ltte 398

ஓ முள்ளிவாய்க்காலின் ஆன்மாக்களே! நினைவிருக்கிறதா? உங்களைக் கொல்வதில் எங்களது இந்தியப்படை முன்னணியில் இருந்தது. அதேநேரத்தில் உங்களால் அங்கீகரிக்கப்பட்ட எங்கள் தலைவர்கள் இருந்தார்கள். அவர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள்.

ஆமாம், நீங்கள் ஏன் அவர்களை அங்கீகரித்தீர்கள்? இந்தியாவில் “லாபி” செய்வதற்காக இல்லையா! இந்தியாவில் லாபி செய்ய முடியுமென உங்களை நம்ப வைத்தவர்கள் யார்? உங்களிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள்; அய்ரோப்பிய – அமெரிக்க நாடுகளில் உத்தரவாதமான வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள். இவர்கள்தான் அந்த இராஜதந்திரிகள்.

இதை ஏன் நாங்கள் உறுதியாகச் சொல்கிறோமென்றால், நீங்கள் உங்களது ஆயுதப்போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் எங்கள் நாட்டின் போராளி இயக்கங்களோடு தொடர்பில் இருந்தீர்கள். படிப்படியாக துண்டித்துக் கொண்டீர்கள். அதேநேரத்தில் போராளி இயக்கங்களுக்கு மாறாக ஆளும் வர்க்கத்திலிருந்து தனித்தனித் தலைவர்களை எங்களது நாட்டிலிருந்து உருவாக்கினீர்கள். அவர்களை உங்களது புரவலர்களான புலம்பெயர்ந்தவர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளுக்கு அழைத்து ஒளிவட்டம் பாய்ச்சினார்கள். அவர்களின் செல்வம் அதற்கு ஒத்துழைத்தது.

ஓர் உண்மை தெரியுமா? புலம்பெயர் தமிழர்கள் வளர்த்து விட்டவர்களை இந்திய அரசும் வளர அனுமதித்தது. அதற்குத் தெரியும், இந்தத் தலைவர்கள் ஒருபோதும் இந்திய அரசுக்கு எதிராக ஒரு கல்லைக்கூட தூக்க மாட்டார்கள் என்று. மட்டுமல்லாது அவர்கள் மறந்தும்கூட மக்கள் இயக்கங்கள் கட்ட மாட்டார்கள் என்பதும்.

அந்த தலைவர்கள் இலண்டனுக்குப் பறந்தார்கள்; அமெரிக்கா மற்றும் கனடாவுக்குப் பறந்தார்கள்; இடையிடையே ஈழத்திற்கும்தான். அவர்கள் அங்கெல்லாம் வீர உரையாற்றுவார்கள். அங்கிருந்து சூடு தணியாமல் புனிதப் பட்டத்தோடு தமிழகம் வந்திறங்குவார்கள். அவர்கள் வரும்முன்பே அங்கு நடந்த விழாக்களின் புகைப்படங்கள் சில ஏடுகள் மூலமாக இங்கு தாக்கத்தை உருவாக்கியிருக்கும். உடனடியாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புல்லரிப்பு கூட்டங்கள் நடக்கும்.

இங்கும் அதேபோல அனல்கக்கும் பேச்சுதான். “எனது பேச்சை இங்கிலாந்து பிரதமர் செவிமடுத்து கேட்டார்; நான் பேசும்போது அமெரிக்காவின் செனட் உறுப்பினர் மேடையில்தானிருந்தார்; கனடா நாட்டின் மந்திரியே ஒத்துக்கொண்டார்; உலக நாடுகள் நமக்கு துணையாக இருக்கின்றன..... நான் நமது பாரத பிரதமருக்கு சொல்லிக்கொள்கிறேன், இந்திராவின் இராஜதந்திரத்தோடு நடந்து கொள்ளுங்கள். இல்லையேல் உலகத்தில் தனிமைப்பட்டுப் போவீர்கள்......”

இப்படியான பேச்சுக்களை காரணம்காட்டி இவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதன்மூலம் மேலும் புனிதமடைந்தார்கள். இவர்கள் சுற்றுப்பயணம் செய்தார்கள்; பேசினார்கள்; சிறை சென்றார்கள்; மேலும் மேலும் புனிதரானார்கள்; இன்றும் உயிரோடு இருக்கிறார்கள். நீங்கள் மொத்தமாக செத்துப்போனீர்கள்.

விஷயம் இத்தோடு முடிந்து விடவில்லை. எங்களிடையே லாபி செய்யும் தலைவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் சீனாதான் காரணம் என்கிறார் ஒருவர்; இல்லையில்லை அமெரிக்காதான் என்கிறார் இன்னொருவர்; இந்தியாவும்தான் என முணுமுணுக்கிறார் மற்றவர். எல்லோரையும் இப்போதும் உங்களது புலம்பெயர் முதலீட்டாளர்கள் ஆதரிக்கவே செய்கிறார்கள்.

ஆனால் தோழர்களே! நீங்கள்தான் இல்லை.

- திருப்பூர் குணா