு பலவீனம் அடைந்த பின்னரே, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் விழிப்புணர்வு போதுமான அளவு வலுப்பெற்ற பின்னரே தேர்தல் அரசியலில் ஈடுபடுவதைப் பற்றி ஆராய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர்.

ஆனால் தி.மு.க.வினர் காலம் கனிவதற்கு முன்பே தேர்தலில் ஈடுபட்டு, பெரியார் வளர்த்து வைத்த ஆற்றலை வீணடித்து விட்டனர் / வீணடித்துக் கொண்டும் இருக்கின்றனர்.

ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் அனைவரும், அண்ணா வகுத்த தேர்தல் பாதையை மறந்து, பெரியார் வகுத்த விழிப்புணர்வுப் போராட்டப் பாதையில் ஒற்றுமையுடன் இணைந்து போராட வேண்டும். ஆதவே நம் உரிமைகளை நாம் பெறுவதற்கான வழியாகும்.

அண்ணாவை மற; பெரியாரை நினை.

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 14.6.2015 இதழில் வெளி வந்துள்ளது)

- இராமியா