மௌலிவாக்கம் கட்டிட இடிபாட்டில் கொல்லப்பட்ட (இதுவரை பதினெட்டு!) கட்டுமானத் தொழிலாளர்களின் மரணத்திற்கு, அக்கட்டிட உரிமையாளர், பொறியாளர்கள் உள்ளிட்ட ஆறு பேரின் மீது மட்டும் குற்றம் சாட்டி இக்கொடூர சம்பவத்திலிருந்து அரசு தப்ப முடியாது. அறநூற்று ஐம்பது ஏக்கர் பரப்பளவு கொண்ட போரூர் ஏரியையும் அதன் பல வடிகால் வாய்க்கால்களையும் தனியார் ஆக்கிரமிப்பாளர்களிடம் சத்தமில்லாமல் கையளித்த இரு திராவிடக் கட்சிகள், அவர்களின் அரசு இயந்திரம் மற்றும் ஆட்சியாளர்களும்தான் நடந்த இக்கோர விபத்துக்கு பொறுப்பாளிகள்.

moulivakkam building

எனவே இதை விபத்து என்பதை விட கொலை என்றுதான் சொல்லவேண்டும். மேலும் இடுபாட்டில் சிக்கி மரணமடைந்த தொழிலார்களின் குடும்பத்துக்கு வழங்கும் நிவாரணத் தொகையை ஏற்றிக்கொடுத்து இப்பெருவிபத்தை சுமூகமாக முடிக்க முனைப்பு காட்டுகிற அரசு, வெள்ள வடிகால் பகுதியில் கட்டிடம் கட்ட அனுமதியளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுவது ஏன் என்பதை புரிந்து கொள்வதில் சிக்கல் ஒன்றும் இல்லை.

ஏனெனில், 650 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக பரந்து விரிந்திரிந்த ஏரியை, ரியல் எஸ்டேட் கொள்ளையர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கூட்டணியானது (ஏரி நிலத்தை) பட்டா போட்டு விற்ற வரலாற்றை போரூர்வாசிகள் நன்கறிவர்.

ஏரி நீரை குளிக்க, துணி துவைக்க பயன்படுத்தி வந்த உழைக்கும் மக்களை மிரட்டி சட்டம் போட்டுத் தடுத்த அரசு இயந்திரத்திற்கு இப்பெரும் ஏரி ஆக்கிரமிப்புக் கொள்ளையர்கள் குறித்து கள்ள மௌனம் சாதிப்பது ஏன்? அப்படி நடவடிக்கை எடுக்கும் பட்சத்திலும் உழைக்கும் நடுத்தர வர்க்கத்தின் மீதே அரசு இயந்திரம் தனது பலாத்காரத்தை பிரயோகிக்கிறது.

அதாவது ஏரி ஆக்கிரமிப்புப் பகுதியில் கட்டப்பட்ட வீடுகளை இடிக்க போக்லனை தூக்கிக்கொண்டு கிளம்பும் அதிகாரிகள், ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் பெரு முதலாளிகளின் கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்?

முதலில் நடவடிக்கை எடுத்தால், ஏரி நிலத்தைப் பட்டா போட்டுக்கொடுத்த ரியல் எஸ்டேட்தரகர்கள், பட்டா வழங்கியஅதிகாரிகள், அவ்வீடுகளுக்கு அரசின் மின்சார இணைப்பு, குடிநீர்இணைப்புவழங்கிய அதிகாரிகள் போன்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும். பின் இக்கொள்ளைக்கெல்லாம் தலைமைப் பாத்திரம் வகிக்கும் (பெரு முதலாளிகள் சார்பான ) தனது தலையிலேயே மன்னைப்போட்டுக் கொள்ள எந்த அரசு விரும்பும்?

 முன்னதாக வங்கிப்பணியில் கிடைத்த ஊய்வுதியத்தைக் கொண்டு மதுரையில் கட்டுமானத் துறையில் இறங்கிய மதுரையைச் சேர்ந்த பிரைம் சிருஷ்டி கட்டுமான நிறுவன உரிமையாளர் மனோகரனும், அவரது மகன் முத்துவும்மட்டுமே கைது செய்யப்பட, இவர்களோடு கூட்டணி கொண்ட வடமாநில ரியல் எஸ்டேட் அதிபர் குறித்து அப்பகுதிவாசி மக்களுக்கு தெரிந்த விவரங்கள் கூட அரசுக்கு தெரியாதா என்ன?

இதற்கு முன் இவ்வுரிமையாளரால் மதுரையில் கட்டிமுடிக்கப்பட்ட நான்கடுக்கு அடுக்குமாடிகளைக் கட்ட உழைத்த மதுரையைச் சேர்ந்த கட்டுமானத் தொழிளார்கள் மற்றும் ஆந்திர கட்டுமானத்தொழிலாளர்களை சென்னைக்கு அழைத்துவந்து பதினோரு மாடி கட்டி லாபம் பார்த்த (இக்கட்டிடத்தின் அனைத்து பிளாட்களும் விற்பனை ஆகிவிட்டது!) லாபவெறி கொண்ட முதலாளிகள்+அரசு அதிகாரிகளின் பேராசைப் பசிக்கு அரைவயிற்றுக்கும் கால்வயிற்றுக்கும் அல்லல்பட்டு உழைக்கும் மக்கள் உயிரிழப்பது ஆற்றமுடியாது ரணத்தை ஏற்படுத்துகிறது. இவ்வளவு நடந்தும் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ளாத கொலையாளிகள், இடி விழுந்ததால்தான் கட்டிடம் விழுந்தது என நா கூசாமல் பொய் கூறுவது எவ்வளவு பெரிய ஆயோக்கியத்தனம்.

நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டிருக்கும் இடி தாங்கிகள், சுற்றுவட்டாரத்தில் உள்ள பத்து கிலோ மீட்டர் பரப்பளவில் விழும் இடியை தாங்கும் திறனுடன் பொறுத்தப்பட்ட நிலையில், இடி தாங்கியதால்தான் கட்டிடம் வீழ்ந்தது என்கிற கட்டிட உரிமையாளரின் வாதம் அப்பட்டமான பொய்யாகும்.

மேலும் தற்போது தமிழகத்தில் மட்டும் சராசரியாக மாதத்திற்கு பத்து முதல் பதினைந்து கட்டிடத் தொழிலாளிகள் பலியாவது காதும் காதும் வைத்தவாறு சுமூகமாக முடிக்கப்படுவதை நாம் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.பெரும்பாலும் ஒப்பந்தக்கார்களால் வெளிமாநிலத்திலிருந்து அழைத்து வரப்பட்ட தொழிலாளர்கள் குறைவான கூலிக்கு நாள் முழுக்கவே வேலை செய்கின்றனர்.

பணியிடங்களில் உயிர்ப்பாதுகாப்பு சாதனம் ஏதுமின்றி நிர்வாகத்தின் லாப வெறி நோக்கிற்காக உழைக்கும் இப்புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளிகளின் பணியிட மரணங்கள் குறித்து பெரும்பாலான தமிழ் தேசிய கட்சிகளும், இடதுசாரி இயக்கங்களாலும் வாய் திறப்பதில்லை.

சென்னையில் நடைபெறுகிற மெட்ரோ ரயில் பணி, பல்லாயிரக்கணக்கில் நடைபெறும் இதர பெரு வணிக, கல்வி நிறுவன கட்டுமானப்பணி என அனைத்து கட்டுமானம் சார்ந்த தொழில்களில் மட்டும் கிட்டத்தட்ட ஐந்தாயிரத்திற்கு மேற்ப்பட்ட வெளிமாநில ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆடு மாடுகள் போல மேய்க்கப்பட்டு கொட்டும் மழையிலும் வெயிலிலும் சக்கையாக பிழியப்படுகின்றனர்.

இவர்களுக்கான அமைப்புகளோ, இவர்களுக்காக போராட எந்த அமைப்புகளும் இல்லாத மோசமான சூழலே இன்று தமிழகத்தில் நிலவுகிறது. கட்டுமானத்துறையாகட்டும், பட்டாசுஆலையாகட்டும் இதர ஆலைகள் அனைத்துமாகட்டும் பணியிடங்களில் ஏற்படுகிற தொழிலாளர் பலிக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது லாப வெறிபிடித்த நிர்வாகத்தின் செயல்பாடும் அவர்களின் நலன்களுக்காக இயங்கும் அரசுமே காரணம். !

மேலும் விபத்தில் மரணமடைகிற தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்குவதின் வாயிலாக இப்பெரும் சிக்கலை மடைமாற்றம் செய்வதில் ஆர்வம் செலுத்துகிற அரசு, சிக்கலின் மூல வேரை ஆய்ந்து நடவடிக்கை எடுக்கத் தவறுகிறது. போராடும் சில தொழிலாளர் அமைப்புகளும் நிவாரணத்தொகை குறித்த பேரத்திலேயே சமரசம் செய்துகொள்வதுதான் உச்சகட்ட வேதனை. இது முழுக்க முழுக்க ஆளும் வர்க்கத்திற்கு சார்பான வாதமே அன்றி, தொழிலாளர் மரணத்திற்கான நீதியை ஒருபோதும் பெற்றுத்தருவதில்லை.

மீதமிருக்கும் இரண்டு அடுக்கு கான்க்ரீட் குவியல்கள் அகற்றும் பணித் தொடர்வதால் வரும் ஓரிரு நாட்களில் உண்மையான உயிர்ப்பலி குறித்த விவரம் தெரியவரும். தவறு, அரசு நிச்சயம் உண்மையான உயிர்ப்பலி குறித்த தகவல்களைத் தெரிவிக்காது. இந்நிலையில் போரூர் ஏரியின் மற்ற மூன்று வடிகால் கால்வாய்களையும் மண் மூடி அடைத்து கட்டப்பட்ட கட்டிடங்களின் நிலை கேள்விக்குறிதான்.

மேலும், இன்னும் விழாமல் அருகில் நிற்கும் கட்டிடம் மற்றொரு விபத்தை எதிர்நோக்கி இருப்பதாகவேத் தெரிகிறது! இந்நிலையில், கூவம் ஆற்றின் கரையோரம் கட்டப்பட்ட அம்பா ஸ்கை வாக், அடையாற்றை அடைத்து கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புகள், கொளத்தூர் ரெட்டேரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பெருங்கட்டிடங்கள், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட எண்ணிலடங்கா நிறுவனங்கள், குடியிருப்புகள், குறிப்பாக கடல்சார் ஆராய்ச்சி கட்டிடம், பள்ளிக்கரனையில் கட்டப்பட இருக்கிற (மதில் சுவருடன் நிற்கிற) தமிழாராய்ச்சி நிலையம் என அனைத்து ஆக்கிரமிப்பிற்கும் அரசு சொல்லும் விளக்கம்தான் என்ன?

இல்லை அரசால்தான் பதில் சொல்ல இயலுமா? சென்னை மாநகரம் முழுவதிலும் இருக்கிற/ நீராதாரப் பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் அனைத்து நிலையங்களை மீட்கவும், உள்மாநில/வெளிமாநில ஒப்பந்த கட்டுமான தொழிலாளர்களை ஒன்றிணைத்தும் நீண்ட நெடிய மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாமின்று உள்ளோம்.