பெறுநர்.

மாண்பமை சட்டமன்ற உறுப்பினர்கள்.

தமிழக சட்டப்பேரவை.

பொருள்:தமிழக சிறைகளில் 10ஆண்டிற்கு மேல் தண்டனை முடித்த ஆயுள்சிறைவாசிகளின் முன் விடுதலை கோரிக்கை சம்மந்தமாக.

வரலாற்று சிறப்புமிக்க தமிழக சட்டமன்றத்தின் மாண்பமை மக்கள் பிரதிநிதிகளே….

தமிழகம் தன்னகத்தே பலவரலாற்று சிறப்புமிக்க விழுமியங்களை உள்ளடக்கிய ஒரு நீண்ட நெடிய தென்மைவாய்ந்த ஒரு இனத்தின், மக்கள் தொடர்ச்சியின் பிரதிநிதிகளாக இருக்கும் உங்களின் கனிவான கவனத்திற்கு இந்த மடலை சமர்பிக்கிறோம்.

நாங்கள் பேசுவது விளிம்பு நிலை மனிதர்களாக இன்றைக்கு தமிழக சிறைகளில் பல்லாண்டுகளாக சிறையில் வாடும் சிறை மனிதர்களுக்காக…

தமிழக சட்டமன்றத்தின் நிதி நிலை அறிக்கையும்,அதை தொடர்ந்து பல்வேறு மானிய கோரிக்கைகளுக்கான விவாதங்கள் நடை பெற்று வரும் இக் கூட்ட தொடரில் தமிழக சிறையில் ஆயுள்சிறைவாசிகளாக 10ஆண்டுகளுக்கு மேல் தங்களின் தண்டனை காலத்தை கழித்துவிட்டு எப்போழுது தங்களின் விடுதலைக்கான நாள் வருமோ என்று எதிர்ப்பார்த்து நாட்களை நகர்த்திவரும் ஆயுள்சிறைவாசிகளின் விடுதலைக்காக தங்களின் மேலான கவனத்திற்கு அவர்களின் விடுதலை கோரிக்கையை மக்கள் மன்றத்தில் தங்களின் கனிவான குரல் ஒலிக்க இந்த மனுவை சமர்பிக்கிறோம்.

சிறையில் உள்ள பெரும்பான்மையானவர்கள் படிப்பறிவு அற்ற பாமர ஏழைகள், உழைப்பாளிகள், இசுலாமியர்கள் தலித்துகள், தொழிலாளிகள். ஒரு தவறுக்காக தண்டனை வழங்குவது ஒருவனுக்காக இருந்தாலும்,தண்டனை அனுபவிப்பது அவனின் ஒட்டுமொத்தக் குடும்பமும் தான். ஒரு சிறையாளியின் குடும்பத்தையும் சிறைக்கைதியாகவே பார்க்கும் அவல நிலை நம் சமூகத்தில் உள்ளது.

“குற்றத்தை விட்டு விட்டு, குற்றவாளியை வெறுக்கும் மனநிலை” தான் இங்கு அதிகமாகக் காணப்படுகிறது. சிறைவாசியை விட அவன் குடும்பம் படும் அவமானம் மிகக் கொடுமையானது. சிறையில் இருப்பவர்கள் பெரும்பான்மையானோர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளவர்கள். இவர்களால் பணம் செலவழித்து சொந்தமாக வழக்கறிஞர் அமர்த்தி வழக்கு நடத்த முடியாமல் தண்டனை பெற்றவர்கள் தான் அதிகம் பேர் உள்ளார்கள்.

இப்போது இருக்கும் சிறைச் சட்டம், 1894 ஆம் ஆண்டு ஆங்கில அரசால் இயற்றப்பட்ட சட்டம்.வெள்ளையனுக்கு எதிராக இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் கிளர்ச்சிகள் நடந்த காலகட்டம் அது. நமது மக்களை அடக்கி ஒடுக்கி ஆள ஒரு கடுமையான சிறைச் சட்டம் தேவைப்பட்டது. அதற்காகக் கொண்டு வரப்பட்டது தான் இன்றைய சிறைச்சட்டம். சிறையில் இருப்பதே கொடுமையான விசயம்.அதிலும் அரசியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சிறைவாசிகளின் நிலைமை மிகக் கொடுமையானது. ஆயுள் தண்டனை என்பது உயிர் உள்ள வரை சிறையில் இருக்க வேண்டும் என்பது வெள்ளையன் போட்ட சட்டம். இதையே 1947க்குப் பின் சிறு சிறு மாற்றங்கள் செய்து சிறையில் நன்னடத்தையுடன் அதாவது உயிரிருந்தும் உணர்வற்று,சிறையில் அதிகாரிகள் அடித்தாலும் உதைத்தாலும்,நாம் எதிர்த்துப் பேசாமல் 20 ஆண்டுகள் இருந்தால் பொது மன்னிப்பில் விடுதலை செய்யலாம் என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்தது.அதை மாநில அரசுகள் இதுவரையிலும் அதைக்கூட முழுமையாக பின்பற்றவில்லை.

ஆயுள் சிறைவாசிகள்

ஆயுள் சிறைவாசம் என்றால் வெள்ளையர்கள் ஆண்டபோது 20 ஆண்டுகள் என்றும் பொதுவாக மக்களிடம் 14ஆண்டுகள்தான் என்றும் அரசுகள் அறிவுரை கலகத்தின் மூலம் 14 ஆண்டுகளில் விடுதலைபற்றி பரிசீலிக்கப்படுகிறது என்றும் இருக்கிறது

ஆனால் உச்சநீதிமன்றம் ஒரு தீர்புரையில்அதற்கு விளக்கம் அளிக்க முற்படும்போது ஆயுள் சிறை என்றால் அம் மனிதனின் ஆயுள்காலம் வரையே என்று தீர்ப்புகள் வழங்கியது.ஆனால் அரசியல் அமைப்புச்சட்டம் பிரிவு 161ன்படி தண்டனையை குறைப்பதற்கான அதிகாரத்தை மாநில ஆளுனர்களுக்கு வழங்குகிறது.அப்படி முன் விடுதலை செய்யப்படும் ஆயுள் சிறைவாசிகளை பாரபட்சம் பார்க்காமல் விடுதலை செய்யவேண்டும் என்று ஆதே உச்சநீதிமன்றம் பல தீர்புரைகளில் கூறி இருக்கிறது ஆனால் நடை முறை என்பது வேறு விதமாக இருக்கிறது.

கேரளாவில் 7ஆண்டுகளில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவதையும், ஆந்திராவில் 5ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுவதையும்,உத்திரபிரதேசத்தில் கான்சிராம் பிறந்த தினத்தை முன்னிட்டு 10,000த்திற்கும் மேற்பட்ட சிறைவாசிகளை மாயவதி அரசு விடுதலை செய்ததையும், மகாராஸ்ட்ரா, மேற்குவங்கம்,கர்நாடகபோன்ற மாநிலங்களில் ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை செய்யப்படுகிறார்கள்

ஆனால் தமிழகத்தில் தாங்கள் எப்போழுது விடுதலை செய்யப்படுவோமோ இல்லை சிறையிலேயே செத்து விடுவோமோ என்று தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் நிகழ்வே நடந்து கொண்டிருக்கிறது.

சிறை இன்றைக்கு மன நோயாளிகளை அதிக அளவு உற்பத்தி செய்யக்கூடிய இடமாக இருந்து வருகிறது.

தமிழக அரசிற்கு முன் விடுதலை செய்யக்கூடிய தனி அதிகாரத்தை அரசியல் சட்டம் வழங்கி இருந்தாலும் தன் சுய விருப்பு வெருப்புகளுக்கு ஏற்ப முன் விடுதலையை வழங்கி வரும் போக்கையே நாம் காண்கிறோம்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 161மாநில அரசுகளுக்கு தண்டனை குறைபிற்கான அதிகாரத்தை கொண்டுள்ளது.,அரசமைப்பு சட்டப்படி நீதிமன்றங்கள் விதிக்கும் தண்டனையை நிறுத்திவைக்கவோ, அல்லது மாற்றி அமைக்கவோ அதில் ஒரு பகுதியை குறைக்கவோ அல்லது தண்டனையை முற்றிலுமாக நீக்கவோ மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெரும் பகுதி அரசுகள் ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்வதில்லை அப்படியும் முன் விடுதலை செய்தால் சமுக வழக்குகள் என்ற காரணம் காட்டியும் சில குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டனை பெற்றவர்கள் என்ற காரணத்தினால் இசுலாமியர்கள்,தலித்கள்,அரசியல் காரணங்களுக்காக சிறைப்பட்டவர்களை விடுதலை செய்வதில்லை.

கடந்த ஆட்சியில் 2008ம்வருடம் அரசின் பொதுமன்னிப்பின் கீழ் தமிழக சிறைகளில் ஆயுள்தண்டனை பெற்ற 1405 சிறைவாசிகள் 7 ஆண்டுகள் கழித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டார்கள் ஆனால் அதில் ஒரு முஸ்லீம் சிறைவாசிகூட இல்லை ஏன் இந்த பாரபட்சம்..?

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 14இந்தியாவில் உள்ள எந்த நபருக்கும் சட்டத்தின் முன் சம உரிமையும் சட்டத்தின் முன் சமமான பாதுகாப்பையும் பெற அரசு மறுக்கக்கூடது எனவும்.

பிரிவு 15சமயம்,பாலினம்,பிறப்பிடம் அல்லது வேறு எந்த காரணத்திற்காகவும் எந்த குடிமகனிடத்திலும் அரசு பாகுபாடு செய்யக்கூடாது எனவும் கூறுகிறது.இதையே வலியுறுத்தி உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புரைகளில் கூறுகிறது ஆனால் உச்சநீதிமன்ற தீர்புரைகள் இங்கு பின்பற்றுவதில்லை.

ஆயுள் தண்டனை பெற்று 10, 15 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டு ஒருவன் விடுதலை ஆவான் என்றால்,அவனால் அவன் குடும்பத்துக்கோ,சமூகத்துக்கோ எந்தப் பயனும் இல்லை.அவனின் உழைக்கும் சக்தி முழுவதையும் சிறையிலேயே கழித்து விட்டு அனைவருக்கும் ஒரு பாரமாகவே வாழ வேண்டிய ஒரு நிலை உள்ளது.

பல்லாண்டு சிறை வாழ்க்கையில் திருமணம் ஆன பின் சிறைக்கு வந்த பெரும் பாலானவர்களின் திருமண வாழ்வு முறிந்து போய் உள்ளது.அப்பா மகன்,அப்பா மகள், கணவன் மனைவி சம்பந்தங்களும், ஒட்டுமொத்த குடும்ப கட்டமைப்பே சிதைந்து போகிறது. இதன் தாக்கமாக மன நோய்க்கு ஆளானவர்கள் அதிகம்.சமுதாயத்தில் தவறுகள் நடக்க பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் காரணங்கள் உள்ளன.

தவறு செய்தவனுக்கு ஆயுள் தண்டனை கொடுப்பதால் மட்டும் சமூகத்தில் நடக்கும் குற்றங்களை தடுத்து நிறுத்திவிட முடியாது. தவறு செய்யும் போது தண்டிக்கும் சட்டம், தன் தவறை நினைத்து வருந்தும் போது அவனை வாழ விட கடமைப்பட்டுள்ளது.எந்த வகையிலும் சமூகம் சட்டத்தைச் சார்ந்து இருக்கவில்லை.இது ஒரு சட்டரீதியான கற்பனையே. மாறாக சட்டமே சமூகத்தைச் சார்ந்து இருக்க வேண்டும்.


மனிதனின் வாழ்க்கை நிலை மாறும் போது சட்டமும் மாறித்தான் ஆக வேண்டும். சிறைச் சட்டங்கள் இன்னும் மென்மையாக்கப்பட வேண்டும். “கடுமையான சட்டங்கள் திறமையான குற்றவாளிகளை உருவாக்கும்”என்பதை கவனத்தில் கொண்டும் சிறையில் இருப்பவர்கள்பெரும்பான்மையானவர்கள்,இசுலாமியர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழை,எளிய மக்கள் தான் என்பதைக் கவனத்தில் கொண்டும் இந்த சிறை சட்டத்தை மாற்றி அமைக்கவேண்டும்.

மக்கள் விரோத சிறைச் சட்டங்களையும்,விடுதலை சிபாரிசு கமிட்டியின் விதிமுறைகளையும் களைந்துவிட்டு மக்கள் நலனில் அக்கறை கொண்ட சட்ட வல்லுனர்கள்,சமூக ஆர்வலர்கள் சிறை பிரச்சினைகளை நன்கு புரிந்து கொண்டுள்ள முன்னாள் ஆயுள் தண்டனை சிறைவாசிகள் கொண்ட ஒரு குழுவை மாநில அரசுகள் அமைத்து, புதிய சிறை சட்டத்தையும், சிறை மேம்பாட்டையும் உருவாக்க வேண்டும்.

இந்திய சிறை விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களுக்கு பின் 1983ஆம் ஆண்டு நீதிபதிகள் திரு. ஆனந்த், திரு. நாராயண், திரு. முல்லா ஆகிய மூவர் குழு ஒன்றை மறைந்த பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்கள் அமைத்தார். அந்தக் குழு இந்தியாவில் உள்ள, தமிழகம் உட்பட பல முக்கிய சிறைச்சாலைகளுக்கு சென்று ஆய்வு செய்து அதன் இறுதி அறிக்கையை 1984 ஆம் ஆண்டு நடுவண் அரசுக்கு சமர்பித்தது. அந்த அறிக்கையை “முல்லா கமிசன்” அறிக்கையை மாநில அரசுகள் பரிசீலிக்கவேண்டும்.


அந்த அறிக்கையில் மிக முக்கியமாக தெரிவித்தது என்ன வென்றால் எந்த ஒரு கைதியையும் அதிகபட்சமாக 7ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைத்து வைத்து இருந்தால் அவனின் மனித பண்புகளை மறக்கச் செய்வதுடன்,அவன் மிகக் கொடூர சிந்தனையுள்ளவனாக மாறிவிடுவான்.இது சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.ஆனால் இந்த கமிசன் அறிக்கை குப்பையில் போடப்பட்டு விட்டது. தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள் ஒரு சிறைவாசியின் மனமாற்றத்திற்கு 7 ஆண்டுகள் அவனை சிறை வைத்தாலே போதும் என்று கூறியுள்ளார்.

அன்பான மக்கள் பிரதிநிதிகளே…

மனிதநேய மாண்பாளர்களே…..

இது கைவிடப்பட்டவர்களின் கடைசிக்கோரிக்கையாகும்…

சிறை ஒருமனிதனின் அனைத்து இயக்கங்களையும் கட்டுப்படுத்துகிறது.

நீ எப்படி வாழ வேண்டும் என்ற வரையரையை சிறை நிர்வாகமே தீர்மாணிக்கிறது இன்னும் சொல்ல வேண்டுமானால் நீ வாழ வேண்டுமா இல்லையா என்ற தீர்மாணங்கள் கூட அதுதான் முடிவு செய்கிறது

அது பெரும்பாலும் நெறிப்படுத்தும் இடமாக இல்லாமல் வெறியேற்றும் இடமாகவே இருக்கிறது.சிறைப்பட்டு இருப்பவர்கள் மனித பிறவிகளே இல்லை.அவர்களுக்கு வாழும் உரிமையும் இல்லை..

இப்படிதான் பார்க்கப்படுகிறது சிறைவாசிகளை.அவர்களின் உலகம் தனித்த உலகமாக பார்க்கப்படுகிறது.மன இருக்கமும்,சேர்ந்து ஒரே இடத்தில் பல வருட வாழ்க்கை சூழல் அவர்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகள் சிறை சூழலில் கடுமையான நெருக்கடி இப்படி பல்வேறுபட்ட துன்பங்கள்.

ஆத்திரத்திலும்,சூழல்காரணமாகவும் சிறைபட்ட ஆயுள் சிறைவாசிகளின் மீது உங்கள் கவனத்தை சற்று திருப்புங்களேன்.உங்களின் இதயத்தை திறந்து சிறைவாசிகளின் துயரத்தை கேளுங்களேன்.

சிறையும்,தண்டனையும்

ஒரு குற்றத்திற்க்கு தண்டனையாக ஒருவருக்கு சிறைதண்டனை,மரணதண்டனை, ஆயுள்சிறை,அபராதம் விதித்தல் போன்றவை இந்திய தண்டனை சட்டம் குற்றத்திற்க்கு ஏற்ப வகைப்படுத்துகிறது.

ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் தண்டனைகளுக்கான நோக்கத்தையோ அல்லது தண்டனைக்கு பின்னிட்ட அந்த நபரின் வாழ்க்கையை பற்றியோ எதுவும் கூறாததுதான் இங்கு கவணிக்கப்படவேண்டியது.

இந்திய தண்டனை சட்டங்கள் பெரும்பான்மையானவை அடிமை இந்திய சட்டங்களே, காவல் சட்டம்,தண்டனைச்சட்டங்கள் தற்போதைய சமுகவாழ்வு முறை,பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைக்காவில்லை இந்நிலையில் இருந்தே குற்றம் அதற்க்கு பகரமாக விதிக்கப்படும் தண்டனைகளையும் நாம் பார்க்கவேண்டும்.

குற்றமும் அதற்க்கு காரணமான சமுக பொருளாதார,மற்றும் மக்களுக்கான போராட்டங்களினால் தளைப்படுத்துவதையும் பார்க்காமல் ஒருவரின் முடிவில்லா சிறைவாழ்வை தீர்மாணிப்பது எவ் வகையில் நியாம் என்று விளங்காத புதிர்.

ஒரு குற்றம் என்று வரையருக்கும் நீதிமன்றங்கள் தண்டனை விதிப்போடு தனது கடமையை முடித்துக்கொள்கிறது.

அதற்க்கு பின்னிட்ட நாட்களில் சிறைப்பட்ட சிறைவாசியின் முழு வாழ்வு முறையை தீர்மாணிப்பது சிறைச்சாலையும் அதனைகோளேச்சும் சிறைதுறை அதிகாரிகளும்தான்.

ஒருவரை ஆயுள் முழுவதும் சிறைவைப்பது அவரின் அனைத்து இயக்கங்களையும் கட்டுப்படுத்துவது.அவருக்கும்சமுகத்திற்க்குமான தொடர்பை அறுத்துவிடுவதும்.தன்னுடைய குடும்பத்திற்கான கடமைகளை நிறைவேற்றுவதில் இருந்து தடுப்பதும்.

சிறைவாசியின் மனம் சார்ந்த, உடல் சார்ந்த அனைத்தையும் தடுப்பதும்.மொத்தத்தில் செத்த பிணத்திற்க்கு சமமானதும் ஒன்றுதான்.ஆம் சிறையில் வாடிவரும் சிறைவாசிகள் இறந்தவர்களை போல்தான் வாழ்ந்து வருகிறார்கள்.

முடிவில்லா சிறைவாசத்தால் அவர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை அவர்கள் குடும்பம்,மனைவி,குழந்தைகள் உறவுகள் என்று பாதிப்புகள் ஏராளம்.

சர்வதேச நாடுகளும் ஜநா மன்றமும் மனித உரிமைகள் பற்றியும்,குழந்தைகளின் உரிமைகளை பற்றி பேசும் அதேவேளையில் சிறைப்பட்டவர்களின் குடும்பம், குழந்தைகளின் உரிமைகளும் அவர்களின் எதிர்காலம் பற்றி யார்பேசுகிறார்கள் இங்கு குழந்தைகளின் உரிமைகள் பாதிக்கப்படவில்லையா?

சிறைப்பட்டவர்களின் குடும்ப நிலை குறித்தான பார்வையும்,விவாதங்களும் எழுப்பப்பட்டுள்ளதா? என்ற கேள்விகள் இன்னும் கேட்கப்படாமலேயே உள்ளது.

கோரிக்கைகள்

1.10ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய கோருகிறோம்

2.மத பேதம் பாராமல் இசுலாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டுகிறோம்

3. இசுலாமிய சிறைவாசிகள்10 ஆண்டுகள் கழித்து விடுதலைக்கு தகுதியிருந்தும் கடந்த ஆட்சியின் போது விடுதலை செய்யப்படவில்லை கடந்த ஆட்சியின் தவறுகளை கழைந்து இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய கோருகிறோம்.

4.சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலையில் மட்டும் பாரபட்சம் ஏன்..? தமிழக சிறைகளில் உள்ள இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை கோருகிறோம்.

5. மற்ற மாநிலங்களில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் முடிவில்லா சிறைவாசம் இல்லாமல் 7.10,ஆண்டுகளில் விடுதலை செய்வதைப்போல் தமிழகத்திலும் வாழும் உரிமையை ஆயுள் சிறைவாசிகளுக்கு அளிக்கவேண்டும்.

6.அனைது சிறைவாசிகளுக்கும் இருப்பது போல் வழிகாவல் இல்லாமல் இசுலாமிய சிறைவாசிகளுக்கு பரோல் விடுப்பு அளிக்கவேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

7.இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் முன் விடுதலைக்கு தடையாக இருக்கும் அனைத்து அரசானைகளையும் ரத்து செய்ய தமிழக அரசை வலியுருத்துகிறோம்.

8.கோவை சிறையில் இனம்புரியத சிறைநோயில் தினம் செத்துக்கொண்டிருக்கும் அபுதாஹீரை உடனடியாக விடுதலை செய்து அவருக்கு உரிய மருத்துவ வசதிகள் செய்ய கோருகிறோம்.

9.தமிழக சிறைகளில் ஆயுள்சிறையாளிகளில் பெரும்பான்மையானவர்கள் படிப்பறிவு அற்ற பாமர ஏழைகள், உழைப்பாளிகள், இசுலாமியர்கள் தலித்துகள், தொழிலாளிகள். இவர்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்தும் விதமாக 10ஆண்டுகள் சிறைவாசம் முடித்த அனைத்து ஆயுள்சிறைவாசிகளையும் விடுதலை செய்யக்கோருகிறோம்

10.சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் தமிழீழ அகதிகளை சிறையைவிட கொடுமையான சிறப்பு முகாம்களில் அடைத்துவைத்துள்ளவர்களை விடுதலை செய்து அவர்களின் குடும்பத்துடன் சுதந்திரமாக வாழ சிறப்பு முகாம்களில் இருந்து விடுதலை செய்யவேண்டும் என கோருகிறோம்

பல்லாண்டுகாலமாக சிறையில் வாடும் இவர்களின் வாழ்க்கை முறையில் இருந்து சமுகத்தில் சுதந்திரமனிதர்கள் போல வாழ இவர்களுக்கும் வாய்ப்பளிப்பது மனிதநேயத்தின் பால் இக்கோரிக்கையை பரிசிலிப்பதும். இவர்களை தங்களின் குடும்பம், உறவுகள், சமுக கடமைகள் போன்றவற்றில் பங்களிப்பதற்கான வாய்புகளை கொடுப்பதும் நாகரிக சமுகத்தின் கடமையாகும்.

தாங்கள் இக்கோரிக்கையை கனிவுடன் பரிசிலித்து அரசின் பார்வைக்கு கொண்டு செல்வீர்கள் என்று நம்புகிறோம்.

சிறை கொட்டடியில் தங்கள் வாழ்வின் பெரும் பகுதியை இழந்த இவர்கள் மீதம் இருக்கும் நாட்களிலாவது சுதந்திர மனிதர்களாக வாழ தாங்கள் உதவி புரிய வேண்டுகிறோம்.

சிறையில் வாடும் இந்த விளிம்பு நிலை மனிதர்களும் அவர்கள் குடும்பத்தினர்களும் உங்களின் உதவிகளை என்றென்றும் நினைத்திருப்பார்கள்.

உமர்கயான்.சே
வழக்கறிஞர்.
அலை பேசி: +91 98411 16780