மோடியின் பாரதிய ஜனதா அரசாங்கம் நாட்டுமக்களின் அடிப்படை பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, ஒரு இந்து ராஜ்ஜியத்தைக் கட்டமைக்க விரும்புகிறதோ என்று அச்சமுறுகிற வகையில், நாளும் பொழுதும் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை அறிவித்து அதிர்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, சமஸ்கிருதம், இந்தி திணிப்பு, பகவத் கீதை தேசிய புனித நூல், வீடு திரும்புதல் என்ற பெயரில் மதமாற்றம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுதல், பொது சிவில் சட்டம் கொண்டு வருதல், காஷ்மீருக்கான சிறப்புப் பிரிவு 370ஐ இரத்து செய்தல், என மத்திய பாஜக மந்திரிகளும் ஆர்எஸ்எஸ் தலைவர்களும் திட்டங்களை அறிவித்து மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகின்றனர்.

கல்வியில் சமஸ்கிருதம்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 8 வது அட்டவணை மொழிகளில் ஜெர்மனி இல்லாததால், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் 3வது பாடமாக அந்த மொழியைக் கற்றுத் தரப்படுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்றும், அதை அகற்றிவிட்டு சமஸ்கிருதம் கொண்டு வரப்படும் என்றார், மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி.

smriti irani with subramaniyan swamy

 

ஜெர்மன் அரசாங்கம் 2011ல் மத்திய அரசுடன் போடப்பட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஜெர்மன் மொழியை கேந்திரிய வித்யாலயாக்களில் கற்றுத் தருகிறது. ஜெர்மனியா, சமஸ்கிருதமா என்ற சர்ச்சையால், 500 பள்ளிகளில் ஜெர்மனி பயிலும் சுமார் 65,000 மாணவர்களின் கல்விக்கு ஆபத்து ஏற்பட்டது. கல்வியாண்டின் இடையில் வந்த அறிவிப்பு என்பதால், மாணவர்களும், பெற்றோர்களும் கலக்கமுற்றனர். உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு போனது; மாணவர் நலன் கருதி அவசரம் அவசரமாக, சமஸ்கிருதத்தை அறிமுகப்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தியது. எனினும், ஜெர்மனி மொழியைக் கைவிட்டு சமஸ்கிருதத்திற்கு மாறும் மாணவர்களுக்கு 2014-15 ஆம் ஆண்டில் தேர்வுகள் இல்லையென கேந்திரிய வித்யாலயா நிறுவனம் அறிவித்து, சமஸ்கிருதத்திற்கு மாணவர்கள் மாறுவதை வேகப்படுத்தியுள்ளது.

"சொந்த (நாட்டு) அறிவு சமஸ்கிருதத்தில் தான் இருக்கிறது; சமஸ்கிருதம், இந்திய கலாச்சாரமும் பின்னிப் பிணந்தது. மத்திய அரசுப் பள்ளிகள் சமஸ்கிருத வாரத்தை கடைபிடிக்க வேண்டும்' என கடந்த 30.06.2014ல் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கையை அனுப்பியது. அதற்கு பின்னர், ஆசிரியர் தினத்தை "குரு உத்சவ்' எனப் பெயர் மாற்றி சர்ச்சையையும் உருவாக்கியது. விசுவ இந்து பரிஷத்தின் அசோக் சிங்கால் "சமஸ்கிருதம் இந்த நாட்டின் மொழியாகும்; ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே, எல்லாமே சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு விட்டது' என்கிறார். சமஸ்கிருத பாரதி போன்ற ஆர்எஸ்எஸ் அமைப்புகள், "அனைத்து பள்ளிகளிலும் சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க வேண்டும்' என்கிறது. "சமஸ்கிருத மொழியை முன்னேற்றுவதற்கு, சமஸ்கிருத துறைகள் இல்லாத மத்திய பல்கலைக்கழகங்கள், அத்துறைகளை துவங்குவதற்கு வழிவகைகளை கண்டறியுமாறு, மக்களவையில் ஸ்மிருதி இரானி கேட்டு கொண்டார்.

வங்கி நிர்வாக செயல்பாடுகளில் இந்தி மொழியை பிரபலப்படுத்துவதை நோக்கமாக கொண்டு, அரசு பொதுத்துறை வங்கிகளில் ஏடிஎம் துண்டு சீட்டுகள், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் குறுஞ்செய்திகள் ஆகியவை இந்தி மொழியில் இருக்குமாறு நிதியமைச்சகம் உறுதிபடுத்திட வேண்டும் என்ற சுற்றறிக்கையை உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.

மற்றொருபுறம், இந்திய கல்வியை "இந்திய மயமாக்கும்' முயற்சிகளிலும் மோடி அரசாங்கம் இறங்கிவிட்டது. ‘புனிதமான’ புதிய கல்வி கொள்கையை 2015ல் அறிவிக்கவுள்ளதாக ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் கல்வி அமைப்பான பாரதிய சிக்சன் மண்டல் ஒரு நகலறிக்கையை தயாரித்துள்ளது. நடப்பிலுள்ள 10+2+3 வருட கல்வி முறையை 8+4+3 வருட முறையாக மாற்றியமைப்பது, 8 வருட பள்ளிக் கல்வி காலகட்டத்திலேயே தொழிற்பயிற்சி தருவது, 8ம் வகுப்பு வரை தாய் வழிக் கல்வி, அடுத்த 4 வருடங்களுக்கு சமஸ்கிருதம், அரபிக், கிரேக்கம், லத்தீன் அல்லது ஹீப்ரு போன்ற செம்மொழிகளை பயிற்றுவிப்பது போன்ற மாற்றங்களை கொண்டதாகும்.

சமஸ்கிருதம்- தோற்றம், வளர்ச்சி

உலகமொழிகளில் தொன்மையானவை சீனம், இலத்தீன், கிரேக்கம், அரேபியம், சமஸ்கிருதம், தமிழ் போன்றவைகளாகும். இந்தியாவில் ஆரிய மொழி (வடமொழி) குடும்பமும், திராவிட மொழிகளின் குடும்பமும் இரு பெரும் மொழிக் குடும்பங்களாகும். சமஸ்கிருதம் வடமொழி என்றும் அழைக்கப்படுவது உண்டு. பண்டைய இந்தியாவில் தோன்றிய காணபத்தியம், கௌரம், கௌமாரம், வைணவம், சாக்தம், சைவம் ஆகிய ஆறு மதங்களுக்கும் முதல் நூல்களாகக் கருதப்படும் வேத நூல்கள் சமஸ்கிருதத்திலேயே இயற்றப்பட்டவையாகும். ரிக் வேத நூல்கள் மிகவும் பழமையானவை; மக்களால் ஆக்கப்படாத தெய்வீக நூல்கள் எனப்படுகின்றன. வேத மொழி வைதீக மொழியாகும். கி.மு. 1500 க்கு சற்று முன்னர் இந்தியாவிற்குள் ஆரியர் வருகை நிகழ்ந்திருக்குமென வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். "ஒரு இந்தோ-அய்ரோப்பிய மொழி, இரான் பகுதியிலிருந்து இந்தியாவிற்குள் வந்ததை வேதகால சமஸ்கிருதத்தின் மொழியியல் சான்றுகள் உறுதி செய்கின்றன. ஆனால் ஆரியம் பேசும் மக்களின் தாயகமாக இந்தியா இருந்தது என்பதை அது ஆதரிக்கவில்லை' என்கிறார், இந்திய வரலாற்றின் தலைசிறந்த ஆய்வாளரான ரோமிலா தாப்பர்.

"வேதங்களை இயற்றியவர்களுக்கு எழுத்துக்கலை தெரிந்திருக்கவில்லை' என்கிறார், புகழ் பெற்ற "நாகரீக வரலாறு' நூலின் ஆசிரியரான வில் டு ராண்டு. "ஆரியர்கள் நாகரீக உலகோடு தொடர்பு கொள்வதற்கு முன்பாக எழுத்துக் கலை அறியாதவர்கள்' என்கிறார், "உலக வரலாறு' நூலாசிரியர் எச்.ஜி.வெல்ஸ், பேச்சு மொழியாக மட்டுமே இருந்த வேத மொழி, கி.மு. 4ம் நூற்றாண்டில் பாணினியால் (அஷ்டாத்யாயி) இலக்கணம் வகுத்து தரப்பட்டு செம்மைப்படுத்தப்பட்ட மொழியானது என்பர். நெடுங்கணக்கு (அல்பபெட்) முறையிலமைந்த எழுத்து முறையும், இலக்கண கட்டமைப்பும் தற்போதுள்ள சமஸ்கிருதத்தை உருவாக்கியது. இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள், இவற்றினடிப்படையில் உருவான காப்பியங்கள், செய்யுள், உரைநடை வடிவிலமைந்த பல காவியங்கள், நாடகங்கள் என வளமான இலக்கியங்களையும், வைத்தியம், வானசாத்திரம், கணிதம், சோதிடம், தத்துவம், இசை, நாட்டியம், சிற்பம் என பலவற்றையும் சமஸ்கிருதம் கொண்டுள்ளது. சமஸ்கிருதத்திற்கு சொந்தமான வரிவடிவம் கிடையாது. தேவ நாகரியே பயன்படுத்தப்படுகிறது.

"பிராமி' எழுத்துதான் சமஸ்கிருதம், தமிழ் இரண்டிற்குமே அடிப்படையானதாகும். இதை கல்வெட்டுச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. மெசபடோமியா நாகரிகத்தின் மேற்காசியாவிலிருந்து (ஈரான்) "பிராமி' இந்தியாவிற்கு வந்தது என மொழியியலாளர்கள் கூறுகின்றனர். (மேற்கு ஆசியாவின் பாபிலோனிலிருந்து இங்கு வந்த பொனீசிய வணிகர்கள் தான் எழுத்துக் கலையை இங்கு அறிமுகப்படுத்தினர் எனக் கூறுவோரும் உண்டு). மேற்காசியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த எழுத்துக் கலையே வட இந்தியாவில் பிராமியாகவும், தென்னிந்தியாவில் ‘தாமிழி’யாகவும் உருவானது என்பர். கி.மு. 3ம் நூற்றாண்டில், தொல்காப்பியர் தமிழுக்கான இலக்கணத்தை தொல்காப்பியம் மூலமாக வகுத்துக் கொடுத்தார் என்பர். தமிழ் மொழியின் இலக்கணமும், கட்டமைப்பும் சமஸ்கிருதத்தை காட்டிலும் சிறப்பானது என்கிறார் கால்டுவெல். சமஸ்கிருதத்திற்கு இணையாக, பண்டைய காலத்திலிருந்தே தமிழிலும் வைத்தியம், இசை, நாட்டியம், வானசாத்திரம், சோதிடம், தத்துவம், அறநூல்கள் என பல்வேறு அறிவுத் துறைகளிலும் நூல்கள் வெளிவந்துள்ளன. ஈரடியில் அற நெறிகளை விளக்கும் திருக்குறள் உலகப் புகழ் பெற்றது.

பண்டைய இந்தியாவில், சமஸ்கிருத அறிவு என்பது சமூகத்தட்டினரின் கல்வி அளவுகோலாகவும் கருதப்பட்டது. உயர்சாதி உறுப்பினர்களுக்கு மட்டுமே கற்றுத் தரப்பட்டது. வரலாற்றின் இடைக்காலத்தில், படித்த பார்ப்பனர்கள் மத்தியில், அறிவாளிகளின் தகவல் தொடர்புக்காக எழுதவும் பேசவும் செய்யப்பட்டது. குறைவான எண்ணிக்கையாக இருந்தாலும், பரவலாக வாரணாசி, பைத்தன், புனா, காஞ்சிபுரம் போன்ற இடங்களில் கற்றுத் தரப்பட்டன; விவாத மன்றங்களும் செயல்பட்டன.

19ம் நூற்றாண்டில், பிரிட்டீஷாரால் மேற்கத்திய கல்விமுறை புகுத்தப்பட்ட பின்னர், பாரம்பரிய வழியிலான சமஸ்கிருத படிப்பு இல்லாமல் ஆகியது. சமஸ்கிருதமானது, அய்ரோப்பிய மொழிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் ஆராய்ச்சி மொழியாக மாறியது. மொகலாயர் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர் 1920களில், பிரிட்டிஷ் ஆட்சி காலகட்டத்தில், இந்தியாவிலேயே உருவான "உருது'வுக்கு மய்யமான இடமிருந்தது. உருதுவும் பெரிதும் சமஸ்கிருதமயமாக்கப்படாத இந்தியும் சேர்ந்து உருவான இந்துஸ்தானியை ஆட்சி மொழியாக்கும் முயற்சிகளும் நடைபெற்றன. எப்படியிருந்த போதும் காங்கிரஸ் முதல் பல்வேறு அரசியல் சமூக அமைப்புகள், ஆர்எஸ்எஸ் போன்றவை, ஒரு பொது மொழி, இந்தி அல்லது சமஸ்கிருதம் என்ற கோரிக்கையை வலுவாக எழுப்பின. இந்தி பெருமளவு சமஸ்கிருதமயமாக்கப்பட்டுவிட்டதாலும், அது மக்கள்பேசும் மொழியாக இருந்ததாலும் இந்தி உயர்த்திப்பிடிக்கப்பட்டது. இது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்குவதிலும் பிரதிபலித்தது. இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் ஆதரவான நிலையை அரசியலமைப்புச் சட்டம் மேற்கொண்டது. விதி 351ல் கூறப்பட்டுள்ளது என்னவெனில், ".... இந்தி மொழியை பரப்புவதை ஊக்குவிப்பதும்.... ஒரு ஊடகமாக அம்மொழியை வளர்ப்பதும்.... அதன் சொற்களஞ்சியத்தை வளப்படுத்தும் பொருட்டு முதன்மையாக சமஸ்கிருதத்திலிருந்தும், இரண்டாவதாக பிற மொழிகளிலிருந்தும் சொற்களை எடுத்துக் கொள்வதும் இந்திய ஒன்றியத்தின் கடமையாகும்'; 1949ல், ஒரு தேசிய மொழியாக 8வது அட்டவணையில் சமஸ்கிருதத்தை இணைத்தும் கொண்டது. (சமஸ்கிருதம் உத்தர்கண்ட் மாநிலத்தின் 2வது அதிகாரப்பூர்வ மொழியாகவும் தற்போதுள்ளது).

வாரணாசி சமஸ்கிருத பல்கலை கழகம்(1791) துவங்கி, பல்வேறு இடங்களிலும், சமஸ்கிருத பல்கலை கழகங்கள், கல்வி நிலையங்கள் செயல்படுகின்றன. 1970ல் துவங்கி, மைசூரிலிருந்து ‘சுதர்மா’ என்ற தினசரி செய்திதாள் வெளிவருகின்றது. 1974 முதல் அகில இந்திய வானொலியிலும், பின்னர் தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும் செய்திகள் வாசிக்கப்படுகின்றன. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சமஸ்கிருதத்தை தாய்மொழியாக அறிவித்தவர்கள் 14,135 பேர் மட்டுமே! எனவே, கிராமங்களில் சமஸ்கிருதத்தை அங்குள்ள அனைவரும் பேச, எழுத சிறப்பான முயற்சிகள் மத்தூர் (கர்நாடகா), கனோடா, கபேரன், காட(ராஜஸ்தான்), ஜிரி, மொகட்(மத்திய பிரதேசம்), சியாம்சுந்தர்பூர் (ஒடிசா), பவலி(உ.பி) போன்ற இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய அரசின் மாபெரும் ஆதரவோடு சமஸ்கிருதம் திணிக்கப்படுவதற்கு முயற்சிக்கப்பட்டாலும் எடுபடவில்லை. ஏனென்றால், அது மக்கள் மொழியாக இருக்கவில்லை. அய்ரோப்பாவின் லத்தீனைப் போலவே சமஸ்கிருதமானது மேட்டுக்குடியினருடையதாகும். அது அறிவாளிகள், மதகுருமார்களின் மொழியாகிவிட்டது. வெறும் வழிபாட்டு சுலோகங்களாக மாறி இறந்து போய்விட்டது; கடவுள் மொழியாகிவிட்டது. நவீன பள்ளிக் கல்வி பாடத்திட்டத்திற்கு பொருத்தமற்றதாகிவிட்டது. எனினும் மீண்டும் மீண்டும் திணிப்பதன் மூலமாக சமஸ்கிருதத்திற்கு உயிரூட்ட முயற்சிக்கின்றனர்.

மன்னர் ஆட்சி முதல் மக்களாட்சி வரை சமஸ்கிருத திணிப்பு

brahminவட இந்தியாவில், மவுரியர் ஆட்சியில், கி.மு மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் கால கட்டத்தில் பவுத்தம் தழைத்தோங்கியது; பிராகிருதம்தான் மக்கள் மொழியாகவும் ஆட்சிமொழியாகவும் திகழ்ந்தது. சமஸ்கிருதம் தோன்றுவதற்கு நெடுங்காலத்துக்கு முன்னரே பிராகிருத மொழிகள்தான் இந்தியாவில் வழக்கத்தில் இருந்தன. அசோகனின் கல்வெட்டுகள் பிராகிருத மொழியில்தான் எழுதப்பட்டுள்ளன. மௌரியர் / அசோகன் ஆட்சிக் காலத்தில் சமஸ்கிருதமும், பார்ப்பனரும் ஆட்சியதிகாரத்தில் இருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்தனர். பார்ப்பனர்கள் கிளர்ச்சியால் மவுரியர் ஆட்சியும், பவுத்தமும் வீழ்த்தப்பட்டன. புஷ்ய மித்ரசுங்கர் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டான். சுங்க வம்சம் காலம் தொடங்கி தொடர்ச்சியாக, வட இந்திய மன்னர்கள் சமஸ்கிருதத்தை ஆதரித்தனர். பார்ப்பனர்கள் மன்னர்கள் மீது பெரும் செல்வாக்கை செலுத்தினர். வேத மொழி ஆட்சியதிகாரத்தில் அமர்ந்து கொண்டது. பார்ப்பனிய சட்டத் தொகுப்பான மனுஸ்மிருதி, அதாவது நான்கு வர்ண சாதியமைப்பை தர்மமாக்கிய மனுதர்மம், புஷ்யமிதிரன் அரியணை ஏறிய கி.மு 185க்குப் பிறகுதான் (கி.மு 170-150க்குள்) சுமதி பார்கவா என்பவரால் சமஸ்கிருத்த்தில் எழுதப்பட்டது. தென்னிந்தியாவை ஆட்சி செய்த சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் கூட ஓரளவுக்கு சமஸ்கிருதத்தின் தாக்கத்திற்குள்ளாயினர். கல்வெட்டுகளை சமஸ்கிருதத்திலும், சமஸ்கிருதமும், தமிழும் கலந்தும் எழுதி வைத்துள்ளனர். தமிழகத்தில் கி.பி. 17ம் நூற்றாண்டில், நாயக்கர் ஆட்சிக் காலத்தில் சமஸ்கிருதம் கொடி கட்டிப் பறந்தது. நாயக்க மன்னர் ஆட்சிக் காலத்தில், அரசாங்க செலவில் பத்தாயிரம் பார்ப்பன மாணவர்கள் வேதம் பயின்றார்கள்; அவர்களில் ஒருவர் கூட பிற சாதியினர் இல்லை என பாதிரியார் ராபர்ட் தி நோபிலி 22.11.1610ல் கடிதம் எழுதினார். (பார்க்க. மதுரை நாயக்கர் வரலாறு, பக்.257, சத்தியநாத அய்யர்)

தமிழகத்தில் 1930களில் கூட, கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதத்தின் மேலாதிக்கம் நிறுவப் பட்டிருந்தது. மருத்துவ படிப்புக்கு கூட மொழிப்பாடமாக சமஸ்கிருதம் இருந்தது. கல்லூரிகளில் சமஸ்கிருதம் போதிப்பவருக்கு உயர்ந்த மதிப்பு மரியாதை, சம்பளம் (தமிழ் ஆசிரியருக்கு மாத சம்பளம் ரூ.75, சமஸ்கிருத புரொபசருக்கு மாதம் ரூ.350) வழங்கப்பட்டது. 1937ல் சென்னை மாகாணத்தில் பொறுப்பேற்ற ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை இந்தியை கட்டாயமாமக்குவதிலும், பரப்புவதிலும் ஈடுபட்டது. 6,7,8,ம் வகுப்புகளில், 125 பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கப்படும் என்ற அறிவிப்புக்கு எதிராக இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் துவங்கின. நீதிக் கட்சி போராட்டங்களை முன்னெடுத்தது. இக்காலகட்டத்தில்தான் திராவிட இயக்கத்தின் பெரும் ஆளுமையாக பெரியார் உருவானார். மற்றொரு புறம், சமஸ்கிருத-இந்தி எதிர்ப்பு சைவத்தை தமிழாக முன்னிறுத்திய வேளாளர் மேட்டுக் குடியினரின் பார்ப்பனர் எதிர்ப்பு அரசியலாகவும் உருவெடுத்தது.

1950 களில், சுதந்திர இந்தியாவின் காங்கிரஸ் மத்திய அரசானது, இந்தியை பரப்புவதற்கு திட்டங்களை தீட்டியது, அமல்படுத்தியது. 15 ஆண்டு காலத்திற்கு ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக இருக்கும் என அரசியலமைப்புச் சட்டம் நிர்ணயித்த காலக்கெடு முடிந்த பிறகு, நேருவின் வாக்குறுதி மீறப்பட்டது. இந்தியை மத்திய ஆட்சி மொழியாக்கும் முயற்சிகள் தீவிரமாயின. 1964-65ல் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தமிழகத்தில் தீவிரமடைந்தன. திமுக போராட்ட களத்தில் முன்னின்றது. கிளர்ச்சிகளை நசுக்க துணை இராணுவப்படைகளை காங்கிரஸ் அரசாங்கம் இறக்கியது. ஆரியர்- திராவிடர் பெருங்கதையாடலும், வட இந்திய ஆரியர்- தென்னிந்திய திராவிடரின் பண்பாட்டை அழிக்கும் நடவடிக்கை எனவும் வலுவாகப் பிரச்சாரம் உருவானது. போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, இந்தி பேசாத மக்கள் விரும்பாதவரை ஆங்கிலம் இரண்டாவது ஆட்சி மொழியாகத் தொடரும் என்று அறிவித்தார்.

சமஸ்கிருதம் மீது ஏன் அச்சம்?

சமஸ்கிருத திணிப்பை, எதிர்த்து இந்திய அரசியலில் தொடர்ந்து குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இது சமஸ்கிருத மொழி மீதான அச்சமா? தங்களது மொழிகளை அழித்துவிடும் என்ற பயமா? சமஸ்கிருதத்தில் உள்ள படைப்புகளின் உள்ளடக்கம் மீதான எதிர்ப்பா? தமிழைத் தவிர இந்தியாவின் பல மொழிகளும் பெரிதும் சமஸ்கிருதமயமாக்கப்பட்டுள்ளன. திராவிட மொழிகளிலும் கூட தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் சமஸ்கிருத கலப்பு அதிகமாக உள்ளது. ஒவ்வொரு மொழியிலும் தத்தமது மொழித் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும் என்ற கவலை பரவலாக உருவானது. எனவேதான் இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் தமிழகம் தீவிரமாகப் பங்கேற்றது. எனினும், சமஸ்கிருதத்தில் படைக்கப்பட்ட வேதங்களும், சமஸ்கிருதத்தை வலியுறுத்தும் ஆர்எஸ்எஸ் மதவாதப் பிரச்சாரகர்கள் முன் வைக்கும் கருத்துக்களும் அதிகமாக அச்சமூட்டுகின்றன. வேதங்கள் பார்ப்பனியத்தை உயர்நிலையில் வைத்து சாதிய சுரண்டல் முறையை சட்டமாக்கிய மனு தர்மத்தை வலியுறுத்துவதும், வேறுபட்ட மதங்களை, பண்பாடுகளை அழிக்க முயற்சிப்பதும், "ஒரு மொழி, ஒரு மதம், ஒரு பண்பாடு, ஒரு தேசம்' என்ற ஆர்எஸ்எஸ் தத்துவம், பிரச்சாரம் இந்திய நாட்டின் பன்மைக்கும், சனநாயகத்திற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் புனித நூலாக கருதப்படுகிற "நாம் (இந்துக்கள்) அல்லது நமது தேசத்தின் வரையறை' என்பதை 1939ல் எழுதிய குருஜி கோல்வாக்கர் ( அவ்வமைப்பின் தத்துவகர்த்தா, 1938-1973 வரை தலைவர்) சொன்னார், "..... ஆனால், ஒரே மொழி தானிருக்கிறது அது சமஸ்கிருதம். மற்ற இந்த பல மொழிகளும் வெறும் மாற்று வடிவங்களேயாகும்; சமஸ்கிருத தாய் மொழியின் குழந்தைகளாகும். சமஸ்கிருதம் கடவுள்களின் மொழியாகும். இமய மலை துவங்கி தெற்கிலுள்ள சமுத்திரம் வரை, கிழக்கிலிருந்து மேற்கு வரையுள்ள அனைத்து மொழிகளுக்கும் பொதுவானதாகும்.....' (பக்கம் 13). "சிந்தனைக் கொத்து' என்ற மற்றொரு நூலில் தெரிவிக்கிறார். "மொழிப்பிரச்சனைக்கு ஒரே தீர்வுதான் இருக்கிறது. சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வருகின்ற காலம் வரை, நமது வசதிக்காக, இந்திக்கே நாம் முன்னுரிமை தந்து ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வேண்டும்'(பக். 113). 1952 டிசம்பரில் நடைபெற்ற பாரதிய ஜனசங்க (பிஜேபியின் தாய் கட்சி) மாநாட்டில் டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி தலைமையில் தீர்மானம் போடப்பட்டது. "நாடு முழுவதும் சமஸ்கிருதத்தை கட்டாய பாடமாக்க வேண்டும், அதே சமயத்தில் சமஸ்கிருத எழுத்துக்களை பிரபலப்படுத்த வேண்டும்; எல்லா இந்திய மொழிகளுக்கும் சமஸ்கிருத எழுத்துக்களையே பொது எழுத்தாக அறிவிக்க வேண்டும். உபநிடதங்கள், பகவத்கீதை, ராமாயணம், மகாபாரதம் ஆகியவைகளே இந்தியாவின் இலக்கியங்கள்! ஹோலி, தீபாவளி, ரக்ஷபந்தன் ஆகியவைகளை மட்டுமே தேசிய பண்டிகைகளாக அறிவிக்க வேண்டும்.'

மனு-கோல்வாக்கர்-அம்பேத்கர்

"நாம் அல்லது நமது தேசத்தின் வரையறை "நூலில் கோல்வாக்கர், உலகிற்கே மாபெரும் சட்டத்தை முதன் முதலாக வழங்கியவர் மனு என்றும், "...... உலகின் அனைத்து மக்களும் இந்துஸ்தானத்திற்குச் சென்று, அந்த பூமியின் மூத்தோராகப் பிறந்த பார்ப்பனரின் காலடி தொழுது தங்களுடைய கடமைகளை கற்றுக் கொள்ள.......'' மனு வழிகாட்டுவதாகவும் தெரிவிக்கிறார். (பக். 55, 56). மனு தர்மம் சமஸ்கிருதத்தில் தான் இயற்றப்பட்டது.

மனுஸ்மிருதி என்னவெல்லாம் சொல்கிறது. "பார்ப்பனருக்கு சேவை செய்வது மட்டுமே ஒரு சூத்திரனுக்கு மிகச் சிறந்த பிறவிக் கடமையாகும்.' (பக். 123) ... பார்ப்பனர்கள் அவர்களுக்கு (சூத்திரர்களுக்கு) மீதமான உணவு, பழைய துணிகள், அவர்களுடைய தானியங்களின் புழுத்துப்போன பகுதி, தேய்ந்து போன வீட்டுப் பாத்திரங்கள் ஆகியவற்றைத் தர வேண்டும். (பக். 125).....தனக்குத் திறமையிருந்தாலும் ஒரு வேலையாள் (சூத்திரன்) செல்வத்தை உருவாக்கிக் கொள்ளக் கூடாது (பக். 129). சாதியிலிருந்து வெளியேற்றப்பட்டோர், தீண்டத்தகாதவர்களுக்கான ஏவல் பணிகளையும், பெண்கள் பற்றிய கேவலமான மதிப்பீடுகளையும், அவர்கள் சந்திக்க வேண்டிய இழிவான நெறிகளையும், மனிதாபிமானம் அற்ற நடைமுறைகளையும் மனு தர்மம் பட்டியலிடுகிறது. (விரிவாக படிக்க: அத்தியாயம் 10, டோனிகர் மற்றும் ஸ்மித் தொகுத்த "மனுவின் சட்டங்கள்' பெங்குயின் வெளியீடு, 1991)

சாதி ஒழிப்பிற்காக, தான் வாழ்நாள் முழுவதும் போராடிய அம்பேத்கர், இந்துமத நான்கு வருண கோட்பாடு, சாதியமைப்பும் தீண்டாமையும், இந்து மதம்-பார்ப்பனர் சூழ்ச்சிப்பற்றி விரிவாக எழுதியுள்ளார். பேசியுள்ளார். ரிக் வேதம் பற்றி விமர்சிக்கிறார். ".....ரிக் வேதம் சாதியை அங்கீகரிக்கிறது; சாதியின் தோற்றத்தை விளக்குகிறது..... பார்ப்பனங்களும் சாதியை அங்கீகரித்தன..... வேதம் சாதியை போதிக்கிறது.... ஒவ்வொருவரும் சாதியை ஏற்றுக் கொள்ளவேண்டும். ஏனென்றால் அது தெய்வீக உண்மையாகும்..... கடவுளால் தான் சாதி படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை அவன் (சாதாரண இந்து) நம்புகிறான்...... (நூல் தொகுதி 5, டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர் எழுத்துக்களும், பேச்சுக்களும்).

சமஸ்கிருதமும்-பார்ப்பனரும்

இந்தியாவின் வரலாற்று காலம் நெடுக சமஸ்கிருத திணிப்பு, சமஸ்கிருதமயமாக்குதல் காணப்படுவது, ஏன்? பெரியார் சொன்னார்: "சமஸ்கிருதம் பரவினால்தான் பார்ப்பான் வாழ முடியும்; சுரண்ட முடியும்; நம்மை கீழ் சாதி மக்களாக்க முடியும். அவன் பார்ப்பனனாக இருக்க முடியும், சமஸ்கிருதத்தின் நலிவு-பார்ப்பன ஆதிக்கத்தின் நலிவு. அதை உணர்ந்துதான் ஒவ்வொரு பார்ப்பனரும் சர்வ ஜாக்கிரதையாக காரியம் ஆற்றுகின்றார்.” (விடுதலை 15.12.1960)

சமஸ்கிருத மொழியும், அதில் உருவான வேதங்களும், மனுதர்மமும், தத்துவங்களும் நான்கு வருண சாதியமைப்பை வலியுறுத்தி உயர் பீடத்தில் பார்ப்பனர்களையும், கீழ் மட்டத்தில் சூத்திரர்களையும் வைத்தது. பார்ப்பனர்களுக்கு சொத்துக்களையும், இகலோக இன்பங்களையும் சமூகத்தில் அந்தஸ்தையும், அரசியலில் ஆதிக்கத்தையும் ஏற்படுத்தியது. ஆட்சியைப் பாதுகாக்க, மக்களைச் சுரண்ட அரசர்களுக்கு பார்ப்பனர்கள் தேவைப்பட்டனர். தங்களது சுகபோக வாழ்க்கையை பாதுகாக்க, அந்தஸ்தை தக்க வைக்க பார்ப்பனர்களுக்கு அரசர்கள் தேவைப்பட்டனர். சமஸ்கிருத மொழி வாயிலாக சொல்லப்படும் மத நம்பிக்கைகளும், சட்டங்களும் தேவைப்பட்டன. உலக வரலாற்றில் இதுகாறும் சமஸ்கிருதத்தை தாய்மொழியாக பாவித்த ஒரே சாதியினர் பார்ப்பனர்களே! இந்திய மக்களை ஆள்வதற்கும், சுரண்டுவதற்கும், பல்வேறு கால கட்டத்தில் ஆட்சியாளர்களுக்கும் ஒரு பொது மொழியின் அவசியம் இருந்தது. உயர்குடி மொழியான சமஸ்கிருதம் தொடர்ந்து முயற்சிக்கப்படுகிறது. அது மக்கள் மொழியாக இல்லாததால் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியை தேர்வு செய்தன. ஆர்எஸ்எஸ் தனது நிகழ்ச்சி நிரலாக மீண்டும் சமஸ்கிருதத்தை கையிலெடுக்கிறது.

கல்வியில் காவிக் கண்ணோட்டம் முறியடிக்கப்பட வேண்டும்

மோடி அரசாங்கம் எழுப்புகிற சர்ச்சையான ‘எந்த மொழியில் கற்பது’ என்பது கல்வியின் பிரச்சனையில்லை; ‘எப்படி சிந்திப்பது’ என்பதே நமது கல்வி முறையின் அணுகுமுறையாக இருக்க வேண்டும். பல மொழிகளை பேசும் இந்தியாவில், மொழி சமத்துவம் நிலவ வேண்டும். மாணவர், பெற்றோர் விருப்பத்தினடிப்படையில் தாய் மொழியையும் பிற மொழிகளையும் பயின்றிடும் சுதந்திரம், உரிமை வேண்டும். தமிழும், பிற மொழிகளும் வட இந்திய மாணவர்கள், பயிலுவற்கு வழிமுறைகளை உருவாக்கிட வேண்டும். அடிப்படைக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை உயர்த்துவதும், அனைவருக்கும் கல்வியை வழங்குவதும், பள்ளிக் கல்வியை வலுப்படுத்துவதும், அறிவியல் பூர்வமான கல்விமுறையை உயர்த்திப் பிடிப்பதும், தாய்மொழியோடு, ஜனநாயப் பூர்வமான தேர்வாகப் பிற மொழிகளையும் கற்றிடும் கல்விக் கொள்கை வேண்டும். சமஸ்கிருத திணிப்பும், கல்வியை காவிமயமாக்கும் ஆர்எஸ்எஸ் சதித்திட்டங்களும் முறியடிக்கப்பட வேண்டும். "பல மொழிகள், பல மதங்கள், பல கலாச்சாரங்கள்- ஒரு நவீன தேசம்' என்ற புதிய சமூகம் படைக்கப்பட வேண்டும்.

- சந்திரமோகன்