விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும்

2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலைப்பாதையின் பெரும் இராஜதந்திர முன்னகர்வாக மே-18 முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டு கூட்டுநினைவேந்தல் நாளில் உலகத் தமிழர்களின் முரசறைவாக அமைந்த தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கம் வெளிவந்துள்ளது.

தமிழீழத் தாயக மக்கள் மக்கள் உட்பட 1 இலட்சத்துக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் பங்கெடுத்த உருவாக்கியிருந்த தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கத்தின் விபரம் :

நிலைப்பாடுகள்:

1. தமிழீழமக்களாகிய நாங்கள் தன்னாட்சியுரிமை கொண்ட ஒரு தேசத்தவர் என்ற வகையிலும் இலங்கைத் தீவினுள் சிங்கள பௌத்த தேசிய அரசுகளினால் தொடர்ச்சியாக இனஅழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுவரும் மக்கள் என்றவகையிலும், இனஅழிப்பிலிருந்தும் எம்மீது நிகழ்த்தப்படும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களின் விளைவுகளிலிருந்தும் எம்மை நிரந்தரமாகப் பாதுகாக்க ஏற்ற அத்தியாவசிய ஏற்பாடு என்ற அடிப்படையிலும், நாங்கள் அனைத்துலகச் சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு உட்பட்டமுறையில் எமக்கென சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசினை அமைத்திட அனைத்து உரித்தும் கொண்டவர்கள்.

2. பாதுகாப்பு, வாழ்வுரிமை, மேம்பாடு, சமாதான சகவாழ்வு போன்ற மனிதப் பொதுப் பெருவிழுமியங்களைத் தழுவிய வாழ்வை தமிழீழமக்களாகிய நாங்களும் எட்டிக்கொள்வதற்கும், உலகில் வாழும் அனைத்து சுதந்திர மனிதர்கள் போல நாமும் தனித்தும் கூட்டாகவும், பாதுகாப்பாகவும், கௌரவமாகவும், சமத்துவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையுமுடைய தமிழீழத் தனியரசு அமைதல் மட்டுமே ஒரேயொரு வழிமுறை என்பதனையே வரலாறு எமக்குக் காட்டி நிற்கிறது.

3. தமிழீழத் தனியரசினை அமைப்பதற்கான எமது பெருவிருப்பினை அரசியல் வழிமுறையில் சனநாயக வாக்கெடுப்புகள் மூலமும், இனஅழிப்புக்;கு எதிராகத் தற்காப்பு ஆயுதம் ஏந்திப் போராடியமை மூலமும்; உறுதியானமுறையில் தமிழீழமக்களாகிய நாம் ஆறு தசாப்தங்களாக வெளிப்படுத்தி வந்துள்ளோம். எமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டவும் எம்மீது நிகழ்த்தப்படும் இனஅழிப்புக்குக் காரணமானவர்களை நீதியின்முன் நிறுத்துவதற்கும் ஏற்றவகையில் எமது விடயத்தில் மக்களாணை வாக்கெடுப்பு நடத்த ஆவன செய்ய வேண்;டுமென அனைத்துலக சமூகத்திடம் அடித்துக் கூறுகிறோம்.

4. இலங்கைத்தீவில் தமிழீழமக்கள் பாரம்பரியமாக பல நூற்றாண்டுகள் வாழ்ந்து வரும் வடகிழக்கிலுள்ள தொடர்நிலப்பகுதி தமிழீழமக்களின் தாயகமாக அமைகிறது. இத் தாயக நிலப்பகுதியே தமிழீழஅரசின் ஆட்சிப்புலமாக அமையும். தமிழீழத்தின் கடல், வான் எல்லைகள் அனைத்துலக சட்டங்களுக்கு அமைவாகத் தீர்மானிக்கப்படும்.

5. அமையப்போகும் தமிழீழத் தனியரசு ஜனநாயகவிழுமியங்களைத் தழுவியதாகவும் மனித உரிமைகளுக்கு உயரிய மதிப்பளித்துப் பேணிக் காக்குமொன்றாகவும,;; அனைத்துலக மனிதஉரிமைகள் பிரகடனம் உட்பட மனிதகுலவரலாற்றை முன்னோக்கி நகர்த்துவதற்கு வழிகோலும் வகையில் அமையப்பெறும் அனைத்து அனைத்துலக பிரகடனங்களையும் மனிதாபிமான சாசனங்களையும் ஏற்பாடுகளையும் தமிழீழ அரசு உளப்பூர்வமாக அங்கீகரித்துப் பின்பற்றும்.

6. தமிழீழத் தனியரசின் அரசியலமைப்பு மக்களால் தேர்வுசெய்யப்பட்ட அரசியலமைப்புப் பேரவையினால் வரையப்படும்போது அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிக்கப்படாத வகையிலும் சட்டமியற்றும் அதிகாரம், நிறைவேற்று அதிகாரம், நீதி அதிகாரம் போன்றவைக்கான தனித்துவங்கள் மதிப்பளிக்கப்படும் வகையிலும் அது வரையப்படும். மக்களால் நேரடி வாக்கெடுப்புமுறையின் ஊடாக தேர்வுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்களுங்கமைய இயங்கும் சட்டத்தின்பாற்பட்ட குடியரசாகத் தமிழீழம் அமையும். அதனது ஆளுகையில் மக்களால் தேர்வுசெய்யப்படுபவர்களை மக்களே அவசியமேற்படும் போது மீளப்பெறும் உரிமையைக் கொண்டிருப்பர்.

7. தமிழீழ அரசு ஒரு மதசார்பற்ற அரசாக அமையும். அதன்கீழ் சகல மக்களினதும் மத வழிபாட்டு உரிமையும் தங்கள் மதக்கடமைகளினை நிறைவேற்றுவதில் அவர்களுக்குரிய பண்பாட்டு உரிமையும் தங்கு தடையின்றி உறுதிப்படுத்தப்படும்.

8. தமிழீழ அரசின்கீழ் மரண தண்டனைக்கு இடமிருக்காது.

9. தமிழீழ அரசு மத, இனத்துவ, மொழிசார், சாதிய, பாலின, பாலியல் தெரிவுகள் காரணங்களால் தமிழீழ மக்கள் மத்தியில் எழக்கூடிய எந்தவொரு ஏற்றத் தாழ்வுகளிலிருந்தும் தனிமனிதர்களும் குடும்பங்களும் சமூகக்குழுக்களும் பாதுகாக்கப்படுவதற்கான அரசியலமைப்பு ரீதியான உத்தரவாதங்களினை உருவாக்கும். தமிழீழத்தின் குடிமக்கள் யாவரும் சட்டத்தின் முன் சமனானவர்களாகக் கருதப்படுவர்.

10. தமிழீழத்தில் வாழும் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான மக்களின் உரிமைகள் மதிப்பளித்துப் பேணப்படும். முஸ்லீம் மக்களின் தனித்துவமான அடையாளங்கள் மதிப்பளிக்கப்பட்டு அவர்கள் விரும்பும் வகையில் தமது வாழ்வை ஒழுங்கமைத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும். தமிழீழத்தில் தமது வகுபாகத்தினைத் தாமே உருவாக்குவதில் பங்குபற்றும் உரிமை முஸ்லீம் மக்களுக்குக் கொடுக்கப்படும். மலையகத் தமிழ் மக்கள் தழிழீழத்தில் குடியேறவிரும்பும் பட்சத்தில் அவர்களுக்கு உடனடியாகக் குடியுரிமை வழங்கப்படுவதுடன் அவர்கள் தமது வாழ்வை வளமாக அமைத்துக் கொள்வதற்கான திட்டங்களும் தமிழீழ அரசினால் நடைமுறைப்படுத்தப்படும்.

11. தமிழீழத்தாயக விடுதலைக்காகப் போராடிய அனைத்து வீரர்களும் தேசியவீரர்களாகத் தமிழீழ அரசால் மதிப்பளிக்கப்படுவார்கள். போராட்டத்தில் தமது உயிர்களை ஈகம் செய்தவர்கள் தேசிய மாவீரர்களாகப் போற்றப்படுவார்கள். மாவீரர்களதும் போராளிகளினதும் நேரடிக் குடும்பத்தினரின் நலன் பேணல் தமிழீழஅரசின் கடமையாக அமையும். தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் தமது உயிர்களை இழந்த பொதுமக்கள் நினைவாக தேசிய நினைவுச் சின்னமொன்று அமைக்கப்படும். மே மாதம் 18ம் திகதி தேசிய துக்க நாளாகவும் நவம்பர் 27ம் திகதி தேசிய மாவீரர் நினைவு நாளாகவும் நிறுவப்படும்.

கொள்கைகள்

வெளியுறவுக் கொள்கை:

12. தமிழீழத்தின் வெளியுறவுக் கொள்கை ஜனநாயகவழி முறையினைத் தழுவியதாக ஆட்சியமைத்துள்ள எல்லா நாடுகளுடன் கூடுதல் நட்புறவைப் பேணும் வகையில் அமையும். தென்னாசியாவினதும் இந்துசமுத்திரப் பிராந்தியத்தினதும் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் உறுதுணையாகும் வகையிலும் இந்தியமக்களுடன் தோழமையுணர்வை வெளிப்படுத்தும் வகையிலும் இந்தியாவுடன் சிறப்பான உறவினைத் தமிழீழம் பேணிக்கொள்ளும்;.

பொருண்மியக் கொள்கை

13. தமிழீழத்தின் பொருண்மியக் கொள்கை தமிழீழமக்களின் வளங்களையும் தேவைகளையும் கவனத்திற் கொண்டு உலகநாடுகளுடன் கூட்டுறவினை வளர்க்கக் கூடியவகையிலும்; தமிழீழத்தின் பொருண்மிய வளர்ச்சியில் புலம்பெயர் தமிழ் மக்கள் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்படும்.

மொழிக் கொள்கை

14. தமிழீழத்தாயகத்திலும், அயலிலும் வாழும் மக்களது நலன் சார்ந்தும் உலகம் தழுவிய தொடர்பாடல் பயன்பாடு கருதியும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் தமிழீழத்தின் உத்தியோகபூர்வ மொழிகளாக அமையும்.

கல்விக் கொள்கை

15. கல்வி ஓர் அடிப்படை உரிமையாகக் கருதப்பட்டு அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி என்பது தமிழீழத்தின் கல்விக் கொள்கையின் மூலக்கூறாக இருக்கும். தமிழீழத்தின் தேவைகளைக் கருத்திற் கொண்டும் தமிழீழத்தை உலகப்பரப்பில் வெற்றிகரமான நாடாக நிலைநிறுத்தத் துணைசெய்யும் வகையிலும் தமிழீழத்தின் கல்வித்திட்டம் வடிவமைக்கப்படும்.

மருத்துவ மற்றும் உடல் நலம்சார் கொள்கை:

16. மருத்துவ வசதிகளைப் பெற்;றுக் கொள்ளும் உரிமை ஓர் அடிப்படை உரிமையாகக் கருதப்படும். அரசினால் வழங்கப்படும் மருத்துவ சேவைகள் உயர்தரம் கொண்டதாகவும் இலவசமானதாகவும் அமையும். நோய்முன்தடுப்பு நடவடிக்கைகள் மருத்துவம் மற்றும் உடல் நலம்சார் சேவைகளில் முக்கிய பங்குபெறும்.

மேம்பாட்டுக் கொள்கை

17. மேம்பாடு என்பது பொருளாதார வளர்ச்சிநிலையினை மட்டும் குறித்து நிற்பதாகக் கருதப்படாது சமூக, மனிதவள மற்றும் பண்பாட்டு மேம்பாட்டுநிலையினை எட்டிக் கொள்வதும,; ஏற்றத்தாழ்வுகள் குறைந்தவொரு சமூகச் சமநிலையை உருவாக்குவதும் தமிழீழத்தின் மேம்பாட்டுக் கொள்கையின் முக்கியநோக்காக இருக்கும். அடையப்படும் மேம்பாட்டினை நீடித்து நிலைத்துப் பேணக்கூடிய வழிவகைகள் கண்டறியப்பட்டு அவை மேம்பாட்டுக் கொள்கையின் இணைந்த பகுதியாக உள்வாங்கப்படும்.

18. தமிழீழக் குடிமக்கள் அனைவரும் தமக்கான சொந்தமான குடிமனையை அமைத்துக் கொள்வதனையும், தமது வாழ்வாதாரங்களை உறுதியான முறையில் அமைத்துக் கொள்வதனையும், ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களைப் பேணிக் கொள்வதை ஊக்குவிப்பதனையும், பசி, பட்டினி, தொற்றுநோய்கள் போன்றவவை மக்களைத் தீண்டாது தடுப்பதனையும், குழந்கைள், கர்ப்பிணித்தாய்மார், முதியவர்கள் போன்றோர்க்குப் போதிய ஊட்டச்சத்துக் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் தமிழீழத்தின் மேம்பாட்டுத் திட்டங்கள் வடிவமைக்கப்படும்.

சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புக் கொள்கை

19. தமிழீழத்தின் ஆள்புல எல்லைக்குட்பட்ட நிலம், நீர், ஆகாயப்பரப்பும் அதன் வளங்களும் இயற்கையின் சமனிலையினைப் பாதிக்காவண்ணம் பாதுகாக்கப்படும். இயற்கையின் வளங்கள் யாவற்றின் மீதும் எமது எதிர்கால சந்ததியும் கொண்டிருக்கும் உரிமையினை ஏற்றுக்கொண்டு தற்போதைய தலைமுறையினரின் இயற்கை வள நுகர்வு எல்லைகள் வரையறுக்கப்படும்.

20. எமது தேசத்தில் கிடைக்கக்கூடிய சூரியவலு, காற்று, கடல் அலைகளின்வலு உள்ளிட்ட மீளப்புதுப்பிக்கப்படக்கூடிய சக்திமூலங்கள் வளர்த்தெடுக்கப்படுவதும் போரின்போது வலிந்து அழிக்கப்பட்ட தமிழீழ தேசிய அடையாளமும் இயற்கைவளமுமாகிய பனைமரம் உட்பட்ட வனவளங்கட்கான மீள்வனமாக்கல் முயற்சியும் முன்னுரிமைபெறும்.

குடியுரிமைக் கொள்கை

21. பிறப்பாலோ, பிறப்புவழி சந்ததிமுறையாலோ தமிழீழத்துடன் தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள் உலகின் எப்பகுதியில் வசித்தாலும் தமிழீழக் குடியுரிமைக்குத் தகைமை உடையவராவர்;. குடியேறுவதன் மூலம் குடியுரிமைக்குத் தகைமை பெறுவதும் தமிழீழக் குடிமக்கள் இருநாட்டுக் குடியுரிமை கொண்டிருப்பதும் அங்கீகாரமும் ஆதரவும் பெறும்.