இந்தியாவுக்கான சிங்களத் தூதர் பிரசாத் கரியவாசம், “சிங்களர்களும், தமிழர் தவிர்த்த வடநாட்டவரும் ஒரே இனத்தவரே” என்று 19.03.2013 அன்று கூட்டம் ஒன்றில் பேசினார். அவரது இந்த பேச்சுக்கு, இந்திய அரசோ, வடநாட்டுத் தலைவர்களோ மறுப்போ, எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்காத நிலையில், ஈழவிடுதலைக்காக பணியாற்றி வரும் சில தலைவர்கள் மட்டுமே கண்டனம் தெரிவித்தனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள், பிரசாத் காரியவசத்தின் கருத்து சரியானதே என அறிக்கை வெளியிட்டார். பிரசாத் காரியவசம் கூறியதில் என்ன தவறிருக்கிறது என்று கேள்வி எழுப்பியிருந்த அவர், இந்தியரும் சிங்களரும் ஒரே ஆரிய மரபினமாக இருப்பதோடு மட்டுமின்றி, தொடர்ந்து இணைந்தே செயல்பட்டு வருகின்றனர் என்றும் சுட்டிக் காட்டியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சேவ் தமிழ்ஸ் இயக்கத் தோழர் இளங்கோவன் எழுதிய கட்டுரையொன்று பொங்கு தமிழ் இணையத்திலும், கீற்று இணையத்திலும் வெளியானது. பிரசாத் காரியவசம் அவ்வாறு கூறியதற்கு வரலாற்று அடிப்படைகள் ஏதுமில்லை என்றும், சிங்களர்களும் வடநாட்டவர்களும் வேறு வேறு இனத்தவர்கள் தான் என்றும் அக்கட்டுரை நிறுவ முயல்கின்றது. ஈழத்தமிழர்களை தனிமைப்படுத்தும் நோக்கில்தான் சிங்களம் அக்கருத்தைப் பரப்புகிறது என்றும் அக்கட்டுரை கூறுகின்றது.

ஏற்கெனவே, தமிழீழத் தமிழர்களுக்காக வடநாட்டவர்கள் குரல் கொடுத்து வருவது போலவும், அந்த “ஒற்றுமை”யை பிரசாத் கரியவசம் போன்றவர்களை வைத்து, சிங்கள அரசு உடைப்பதுபோலவும் கற்பனை செய்து கொண்டு கருத்து கூறுவது தான் இதில் வேடிக்கையாக உள்ளது. ஈழத்தமிழர்களை விடுங்கள். வடநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் கூட எந்தவொரு “ஒற்றுமை“யும் நடப்பில் இல்லாத நிலையில், இல்லாத ஒரு “ஒற்றுமை” உடைந்து போவது பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?

இன்றைய, இந்திய நிலைமைகளை கணக்கில் கொண்டால், தமிழினம், தனித்து விடப்பட்ட இனமாகத்தானே உள்ளது? தமிழீழ சிக்கலிலும், தமிழ்நாட்டு இன உரிமைச் சிக்கல்களிலும் இது தானே யதார்த்தம்? இதில் என்ன ஐயம்?

இந்தியாவில் தமிழ்நாடு தனித்துவிடப்பட்டது, தமிழீழச் சிக்கலில்தான் வெளிப்படையாகத் பலருக்குத் தெரிந்த்து. எனினும், அதை ஏற்றுக் கொள்ள ஏன் மனம் வரவில்லை?

தமிழீழச் சிக்கலை நாம் வடநாட்டில் பரப்புரை செய்யவில்லை என்று, நம்மீதே குற்றம்சாட்டி தாழ்வு மனப்பான்மையான போக்கு தான் இங்கு சிலரால் பரப்பப்படுகின்றது.

2013 மார்ச் 7 அன்று, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழீழ சிக்கல் குறித்து விவாதம் நடைபெற்றதை நாம் அனைவரும் அறிவோம். அன்றைக்கு மக்களவை உறுப்பினர்கள் பேசிய பேச்சின், தணிக்கை செய்யப்படாத எழுத்து வடிவம் இது. http://164.100.47.132/synop/15/XIII/2sup+Sup+Synopsis-07-03-2013.pdf. மக்களவை உறுப்பினர்களின் தணிக்கை செய்யப்பட்ட பேச்சு வடிவம் இது. http://164.100.47.132/synop/15/XIII/2sup+Sup+Synopsis-07-03-2013.pdf

உத்திரப்பிரதேசம், பீகார், குஜராத், ராஜஸ்தான், மேற்குவங்கம், ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளைச் சோந்த மக்களவை உறுப்பினர்கள் அன்றைக்கு முதன்முறையாக தமிழீழ மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை, சிலர் மனித உரிமை மீறல் என்றும் சிலர் இனப்படுகொலை தான் என்றும் பேசினார்கள். அவர்களது பேச்சுகளில், முக்கியமானவற்றைக் கீழே தருகிறோம்.

இந்திய நாடாளுமன்றத்தில் வடநாட்டுக் கட்சிப் பிரதிநிதிகளின் இலங்கை குறித்தான கருத்துகள்

கட்சி பேசியவர் மாநிலம் பேசியதிலிருந்து முக்கிய வரிகள்
பாரதிய சனதா கட்சி(BJP) யஷ்வந்த் சின்கா முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் They have not only been massacred, abused, their human rights violated, atrocities committed, when the war was on but also it continues even today.  
பாரதிய சனதா கட்சி(BJP) ராஜேந்திர அகர்வால் உத்திரப்பிரதேசம் The atrocities committed on lakhs of Tamils in Sri Lanka is in contravention of Human Rights and is shameful.
சமாஜ்வாதி கட்சி(SP) முலாயம் சிங் யாதவ் உத்திரப்பிரதேசம் Tamils in Sri Lanka have been facing atrocities at the hands of Sri Lankan government for quite a long time.  The successive Governments did not take this issue seriously and did not hold any talks with the Sri Lankan Government in this  regard.  
பகுசன் சமாஜ் கட்சி (BSP) தாரா சிங் சவுகான் உத்திரப்பிரதேசம் A particular group of people are being attacked and killed there.  Innocent children are being killed in cold blood, women have been raped and shot dead.
திரிணாமூல் காங்கிரசு(TC) சவுகத் ராய் மேற்கு வங்கம் Between 2005 and 2009, genocide of the Tamil people happened in Sri Lanka and over one lakh Tamil people died.   
திரிணாமூல் காங்கிரசு(TC) சுவென்டு அதிகாரி மேற்கு வங்கம் it’s a genocide like incident
சோசலிஸ்ட் யுனிட்டி சென்டர் ஆப் இந்தியா(SUCI) தருண் மன்டல் மேற்கு வங்கம் Our relations with Sri Lanka are mythological, historical and democratic. There is a saying in Bengali.  There is a great poet.  He says:  “Bangalir chhele Bijoy Singha lanka koria joy,   Singhal naame rekhe elo nijo It neighbour with our humanitarian, progressive and brotherly international relations with neighbours.means, ‘a Bengali fellow, Bijoy Singh conquered Sri Lanka one day and named it Singhale on his name’. Today, definitely, we cannot conquer Sri Lanka by any sort of waging war or weapon but we must win our shourjer porickoy.”
பாரதிய சனதா கட்சி(BJP) சோலன்கி கிரித் குஜராத் Tamilians are continuously subjected to atrocities in Sri Lanka.  It is, therefore, in the fitness of thing that we should take a tough stand in this regard and must give a clear signal to the Sri Lankan Government that it will no more be tolerated.
பாரதிய சனதா கட்சி(BJP) மஹேந்திர சவுகான் குஜராத் The Sri Lankan Government is trying their best to obliterate the Tamilian culture, tradition and their language.
பாரதிய சனதா கட்சி(BJP) நரண்பாய் கச்சாடியா குஜராத் Sri Lankan Government is responsible for alleged war crimes and violation of human rights there. It is very unfortunate that thousands of innocent Tamilians in Sri Lanka have been killed barbarically since January, 2009. This is indeed a most dastardly act and oppose such type of ethnic cleansing vehemently.
ஜனதா தளம் - JD(U) ஜெகதீஷ் சர்மா பீகார் Genocide of the Tamil people has taken place.  The incidents reported by newspapers, magazines and television are very heart- rendering.  
சனதா தளம்(JDP) சரத் யாதவ் பீகார் I express my support to Sri Lankan Tamils.
ராஷ்ட்ரிய சனதா தளம்(RJD) லல்லு பிரசாத் யாதவ் பீகார் The issue does not merely concern the Tamils but whole of India. We will give full support to bring justice at the door step of Tamils.
ஜார்க்கண்ட் விகாஸ் மோச்சா(JVM) அஜய் குமார் ஜார்க்கண்ட் So far as the issue of Tamils in Sri Lanka is concerned 40,000 Tamils were killed and 1,60,000 disappeared as per the Sri Lankan Government records.
பிஜூ சனதா தளம்(BJD) பாத்ருஹரி மட்டாப் ஒரிசா Sri Lankan Tamil Civilians had to undergo an excruciating experience.  They suffered indescribable miseries.  Channel IV video broadcast has shown horrendous scenes of human rights violation in the name of establishing peace.  
பாரதிய சனதா கட்சி(BJP) அர்ஜூன் ராம் மெஹ்வால் ராஜஸ்தான் India should watch every activity going on with Tamilian people of Sri Lanka as well as the issue of minorities of Pakistan.
தெலுங்கு தேசம் கட்சி(TDP)  நம்ம நாகேசுவர ராவ் ஆந்திரா I demand from the Government of India to firstly condemn the Sri Lankan activities for its human rights violations and war crimes and the same should be treated as genocide.   

வடமாநிலங்களைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களின் கருத்துகளிலிருந்து நாம் சில முடிவுகளுக்கு எளிதில் வரலாம். 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் போர் நடந்ததிலிருந்து, இன்றைக்குவரை இலங்கையில் தமிழர்கள், சிங்கள இராணுவத்தால் கொடுந்துயரை அனுபவிக்கிறார்கள் என்ற உண்மை நிலை அவர்களுக்குத் தெரிந்தே உள்ளது. ஆனால், இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்பதிலும் அவர்கள் உறுதியாக இருப்பதை உணர முடிகின்றது.

நாம் யாருக்கெல்லாம் பரப்புரை செய்து புரிய வைக்கவில்லை என இங்குள்ள சிலர் சொல்கிறார்களோ, அவர்கள் எல்லாம் 2009இல் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், இந்திய அரசு அந்தப் போருக்கு உதவியது குறித்தும், இன்றைக்கும் சிங்கள அரசு தமிழர்களை ஒடுக்குவது குறித்தும் விளக்கமாகப் பேசினார்கள். பாலச்சந்திரன் படத்தைக் கையில் ஏந்திக் கொண்டு கண்ணீர் வடித்தார்கள்.

இவர்களுக்குத்தான், தமிழீழ இனப்படுகொலை குறித்து ஒன்றுமே தெரியாது நாம் தான் இனி தெரிவிக்க வேண்டும் என்று புலம்பிக் கொண்டு இருக்கின்றனர் சில ‘நண்பர்கள்’.

2009லிருந்து இலங்கையில் தமிழினம் கருவறுக்கப்படுகின்றது என்ற உண்மைநிலைத் தெரிந்தும் கூட, அதற்காக போர் நடைபெற்ற போது மட்டுமின்றி, இந்த விவாதம் நடைபெற்ற 2013 ஆம் ஆண்டுவரைக்குள், இவர்கள் ஒருமுறைகூட அதை அம்பலப்படுத்தி, இந்தியக் காங்கிரஸ் அரசின் முகத்திரையைக் கிழிக்க முற்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

ஆனாலும், இன்றைக்காவது அங்கு நடந்த இன அழிப்பை வடநாட்டவர்கள் பேசுகிறார்களே என அக மகிழ்ந்திருந்த வேளையில், சில நாட்களில் அதை அவர்களே உடைத்தெறிந்தனர்.

இனத்துரோகத்தால் அம்பலப்பட்ட தி.மு.க., காங்கிரசுக் கூட்டணியிலிருந்து வெளியேற முடிவெடுத்த நிலையில், இந்திய நாடாளுமன்றத்தில், தமிழீழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என்று தீர்மானம் இயற்றக் கோரியது. இத்தீர்மானத்தை வடநாட்டுக் கட்சிகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று தெரிந்து வைத்திருந்த காங்கிரசுக் கட்சி, தந்திரமாக இத்தீர்மானம் குறித்து பேச அனைத்துக் கட்சிக் கூட்டத்தை 20.03.2013 அன்று கூட்டியது. அந்தக்கூட்டத்தில், யாரெல்லாம் மார்ச் 7 அன்று தமிழீழத்தில் நடைபெற்ற கொடுமைகளை உணர்ச்சிப்பூர்வமாக விவரித்தார்களோ, அவர்களெல்லாம் ஒற்றைக் குரலில் ‘தமிழீழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை அல்ல’ என்று கூறினார்கள். நட்பு நாட்டுக்கு எதிராக தீர்மானம் எதுவும் இயற்றக்கூடாது என்றனர். நாம் அதிர்ச்சியில் ஆழ்ந்தோம்.

அக்கூட்டத்தில் கலந்து கொண்ட, சமாஜ்வாதிக் கட்சிப் பிரதிநிதியான ராமன் சிங், 1962ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய – சீனப்போரின் போது, இலங்கை இந்தியாவின் பக்கம் நின்றதாம், அவ்வாறு, நம்முடன் நின்ற ஒரு நாட்டுக்கெதிராக தீர்மானம் கூடாது என்றார். ஆனால், உண்மையில், 1962 சீனப்போரின் போது, இலங்கை சீனாவின் பக்கம் தான் நின்றது. ஏன் இப்படி வரலாற்றைத் திரித்து, தமது இலங்கை ஆதரவுக்கு இவர்கள் ஞாயம் கற்பிக்க முற்பட வேண்டும்? அப்படி என்ன அவசியம்?

பா.ச.க. நாடாளுமன்றக்குழுத் தலைவர் சுஷ்மாசுவராஜ், இந்தியக் கம்யூனிஸ்ட் குழுத் தலைவர் குருதாஸ் குப்தா, ஐக்கிய சனதா தளம், திரிணாமூல் காங்கிரசு பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் இதே குரலில் பேசினார்.

இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றுகின்ற தீர்மானம், இலங்கை அரசையோ, ஐ.நா. சபையையோ கட்டுப்படுத்த முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், ஒரு வெற்றுத் தீர்மானத்தைக் கூட ஆதரிக்க முன்வரவில்லை வடநாட்டுக் கட்சிகள். தமிழீழத்தில் தமிழர்களுக்கு நடைபெற்ற கொடுமைகள் இவர்களுக்கு தெரியவில்லையெனில், மார்ச் 7 அன்று அப்படி பேசியிருப்பார்களா? ஆனால், அவ்வளவும் பேசிய பிறகுதானே இது நடந்தது? இதை ஏன், இங்குள்ளவர்கள் உணரவில்லை?

வடமாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் அரசியல் சார்ந்த, பதவி அரசியல் சார்ந்த சில நிர்பந்தங்கள் இருந்திருக்கக்கூடும் என்றும், அதன் காரணமாக அவர்கள் காங்கிரஸ் அரசை பகைத்துக் கொள்ள முற்படவில்லை என்றும் கூட, இதற்கு விளக்கமளிக்கக்கூடும்.

அவ்வாறெனில், வடநாட்டு தேர்தல் கட்சிகளைத் தவிர்த்த, பதவி அரசியலுக்கு அப்பாற்பட்ட, தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட, இயக்கங்களாக, மனித உரிமை அமைப்புகளாக, அறிவுஜீவிகளாக, முற்போக்கான இதழ்கள் மற்றும் ஊடகங்கள் நடத்துபவர்களாக வடநாட்டில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள், எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தனர்?

தமிழீழச் சிக்கலாவது இன்னொரு நாட்டின் சிக்கல் என வடநாட்டவர்கள் கருதிக் கொள்ளக்கூடும். தமிழ்நாட்டு மீனவர்கள், வேறோரு அந்நிய நாட்டுக் கடற்படையால் இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனரே, அதற்கு வடநாட்டில் என்ன எதிர்வினை?

நாம் மிகவும் மதிக்கின்ற மேதா பட்கர், அருந்ததிராய், ராஜேந்திர சச்சார் உள்ளிட்ட வடநாட்டு முற்போக்காளர்கள், தமிழீழத்திற்காக, தமிழக மீனவர்களுக்காக அவரவர் பகுதிகளில் நடத்திய இயக்கங்கள் என்ன? கூட்டங்கள் எத்தனை? கட்டுரைகள் எத்தனை? கருத்தரங்கங்கள் எத்தனை?

சத்தீஷ்கர், காசமீர், அசாம், தெலுங்கானா, மணிப்பூர் என இந்திய அரசின் ஒடுக்குமுறைகள் பல இடங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கிறதே, அதையெல்லாம் அங்கிருந்து வந்தவர்கள் யாராவது வந்து சொன்ன பிறகு தான், நாம் எதிர்வினையாற்ற வேண்டும என தமிழகத்தில் நாம் நினைத்தாவது பார்த்திருப்போமா?

ஒடுக்குமுறை நிகழும் பகுதிகளிலிருந்து யாராவது வந்து, அங்கு நிலவும் ஒடுக்குமுறையை எடுத்துரைத்த பிறகு தான், நாம் அச்சிக்கல் குறித்து பேச முடியும், எழுத முடியும், எதிர்வினையாற்ற முடியும் என தமிழ்நாட்டில் செயல்படுகின்ற நாம் என்றைக்காவது, எந்த சிக்கலுக்காவது நினைத்துப் பார்த்திருப்போமா?

சத்தீஷ்கரில் பழங்குடியின மக்கள் மீது பச்சை வேட்டை நடத்த இந்திய அரசு முயற்சித்த போது, அதற்கு எதிராக சென்னையில் கண்டனக் கூட்டம் நடந்ததே? அதை அங்கிருந்து வந்த மாவோயிஸ்டுகளா நடத்தினார்கள்? தமிழகத்தில் செயல்படுகின்றத் தோழர்கள் தானே, அக்கூட்டத்தை ஒருங்கிணைத்து, எழுத்தாளர் அருந்ததிராய் அவர்களை அழைத்து வந்து பேசச் சொன்னார்கள்? தமிழர் கண்ணோட்டம் உள்ளிட்டு இங்கு தமிழின இதழ்கள் இதனை எழுதினவே.

மணிப்பூர், காசுமீர், அசாம் என மக்கள் மீது இந்திய இராணுவம் எங்கெல்லாம் ஒடுக்குமுறை செலுத்துகிறதோ, அதையெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள தமிழ்த் தேசிய அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கண்டிக்கிறார்கள். இந்திய அரசு, ஆரியப் பார்ப்பன அரசாக, தேசிய இனங்களை ஒடுக்குகிறது என தங்கள் இதழ்களில் அதை எழுதி அம்பலப்படுத்துகிறார்கள். புதிய புத்தகங்களை வெளியிட்டு, இந்திய அரசின் முகத்திரையை, இங்குள்ள உணர்வார்ந்தப் பதிப்பகங்கள் கிழிக்கின்றன. எத்தனையோ அரங்கக்கூட்டஙக்ள இதுவரை நடத்தப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் யார் சொல்லி நாம் செய்தோம்?

இந்திய அரசின் கொடுமைகளைப் பேச, தமிழகத்தில் செயல்படுகின்ற அமைப்புகள் தான் முனைப்புடன் செயல்பட்டு, மேதா பட்கரையும், அருந்ததிராயையும், பேராசிரியர் கிலானி அவர்களையும் தமிழகத்திற்கு அழைத்து வந்து கூட்டங்கள் நடத்துகின்றன. ஆனால், நம்முடைய சிக்கல்களுக்கு, வடநாட்டில் செயல்படுபவர்களின் எதிர்வினை என்ன? வடநாட்டில் அவர்கள் தமிழீழ சிக்கல் குறித்தும், தமிழ்நாட்டு இனஉரிமைச் சிக்கல்கள் குறித்தும் வெற்று கண்டனமோ, வெகுமக்கள் இயக்கமோ நடத்தாததன் மர்ம்ம் தான் என்ன?

எங்கோ இருக்கும் பி.பி.சி. தொலைக்காட்சிப் பேசுவதை, சேனல்-4 தொலைக்காட்சி பேசுவதை, கார்டியன் பேசுவதை, இங்குள்ள வடநாட்டவர்களோ, ஊடங்களோ பேசவில்லை.

2 கேரள மீனவர்களுக்காக பேசுகின்ற வடநாட்டுக் கட்சிகளும், ஊடகங்களும், இயக்கங்களும், 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டபோதும், இன்றைக்கும் அவமானப்படுத்தி அடிக்கப்படுகின்ற போதும், வடநாட்டில் இருந்து எந்தவொரு கண்டனமும் எழவில்லையே ஏன்? இதில், கட்சி எல்லைகளைக் கடந்து வடநாட்டவர்கள் ஒன்றுபடுவது எப்படி?

1962ஆம் ஆண்டு தொடங்கி, பாகிஸ்தானுடனும், சீனத்துடனும் போர் ஏற்பட்ட நாட்களிலும், 2001ஆம் ஆண்டு குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்ட போதும், கார்கிலில் போர் நடந்த போதும், அது தமிழகத்தில் கடுமையாக எதிரொலித்த்து. குஜராத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, இந்திய அரசின் போர் நிதிக்காக என இந்தியாவிலேயே அதிகமான நிதி தமிழ்நாட்டில் தான் திரட்டப்பட்டது. வங்கதேசத்தை உருவாக்க, பாகிஸ்தானுடன் இந்திய அரசு போரிட்ட போது, அதற்கும் இந்தியாவிலேயே அதிகமாக நிதி கொடுத்தது தமிழ்நாடு தான்.

குஜராத் நிலநடுக்கத்தில் மக்கள் பாதிக்கப்பட்டதைக் கண்டு, தமிழ்நாட்டு வீதிகளில் துணி சேகரித்ததெல்லாம் நம் நினைவை விட்டு இன்னும் அகலவில்லை. அந்தளவிற்கு, தமிழ்நாடு இந்தியாவின் பிற பகுதிகளில் எந்த பாதிப்பு வந்தாலும், அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனப்பதைப்புடன் உதவியிருக்கிறது. அப்படி உதவுவதும் தவறில்லை!

ஆனால், தமிழ்நாடு ‘தானே’ என்ற கொடூரப்புயலால் உருக்குலைந்து பாதிக்கப்பட்ட போது நமக்கு யாரும் இப்படி உதவியதாக செய்தியில்லை. இந்திய அரசின் பிரதமர், ஒரு கண்துடைப்பு ஹெலிகாப்டர் பயணமாகக்கூட, இந்த மயான பூமிக்கு வரவில்லை. எந்த வடநாட்டுப் படைப்பாளியும் கண்ணீர் வடிக்கவில்லை! நாம் தான் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தோம்.

தமிழீழத் தமிழரை அழித்த சிங்களப் படைக்கு தமிழகத்தில் வைத்தே பயிற்சி கொடுத்த இந்திய அரசின் செயலுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்த நிலையில், அந்த பயிற்சிகள் தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களில் நடைபெற்றது. இனப்படுகொலை செய்த இராணுவம் நம் மண்ணில் வந்து பயிற்சி பெறுகிறதே, என மனித நேயத்துடன் கூட அங்குள்ளவர்கள் யாரும் அதைக் கண்டித்துப் போராடவில்லை.

தமிழீழ இனப்படுகொலையை அம்பலப்படுத்தும் வகையில் சிங்கள வீரர்கள் பங்கேற்கும் ஐ.பி.எல். போட்டிகளை தமிழகத்தில் நடத்தக்கூடாதென தமிழக மாணவர்கள் முன்வைத்தக் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஐ.பி.எல். போட்டிளில் சிங்களருக்குத் தடை விதித்தது. இத்தடை விதிக்கப்பட்ட மறுகணமே, கேரளாவிலிருந்து ஒரு அறிவிப்பு வந்தது. “எங்கள் மாநிலத்தில் நீங்கள் தாராளமாக வந்து விளையாடலாம். அனைத்து வசதிகளையும் நாங்கள் செய்துத்தர தயாராக இருக்கிறோம்” என்றது கேரளா. கேரள அரசின் அறிவிப்புக்கு எதிராக, கேரள முற்போக்காளர்கள் யாரும் வீதிக்கு வந்துவிடவில்லை.

வேறொரு நாட்டில், மலையாளிகளை நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டு, அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் இதே போல கிரிக்கெட் விளையாட வந்தால், இதே போன்ற அறிவிப்பு கேரள அரசிடமிருந்து வருமா என எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஏற்கெனவே, தமிழர் மீது திணிக்கப்பட்ட அணுஉலைகளில் ஒன்றைக்கூட தனது மாநிலத்தில் வைத்துக் கொள்ள அனுமதிக்காத கேரளா, அந்த அணுஉலைகளில் இருந்து மின்சாரம் கிடைத்தால் மட்டும், அது எங்களுக்கு வேண்டுமெனக் கேட்ட நிகழ்வுதான் நினைவுக்கு வந்தது.

ஆஸ்திரேலியாவில் வடநாட்டு இந்தி மாணவர்கள் சிலர் தாக்கப்பட்ட நிகழ்வை இந்தியாவுக்கே அவமானம் என வர்ணித்த வடநாட்டு ஊடங்களும், திரைத்துறை பிரபலங்களும், தினந்தோறும் தாக்கப்படுகின்ற சக ‘இந்திய’னாக அவர்களால் சொல்லப்படும் தமிழக மீனவர்களுக்காக, ஒருவரிக் கண்டனம் கூட தெரிவித்ததில்லை.

இப்பொழுதும், கேரள, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் ஆற்று நீர் உரிமைகளில் மட்டும்தான் தமிழினத்திற்கு எதிராக நடந்துகொள்கிறார்கள் என்றும் அவர்களுக்கு இனப்பகையெல்லாம் கிடையாது என்றும் தமிழ்நாட்டிலேயே சிலர் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், நாம் ஏமாளிகளல்லாமல் வேறென்ன?

இப்படி இந்திய அரசாலும், இதன் ஆதிக்கப் போக்கிற்கு சாமரம் வீசுகின்ற மாநிலங்களாலும் தமிழினம் இன்றைக்குத் தனிமைப்பட்டுள்ள நிலையில், இதை எதற்காக நாம் மூடிமறைக்க வேண்டும்?

வடநாட்டுக் கட்சிகள் அனைத்தும், இந்திய அரசுடன் இணைந்து கொண்டு தமிழ் இனத்தின் மீது வன்மமுடன் செயல்படுவதற்கான காரணம், அவர்களது ஆரிய இனச்சார்பே என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அறுதியிட்டுக் கூறிவருவதையே நடைமுறை நிகழ்வுகள் மெய்ப்பித்துக் கட்டுகின்றன. இந்த ஆரிய இனச்சார்பு வெளிப்படையாக, ஆரிய இனப்பெருமிதமாகவே பழைய வடிவில் இன்று நீடிக்கவில்லை. “இந்தியன்” என்ற புனைவுடன் அது உலாவந்து கொண்டுள்ளது.

இந்திய அரசு, இந்தியாவிலுள்ள அனைத்துத் தேசின இனங்களையும் ஒரே தன்மையில் ஒடுக்குவதில்லை. ஆரிய மரபினத்தைச் சேர்ந்த வடநாட்டவர்கள் மீதும், அதனுடன் மொழி கலப்பிலும், இனக்கலப்பிலும் பிறந்து, ஆரியத்துடன் சமரசமாகிப் போன மலையாளி உள்ளிட்ட தேசிய இனத்தவர்கள் மீதும் இந்திய அரசு செலுத்துகின்ற ஒடுக்குமுறைக்கும், தமிழ் இனத்தின் மீது இந்திய அரசு செலுத்துகின்ற ஒடுக்குமுறைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இந்த வேறுபாடுதான், இந்திய அரசின் ஆரிய இனச்சார்பை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது.

தமிழ் இனம், ஆரியத்தை ஆண்டாண்டு காலமாக எதிர்த்த இனம். இன்றைக்கும், சமற்கிருதக் கலப்பில்லாமல் நிற்கக்கூடிய தனித்த மொழி தமிழ் தான். சிந்துசமவெளித் தமிழர் நாகரிகத்தை அழித்த அதே ஆரிய இனவெறி தான், தமிழர்களின் நிகழ்காலத் தலைநகராக விளங்கியக் கிளிநொச்சியை ஆரிய இந்திய – சிங்கள அரசுகள் ஒழிக்கும்போது வெளிப்பட்டது. இன்றைக்கும் ஆரிய இந்தியத்துடன் மோதிக் கொண்டிருக்கும், காசுமீரி, மணிப்பூர், அசாம் தேசிய இனத்தவர்கள் ஆரியத்துடன் தொடர்பில்லாத இனக்குழுக்கள் என்பதை நாம் இணைத்துப் பார்க்க வேண்டும்.

ஆரிய இனத்தின் உட்பூசலில் உருவான மதம் தான் பௌத்தமாகும். ஆரிய இன மன்னரான அசோகன், பௌத்தத்தை நிறுவ இலங்கைத் தீவிற்குச் சென்றிருந்தாலும், அவனுடைய ஆரிய இன அடையாளங்கள் தான் இன்றைக்கும், சிங்களத்தின் அடையாளமாகவும், இந்தியத்தின் அடையாளமாகவும் விளங்குகின்றது.

ஆரிய மன்னரான அசோகனின் சிங்கச் சின்னமே, இந்திய அரசின் சின்னமாகவும், ஆரிய வம்சத்து விஜயனின் சிங்கக்கொடியே சிங்கள அரசின் சின்னமாகவும் விளங்குகிறது. இன்றைக்கும், ஆரியப் பார்ப்பனர்களின் வேதமதப் பெருமிதங்கள் தான், இவ்வரசுகளின் பெருமிதங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. பத்மபுசன், பத்மஸ்ரீ, ஆரியபட்டா என தொடர்ந்து, ஆரிய அடையாளப் பெயர்களையே இந்திய அரசு தனது திட்டங்களுக்கு சூட்டுகின்றது. சிங்கள அரசின் அதிபர்கள் பௌத்தர்களாக இருந்தாலும் கூட, ஆரியப் பார்ப்பன வைணவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் திருப்பதி கோவிலில் சாமிதரிசனம் செய்யத் தவறுவதில்லை.

india_singala

வங்கதேசத்தை உருவாக்கத் துணிந்த இந்திய அரசு, வங்கதேசம் உருவானால் மேற்கு வங்க மக்களும் அவர்களும் ஒரே இனம், எனவே வங்கதேசத்தவரோடு, மேற்கு வங்கத்தவர்கள் இணைந்து விடுவார்கள் என சிறிதும் சந்தேகப்படவில்லை. ஆனால், தமிழீழம் உருவானால் மட்டும், தமிழ்நாடு அவர்களுடன் சென்று விடும் என அச்சப்படுகிறதே ஏன்? தமது எதிரியான தமிழர்களை மட்டும் எப்போதும் சந்தேகப்பட்டியலிலேயே வைத்தள்ளது இந்திய அரசு.

இப்படி, ஆரிய அடையாளங்களுடன் வெளிப்படையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற இந்திய – சிங்கள அரசுகள், தனது ஆயிரமாண்டு கால எதிரியாக விளங்கும் தமிழர்களை தமிழ்நாடு-தமிழீழம் என வேறுபாடு காட்டாமல், அழித்தொழிக்க வேண்டுமென நிற்கின்றனர்.

இந்த அடிப்படை உண்மைகளை ஏற்றுக் கொள்ளாமல், இந்திய – சிங்கள அரசுகளின் ஆரிய இனவெறிப் பாத்திரத்தை அம்பலப்படுத்தாமல், தமிழினத்திற்கு நாம் சிறிதளவும் துணை செய்ய முடியாது.

நாம் தமிழீழப் போராட்டத்திற்குத் துணை செய்ய வேண்டுமெனில், இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும், உலக வல்லாதிக்கத்திற்கு எதிராக யார் யார் போராடுகிறார்களோ, அவர்களைத்தான் அணி சேர்க்க வேண்டும். அதைத்தான் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தொடர்ந்து வலுயுறுத்துகிறது. (காண்க: நான்காம் உலகமமும், தமிழ்த் தேசியமும், கி.வெங்கட்ராமன், http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22154&Itemid=139).

காசுமீர், மணிப்பூர், மிசோரம், அசாம் மட்டுமல்லாமல், பாலஸ்தீனம், திபெத் என ஒடுக்கப்படுகின்ற தேசங்களுடன் நாம் அணிசேர வேண்டும். அதுவும், ஒருவழிப் பாதையாக இருக்கக்கூடாது. நமது சிக்கல்களுக்கு அவர்களும், அவர்களது சிக்கல்களுக்கு நாமும் குரல் கொடுத்துப் போராட வேண்டும் என்ற வகையில், அந்த அணிதிரட்டல் நடைபெற வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோம்.

அதே வேளையில், ‘அணிசேர்க்கிறோம்’ என்ற பெயரில், ஆரிய இந்தியத்துடன் சமரசம் செய்து கொண்டவர்களை, ‘நட்பாக’ அணுகி அணிசேர்க்க முனைந்தால், அது தோல்வியிலும் துரோகத்திலும் தான் முடியும் என்பதையும் எச்சரிக்கிறோம்.

- க.அருணபாரதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர்