மதுரை அழகர் கோவில் செல்லும் வழியில் உள்ள எழில் மிகுந்த கிராமம் பொய்கைகரைப்பட்டி…விளை நிலங்கள் யாவும் இன்னும் கட்டிடங்களாக மாறாத பூமி என்று எண்ணி மன நிறைவு கொண்டிருக்கும் போதே திடுக்கிடும் துயர செய்தி ஒன்றினை கேட்க நேர்ந்தது. இதுவரை அங்கே வாழும் 72 பெண்களுக்கு கர்ப்பப்பை அகற்றப்பட்டு விட்டது என்பதை அறியும் போது அதிர்ச்சியாக இருந்தது.

இதற்குக் காரணம் அபிலேஷ் கெமிக்கல் நிறுவனம்தான். சில அலோபதி மாத்திரைகள் தயாரிக்கத் தேவைப்படும் ரசாயனங்கள் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் ரசாயனங்களைத் தயாரிக்கும் நிறுவனமாகும்.

அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவுகள் நேரடியாக நிலத்தடி நீரில் கலக்கின்றன. அந்த நீரைத்தான் அப்பகுதிகளில் வாழும் மக்கள் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் ஆண்களுக்கு நுரையீரல், சிறுநீரகம் ஆகியவை பாதிக்கிறது. பெண்களுக்கு கர்ப்பப்பையில் புண், கட்டி ஏற்படுவதோடு கர்ப்பப்பையினை அகற்றும் நிலையும் ஏற்படுகிறது. குழந்தைகள் ஊனமாகப் பிறக்கின்றன.

ஆனால் நிறுவனத்தின் முதலாளியோ “இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை, அரசாங்கம் எங்கள் நிறுவனத்துக்கு தரச்சான்று தந்துள்ளது. கழிவுகள் சுத்திகரிகப்பட்டே வெளியேற்றப்படுகின்றன” என்று நழுவிக் கொள்கிறார்.

27.08.2013 அன்று இந்த அட்டூழியத்துக்கு முடிவு காண அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அதன் விளைவாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. 01.09.2013 அன்று பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் பரிசோதனை செய்யப்பட்டனர். ”ஆய்வுக்குப்பின் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என ஆட்சியர் உறுதியளித்தார்.

அபிலேஷ் கெமிக்கல் நிறுவனத்தின் அங்கீகாரம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் நபர்களுக்கு தக்க நிவாரண நிதியினை வழங்க வேண்டும்.

வளங்களை அழித்தும் ஏழை எளியவர்களின் உயிரோடு விளையாடியும் தான் நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்த சதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.