தமிழ்நாட்டில் நிலவிவரும் பல்வேறு சமூக சிக்கல்களுக்கும் சமூக ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக தமிழ்நாடு மக்கள் கட்சியும் அதன் மாணவர் இயக்கமும் தொடர்ச்சியாக முகம் கொடுத்து சமரசமற்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் தமிழ்நாடு மாணவர் இயக்கத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் இளையராஜா அவர்கள் முன்நின்று பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். ஈழப்போராட்டம், சாதிய சிக்கல்கள், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் என்று அனைத்து போராட்டங்களுக்கும் மாணவர்களை அணிதிரட்டி அரசியல்படுத்தி பல போராட்டங்களை செய்து வருபவர். ஈழ விடுதலைக்காக கடந்த மார்ச் மாதம் தொடங்கிய மாணவர் போராட்டத்தில் முன்னணி சக்தியாக நின்றவர்; தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக இருந்து ஆளுநர் மாளிகை முற்றுகை, இராணுவத்தள முற்றுகை, வருமானவரி அலுவலகம் முற்றுகை, இந்திய வானொலி நிலைய முற்றுகை என இந்திய அரசுக்கு எதிரான வலிமையான போராட்டங்களை முன்நின்று நடத்தியவர். அது மட்டுமின்றி மாணவர்களின் அடிப்படைத் தேவைக்காகவும் அடிப்படை உரிமைக்காகவும் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக மாணவர்களை திரட்டி போராடி வருகிறார்.

illaiyaraja_606

இந்நிலையில் தற்சமயம் இனக்கொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது, காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இனக்கொலை இலங்கை அரசை நீக்க வேண்டும், இனக்கொலை நாட்டில் நடக்கும் மாநாட்டில் இந்திய அரசு பங்கெடுக்கக் கூடாது என்று முன்நின்று முதன்மை முழக்கங்களை முன்வைத்து தோழர். தியாகு அவர்கள் சென்னையில் 'வெற்றி அல்லது வீரச்சாவு' என்ற முழக்கத்துடன் இன்று 13வது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதே கோரிக்கைகளை முன்வைத்து தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு தமிழகம் தழுவி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சென்னையில் தோழர் இளையராஜா தலைமையில் பல்வேறு கல்லூரிகளில் வகுப்பறை புறக்கணிப்பு போராட்டமும் 11.10.2013 வெள்ளியன்று ரயில் மறியல் போராட்டமும் நடைபெற்றது. இன்னும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.

இந்நிலையில் தோழர். இளையராஜா அவர்களை நந்தனம் கல்லூரியில் நிர்வாகம் 20 நாள் இடைநீக்கம் செய்தது மட்டுமல்லாது கல்லூரி வளாகத்தில் கால்வைத்தால் கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளது. கல்லூரி முதல்வரின் இந்த தொடர் அடாவடிப் போக்கை கண்டிக்கிறோம். காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிராக தமிழ்நாட்டில் நடந்த முதல் போராட்டம் தமிழ்நாடு மாணவர் இயக்கம் ஒருங்கிணைப்பில் தோழர் அப்துல் தலைமையில் நந்தனம் கல்லூரியில் நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டமாகும். அதன் தொடர்ச்சியாக தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு, தோழர் இளையராஜா தலைமையில் இரயில் மறியல் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்தப் போராட்டங்களின் முன்னணி சக்தியாக தோழர் இளையராஜா இருப்பதால் அவர் மீது அடக்குமுறையை செலுத்துவதன் வாயிலாக காமன்வெல்த்திற்கு எதிரான மாணவர் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்று தமிழக அரசும், இந்திய அரசும், உளவுத்துறையும் பகல் கனவு காண்கின்றன. தோழர் இளையராஜாவின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்யாவிடில், அதற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுப்போம். மாணவர்களின் அரசியல் உரிமையைக் காப்போம்.

ஒடுக்குமுறை போராட்டங்களை வென்றதாக சரித்திரமில்லை

மாணவப் போராட்டங்களும் மக்கள் போராட்டங்களும் மதில் போன்ற அரசுகளையும் மண் மண்ணாக்கும்

இந்திய அரசை மறிப்போம், இந்திய இலங்கை கூட்டை முறிப்போம்

- அருண்சோரி, தேசிய செய்தித் தொடர்பாளர், தமிழ்நாடு மக்கள் கட்சி (9003154128 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)