பழங்குடி மக்கள் காலம் காலமாக மலைகளிலும், காடுகளிலும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். மனித சமூகம் நாகரிகம் அடைந்த பொழுது, கூடவே தோன்றிய சுரண்டலையும், ஏமாற்று வித்தையையும் வெறுத்து, ஒதுங்கி வாழ ஆரம்பித்தவர்கள் இன்றும் பழங்குடி மக்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். புராதனப் பொதுவுடைமைச் சமூகம் உடைந்து அடிமைச் சமூகமாகவும், நிலப் பிரபுத்துவச் சமூகமாகவும் இருந்த வரையில், இப்பழங்குடி மக்கள் மீது தாக்குதல் ஏதும் நடக்கவில்லை. நாகரிக சமூகங்களும் பழங்குடி சமூகங்களும் தனித் தனியாக வாழ்ந்து கொண்டு இருந்தன. ஆனால் முதலாளித்துவச் சமூகம் தோன்றிய பிறகு, சந்தை விரிவாக்க நடவடிக்கைகள் பழங்குடி மக்களின் வாழ்வை அழிக்க ஆரம்பித்தன. உலகின் பல பகுதிகளில் பழங்குடி சமூகங்கள் அழிக்கப்பட்டன.

tribesஇந்தியாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி மெதுவாக இருந்த வரையில், பழங்குடி மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படவில்லை. மண்டல் குழுவின் பரிந்துரைகளில் சின்னஞ்சிறு பகுதியை அமல்படுத்த வி.பி.சிங் அரசு முனைந்த உடன், பார்ப்பனர்களுக்குத் தங்கள் ஆதிக்கம் தாக்குதலுக்கு உள்ளாகி விடுமோ என்ற கிலி பிடித்து விட்டது. உலகமயம், தனியார்மயம், தாராளமயம் எனும் கூக்குரல்களுக்கு இதுவரை செவி சாய்க்காது இருந்த இந்திய பார்ப்பன ஆதிக்க வர்க்கம் அவற்றைப் பிற்படுத்தப்பட்ட மக்களின் எழுச்சியைத் தடுக்கும் வரப்பிரசாதமாகக் கண்டு கொண்டது. உடனே அக்கூக்குரல்களைத் தாரக மந்திரமாக ஏற்று இந்தியாவில் விரைவான முதலாளித்துவ வளர்ச்சிக்கு வழி கோலியது.

முதலாளித்துவப் பொருளாதார விதிகளின்படி, சந்தையில் விற்பனையாகக் கூடிய பண்டங்களைத் தான் உற்பத்தி செய்ய முடியுமே ஒழிய, மக்களுக்குத் தேவைப்படும் பண்டங்களை உற்பத்தி செய்ய முடியாது. இதைச் செய்யும் பொழுது காடுகளிலும், மலைகளிலும் உள்ள கனிமங்கள் "தொழில் வளர்ச்சி"க்குத் தேவைப்படுகின்றன. உடனே அரசு அவற்றை வெட்டி எடுக்க முனைகிறது. அப்படிச் செய்யும் போது, அங்கு வாழும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்கள் பறி போகின்றன. பழங்குடி மக்கள் தங்கள் வாழ்வாதாரங்கள் பறி போவதை எதிர்த்துப் பேராடுகின்றனர்.

இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, பழங்குடி மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கலாம். ஆனால் அவ்வாறு செய்தால், அதற்கு ஆகும் செலவு, கனிமங்களை வெட்டி எடுக்கும் தொழிலுக்கான முதலீட்டில் சேர்க்கப்பட வேண்டி இருக்கும். அப்படிச் செய்வது அத்தொழிலில் இடப்படும் மூலதனத்திற்குக் கிடைக்கும் இலாப விகிதத்தைக் குறைத்து விடும்; சில சமயங்களில் இலாபமே இல்லாமல் போய்விடும்.

ஆகவே வெறும் மயக்கு மொழிப் பேச்சுகளின் மூலம், பழங்குடி மக்கள் தங்கள் இடங்களை விட்டுப் போக வைக்க அரசு முயல்கிறது. இந்த மயக்கு மொழிப் பேச்சுகள் உண்ண உணவையும், உடுக்க உடையையும், இருக்க இடத்தையும் தர முடியாததால், பழங்குடி மக்கள் வாழ்வாதாரம் கோரி, போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். உடனே அரசும் அவர்களுக்குத் தீவிரவாதிகள் என்று பெயரிட்டு, அவர்களை அழிக்க முயல்கிறது. உண்மை என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியாத நகர்ப்புற வாசிகள் "தீவிரவாதத்தை ஒழிக்க" முனையும் அரசுக்கு முழு ஆதரவு அளிக்கிறார்களோ இல்லையோ, நிச்சயமாக எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த வரையில் இந்நிலைமையே இருந்தது. பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு இது மேலும் அதிகரித்து இருக்கிறது. காடுகள் பாதுகாப்புச் சட்டம் 1980 (Forest Conservation Act 1980) இன் படி காட்டு நிலங்களைப் பிற பயன்பாடுகளுக்குத் திருப்பி விடக் கூடாது என்ற விதியைச் சற்றுத் தள்ளி வைத்து விட்டு, மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்காகத் தளவாடங்களையும், துருப்புகளையும் கொண்டு செல்ல, சாலைகளை அமைப்பதற்கும், அதற்குத் தேவைப்படும் கட்டிடங்களைக் கட்டுவதற்கும் 2.9.2014 அன்று இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து உள்ளது. மேலும் 3.9.2014 அன்று ஜெய்ப்பூரில் காவல் துறைப் பயிற்சி நிறுவனங்களின் 33வது தேசியக் கருத்தரங்கில் பேசிய உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், தான் உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்த பொழுது, மாவோயிஸ்டுகளை வேட்டையாட, காவல் துறைக்கு "முழுமையான சுதந்திரம்" அளித்து இருந்ததாகவும், காவல் துறையினரும் அச்சம் இன்றி வெகு "சுதந்திரமாகச் செயல் பட்டதாகவும்" அது போலவே இப்பொழுதும் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

நாட்டில் பசியாலும், பட்டினியாலும், நோய் நொடிகளாலும் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளுக்காக அக்கறை கொள்ள முடியாத அரசு, முதலாளிகள் தங்கள் பணத்தை இலாபகரமாக முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காகப் பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்துக் கொண்டு இருப்பதைச் சிறிதும் சொரணை இல்லாமல் பார்த்துக் கொண்டு இருக்கும் நகர்ப்புற மக்களே! இதே அரசு உங்கள் வாழ்வாதாரங்களைப் பறிக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 28.9.2014 இதழில் வெளி வந்துள்ளது)