Modi Amit Shahஆயுள் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை 49% வரை உயர்த்த இந்திய அரசு உத்தேசித்து இருப்பதற்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்று 2.12.2014 அன்று புது தில்லியில், ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கம், நாடாளு மன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டது. இதுவரைக்கும் அனுமதிக்கப்பட்டு உள்ள 26% முதலீட்டில், வெளி நாட்டு ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் செயல்பாடு மன நிறைவை அளிப்பதாக இல்லை என்பது மட்டும் அல்ல; பல வகைகளிலும் மக்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்றும் அச்சங்கம் புள்ளி விவரங்களுடன் சுட்டிக் காட்டி உள்ளது.

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவனம், அகால மரணம் அடைந்தவர்களின் சார்பாகச் செய்யப்பட்ட விண்ணப்பங்களில் 2012 -13 ஆம் ஆண்டில் 97.73% பேர்களுக்கும், 2013 -14 ஆம் ஆண்டில் 99% பேர்களுக்கும் உரிய பணம் அளித்து உள்ளது. இதே காலத்தில் வெளி நாட்டு நிறுவனங்கள் முறையே 7.85% பேர்களுக்கும், 1.12% பேர்களுக்கும் தான் பணத்தை வழங்கி உள்ளன. இப்புள்ளி விவரங்களைச் சுட்டிக் காட்டி உள்ள ஊழியர்கள் சங்கம், நாட்டு மக்கள் ஏமாற்றப் படாமல் இருக்க, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி சார்பைக் கடந்து, ஆயுள் காப்பீட்டுத் துறையில் வெளி நாட்டு முதலீட்டை அதிகரிக்கும் அரசின் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளது.

ஆனால் இந்திய அரசின் அமைச்சரவை 10.12.2014 அன்று, ஆயுள் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 49% வரை உயர அனுமதிக்கும் சட்டத் திருத்தத்தை நாடாளு மன்றத்தின் முன் வைக்க ஒப்புதல் அளித்து உள்ளது. அதன்படி 23.12.2014 அன்று நாடாளுமன்றத்தின் முன் இச்சட்டத் திருத்த முன்வரைவு வைக்கப் பட்டது. இதைக் கடுமையாக எதிர்த்த எதிர்க் கட்சியினர், இச்சட்டத் திருத்தத்தை அமெரிக்க அதிபர் ஒபாபமா இந்தியாவிற்கு வருகை தருவதற்கு முன் நிறைவேற்றத் துடிப்பது ஏன் என்று கேட்டு உள்ளனர். உலகப் பெருமுதலாளிகளின் விசுவாசம் மிக்க அடிமைகளாக நடந்து கொள்வதற்குத் துடியாய்த் துடித்துக் கொண்டு இருக்கும் இந்திய அரசு, தன்னுடைய கயமையை மறைக்க, எதிர்க் கட்சியினரின் மனதில் ஒபாமா முழுமையாக நிறைந்து உள்ளார் என்று நையாண்டித் தனமாக விடை கூறி உள்ளது. அது மட்டும் அல்லாமல் நாட்டு நலனை முன்னிட்டுத் தான் அந்நிய முதலீட்டு வரம்பை 49% ஆக உயர்த்துவதாக ஒரு விளக்கத்தையும் அளித்து உள்ளது.

ஆயுள் காப்பீடு செய்தவர்கள் அகால மரணம் அடைந்தால், காப்பீட்டுத் தொகையை அவர்கள் நியமனம் செய்த வாரிசுதாரர்களுக்கு அளிக்க வேண்டும் என்பது, காப்பீட்டுத் தொழிலின் அடிப்படை அறம் ஆகும். பொதுவாக ஆயுள் காப்பீடு செய்தவர்கள் அனைவரும் அகால மரணம் அடைவது இல்லை. மிகச் சிலர் தான் அகால மரணம் அடைகிறார்கள். மற்ற வழிகளில் பணம் சேமிப்பதில் கிடைக்கும் வட்டியை விட, ஆயுள் காப்பீட்டில் சேமிக்கும் பணத்திற்குக் கிடைக்கும் வட்டி மிகக் குறைவாக இருக்கும். இதனால் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அதிக இலாபமாகக் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதி தான் அகால மரணம் அடைந்தவர்களின் வாரிசுதாரர்களுக்குக் கொடுக்கப் படுகிறது. ஆகவே அகால மரணம் அடைபவர்களின் வாரிசுகளுக்கு உரிய பணத்தைக் கொடுத்த பிறகும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு நிறைய ஆதாயம் இருக்கவே செய்கிறது.

ஆனால் அந்நிய முதலீட்டைப் பொறுத்த வரையில், அவர்களுடைய நாட்டில் அதிக இலாபகரமாக முதலீடு செய்ய வழி கிடைக்காமல் தான் அயல் நாடுகளில் முதலீடு செய்ய அந்நாட்டு முதலாளிகள் முன் வருகின்றனர். அகால மரணம் அடைபவர்களின் வாரிசுகளுக்கு உரிய பணத்தைக் கொடுத்தால், அவர்களுடைய முதலீட்டுக்கு இலாப விகிதம் குறைகிறது. அப்படி என்றால், சந்தைப் பொருளாதார விதிப்படி, முதலீட்டை வேறு தொழிலுக்குத் திருப்பி விட வேண்டும். ஆனால் பொருளாதார நெருக்கடி காரணமாக, முதலீட்டை வேறு தொழில்களுக்குத் திருப்பி விட முடிவது இல்லை. ஆகவே தங்களிடம் காப்பீடு செய்து உள்ளவர்களை ஏமாற்றுவதன் மூலம், தங்களுடைய இலாப விகிதத்திற்கு ஊறு வராமல் பார்த்துக் கொள்கின்றனர்.

இவ்வாறு இந்திய மக்களை ஏமாற்றுவதில் தான் தங்கள் தொழிலை நடத்த முடியும் என்று கட்டாயத்தில் இருப்பவர்களை, இந்தியாவிற்குள் முதலீடு செய்ய அனுமதிப்பதில் தான் இந்தியாவிற்கு நன்மை என்று இந்திய அரசு ஏன் கூறுகிறது?

ஏனெனில் இந்திய அரசு பெருமுதலாளிகளின் அடிமையாக உள்ள அரசு. முதலாளிகள் இலாபம் அடைய வேண்டும், அதிக இலாபம் அடைய வேண்டும் என்பதைத் தவிர, வேறு எதையுமே மனதில் நுழைத்துக் கொள்ள முடியாத அரசு. இவ்வரசு மக்கள் ஏமாற்றப் படுவதைப் பற்றிச் சிறிதும் அக்கறை கொள்ளாது.

நாம் ஏமாற்றப்படாமல் இருக்க வேண்டும் என்றால், இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் முதலாளித்துவ உற்பத்தி முறையைக் காவு கொடுத்து விட்டு, மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் சோஷலிச உற்பத்தி முறையை ஏற்க வேண்டும்.

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 28.12.2014 இதழில் வெளி வந்துள்ளது)