அதிமுக அரசின் இரண்டாண்டு கால ஆட்சியின் சாதனைகளை கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவில் பல பக்க விளம்பரங்களாக பறை சாற்றியிருக்கிறார் செல்வி. ஜெயலலிதா. சட்டமன்றத்தில் ஒரு நீண்ட உரையை ஆற்றி தன்னைத் தானே பாராட்டிக் கொண்டார். அரசை குறை கூறுபவர்களைக் கடுமையாக சாடினார். (நல்லவேளை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யவில்லை).
 
jayalalitha_370தொலைக்காட்சிகள் காலை தொடங்கி மாலை வரை அரசின் சாதனைகளையும், வேதனைகளையும் அலசின. அதிமுக தரப்பில் அவர்கள் உருவாக்கிய வேலைவாய்ப்புகள், நிர்வாக மாற்றங்கள், சாலைகள், புதிய திட்டங்கள் பட்டியலிடப்பட்டன. எதிர்த்துப் பேசியவர்கள், பெரும்பாலும் மின் வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற பொருள்களைச் சுற்றியே பேசினர். இந்தக் கூச்சலில் ஒரு மிக முக்கியமான ஒரு விஷயம் மறந்தும், மறைக்கப்பட்டும் இருக்கிறது.
 
2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றி குறித்து பேசிய ஜெயலலிதாவே இந்த வாக்குகள் “திமுகவுக்கு எதிரான வாக்குகள்” என்று சொன்னார். 2011 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மக்கள் ஏறக்குறைய ஒரு புரட்சியைச் செய்தார்கள். அந்தத் தேர்தலில் மக்கள் முன் வைக்கப்பட்ட முதல் பிரச்சனை ஸ்பெக்ட்ரம் ஊழல். ஒரு இலட்சம் கோடி ஊழல் செய்ததாக செய்யப்பட்ட பிரச்சாரமும், திமுக அமைச்சர்கள் மிகக் குறுகிய காலத்தில் குவித்த சொத்துக்களும், நில அபகரிப்புகளும் திமுகவிற்கு எதிராக ஏற்பட்ட அலைக்கு முதன்மையான காரணங்கள்.
 
எனவே அதிமுக பெற்ற வாக்குகள் அனைத்துமே ஊழலுக்கு எதிரான வாக்குகள். ஊழலுக்கு எதிரான வாக்குகளைப் பெற்ற அரசின் முதல் கடமை ஊழல் இல்லாத ஆட்சியைத் தருவதே. மக்களாட்சியின் இயக்கவியல் என்பதே மக்கள் தாங்கள் விரும்பாத செயல்களைச் செய்கிற அரசை வாக்கின் மூலம் நீக்கிவிட்டு புதிய அரசை தேர்வு செய்வார்கள். அந்த புதிய அரசு மக்கள் விரும்பாத செயல்களைத் தவிர்த்து மக்கள் விரும்புகிறவற்றைச் செய்ய வேண்டும். மக்கள் தங்கள் விருப்பு, வெறுப்புகளை வாக்குகளின் மூலம் மட்டுமே அரசியல் இயக்கங்களுக்குச் சொல்கிறார்கள். மக்கள் அரசு, மக்களின் விருப்பத்திற்கேற்ற ஆட்சியை அமைக்க வேண்டும். இந்த மாற்றங்கள் தொடர்ச்சியாக நடப்பதன் மூலமே மக்களாட்சியில் சமூக மாற்றங்கள் ஏற்படும்.
 
ஒரு புரட்சி என்று சொல்லக் கூடிய அளவில் தமிழக மக்கள் ஊழலுக்கு எதிராக அளித்த வாக்கின் மூலம் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசின் முதல் கடமை என்பது ஊழல் இல்லாத நிர்வாகத்தைத் தருவது தான். இரண்டாண்டுகள் ஆட்சியை வெற்றிகரமாக முடித்ததாகக் கூறும் ஜெயலலிதாவின் முன் வைக்கப்பட வேண்டிய ஒரே கேள்வி ஊழலை ஒழிப்பதற்கு நீங்கள் செய்த முயற்சிகள் என்ன என்பதே. அதற்கான பதில் 'ஒன்றுமில்லை என்பதாகவே இருக்கும்.
 
ஊழலுக்கு எதிராக கோடிக்கணக்கான மக்கள் அளித்த தீர்ப்பினால் உருவாகிய அரசு, மக்கள் உணர்வுகளுக்கும், மக்களாட்சித் தத்துவத்துக்கும் சரியான நீதியை அளிக்கவில்லை. மக்களாட்சி என்பது கத்தியின்றி ரத்தமின்றி சமுகப் புரட்சிகளை செய்வதற்கான கருவி என்பதே என் கருத்து என அண்ணல் அம்பேத்கர் கூறியிருக்கிறார். தமிழக மக்கள் வாக்கின் மூலம் சொன்ன செய்தியை செல்வி ஜெயலலிதா மதித்திருந்தால் அவர் பதவியேற்ற முதல் நாளில் இருந்தே ஊழலுக்கு எதிரானவர் என்ற செய்தியினைச் சொல்லியிருக்க வேண்டும்.
 
தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கேள்வித் தாள்கள் பணத்துக்காக விற்கப்பட்டதே இந்த அரசு ஊழலை ஒழிக்கத் தவறி விட்டது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. இத்த‌னைக்கும் ‘நேர்மையான அதிகாரி’ என்று சித்தரிக்கப்பட்ட ஓய்வுப் பெற்ற காவல் துறை அதிகாரி திரு. நடராஜன் தலைமைப் பொறுப்பில் இருந்த பொழுது இது நடந்தது. அவர் மீதே வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு இப்பொழுது உயர் நீதி மன்றத்தில் நடைபெறுகிறது. ஆசிரியர்கள், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் மாறுதலில் ஊழலை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட நடைமுறையே கலந்தாய்வு. ஆனால் ஆண்டு முழுவதும் மாறுதல் பெறுவதற்காக ஆளும் கட்சியினரையும் அமைச்சர்களையும் தேடி அலைந்து கொண்டிருப்பதாகவே கேள்விப்படுக்றோம்.
 
மாவட்ட சாலைப் போக்குவரத்து அலுவலகம், பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை போன்ற ‘புகழ் பெற்ற’ அரசுத் துறைகளில் எந்த நடைமுறை மாற்றமும் இல்லை. சென்ற ஆட்சியை விட அதிகமான செலவுகள் செய்தே பணிகளைப் பெற முடிகிறது என்பதே பேச்சாக இருக்கிறது.
 
தமிழக மக்கள் வாக்குகள் மூலம் சொன்ன செய்தியை முழுவதும் புறக்கணித்ததின் மூலம் ஜெயலலிதா மக்களாட்சித் தத்துவத்திற்கே தோல்வியை ஏற்படுத்தி இருக்கிறார். கோடிக்கணக்காண தமிழக மக்களின் அரசியல் புரட்சி விழலுக்கு இழைத்த நீராக முடிந்திருக்கிறது.
 
அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் ஜெயலலிதா அரசிடம் ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேட்காமல் விட்டதன் மூலம் மக்களாட்சித் தத்துவத்திற்கே அநீதி இழைத்திருக்கின்றன என்பதே உண்மை.

மருத்துவர் செந்தில் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)