arvind kejriwal and his party members

நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி 67 இடங்களில் வென்று பிஜேபி-ஆர்எஸ்எஸ் கும்பலின் காக்கி டவுசரை கழற்றியது என்பதை விட நார்நாராகக் கிழித்து அம்மணமாக்கி அலைய விட்டிருக்கின்றது. இந்தத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று மோடி அமித்சா கும்பல் தற்கொலை செய்து கொள்ளும் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம். அது எல்லாம் மானமுள்ள மனிதர்கள் செய்வது.

 ஆனால் பிஜேபின் தோல்வி நம்மை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்துகிறது. பிஜேபி சார்பாக போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் நான்கு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் ஆண்மை உள்ளவர்களாக இருந்தும் - குறிப்பாக ராமனைக் கும்பிட்டு விபச்சார விடுதியில் தங்களின் குழந்தைகள் பிறவாமல் இருக்க வரம் வாங்கியவர்களாக இருந்தும் - இப்படி ஒரு நிலைமை ஏன் ஏற்பட்டது என்று தெரியவில்லை!.

5 மாநிலத் தேர்தல்களில் 3 மாநிலங்களில் வென்று தன்னை இனி யாருமே அசைக்கமுடியாது என்ற அகம்பாவத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் வாந்தி எடுத்துக்கொண்டிருந்த அமைச்சர்களும், அடிப்பொடிகளும் கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார்கள். நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக மதவெறியூட்டும் கருத்துக்களைப் பேசுவதும் அதையே ஊடகங்களில் தலைப்புச்செய்தியாக்கித் தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதும் தாங்கள் பேசுவதை ஒட்டு மொத்த இந்துமக்களும் மகிழ்ச்சியோடு அங்கீகரிப்பதாகவும் பிதற்றித் திரிந்த காவிக்கும்பலுக்கு சரியான செருப்படி கிடைத்திருக்கின்றது.

"தமிழ்நாட்டின் மானத்தை நான்தான் காப்பாத்துவேன்” என்ற கவுன்டமணி வசனத்தைப் போல இந்தியாவின் மானத்தை நான்தான் காப்பாத்துவேன் என்று கிளம்பிய மோடியின் இந்த 9 மாத கால ஆட்சியில் ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரமுமே திவாலாகி நடுத்தெருவுக்கு வரும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இதன் மூலம் மோடியின் பில்டிங், பேஸ்மட்டம் அனைத்துமே ரொம்ப வீக் என்ற விசயம் வெளியே கசிந்துகொண்டிருக்கின்றது. மோடியை கடவுளாகப் பார்த்த இந்திய நடுத்தெரு வர்க்கம் “இந்த பைத்தியக்காரனுக்கா ஓட்டுப்போட்டோம்” என்று புலம்பத் தொடங்கி இருக்கின்றது. இப்போதே ஆட்சியை கலைத்துவிட்டு மறுதேர்தலை சந்தித்தால் ஒட்டுமொத்தமாக காவிக்கூடாரமே காலியாகும் என்பது திண்ணம்.

2012 நவம்பர் 26-ல் ஆம் ஆத்மி கட்சியை உருவாக்கிய அரவிந்த் கேஜ்ரிவால் ஒர் என்ஜிஓ என்பது ஊரறிந்த ரகசியம். அவர் நடத்தும் பரிவர்த்தன், கபீர் போன்ற என்ஜிஓக்களுக்கு போர்டுபவுண்டேசனிடம் இருந்து நிதி பெறப்படுகின்றது. மூன்றாம் உலக நாடுகளை கொள்ளையடித்து கூறுபோடும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசியல், பொருளாதார மேலாதிக்கத்தை நிலைநாட்டவும், அதற்க்கேற்ற சித்தாந்தத்தை மூன்றாம் உலக நாடுகளில் உருவாக்கவும் போர்டு, ராக்பொல்லர் பவுண்டேசன்களை அமெரிக்கா ஸ்பான்சர் செய்கின்றது.

நீங்கள் ஒரு விசயத்தை கூர்ந்து கவனித்தால் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பிஜேபி மற்றும் ஆம்ஆத்மியின் முதலமைச்சர் வேட்பாளர்களான கேஜ்ரிவாலுக்கும், கிரண்பேடிக்கும் ஓர் ஒற்றுமையைக் காணலாம். இருவருமே தொண்டு நிறுவனங்கள் நடத்துபவர்கள். கேஜ்ரிவால் எப்படி பரிவர்த்தன், கபீர் போன்ற தொண்டு நிறுவனங்களை நடத்துகிறாரோ, அதே போல கிரண் பேடியும் தொண்டு நிறுவனங்களை நடத்துகிறார். இவர் நடத்தும் தொண்டு நிறுவனத்திற்கு கோகோ கோலாவும், லெஹ்மன் பிரதர்ஸ்-சும் நிதியுதவி செய்கிறார்கள்.

 மேலும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை என்னவென்றால் இருவருமே உலக வங்கியிடம் இருந்து மகசேசே விருது வாங்கி இருக்கிறார்கள். ஆம் ஆத்மியை என்ஜிஓ என்று ஊர் பூராவும் ஊளையிட்ட பிஜேபி, கிரண் பேடியை நிறுத்தி இருப்பதன் பின்னணி என்ன? பிஜேபியின் என்ஜிஓ எதிர்ப்பு சவடால்கள் எல்லாம் திசு பேப்பரைப் போன்றதா? அல்லது எதிர்வரும் காலங்களில் இந்திய அரசில் சூழல் கொந்தளிப்பும், குழப்பமும் நிறைந்த மக்கள் போராட்டங்களால் குலுங்கப் போகின்றது என்பதை முன்உணர்ந்து தலைநகர் டில்லியை தொண்டு நிறுவனங்களின் சோதனைச் சாலையாக மாற்றி ஒரு வெள்ளோட்டம் பார்க்க அமெரிக்காவும், உலக வங்கியும் அவர்களது அடிவருடிகளான இந்திய ஆளும் வர்க்கமும், ஆட்சியாளர்களும் செய்யும் சதியோ என்று யோசிக்க வைக்கின்றது.

களத்திலே மாற்று அரசியல் சித்தாந்தங்கள் அற்ற நிலையில் ஆம் ஆத்மியின் இந்த அபார வெற்றியானது இந்திய போலி ஜனநாயகத்தின் அடுத்த கட்ட நகர்வைக் காட்டுகின்றது. முதலாளித்துவ ஊடகங்கள் இந்த வெற்றியை ஆகா ஓகோ என்று கொண்டாடுவதன் நோக்கம் நொறுங்கி விழுந்து கொண்டிருக்கும் இந்திய போலி ஜனநாயக கட்டமைப்பை ஆம்ஆத்மி போன்ற கட்சிகள் முட்டுக்கொடுத்து நிறுத்தும் என்பதால்தான்.

 இதிலே மிகவும் முக்கியமான விசயம் என்னவென்றால் இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும்(CPM, CPI) ஆம் ஆத்மிக்கு வாழ்த்து சொல்லி இருப்பதும் அவர்களை வரவேற்பதும். ஆம் ஆத்மி ஒரு என்ஜிஓ கம்பெனி என்று தெரிந்தும் அவர்கள் இதை செய்வதும் தற்செயல் ஆனதல்ல. CPI –ன் அதிகாரப்பூர்வமான புத்தக வெளியீட்டகமான நியூ செஞ்சுரி, பிராங்பட் மார்க்சியம் புகழ் எஸ்.வி. ராஜதுரையின் புத்தகங்களை வெளியிடுவதும் வெளியீட்டு விழாவிற்கு நல்லகண்ணு போன்றவர்கள் கலந்து கொள்வதும் அதன் என்ஜிஒ விருப்ப அரசியலையே காட்டுகின்றது. மேலும் CPM-ம் அதிகாரப்பூர்வ புத்தக நிறுவனமான பாரதி, வ.கீதாவின் பின்நவீனத்துவ வாந்திகளை வெளியிடுகின்றது. இந்திய அளவில் இது எப்படி இருக்கின்றது என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் இதை எல்லாம் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது நமக்குக் கிடைக்கும் பிம்பம் இரண்டு போலி கம்யூனிஸ்டு கட்சிகளும் என்ஜிஓக்களால் உள்வாங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதுவே.

அனைத்து தேர்தல் கட்சிகளும் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கிக்கொண்டிக்கின்றன. அதிகரித்துவரும் மக்கள் போராட்டங்கள் அவர்களை அச்சத்தில் ஆழ்த்துகின்றன. மக்களின் போராட்டங்களை ஒடுக்க அரசு இயந்திரம் வரைமுறையின்றி வலுவாக்கப்படுகின்றது. ஆனால் 120 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாட்டில் இது அவ்வளவு எளிதில் சாத்தியமல்ல என்பதை உணர்ந்தே இந்திய ஆளும் வர்க்கங்களால் என்ஜிஓ-க்கள் திட்டமிட்டு அரசியலில் இறக்கி விடப்படுகின்றன. இதை உணராத சாமானிய மக்கள் கேஜ்ரிவால் போன்றவர்களை ஊழல் ஒழிப்பு நாயகனாகவும் நல்லாட்சியைத் தரவந்த ரட்சகராகவும் பார்க்கின்றனர். முதலாளித்துவ ஊடகங்களும் இப்படிப்பட்ட கருத்தியலை உருவாக்குவதையே தங்களின் இருத்தலை காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரே வழியாகப் பார்க்கின்றன.

 மூன்றாம் உலக நாடுகளுக்கு கடன் கொடுத்து, தங்களது கடன் வலையில் அவர்களை நிரந்தரமாக வீழ்த்தி, அந்நாடுகளின் தேசியப் பொருளாதாரத்தை அழித்து, வளங்களை சுரண்டி, அந்நாடுகளின் மக்களை பட்டினியால் சாகடிக்கும் உலக வங்கியிடம் இருந்து விருது வாங்கிய கேஜ்ரிவாலை நாம் நம்ப வேண்டும் என்று ஊடகங்களும் மெழுகுவர்த்தி புரட்சிக் குழுக்களும் நம்மை வேண்டுகின்றன. இவர்கள் என்ஜிஓ அரசியலை ஏற்றுக்கொண்டதால்தான் உலகமயமாக்கலில் இருந்து வெளியேற வேண்டும் என்பதையோ முதலாளித்துவத்தை ஒழிக்க வேண்டும் என்பதையோ பெயரளவுக்குக்கூட ஏற்றுக்கொள்வதில்லை.

இவர்கள் சொல்வதெல்லாம் இதே கட்டமைப்புக்குள் தீர்வு என்பதே. ஆனால் வரலாறும், நடப்பு நிலைகளும் இவர்களின் கொள்கைகளை பிழைப்புவாதிகளின் உளறல் என்றே மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கின்றது. உலகமயமாக்கலையும் முதலாளித்துவத்தையும் ஒழிக்காமல் ஊழலையோ நேர்மையான நிர்வாகத்தையோ ஒருபோதும் உருவாக்க முடியாது.

இந்தியாவில் உள்ள பாராளுமன்ற தேர்தல் ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும் உலகமயமாக்கலையும், தாராளமயமாக்கலையும். தனியார்மயமாக்கலையும் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டவை. இந்த மூன்று கொள்கைகளுக்கும் கள்ளத்தனமாக பிறந்தவை. ஆனால் ஆம் ஆத்மி இந்த மூன்று கொள்கைகளின் நேரடி வாரிசு.

எனவே ஆம் ஆத்மியின் வெற்றி என்பது கொண்டாடப்பட வேண்டிய வெற்றியல்ல; நாம் எச்சரிக்கையடைய வேண்டிய வெற்றி. இல்லாமல் போனால் உலக கார்ப்ரேட் நிறுவனங்களின் வேட்டைக்காடாக இந்தியா மாற்றப்படும். அவர்கள் நடத்தும் என்ஜிஓ க்கள் மூலம் உங்களுக்கு குச்சிமிட்டாயும் குருவி ரொட்டியும் நிச்சயமாகக் கொடுக்கப்படும். ஆனால் இதை நீங்கள் அம்மணத்துடன் நின்றுதான் சாப்பிட முடியும், பரவாயில்லையா?