இப்ப எல்லாம் யாருங்க சாதி பாக்குறாங்க அது எல்லாம் எங்க காலத்தோட போச்சி என்று நம்மிடம் உணர்ச்சி வசப்படும் பெருசுகளை நீங்கள் தினம் பார்க்கலாம். நாமும் கூட சில சமயங்களில் அப்படி நினைத்து மகிழ்ச்சி அடைந்ததுண்டு. ஆனால் அந்த மகிழ்ச்சி என்பது சமூக எதார்த்தத்தை மீறிய மகிழ்ச்சி என்று ஒவ்வொரு நாளும் தலித்துகளின் மீது நடத்தப்படும் வன்முறைகள் காட்டுகின்றன.

Sagar Shejwal மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஷீரடியில் கடந்த மே 16, 2015ம் தேதி சாகர் சேஸ்வால் என்ற தலித் இளைஞர் அம்பேத்கர் பாடலை ரிங்டோனாக வைத்திருந்ததற்காக மிகக்கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். சேஸ்வால் ஷீரடியில் உள்ள தன்னுடைய உறவினர் திருமணத்திற்கு சென்றுவிட்டு தனது மைத்துனர் இருவருடன் சேர்ந்து மதுக்கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. செல்போனில் ரிங்டோனாக அம்பேத்கரின் புகழை எடுத்துரைக்கும் பாடல் ஒலித்திருக்கின்றது. இது அருகில் இருந்த ஆதிக்க சாதி வெறியர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கின்றது. உடனே ஆதிக்கசாதி வெறியர்கள் அனைவரும் சேர்ந்து சேஸ்வாலை கடுமையாகத் தாக்கியுள்ளனர். தாக்கியதோடு விடாமல் அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போய் மிகக்கொடூரமான முறையில் தாக்கி அவர்மீது இருசக்கர வாகனத்தை வரிசையாக ஏற்றி உடலை சிதைத்திருக்கின்றனர். பின்னர் அவரது உடலை நிர்வாணமாக்கி ரூய் என்ற கிராமத்தில் வீசிச் சென்றிருக்கின்றனர். தாக்கியவர்கள் அனைவரும் மராதா மற்றும் ஒபிசி சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்று தெரிய வந்திருக்கின்றது.

 ஆதிக்கசாதி வெறியர்கள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தவுடன் மதியம் 1:45க்கே காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. வழக்கம் போல காவல் துறை ஆதிக்கசாதி வெறியர்களின் நண்பன் என்பதைக் காட்டியுள்ளது. அவரது பிணத்தை எடுத்துச் செல்லவே காவல் துறை வந்துள்ளது. மக்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே எட்டுபேரை தற்போது கைது செய்துள்ளது.

 தாழ்த்தப்பட்ட மக்கள், சமூகத்தில் தங்களது இடம் எதுவென்று அறிந்து செயல்பட வேண்டும். இல்லை என்றால் அவர்களுக்குத் தக்க பாடம் புகட்டப்படும் என்று ஒவ்வொரு முறையும் சாதிவெறியர்கள் எச்சரிக்கின்றனர். கயர்லாஞ்சி போட்மாங்கே குடும்பம் தொடங்கி சாகர் சேஸ்வால் வரை இந்த செய்தியை அழுத்தமாக அவர்கள் சமூகத்திற்கு சொல்கின்றனர். நீ எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போ ஆனால் என்முன்னால் நீ கைகட்டிதான் நிற்கவேண்டும். ஏன் என்றால் நீ என்னுடைய அடிமை! இதுவே இந்திய சாதி இந்துக்களின் உறுதியான மனநிலை.

 அம்பேத்கரின் கருத்துக்கள் மட்டும் அல்ல, அவர் தொடர்புடைய அனைத்தும் குறிப்பாக அவரைப் பற்றிய பாடல், அவரது புகைப்படம் கூட ஆதிக்க சாதி வெறியர்களை அச்சுறுத்தும் குறியீடாக உள்ளது.

 மகாராஷ்டிரத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. அது என்னவென்றால் இரண்டுமே பார்ப்பன சித்தாந்தத்தின் உச்சிக்குடுமியை பிடித்து உலுக்கிய மாநிலங்கள். தமிழ்நாட்டில் பெரியார் அதைச் செய்தார், மகாராஷ்டிராவில் ஜோதிபா புலேவும், அம்பேத்கரும், செய்தனர். ஆனால் இந்த இரண்டு மாநிலங்களிலும் இன்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் நடக்கின்றன.

 மகாராஷ்டிராவில் அம்பேத்கரின் பாடலை ரிங்டோனாக வைத்திருந்ததற்காக சகர்சேஸ்வால் கொல்லப்பட்டார் என்றால் இங்கே பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூர் கிராமத்தில் சித்திரா பெளர்ணமி அன்று தாழ்த்தப்பட்ட மக்கள் மாரியம்மன் கோயில் திருவிழாவைக் கொண்டாடியுள்ளனர். அதற்காக திருவிழாவிற்கு வருபவர்களை வரவேற்க பேனர் வைத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த வன்னிய சாதி வெறியர்கள் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மூன்று குடிசைகள் எரிக்கப்பட்டுள்ளன, வெடிகுண்டு வீசியதில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனின் கை சிதைந்துள்ளது. அதே போல விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகில் உள்ள திருமைபுரம் என்ற கிராமத்தில் கோயில் கும்பாபிசேகத்தில் அம்பேத்கர் மற்றும் இமானுவேல் சேகரன் ஆகிய தலைவர்களின் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டதற்காகவும் அம்பேத்கரின் புகழைச் சொல்லும் பாடல் ஒலிபரப்பப்பட்டதற்காகவும் மூன்று தலித்துகள் மிகக்கடுமையாக தாக்கப்பட்டனர். ஒன்பது வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.

 மகாராஷ்டிராவை ஆளுவது பி.ஜே.பி சிவசேனா கும்பல் என்றால் இங்கே பார்ப்பன ஜெயா. என்ன ஒற்றுமை பார்த்தீர்களா! பி.ஜே.பி எப்படி தனது அரசியல் ஆதாயத்திற்காக அம்பேத்கரை பயன்படுத்துகின்றதோ அதே போல இங்கே பார்ப்பன ஜெயா அரசு பெரியாரைப் பயன்படுத்திக் கொள்கின்றது.

 பார்ப்பன சனாதான தர்மத்திற்கு இன்று மிகப்பெரிய எதிரி யார் என்றால் அது அம்பேத்கரும், பெரியாரும் தான். அதனால் தான் அனைத்து சாதிய, மதவாத பிற்போக்கு சக்திகளும் ஒன்றாக சேர்ந்து அவர்களுக்கு எதிராக தாக்குதல் தொடுக்கின்றன. ஒருபக்கம் அவர்களைப் புகழ்வது மறுபக்கம் அவர்களது சிந்தனையை கருவறுக்கும் வேலையைச் செய்வது இதுதான் அவர்கள் கடைபிடிக்கும் உத்தி.

 இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ள போதிலும் அந்தக் குற்றத்தை செய்த யாரும் பெரும்பாலும் தண்டிக்கப்படுவதில்லை. பி.சி.ஆர் ஆக்ட் எனப்படும் வன்கொடுமை தடுப்புச்சட்டம் எந்த வகையிலும் தலித் மக்கள் மீதான வன்முறையைக் குறைக்கவில்லை. மாறாக அந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த 1995க்குப் பின்னர்தான் கயர்லாஞ்சி சம்பவம், தர்மபுரி கலவரம், மரக்காணம் கலவரம் போன்ற மிகக்கொடூரமான தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றன.

 சட்டம் என்பது சாதிவெறியர்களையும், மதவெறியர்களையும் பாதுகாக்கும் அமைப்பாகவே எப்போதும் இருந்து வருகின்றது. சட்டத்தை நடைமுறைப் படுத்தும் அனைத்து மட்டங்களிலும் சாதி இந்துக்களே கோலோச்சி இருக்கின்றனர். அதிலும் பெரும்பாலும் பார்ப்பனர்களே இருக்கின்றனர். இவர்கள் ஒருபோதும் தலித்துகளுக்கு ஆதரவாக செயல்படாதவர்கள். ஆனால் இவர்களின் மூலம்தான் இதை செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

 பெரியாரும், அம்பேத்கரும் இன்று மிகவும் நமக்குத் தேவைப்படுகிறார்கள். அவர்களின் சிந்தனைகளை அதன் வீரியம் குறையாமல் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. பார்ப்பன சனாதான தர்மத்தை கட்டிக் காப்பாற்றும் அரசு மத்தியில் அமைந்துள்ளது. அதனால் அதன் தேவையும் மிக அதிகமாக உள்ளது.

 சாதிவெறியர்களுக்கு எதிராக வெறும் சட்ட ரீதியான போராட்டங்களை மட்டும் செய்து வெற்றி பெறலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தால் நாம் மிகப்பெரிய பிழையை செய்தவராகிவிடுவோம். சட்டத்தின் மீதான மாயையை தலித் மக்கள் கைவிட வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டம் வழங்குவதாக கூறும் அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே கீழ்மக்களாக நடத்தப்படும் போது சட்டத்தை நாம் மீறித்தான் ஆக வேண்டும். சாதி வெறியர்களுக்கு எதிராக மிகக் கடுமையான போரை தொடுத்துதான் ஆக வேண்டும். அதைச் செய்யாமல் போனால் அம்பேத்கரின் பாடலை மட்டும் அல்ல அவரது பெயரைக்கூட உச்சரிக்க முடியாத நிலைக்குத் நாம் தள்ளப்படுவோம்.

- செ.கார்கி