பாராளுமன்ற கூட்டத் தொடரில் பரப்பாக பேசப்பட்டது, பாராளுமன்றத்தை செயல்படவிடாமல் முடக்கியது, இந்தியாவில் உள்ள உழைக்கும் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது, இந்திய பிராந்திய பெருமுதலாளிகளையும், அன்னிய முதலீட்டாளர்களையும் அதிர்வுக்குள்ளாக்கியது, அதுதான் பணவீக்கம் என்னும் பெரும்பூதம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.80 என்ற பெரும் சரிவை அடைந்தது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு

ஆண்டு மதிப்பு
1950 - 60 ரூ, 4.76
1970 - 80 ரூ, 11.36
1980 - 90 ரூ, 16.22
1990 - 2000 ரூ, 35.43
2000 - 2005 ரூ, 45.31
2005 - 2013 ரூ. 68.80

உலகமயமாக்கல் பொருளாதார கொள்கை இந்திய நாட்டை வல்லரசாக மாற்ற போகிறது. பெரும் பொருளாதார வளர்ச்சியை எட்ட போகிறது என்று அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்து குரல் கொடுத்து கொண்டிருக்க, உலகமயமாக்கல் விளைவு பணவீக்கம்தான் என்று முகத்தில் அறைந்தாற் போல் உண்மை வெளிப்பட்டுள்ளது. இப்பணவீக்கத்திற்கான உண்மை காரணங்களை நாம் ஆய்ந்தறியும் போது பல்வேறு உண்மைகளை நம்மால் உணரமுடியும்.

உண்மை காரணங்களை நாம் அலசுவதற்கு முன் - தினமணி நாளிதழில், (ஆகஸ்டு, செப்டம்பர் 2013) தொடர் கட்டுரையாக வெளிவந்த எஸ். குருமூர்த்தியின் கட்டுரைகள் மூலம் தினமணி நாளிதழ் நம் தமிழக மக்களுக்கும், இந்திய துணைகண்டத்தில் உள்ள மக்களுக்கும் முன் வைக்கும் தீர்வை பரிசீலிப்போம்.

எஸ். குருமூர்த்தி தனது கட்டுரையில் பணவீக்கத்திற்கான காரணங்களாக முன்வைத்துள்ள கருத்துக்களை தொகுத்துப் பார்ப்போம்.

1. உள்நாட்டு உற்பத்தியை அழித்த மூலதன பொருள்களின் இறக்குமதி

மூலதன பொருள் இறக்குமதி அதிகரிப்பை விளக்கும் அட்டவணை.

 வரிசை எண்

 ஆண்டு

டாலர் மதிப்பில்

1

2004 - 05

2550 கோடி டாலர்

2

2005 - 07

3800 கோடி டாலர்

3

2007 - 08

4700 கோடி டாலர்

4

2008 - 09

7000 கோடி டாலர்

5

2009 - 10

7200 கோடி டாலர்

6

2010 - 11

6600 கோடி டாலர்

7

2011 - 12

7900 கோடி டாலர்

8

2012 - 13

9900 கோடி டாலர்

9

2013 - 14

9150 கோடி டாலர்

மேற்கூறிய புள்ளிவிவரம் படிப்படியாக மூலதன பொருள் இறக்குமதி அதிகரிப்பை காட்டுகிறது. இப்படி மூலதன பொருள் இறக்குமதி 79 சதவீதம் அதிகரித்த அதே வேலை தொழில் துறை உற்பத்தி குறியீடு ஆண்டுதோறும் சராசரியாக 11.5% இருந்த நிலைமாறி படிப்படியாக குறைந்து 5 ஆண்டுகளில் 5% க்கும் கீழேபோனது. 2012 - 2013 -ல் 2.9% மாக மாறியது.

மூலதனப்பொருள் இறக்குமதி அதிகரிப்பதற்கேற்ப தொழில்துறை உற்பத்தி அதிகரிக்காமல் 11.5% இருந்து 5%மாக குறைந்து 56% சரிவை கண்டது. அதாவது மூலதனப்பொருள் இறக்குமதி 79 சதவீதம் அதிகரித்த போதும், தொழில்துறை உற்பத்தி 56 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

2. கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு :

கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு 9 ஆண்டுகளில் அரசு அளித்த வரிவிலக்கு 30 லட்சம் கோடியாகும்.

2008-ல் அறிவிக்கப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் வரிவிலக்கு ஆண்டு சராசரி 2.6 லட்சம் கோடியாகயிருந்தது. 2008-லிருந்து வரிவிலக்கு இரண்டு மடங்காக உயர்ந்து ஆண்டிற்கு 5 லட்சம் கோடியானது.

ஐ.மு. கூட்டணி ஆட்சியின் 9 ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை 16 லட்சம் கோடி அதே வேலை வரிவிலக்கு 25 லட்சம் கோடியாகும். வரிவிலக்குகளை திரும்ப பெறுவோம் என பிரதமர் மன்மோகன்சிங், ப, சிதம்பரமும் 2005-லேயே உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை செய்யவில்லை. ஊக்குவிப்பு வரிவிலக்கு காரணமாக நிதி பற்றாக்குறை 12 லட்சம் கோடியாக அதிகரித்தது. இதன்காரணமாக 2011 - 12ல் பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டது.

3. சுங்கவரி குறைப்பு :

2007 - 08ல் சுங்கவரி மூலம் கிடைத்த வருவாய் 1 லட்சம் கோடியாகும். இதுவே 2009 -10ல் 0.83 லட்சம் கோடியாக குறைந்தது. அதேவேலை 2007-08-ல் 8.4 லட்சம் கோடியாக இருந்த இறக்குமதி 2009-10ல் 13.74 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது 2007-லிருந்து 2010-க்குள் இறக்குமதி 56% அதிகரித்த அதேவேலை சுங்கவரி 17% குறைந்துள்ளது.

2008-ல் உற்பத்தி வரி மற்றும் சுங்க வரி குறைந்ததன் காரணமாக மூலதன பொருள்களின் இறக்குமதி வெள்ளமென அதிகரித்தது. இதனால் ஏற்கனவே கூறியது போல் உள்ளூர் மூலதன பொருள் உற்பத்தியை மூலதன பொருள்களின் இறக்குமதி பாதித்ததுடன் உள்நாட்டு மொத்த உற்பத்தியையும் குறைத்தது.

வரிவிலக்கானது நிதி பற்றாக்குறையை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தியதுடன் நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்க செய்து ரூபாயை மரணப்படுக்கையில் தள்ளியது.

4. இறக்குமதி அதிகரிப்பு

நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பு

587 மில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலதனம் பொருள்களால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்றில் ஒரு பங்கு சரிந்தது. இறக்குமதி செய்யப்பட்ட இந்த மூலதனப் பொருட்களில் பெரும்பாலானவற்றை இந்தியாவிலேயே தயாரிக்க முடியும். நாம் தயாரித்து கொண்டிருந்த பொருட்களே கூட இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது,

2001 - 02-ல் சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை 1 மில்லியன் டாலராக (1 மில்லியன்= 1 கோடி) இருந்தது. 2012 - 13இல் 175 பில்லியன் டாலராக அதிகரித்தது. அதாவது நாம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதைவிட 175 பில்லியன் டாலர் அதிகமாக சீனா இந்தியாவிற்கு இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள பொருட்களின் மதிப்பைவிட மூன்று மடங்கு மதிப்புள்ள பொருட்களை சீனாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

தங்கம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள்

கடந்த 9 ஆண்டுகளில் தங்கத்தின் இறக்குமதி 402 - பில்லியன் டாலர், ஏற்றுமதி 251 - பில்லியன் டாலர் நிதி பற்றாக்குறை 151 - பில்லியன் டாலர் ஆகும். பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி 804 பில்லியன் டாலர் ஏற்றுமதி 279 - பில்லியன் டாலர் நிகர பற்றாக்குறை 525 - பில்லியன் டாலர்.

நடப்பு கணக்கு பற்றாக்குறை அட்டவணை

1 1991 - 2001 3500 கோடி 
2 2001 - 2005 2700 கோடி
3 2005 - 2007 10,000 கோடி
4 2007 - 2008 16,000 கோடி
5 2008 - 2009 28,000 கோடி
6 2009 - 2010 28,000 கோடி
7 2010 - 2011 48,000 கோடி
8 2011 - 2012 78,000 கோடி
9 2012 - 2013 89,000 கோடி

தினமணி - குருமூர்த்தியின் தீர்வு

முதலாளிகளிடம் கையேந்துவதோ அல்லது வெளியிலிருந்து கடன் வாங்குவதோ இதற்கு தீர்வல்ல, இது புற்றுநோய் புண்ணுக்கு மருந்து தடவுவது போன்றது என்று கூறும் குருமூர்த்தி தீர்வாக கீழ்வருவனவற்றை முன்வைக்கிறார்.

(1) நிதி பற்றாக்குறையில் ஆண்டுதோறும் 2 லட்சம் கோடி கூடுதலாக சேரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு மசோதாவை செயல்படுத்துவதை இப்போதைய பொருளாதார நெருக்கடி தீரும் வரையில் ஒத்திவைக்க வேண்டும். இது பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் அரசு உண்மையான அக்கறையுடன் உள்ளது என்பதை இது உணர்த்தும். முதலீட்டாளர்கள், சர்வதேச நிதி நிறுவனங்களுக்கும் சற்று நம்பிக்கை ஏற்படும். அவசர, அவசரமாக முதலீடுகளை திருப்பி எடுத்து கொண்டு போக எத்தனிக்க மாட்டார்கள்.

(2) வரிவிலக்கு அளித்து மறைத்து வைக்கப்பட்டுள்ள தங்கத்தை வெளிக்கொணர வேண்டும். ஆபரணம் செய்யபடாமல் மறைத்து வைக்கப்படுள்ள தங்கம் 3 ஆயிரம் டன் முதல் 6 ஆயிரம் டன் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இதை வெளிக்கொணர தகுந்த வட்டி விகிதத்துடன் தங்கத்தின் மீது கடன் பத்திரங்களை அரசு வெளியிட வேண்டும். இதன் மூலம் 200 பில்லியன் டாலர் கிடைக்கும்.

அதே அளவு தொகை அன்னிய செலாவணி கையிருப்பும் சேர்ந்தால் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் எதிர்பாராதவகையில் இந்திய பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்க இயலும்.

தினமணி மற்றும் குருமூர்த்தியின் முதலாளித்துவ விசுவாசம்

குருமூர்த்தியின் திவாலாகும் இந்திய பொருளாதாரம் பற்றிய ஆய்வு மற்றும் அதற்கான தீர்வின் மீதான எமது கருத்துக்களை முன்வைப்பதற்கு முன் குருமூர்த்தியின் தினமணி கட்டுரையில் சொல்லி யுள்ள மிக முக்கிய கருத்துக்களை இங்கே வாசகர்கள் கவனிக்க வேண்டும்.

“அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் (உலக மயமாக்கல் எனது வார்த்தை) இந்திய பொருளாதாரத்தை பலப்படுத்தவோ, பத்திரப்படுத்தவோ பயன்படாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொழிப்பதற்குத்தான் பயன்பட்டன.

கடந்த 5-ஆண்டுகளில் பெரிய தொழில் நிறுவனங்கள் 4.8-லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளன. ஊக்குவிப்பு நடவடிக்கையின் பயனில் பெரும் பகுதியை பெரிய தொழில் நிறுவனங்கள் விழுங்கிவிட்டன என்பதுதான் உண்மை.

வரிவிலக்கானது (கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு) நிதி பற்றாக்குறையை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தியதுடன் நடப்பு கணக்கு பற்றாக்குறையையும் அதிகரிக்க செய்து ரூபாயை மரணப்படுக்கையில் தள்ளியது”.

மேற்கூறிய குருமூர்த்தியின் வாக்குமூலம் நமக்கு ஒன்றை தெளிவாக்குகின்றது. “உலகமயமாக்கல் கொள்கையால் பயன் அடைந்தவர்கள் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான்” என்ற அப்பட்டமான உண்மை. மேலும் பணவீக்கம் உலகமயமாக்கலின் தவிர்க்க முடியாத விளைவு என்பதையும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும். இதற்கான ஆதாரங்களை குருமூர்த்தியே வேறு வழியில்லாமல் பல இடங்களில் சுட்டிகாட்டுகிறார்.

திவாலாகும் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கான வழியை முன்மொழியும் குருமூர்த்தி அதேவேளை, அப்பட்டமான தனது முதலாளித்துவ விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார்.

முதலாளிக்கான வரிவிலக்கு ஆண்டுதோறும் 5லட்சம் கோடி (சுங்கவரி குறைத்தது இல்லாமல்) என்றும், 9ஆண்டு கால ஜ.மு.கூட்டணி ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை 16லட்சம் கோடி அதே வேலை வரிவிலக்கு 25-லட்சம் கோடி என்றும், இவ்வரி விலக்கை திரும்ப பெற மன்மோகன் சிங், ப.சிதம்பரமும் 2005-ஆம் ஆண்டிலேயே உறுதி அளித்தும், அதை இன்றுவரை செய்யவில்லை என்றும் உண்மையை கூறும் குருமூர்த்தி இதை பற்றி தனது தீர்வில் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் மௌனம் சாதிக்கிறார்.

உணவு பாதுகாப்பு திட்டத்திற்காக ஒதுக்கப்படும் 2-லட்சம் கோடியை நிறுத்த வேண்டும் என்று அருள்பாலிக்கிறார். என்ன ஒரு அறிவார்ந்த வழி. 90%-க்கு மேல் உள்ள மக்கள் ஓட்டாண்டி ஆனாலும், பட்டினியால் செத்தாலும் பரவாயில்லை முதலாளிகளுக்கு வரிவிலக்காக ஆண்டொன்றுக்கு அளிக்கும் 5-லட்சம் கோடியை (உணவு பாதுகாப்புக்கு 2-லட்சம் கோடிதான்) பற்றி வாய்த்திறக்காமலே அதை தொடர ஆசிர்வதிக்கிறார். உணவு பாதுகாப்புக்கு ஒதுக்கும் நிதியை நிறுத்த சொல்லும் இவர் வரிவிலக்கை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்த வில்லையே ஏன்?

உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு ஒதுக்கும் 2-லட்சம் கோடியை நெருக்கடி தீரும்வரை நிறுத்தினால், அச்செயல் முதலீட்டாளர்களுக்கு, சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று அரசுக்கு ஆலோசனை சொல்வதன் மூலம் தனது முதலாளித்துவ விசுவாசத்தை பட்டவர்த்தனமாக்கும் குருமூர்த்தி, இந்திய மக்களின் நம்பிக்கை பற்றி கொஞ்சமும் கவலைபடவில்லை, ஏன் என்றால் முதலாளிகளும், முதலாளித்துவ அறிஞர்களும் மக்களை இயந்திரங்களாகவே பார்க்கின்றனர்.

ஒரு புறம் உலகமயமாக்கல் கொள்கை இந்திய பொருளாதாரத்தை பலப்படுத்தவில்லை, கார்ப்ரேட் நிறுவனங்கள் கொழிக்கத்தான் உதவியது என கூறும் குருமூர்த்தி, எதற்காக கார்ப்ரேட் நிறுவனங்களிடம் நம்பிக்கை பெறவேண்டும் என்று கூறுகிறார்.

மூலதன இறக்குமதி 79% அதிகரித்த நிலையில் உள்நாட்டு உற்பத்தி 56% சரிந்தது என்ற உண்மையை ஒப்புகொள்ளும் குருமூர்த்தி எதற்காக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்கிறார்.

முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட வரிவிலக்கு (ஆண்டுக்கு 5-லட்சம் கோடி) பற்றி குருமூர்த்தி எப்படி வாய்திறக்கவில்லையோ, அதுபோல் சுங்கவரி குறைப்பு குறித்தும் தனது தீர்வில் வாய்திறக்க மறுக்கிறார். அவரே கூறியது போல் 2007-லிருந்து 2010-க்குள் இறக்குமதி 56% அதிகரித்தும், சுங்கவரி 17% குறைந்துள்ளது. இதை உடனடியாக திரும்பபெற்று வருவாயை பெருக்க ஆலோசனை சொல்ல ஏன் மறுக்கிறார்? ஏன் என்றால் இதனால் பாதிக்கப்படுபவர். மக்கள் அல்ல முதலாளிகள்தான். குருமூர்த்தியும், தினமணியும் வழிபடும் முதலாளிகள் என்பதால்தான்.

மேலும் இந்தியாவின் சந்தை சீனாவில் கையில் என்று கூறும் குருமூர்த்தி, சீனாவின் இறக்குமதியால் இந்திய துணைகண்டத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான சந்தை பாதிக்கிறது என்றும் இந்தியா சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதை விட பலமடங்கு சீனா இந்தியாவிற்கு இறக்குமதி செய்கிறது என்றும். நிகர பற்றாக்குறை 525-மில்லியன் டாலர் என்றும் இதனால் இந்தியாவின் எதிரி நாடான சீனா லாபம் அடைகிறது. ஆனால் நட்பு நாடுகளான அமெரிக்காவோ, இங்கிலாந்தோ, ஜெர்மனியோ ஜப்பானோ, பிரான்சோ, ரசியாவோ லாபம் அடையவில்லை என்கிறார். குருமூர்த்திக்கு இருக்கும் கவலை இந்திய நாடு பற்றியதா? அல்லது இந்தியாவை சீனா மட்டுமே கொள்ளையடிக்கிறதே? அமெரிக்கா, இங்கிலாந்து.... நாடுகள் எல்லாம் இந்திய சந்தையை தனக்காக்கி கொள்ளையடிக்கவில்லையே என்ற கவலையா?

சீனா மட்டுமல்ல எந்த நாடும் இந்திய நாட்டின் சந்தையை கைபற்றவிடக்கூடாது என்ற கருத்தை குருமூர்த்தி ஏன் முன்வைக்கவில்லை? அமெரிக்கா பொருட்கள் இந்திய சந்தையை எவ்வாறு ஆக்கிரமித்து வருகிறது என்று குருமூர்த்திக்கு தெரியாதா?

மேலும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்திற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக அமெரிக்கா நாடு உள்ளது என்று குருமூர்த்திக்கு தெரியாதா? தெரிந்தும் மறைக்கும் முக்கிய காரணத்தை வாசகர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும்.

அமெரிக்காவில் ஏற்பட்ட தொடர்ந்த பொருளாதார நெருக்கடி காரணமாக 5ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க அரசானது முதலாளிகளை காப்பாற்ற இரண்டு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. 1. பணபுழக்கத்தை அதிகப்படுத்த அதிகமாக பணத்தை அச்சடித்து வெளியிட்டது. 2. பணபத்திரத்திற்கான வட்டி விகிதத்தை குறைத்தது. இதனால் நட்ட நிலைக்கு தள்ளப்பட்ட முதலாளிகள் தங்கள் பணங்களை இந்தியா போன்ற நாடுகளில் பங்குகளாகவும் மற்ற. மற்ற துறைகளிலும் முதலீடு செய்தனர்.

அமெரிக்க உலக மேலாதிக்கத்தை எதிர்கொள்ள பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்க நாடுகள் தங்களுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த பிரிக்ஸ் (ஙிஸிமிசிஷி) என்ற கூட்டை நிறுவிக் கொண்டுள்ளது.

இதன் பலத்தை அழிக்க அமெரிக்கா தடாலடியாக ஒரு முடிவை அறிவித்தது. அதாவது பணபத்திரத்தின் வட்டி விகிதத்தை அதிகப்படுத்தியது. இதனால் இந்தியா உள்ளிட்ட (பிரிக்ஸ்) நாடுகளில் முதலீடு செய்திருந்த முதலாளிகள் தங்கள் முதலீடுகளை வாபஸ் வாங்கி அமெரிக்காவிலேயே முதலீடு செய்தனர். இதனால் தான் திடீரென்று இந்தியாவில் பணவீக்கம் ஏற்பட்டது. ஏற்கனவே நாம் கூறிய முக்கிய காரணங்களோடு இதுவும் அடிப்படை காரணம் என்றாலும் அமெரிக்க முதலாளிகளின் லாபியாக செயல்படும் தினமணி, குருமூர்த்தி வகையறாக்கள் இதில் மௌனம் சாதிக்கிறார்கள்.

அமெரிக்கா ஏற்கனவே 1997-ல் மேற்கூறிய உத்தியை பயன்படுத்தி ஜப்பான் பொருளாதாரத்தை வீழ்த்தியது. அச்சமயத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் அமெரிக்காவின் இந்த உத்தியால் பொருளாதார வீழச்சியடைந்தன. இன்றுவரை ஜப்பான் அப்பொருளாதார வீழ்ச்சியிலிருந்து முழுமையாக மீட்சியடைவில்லை.

அமெரிக்கா தனது மேலாதிக்கத்திற்காக பொருளாதார உத்தியை எப்படி கையால்கிறதோ அதுபோல் இராணுவ தலையீட்டையும் தொடர்ந்து கையாண்டு வருகிறது. ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், தற்போது ஆசியா என்று அமெரிக்கா இராணுவ தலையீடு தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

இத்தகைய அமெரிக்கா தான் இந்தியாவின் நட்பு நாடு என்று நட்பு பாராட்டுகிறார் அமெரிக்க லாபி கும்பலின் ஆதரவான குருமூர்த்தி. மேலும் சீனா போல் இந்திய அரசு நேரடியாக தலையீட்டு பணமதிப்பை கட்டுப்படுத்தாமல் சந்தையே பணமதிப்பை தீர்மானிக்க அனுமதித்தும் பணவீக்கத்திற்கு ஒரு முக்கிய காரணம் என்ற உண்மையையும் வெளிப்படுத்த மறுக்கிறார் குருமூர்த்தி.

உலகமயமாக்கல் கொள்கையால், முதலாளித்துவ பொருளியியல் கொள்கையால்தான் இந்திய பொருளாதாரம் திவாலாகிறது என்ற உண்மையை மறைக்க, அடிப்படையை மறைக்க உணவு பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட 2-லட்சம் கோடியை நிறுத்தி வைப்பது, தங்கத்தை வெளிக்கொணர்வது என்று நாடகமாடுகிறார் குருமூர்த்தி. இதுகூட இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அல்ல முதலீட்டாளர்களை கவர்ந்திழுத்து மேலும் திவாலாக்கவும், சர்வதேச நிதிநிறுவனத்திடம் நம்பிக்கை பெற்று பிச்சை கேட்டு கடன் வாங்கி இந்திய மக்களை மேலும் கடன்காரர்கள் ஆக்கவும்தான்.

வாஜ்பாய் (பி,ஜே,பி) ஆட்சிக்கு பிறகுதான் இதெல்லாம் நடந்தது போல் திரும்ப, திரும்ப சொல்வதன் மூலம் பி.ஜே.பி ஆட்சி இதற்கான தீர்வை வழங்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். இந்துத்துவா பற்றாளரான குருமூர்த்தி ராஜீவ்காந்தியின் புதிய பொருளாதார கொள்கை, புதிய ஜவுளிக்கொள்கை, புதிய கல்வி கொள்கை தொடங்கி இன்று வரை மத்திய மற்றும் மாநிலத்தில் ஆட்சி செய்யும் எந்த கட்சியும் உலக மயமாக்கல் பொருளாதார கொள்கையை முழுமையாக எதிர்ப்பவர்கள் இல்லை என்பது தான் துரதிஷ்டமான உண்மை. ஏன் எனில் பெரும்பாலும் முதலாளித்துவ கட்சிகளே பலம்வாய்ந்த அரசியல் கட்சிகளாக உள்ளனர். (சி.பி.ஜ, சி.பி.ஜ(எம்) உட்பட)

குருமூர்த்தியின் தொடர் கட்டுரைகள் தினமணியில் வந்து கொண்டிருந்த போதே தினமணியானது தனது விசுவாசத்திற்குரிய முதலாளிகளின் சார்புக்கருத்துக்கு வலுச்சேர்க்க “மத்திய அரசு மட்டுமே பொறுப்பில்” என்ற தலைப்பில் மன்மோகன்சிங் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை தினமணி வெளியிட்டது.

“எதிர்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தை முடக்குவதால், பொருளாதாரச் சீர்திருத்தம் சம்மந்தப்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை. இதுதான் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதித்துள்ளது. இதுவே அனைத்து பொருளாதார பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைகிறது.” (அழுத்தம் என்னுடையது)

“முன்பு அவ்வளவாக கடுமை இல்லாத பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இனி மானியத்தை குறைப்பது, காப்பீடு, ஓய்வூதியத் துறையில் சீர்திருத்த நடவடிக்கைகளை வேண்டியுள்ளது. இது எளிதானது அல்ல அரசியல் கருத்தொற்றுமை காணவேண்டியது மிகவும் அவசியம் இதற்கு நாடாளுமன்றத்தில் உலகத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்”.

மேற்கூறியதிலிருந்து, மன்மோகன்சிங்கின் கருத்துகள் திவாலாகும் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த தடையாக உள்ளது. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுவதற்கு கடுமையான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாதுதான் என்பதாகும். என்னே! மன்மோகன் சிங்கின் முதலாளித்துவ விசுவாசம்.

• முதலாளிகளுக்காக உழவர்களின் நிலங்களை அரசே கையகப்படுத்தி, உழவர்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தி சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்தது கடுமையான நடவடிக்கை இல்லையாம்.

• தொழிலாளர்கள் பல வருடங்கள் போராடி பெற்ற உரிமைகள் அனைத்தையும் தள்ளுபடி செய்து (குறிப்பிட்ட நாட்கள் வேலை செய்தவரை நிரந்தர தொழிலாளர் ஆக்குவது, தொழிற்சங்கம் வைத்து கொள்ளும் உரிமை, நியாயமான கூலி, தொழிற்சாலை பாதுகாப்பு விதிகள் ...........) முதலாளிகளின் சுரண்டலுக்காக தொழிலாளர்களை இயந்திரத்தோடு இயந்திரமாக்கி, முதலாளிகளின் கடுமையான சுரண்டலை எதிர்த்து முனுமுனுக்கக்கூட உரிமையில்லாமல் செய்தது கடுமையான நடிவடிக்கை இல்லையாம்.

• முதலாளிகள் கனிமவளங்களை கொள்ளையடிப்பதற்காக பழங்குடி மக்களை அவர்கள் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தியது கடுமையான நடவடிக்கை இல்லையாம்.

• முதலாளிகளுக்காக நகர்புறங்களை அழகுப்படுத்துகிறோம் என்று அங்கு வாழும் மக்களை வேரோடு பிடுங்கியெடுத்து வெளியேற்றியது கடுமையான நடவடிக்கை இல்லையாம்.

• வால்மார்ட் போன்ற பெரிய வணிக நிறுவனங்களுக்கு கம்பளம் விரித்து வரவேற்று சிறுவணிகர்களை வணிகத்தை விட்டே விரட்டியடிப்பது கடுமையான நடவடிக்கை யில்லையாம்.

• தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை (தஞ்சையை) முதலாளிகளின் வேட்டை காடாக்கி (மீத்தேன் எரிவாயு, கச்சா எண்ணெய் எடுப்பதற்காக) விவசாயத்தை அழித்து (உணவு உற்பத்தியை அழித்து) உணவு பற்றாக்குறையை ஏற்படுத்துவதோடு உழவர்களை அவர்கள் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது கடுமையான நடவடிக்கை இல்லையாம்.

• கல்பாக்கம், கூடங்குளம் போன்று அனுஉலைகளை நிறுவி மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பது, மீனவர்களின் எதிர்காலத்தை, உயிரை கேள்விக்குறியாக்கியுள்ளது கடுமையான நடவடிக்கை இல்லையாம்.

இந்தியா பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கு 90% மக்கள் மீது மன்மோகன் சிங்கிற்கு எந்த நம்பிக்கையும் இல்லையாம், இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் உழைப்பு, அறிவு உழவர்களின் உழைப்பு, தொழிலாளர்களின் ஆற்றல், இந்தியாவின் இயற்கைவளம் இதன்மீதெல்லாம் நம்பிக்கையில்லையாம். இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் ஒரே இரட்சகன் முதலாளிகள் மட்டும்தான், அன்னிய முதலீடு மட்டும்தான் என்று நம்மை நம்பசொல்கிறார். மன்மோகன்சிங் முதலாளிகள் நலனுக்காக மக்கள் மீது எத்தகைய கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தான் தாயார் என்கிறார், அதற்காக மற்றவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மிரட்டுகிறார். வாழ்க! மன்மோகன்சிங்கின் பொருளியியல் கொள்கை.

இதுவரை எடுத்த நடவடிக்கைகள் கடுமை இல்லாதவையாம், இனிதான் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமாம் என்னே! மன்மோகன் சிங்கின் முதலாளித்துவ விசுவாசம்.

இந்தியாவில் பணவீக்கம் என்றவுடன் இந்திய மக்களை பற்றி துளியளவும் அக்கறையின்றி தங்கள் லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு முதலீடுகளை எடுத்து கொண்டு ஓட்டம் பிடிக்கும் முதலாளிகள்தான் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துபவர்களாம் நம்ப சொல்கிறார் மன்மோகன்சிங். பழங்குடி மக்கள், மீனவர்கள், உழவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டாலும் கவலையில்லை, தங்கள் இலாபத்திற்காக எதையும் செய்ய தாயாராய் இருக்கும் பணபிசாசுகள் தான் (முதலாளிகள் தான்) இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த போகிறார்களாம். லாப வெறிப்பிடித்த இப்பிசாசுகள்தான் இந்தியாவில் உள்ள 90% மக்களை வாழ்விக்கும் இரட்சகர்களாம், நம்ப சொல்கிறார்கள் மன்மோகன்சிங், தினமணி, குருமூர்த்தி வகையறாக்கள்.

மக்கள் சனநாயக குடியரசு கட்சி முன் வைக்கும் தீர்வு

எமது கட்சி வைக்கும் தீர்வை அணுகுமுன் சில அடிப்படைகளை புரிந்துகொள்வது அவசியமென கருதுகிறோம்.

நமது இந்திய துணைகண்டத்தில் வாழ்பவர்களை இருபெரும் பிரிவுகளாக பிரித்துவிடலாம். ஒரு பிரிவினர்:- பிராந்திய பெருமுதலாளிகள், ஏகாதிபத்திய (10%-க்குள் உள்ளவர்கள்) முதலாளிகள், அதிகார வர்க்க முதலாளிகள், மூலதன - சாதி நிலப்பிரபுக்கள்.

மற்றொரு பிரிவினர்: (90%-க்கும் அதிகமாக உள்ளவர்கள்) தொழிலாளர்கள், விவசாயிகள், (கூலி விவசாயிகள், குறு, சிறு, நடுத்தர விவசாயிகள், குத்தகை விவசாயிகள், பணக்கார விவசாயிகள்) குட்டி முதலாளிகள் (கைத்தொழில் செய்பவர், சிறுவணிகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், அறிவு ஜீவிகள், பொறியாளர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்......), தேசிய முதலாளிகள் மற்றும் பெண்கள், தலித்துகள், மதசிறுபான்மையினர், மீனவர்கள், பழங்குடிகள்.

மன்மோகன்சிங் (காங்கிரசு), பி.ஜே.பி, தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., சி.பி.ஜ., சி.பி.ஜ (எம்) போன்ற கட்சிகள் முதல்வகை பிரிவினரின் நலனை பாதுகாக்கும் கட்சிகள் ஆகும். இவர்களிடம் 90%மாகவுள்ள மக்களின் நலனை எதிர்பார்ப்பது முட்டாள் தனம்அல்லது அறியாமை.

மேற்கூறிய கட்சிகள் எல்லாம் 90% மக்களுக்கான கட்சி என்று தங்களை காட்டிகொள்ள நாடகமாடுகின்றனர். அந்த நாடகங்களை உண்மையென நம்பி உழைக்கும் மக்கள் பலியாகின்றனர் அல்லது தங்களின் விடுதலைக்கான கட்சியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் அல்லது தங்கள் விடுதலைக்கான கட்சியை உருவாக்கி அதை பலப்படுத்துவதற்கு முயற்சித்து கொண்டிருக்கின்றனர். இதுதான் உண்மை நிலவரம்.

மேற்கூறிய அடிப்படை உண்மைகளிலிருந்து நோக்கினால் மன்மோகன்சிங் உலகமயமாக்கல் கொள்கையை நிறைவேற்ற, முதலாளிகளின் நலன்களை பாதுகாக்க எவ்வளவு கடுமையான நடவடிக்கையும் எடுக்க தாயாராக இருப்பார் என்ற உண்மை நமக்கு விளங்கும். மன்மோகன்சிங்கின் கடுமையான நடவடிக்கை யார் மீது என்பதும்? யாரின் நலனுக்காக என்பதும் நமக்கு வெட்ட வெளிச்சமாக புரியும்.

உலகமயமாக்கல் கொள்கையா? இந்திய துணைக்கண்ட மக்களின் (90%-க்கு மேல் உள்ளவர்களின்) வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் திட்டமிட்டு வளர்க்கப்படும் உள்நாட்டு உற்பத்திக்கான கொள்கையா? எது இந்திய பொருளாதாரத்தை, மக்களின் வாழ்வை வளர்க்கும்?

முதலில் முதலாளித்துவத்தின் அடிப்படை சிக்கலை நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

• முதலாளித்துவ உற்பத்தியில், உற்பத்தியானது சமூக மயமாக்கப்படுகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட முதலாளியின் தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான (அ) ஆயிரக்கணக்கான தற்போதைய சூழலில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஆனால் உற்பத்தியில் கிடைக்கும் லாபம் அக்குறிப்பிட்ட முதலாளிக்கு மட்டும் சேர்கிறது. இதுதான் முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடு ஆகும். அதாவது “உற்பத்தியின் சமூக தன்மைக்கும், உற்பத்தியின் பலன்களைக் கைப்பற்றி கொள்ளும் தனியார் முதலாளித்துவ வடிவத்திற்கும் இடையே உள்ள முரண்பாடேயாகும்.”

• முதலாளித்துவமானது சமூகத்தின் தேவையை ஒட்டி உற்பத்தி செய்யாமல், லாப நோக்குடனே உற்பத்தியை செய்கிறது. வறுமைக் கோட்டிற்கு கீழே கோடிக்கணக்கான மக்கள் இருக்கையில், அவர்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்டெடுப்பதற்கு எத்தகைய உற்பத்தியைக் கட்டியமைப்பது என்பதை ஆய்ந்து முடிவெடுக்காமல், இதற்கு மாறாக லாபம் ஒன்றையேக் குறிக்கோளாகக் கொண்டு கைப்பேசி, கார் போன்ற பொருள்களை உற்பத்தி செய்து சந்தையில் குவிக்கின்றனர். விளம்பரங்கள் மூலம் மக்களைக் கவர்ந்து வாங்க வைக்க முயற்சிக்கிறது. அதாவது இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் விவசாயத் தொழில் வளர்ச்சியடைய எத்தகைய உற்பத்தியை செய்வது என்பதற்கு மாறாக, தனது லாபம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு உற்பத்தி செய்கிறது. இதனால் லாபம் விகிதம் குறையும்போது தனது மூலதனத்தைத் திரும்ப எடுத்துக் கொண்டு ஓடுகிறது. இத்தகைய அன்னிய முதலீடுகள், முதலாளிகள்தான் நமது நாட்டின் மக்களை. பொருளாதாரத்தை வளர்க்கும் இரட்சகர்கள் என நம்மை நம்பச் சொல்கிறார்கள்?

• மக்களின் வாங்கும் சக்தியை வளர்ப்பதன் மூலமாக படிப்படியாக சந்தைக்கான உற்பத்தியை வளர்ப்பது என்பதற்கு மாறாக மக்களின் வாங்கும் சக்தியைத் திவாலாக்கி, சந்தையில் பெரும் தேக்கத்தை ஏற்படுத்துவது முதலாளித்துவமாகும். கோடிக்கணக்கான தொழிலாளர்களை ஒப்பந்த தொழிலாளர்கள் ஆக்கி, மாத சம்பளத்தைக் குறைப்பது, விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்குவது, தொழிலாளர்களை வேலை இழக்கச் செய்வது, கோடிக்கணக்கான உழைப்பு சக்தியை (வேலையில்லாதோரை) வீணடிப்பது மூலம் வாங்கும் சக்தியைக் குறைக்கிறது. அதாவது லாப நோக்கிலான உற்பத்தி (மக்கள் தேவைக்கான உற்பத்தி அல்ல) - சந்தையில் பொருட்களைக் குவிப்பது - சந்தையில் பொருட்கள் குவிக்கப்படுவதால் பொருட்கள் தேக்கமடைதல் - இதனால் உற்பத்தி மந்தமடைவது - உற்பத்தி மந்தமடைவதால் தொழிலாளர்களை வேலையிலிருந்து வெளியேற்றுகின்றனர். இதனால் வாங்கும் சக்தி மேலும் குறைகிறது. சுருக்கமாக சொல்வதெனில், “பண்டங்களின் மிகை உற்பத்தி, விலைகளின் திடீர் சரிவு, ஓட்டாண்டிகள் பெருக்கம், உற்பத்தியில் திடீர் வீழ்ச்சி, வேலையின்மையின் அதிகரிப்பு, கூலியில் வீழ்ச்சி, உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகத்தின் சுருக்கம், இதனால் உற்பத்தியில் நெருக்கடி - முதலாளித்துவம் பொது நெருக்கடிக்கு ஆளாகுதல்.”

இதுதான் முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத விளைவு.

உலக மயமாமக்கல், முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத விளைவே பணவீக்கம், முதலாளித்துவம் இருக்கும்வரை பணவீக்கம் தவிர்க்க முடியாதது. தற்போதைய பணவீக்கத்திற்கான காரணத்தை குருமூர்த்தியின் வார்த்தையில் சொல்வதென்றால், “கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளித்த வரி விலக்கானது நிதி பற்றாக்குறையை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தியதுடன் நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்க செய்து ரூபாயை மரணப் படுக்கையில் தள்ளியது.”

எனவே, இந்திய துணைக் கண்டத்தில் வாழும் 90 சதவீதம் உழைக்கும் மக்களின் வாழ்விற்கும், வளர்ச்சிக்கும் உலக மயமாக்கல் பொருளாதார கொள்கை எந்தவித பலனையும் அளிக்கப் போவதில்லை. உலக மயமாக்கல் பொருளியல் கொள்கை உழைக்கும் மக்களுக்கு அளிக்கும் பரிசு வறுமையும், வேலையின்மையும் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்குவதும்தான்.

உலக மயமாக்கல் பொருளியல் கொள்கை இந்திய பிராந்திய பெரு முதலாளிகள், அதிகார வர்க்க முதலாளிகள், மூலதன - சாதி - நிலக்கிழார்களுக்கு மட்டுமே சேவை செய்யக்கூடியது.

உழைக்கும் மக்களை ஓட்டாண்டியாக்கும் உலக மயமாக்கம் பொருளியல் கொள்கைதான் பணவீக்கத்திற்கு காரணம். எனவே, நமக்கு தேவை பொருளியல் கொள்கையில் மாற்றம். இதுதான் நிரந்தரத் தீர்வை அளிக்கும். அப்படியென்றால், உலக மயமாக்கல் கொள்கையில்லாமல், உழைக்கும் மக்களுக்கான பொருளியல் கொள்கையன்று அவசியமாகிறது. இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள உழைக்கும் மக்கள் அனைவரும் ஐக்கியப்பட்டு உலகமயமாக்கல் கொள்கையை எதிர்த்துப் போராடி முறியடிப்பதோடு, தங்களுக்கான பொருளியல் கொள்கையை முன்வைத்து அதைப் படைப்பதற்குமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

மாற்றுப் பொருளியல் கொள்கை (உழைக்கும் மக்களுக்கான பொருளியல் கொள்கை)

இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு தேசங்கள் உள்ளன. இந்திய பிராந்திய பெரு முதலாளிகள், ஏகாதிபத்திய முதலாளிகள் தங்களின் பரந்த சந்தைக்காகவும், சுரண்டலுக்காகவும் இந்தியாவை தேசங்களின் சிறைக் கூடமாக ஆக்கியுள்ளனர். ஒவ்வொரு தேசத்திலும் மக்களின் வாழ்நிலை வேறுபட்டுள்ளது. வேறுபட்ட வாழ்நிலையில் உள்ள மக்களுக்கு வேறுபட்ட பொருளியல் கொள்கை தேவைப்படுகிறது.

தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா, மேற்கு உத்திரப்பிரதேசம் போன்ற தேசங்களில் விவசாய உற்பத்தியில் முதலாளித்துவ கூறுகள் வளர்ந்துள்ளதோடு, நகர மயமாக்கல் மற்றும் தொழில்துறை வளர்ச்சி அதிகரித்துள்ளது. அசாம், மிசோரம், நாகா, சத்தீஸ்கர் போன்ற தேசங்களில் அரை தொல்குடி உற்பத்தி முறை உள்ளது. பீகார், கிழக்கு உத்திரப்பிரதேசத்தில் சாதிய - நிலவுடைமைக் கூறுகள் ஓங்கி உள்ளது. இதனால் ஒவ்வொரு தேசமும் தனக்கான பொருளியல் கொள்கையை வகுத்துக் கொள்ள வேண்டிய தேவையுள்ளது. இதை விடுத்து, இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் ஒரே பொருளியல் கொள்கையை எந்திரகதியாக வைப்பது என்பது மக்களின் வாழ்நிலையை உயர்த்துவதற்கு உதவாது. அதனடிப்படையில் தமிழகத்திற்கான மாற்று பொருளியல் கொள்கையை இக்கட்டுரையில் முன் வைக்கின்றோம். இதுபோல் ஒவ்வொரு தேசத்திலும் உழைக்கும் மக்களின் விடுதலைக்கு போராடும் கட்சிகள் அந்தந்த தேசத்தின் நிலைமைகளைக் கணக்கில் கொண்டு (உழைக்கும் மக்களுக்கான) மாற்று பொருளியல் கொள்கைகளை முன் வைப்பதுதான் அறிவியல் அடிப்படையில் அமைந்ததாக அமையும்.

தமிழகத்திற்கான மாற்றுப் பொருளியல் கொள்கை

உழைக்கும் மக்களை ஓட்டாண்டியாக்கும் உலகமயமாக்கல் பொருளாதார (முதலாளிகளுக்கான) கொள்கையை அடியோடு ஒழித்துக் கட்டவேண்டும். ‘தமிழ்த் தேசிய மக்கள் சனநாயக புதிய பொருளாதார (உழைக்கும் 90 சதவீதம் மக்களுக்கான) கொள்கை’யே நமக்கான மாற்று பொருளாதாரக் கொள்கையாகும்.

தமிழ்த் தேசிய மக்கள் சனநாயக புதிய பொருளாதாரக் கொள்கையை விரிவாகப் பார்ப்போம்.

தமிழ்த் தேசிய மக்கள் சனநாயக புதிய பொருளாதாரக் கொள்கை

விவசாயத் துறை :

• நமது தமிழகத்தில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிலங்கள் சிறு, குறு, நடுத்தர உழவர்களிடமே உள்ளது. நிலம் துண்டு துண்டாக உள்ளதால் விவசாயத்தில் உற்பத்தியை அதிகப்படுத்துவது என்பது சிக்கலான ஒன்றாகும். இப்படி துண்டு, துண்டாக இருப்பது நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கும் தடையாக உள்ளது. எனவே, விவசாயத்தில் உடனடியாக கீழ்வரும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

• ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களைக் கூட்டுறவு பண்ணைகளாக (சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கு அவர்களின் நில உரிமைக்கேற்ப உற்பத்தியில் பங்குகளை அளிப்பது என்ற ஒப்பந்த அடிப்படையில் அரசே தலையிட்டு) ஒருங்கிணைக்க வேண்டும்.

• ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டுப் பண்ணைகளுக்கு டிராக்டர். நாற்று நடும் இயந்திரம், அறுவடை இயந்திரம், இலகு ஊர்தி மூலம் உரங்கள் தெளித்தல் போன்ற நவீன கருவிகளை அரசானது கூட்டுறவுகள் அமைத்து அதன் மூலம் வழங்கவேண்டும். மன்மோகன் சிங் விவசாயிகளுக்கு வருவாய் குறைவாய் கிடைப்பதால் கிராமங்களை விட்டு வெளியேறச் சொல்கிறார். அப்படி வெளியேற்றிவிட்டு பெரும் முதலாளிகளுக்கு நிலங்களைப் பிடுங்கி கொடுத்து, முதலாளித்துவ பண்ணைகளை அமைக்கத் துடிக்கிறார். இதற்கு மாறாக நாம் பரந்து விரிந்த கூட்டுப் பண்ணைகளை உருவாக்க வேண்டும் என்கிறோம். அக்கூட்டுப் பண்ணையின் மூலம் கிடைக்கும் லாபம் அப்பண்ணைக்காக நிலம் கொடுத்த சிறு, குறு, நடுத்தர விவசாயிகள், அங்கு கூட்டுப் பண்ணையில் வேலை செய்யும் விவசாய தொழிலாளர்களுக்கே முழுமையாகக் கிடைக்க வழிவகை செய்யவேண்டும்.

தற்போது நடைமுறையில் உள்ள கடும் உழைப்பு ஒழிக்கப்பட்டு நவீன முறையில் கருவிகள் பயன்படுத்தி உழைப்பை எளிமையாக்க வேண்டும். சாதி சுரண்டல், ஒப்பந்த அடிமை, நவீன கொத்தடிமை போன்ற கொடுமையான உழைப்பு சுரண்டல்களை ஒழித்து, சாதி, பாலின வேறுபாடின்றி சமக் கூலி, 6 மணி நேர வேலை ஆகியவை நவீன கூட்டுப் பண்ணையில் நடைமுறையாக்கப் பட வேண்டும்.

• இயற்கை சார்ந்த மண் வளம், சத்து வளம், வீரிய வித்துக்கள் முதலியவை அறிவியல் மெய்ப்பித்தல் மூலம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப் படவேண்டும்.

• முதலாளிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்ட மண் வளத்தை அழிக்கும் வீரிய வித்துக்கள். இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் முதலியவற்றை முற்றாக தடை செய்து, மண்வளம் காத்து, நமது பாரம்பரிய விதைகள் மற்றும் நம் தமிழக மண் வளத்தை ஆராய்ந்து அதற்கேற்ற விதைகள் உருவாக்கப்பட்டு, இயற்கை வேளாண்மையை நவீன அறிவியல் தொழில் நுட்பங்களைப் பயன் படுத்தி வளர்த்தெடுக்க வேண்டும்.

• நவீன பெரிய அணைக்கட்டு என்பதற்கு மாறாக, சிறிய நீர்த் தேக்கங்களைப் பரவலாக கட்டியமைப்பது மற்றும் நமது தமிழகத்தில் வரலாற்றில் உருவாக்கப்பட்டுள்ள பாரம்பரிய பாசன முறைகளை நவீன அறிவியல் தொழில் நுட்பத்துடன் இணைத்து மேம்படுத்த வேண்டும்.

• இந்தியப் பெருமுதலாளிகள், அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலாளித்துவ பண்ணைகள், சாதிய நிலக்கிழார்களின் பண்ணைகள், தோட்டங்களை எவ்வித இழப்பும் இன்றி பறிமுதல் செய்து (இவை சுரண்டல், தனியார் லாபத்தைக் கொண்டுள்ளதால்) வரையறுக்கப்பட்ட அளவில் கூட்டுப் பண்ணை களாக மாற்ற வேண்டும்.

• மூலதன - சாதி - நிலக்கிழார்களின் நிலங்கள், கோவில் மற்றும் மடத்து நிலங்களைப் பறிமுதல் செய்து, “உழுபவனுக்கு நிலம் சொந்தம்” என்ற அடிப்படையில் குத்தகைதாரர்களுக்கும் (பெருங் குத்தகைதாரர், எதிர் குத்தகைதாரரைத் தவிர்த்து) நிலமற்ற கூலி, ஏழை உழவர்களுக்கும் நிலம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இந்நிலங்களையும் மக்களின் புரிந்துணர்வோடு படிப்படியாக கூட்டுப் பண்ணைகளாக மாற்ற வேண்டும்.

தொழில் துறை :

• முதலாளித்துவம் என்பதே “உற்பத்தியின் சமூக தன்மைக்கும், உற்பத்தியின் பலன்களைக் கைப்பற்றிக் கொள்ளும் தனியார் முதலாளித்துவ வடிவத்திற்கும் இடையே உள்ள முரண்பாடே யாகும்” என்ற அடிப்படையை உணர்ந்து, உற்பத்தி எப்படி சமூக தன்மைக்கு மாறியுள்ளதோ, அதுபோல உற்பத்தியின் பலனும் சமூகத் தன்மைக்கு மாற வேண்டியுள்ளது.

• இந்திய பிராந்திய பெரு முதலாளிகளின் பெரும் மூலதனம், கார்ப்பரேட் நிறுவனங்களின் (ஏகாதிபத்தியங்கள்) நிதி மூலதனங்கள் மற்றும் சொத்துக்கள் இழப்பீடின்றி கைப்பற்றித் தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் குழுக்கள் மூலம் தொழிற்சாலைகளை நிர்வகித்து, உற்பத்தியை முறைப்படுத்த வேண்டும்.

• அதிகார வர்க்கம் மூலதனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத் துறை, தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், சமூக உடைமையாக்கப்படும் (இதன் வர்க்கத் தன்மையை மாற்றியமைக்க வேண்டும்) தனி நபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், முதலாளிகள் லாபம் அடைவது முற்றாக ஒழிக்கப்பட்டு, இதன் பலன்கள் அனைத்தும் தொழிலாளர்களுக்கே, மக்களுக்கே முழுமையாக சேரும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்.

• இந்திய, தமிழக அரசுகள் உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டுள்ள அனைத்து வகையான ஒப்பந்தங்களும் எவ்வித நிபந்தனையுமின்றி இரத்து செய்யப்பட வேண்டும். இதனால் ஏற்படும் எதிர்ப்பை மக்கள் பலத்துடன் முறியடிக்க வேண்டும்.

• எட்டு மணி நேர வேலை கட்டாய நடைமுறையாக்கப்பட்டு படிப்படியாக 6 மணி நேர வேலையை இலக்காக கொள்ள வேண்டும்.

•  மக்களின் தேவைக்கேற்ப உற்பத்தி, உற்பத்தியின் தேவைக்கேற்ப உழைப்பு, உழைப்பிற்கேற்ப ஊதியம், சம வேலைக்கு சம ஊதியம்.

• இலாப நோக்கில் இயற்கையை அழிக்கும், சுற்றுச்சூழலை பெரும் பாதிப்புக்குள்ளாக்கும் முதலாளித்துவ அழிவு பொருளாதாரத்திற்கு மாற்றாக, இயற்கையுடன் இயைந்த கட்டுப்படுத்தப் பட்ட பொருளாதார முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அதாவது இயற்கையில் மறு உற்பத்தி சுழற்சிக்கு உட்படுத்த வாய்ப்புள்ள சூரிய ஒளி, காற்று, நீர், தாவரம் போன்றவற்றை மூலப் பொருட்களாகக் கொண்டு சமூகத்தின் தேவையின் பெரும் பகுதியை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அறிவியல் ஆய்வுகளை இக்கோணத்தில் முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.

• மறு சுழற்சிக்கு உட்படாத கனிம வளங்கள் மிகவும் எல்லைக்குட்பட்டே பயன்படுத்தப் பட வேண்டும். உதாரணமாக, அபாய மற்றும் கடின உழைப்பைத் தவிர்க்க, கல்வி, மருத்துவம், அறிவியல் சோதனை போன்ற மிக முக்கியத் தேவைகளில் பயன்படுத்த வேண்டும். மற்ற தேவைகளைப் படிப்படியாக மறு உற்பத்தி சூழற்சியின் மூலம் இயற்கை ஆதாரங்களில் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

• உற்பத்தி சக்திகளின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி, பொருளாதாரத்தை மையப்படுத்துதல் மற்றும் அனைத்தும் மையப்படுத்துதல், கனரக இயந்திர உற்பத்தியை முதன்மையாக்கல் என்பதற்கு மாறாக கட்டுப்படுத்தப்பட்ட உற்பத்திக் சக்திகளின் வளர்ச்சி பரவலாக்கும் (மக்கள் மயமாக்கும்) தற்சார்புள்ள பொருளாதாரம், இலகு ரக உற்பத்தியை முதன்மையாக்கல் போன்ற பொருளாதாரத் திட்டங்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.

• சிறு தொழில்களையும், தேசிய தொழில்களையும் ஊக்குவிக்கவேண்டும்.

• மண்டல ஏற்றத் தாழ்வுகளை, கணக்கில் கொண்டு பின்தங்கிய பகுதிகளுக்கு தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

மின் துறை :

• அறிவியல் கண்டுபிடிப்புகளில் மனித குல வளர்ச்சிக்கு நன்மை செய்யும் கண்டுபிடிப்புகளும் உண்டு. மனித குலத்தை அழிக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் உண்டு. அறிவியலை உயர்த்திப் பிடிப்போர் கண்ணை மூடிக்கெண்டு அறிவியலை ஆதரிப்பது தவறு. அதுவும் முதலாளித்துவ சமூகத்தில் லாபத்தை அடிப்படையாக வைத்தே பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் உருவாகின்றன. அது போல் அணுக்கதிர் மூலம் மின்சாரம் தயாரிப்பது என்பது மனித குலத்திற்கு அழிவைத் தரக்கூடியது. அணு சக்தி பற்றிய நிலைப்பாட்டில் மக்கள் பார்வை முதலாளித்துவ பார்வை என இரண்டு நிலைகள் உள்ளது. அணுக் குண்டு தயாரிக்கவே அணுக் கதிர் மின் திட்டங்கள். ஏற்கனவே இக்கட்டுரையில் குறிப்பிட்டது போல் மறு சுழற்சிக்கு உட்படாத கனிம வளங்களை எல்லைக்குட்பட்டே பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்ற அடிப்படையில் அனல் மின் திட்டத்தையும் படிப்படியாகக் கைவிட வேண்டும்.

•  மாற்றாக சூரிய மின்சக்தி, காற்றாலை, நீர்மின் திட்டங்களைப் பயன்படுத்த வேண்டும். இதிலும் குறிப்பாக சூரிய மின் சக்தியை மக்கள் மயமாக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும், அலுவலகத்திலும், தொழிற்சாலைகளிலும் சூரிய மின் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஊராட்சி, நகராட்சியிலும் சூரிய மின் திட்டத்தில் தன்னிறைவு அடையும் வகையில் சூரிய மின் திட்டங்களைப் பரவலாக்க வேண்டும். சூரிய மின் திட்டத்திற்கான அறிவியலை வளர்க்கும் அனைத்து முயற்சிகளையும் ஊக்குவிக்க வேண்டும். அறிவியல் அறிஞர்களை ஊக்குவித்து இக்கண்டுபிடிப்புகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

வணிகம் :

•  விவசாய பொருட்களை சரியான விலைக்கு வாங்கி, பாதுகாத்து விற்பனை செய்வதற்கும், அனைத்து பொருட்களையும் சுகாதாரமான, நியாயமான விலையிலும் மக்கள் வாங்குவதற்கான ஒரே தீர்வு கூட்டுறவு பண்டக சாலைகள்தான். அரசே அனைத்து கூட்டுறவு பண்டக சாலைகளையும் அமைக்க வேண்டும். அதில் விவசாய மற்றும் உற்பத்தி பொருட்களைப் பாதுகாக்க குளிர்ப்பதன நிலையங்கள் அமைக்க வேண்டும்.

•  சிறு வணிகர்களின் கூட்டமைப்பை ஏற்படுத்தி அவர்களைப் படிப்படியாக கூட்டுறவு பண்டக சாலையின் பங்குதாரர்களாகவும். அங்கத்தினர்களாகவும் இணைத்து அவர்களின் வாழ்வையும் வளப்படுத்த வேண்டும். மன்மோகன் சிங் சொல்வது போல் வால்மார்ட் முதலாளிகள் கையில் வணிகத்தை ஒப்படைத்து சிறு வணிகர்களையும், விவசாயிகளையும், நுகர்வோரையும் ஓட்டாண்டிகள் ஆக்கக் கூடாது. ஒவ்வொரு ஊராட்சி மற்றும் வார்டுகளிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப எண்ணற்ற கூட்டுறவு பண்டக சாலைகள் உருவாக்க வேண்டும். உற்பத்தி செய்பவர்களுக்கும் (உழவர்கள் உள்பட) நுகர்பவர்களுக்கும் இடையேயுள்ள இடைத் தரகர்களை ஒழித்து நேரடியான இணைப்பை ஏற்படுத்த வேண்டும். கூட்டுறவு பண்டக சாலைகள் மக்களின் தேவையை முழுமையாகத் தீர்க்கும் வரை சிறு வணிகர்கள் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். இந்திய பிராந்திய பெரு முதலாளிகள் (ரிலையன்ஸ் போன்ற) அந்நிய முதலாளிகளின் பெரிய பெரிய மால்கள் இழப்பீடின்றி பறிமுதல் செய்து பெரிய, பெரிய கூட்டுறவு பண்டக சாலைகளாக மாற்றியமைக்கப் பட வேண்டும். இதில் சிறு வணிகர்களை வேலைக்கமர்த்த வேண்டும். சிறு வணிகர்களின் வாழ்வாதாரங்களைத் திட்டமிட்ட வகையில் மேம்படுத்த வேண்டும்.

மீனவத் துறை:

•  இந்திய பெருமுதலாளிகள் மற்றும் ஏகாதிபத்தியங்களின் கடல் சார்ந்த நிறுவனங்களும், மீனவம் சார்ந்த நிறுவனங்களும் சமூக உடைமையாக்கப்பட வேண்டும்.

• மீனவர்களின் கூட்டுறவுகளை முறைப்படுத்துதல், புதியதாக உருவாக்குதல் என்பதன் மூலம் மீனவர்களின் வாழ்க்கை திட்டவட்டபடுத்தப்பட வேண்டும்.

•  முதலாளித்துவத்தின் இயற்கையின் மீதான தாக்குதலின் ஒரு பகுதியாக கடல் வள ஆதாரங்கள் மாசுபடுவதும், அழிவதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். கடல் வளங்கள் பாதுகாக்கப்பட்டு ஆதாரங்கள் வளர்த்தெடுக்கப்படும்.

கால்நடைத் துறை:

•  கால்நடை வளர்ப்பில் உள்ள ஏகபோகங்கள் ஒழிக்கப்பட வேண்டும். மூலதன - நிலக்கிழார்கள் பெருமுதலாளிகள் மற்றும் ஏகாதிபத்தியங்களின் பண்ணைகள் பறிமுதல் செய்யப்பட்டு கூட்டு பண்ணைகளாக்கப் படவேண்டும்.

• கால்நடை வளர்ப்போர்கள் கூட்டு பண்ணையை அமைக்க அனைத்து விதமான உதவிகளும் செய்யப்பட வேண்டும். அதே சமயத்தில் தனிப் பண்ணைகள் இருக்கவும் அனுமதிக்கவேண்டும். கூட்டுறவுகள் முறைப்படுத்தப்படவேண்டும்.

•  முதலாளித்துவ இலாப நோக்கில் செய்யப்படும் அனைத்து விதமான செயற்கையான தீவனங்கள் மற்றும் மருந்துகள் தடை செய்யப்பட வேண்டும். இயற்கை சார்ந்த கால்நடை வளர்ப்பே அனுமதிக்கப்படவேண்டும்.

•  கால்நடைகளை உழைப்பில் ஈடுபடுத்துவது தடை செய்யப்படவேண்டும்.

வனத்துறை:

•  வனத்தை ஆக்கிரமித்திருக்கும் பெரு முதலாளிகள், ஏகாதிபத்தியங்களும் வெளியேற்றப் படவேண்டும்.

•  பழங்குடிகளின் அரை தொல்குடி உற்பத்தி முறையிலிருந்து நேரிடையாக கூட்டுப் பண்ணைகள் முறைக்கு கொண்டு செல்லவேண்டும். தேவையான நவீன முறைகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப் படவேண்டும்.

•  பழங்குடிகளுக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டு அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட வேண்டும். கூட்டுறவுகள் அமைக்கப்பட வேண்டும்.

•  வட்டங்கள் தோறும் சராசரி காடுகள் வளர்ப்பு கட்டாயமாக்கப் படவேண்டும்.

இறுதியாக...

தமிழ்த் தேசிய மக்கள் சனநாயக புதிய பொருளாதார கொள்கையானது உழைக்கும் மக்களுக்கான, 90 சதவீதற்கும் மேலுள்ள பெரும்பான்மை மக்களுக்கான கொள்கையாகும். இப் பொருளாதாரக் கொள்கையை முதலாளித்துவ நலன் காக்கும் காங்கிரசு, பி.ஜே.பி., சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்)., தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. போன்ற முதலாளித்துவ கட்சிகள் கட்டாயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவர்களுக்குத் தேவை உலக மயமாக்கல் பொருளாதார கொள்கைதான். ஆனால் நமக்குத் தேவை தமிழ்த் தேசிய மக்கள் சனநாயக புதிய பொருளாதாரக் கொள்கை. இக்கொள்கையை நடைமுறைக்குக் கொண்டு வர (உழைக்கும் மக்களின்) 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள பெரும்பான்மை மக்களின் மாபெரும் மக்கள் எழுச்சி ஒன்றே வழியாகும். உழைக்கும் மக்கள் அனைவரும் தனக்கான பொருளாதாரக் கொள்கையை படைக்க (இக்கொள்கையை இறுதி செய்ய பொது மக்களின் வாக்கெடுப்பு முன் நிபந்தனையாகவும்) முதலாளிகளின் நலன் காக்கும் உலக மயமாக்கல் கொள்கையை முறியடிக்க தொழிலாளர்கள், விவசாயிகள், குட்டி முதலாளிகள் (வணிகர்கள், வழக்கறிஞர், அறிவுத் துறையினர், மாணவர்கள்....), தேசிய முதலாளிகள், பெண்கள், தலித்துகள், மீனவர்கள், பழங்குடிகள், மத சிறுபான்மையான மக்கள் என அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டிய முக்கிய தருணம் இது.

உழைக்கும் மக்களின் கடைசி சொட்டு இரத்தத்தையும் முதலாளிகளுக்காக தாரை வார்க்க துடிக்கும் அரசியல் கட்சிகளை, அதிகார வர்க்கங்களை, அரசு இயந்திரத்தை தூக்கியெறிந்து மக்களுக்கான அரசியல் கட்சிகள், நிர்வாகம், அரசு இயந்திரத்தைப் படைக்க மக்கள் சனநாயக குடியரசுக் கட்சி அனைத்து மக்களையும், மக்களுக்கான கட்சிகளையும் ஐக்கியப்பட்டு போராட அறை கூவி அழைக்கிறது.

- பழனி, பொதுச் செயலாளர், மக்கள் சனநாயக குடியரசுக் கட்சி