இன்றைய அரசியல் சூழலில் எல்லா வெகுஜன இயக்கங்களும் மக்களை விட்டு வெகுதூரம் சென்று விட்டன. அவை நிறுவனமாகி, நீர்த்து போய் விட்டன. மிகப்பெரிய அரசியல் கட்சியாக அறியப்பட்ட தி.மு.க அறிவித்த ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான டெசோவின் போராட்டம் பிசுபிசுத்து போய் விட்டது. ஆனால், அதே சமயம், மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டம் வீரியமாக எழுகிறது. இது எந்த ஒரு தலைவனாலும், செயற்கையாக உருவாக்கப்பட்டதல்ல. தன்னெழுச்சியான இப்போராட்டத்தை எந்த ஒரு தலைவனாலும் தன்வயப்படுத்த முடியவில்லை. தலைவர்களுக்குப் பின்னால், மக்கள் நின்ற காலம் மறைந்து விட்டது. மக்களுக்குப் பின்னால், தலைவர்கள் நிற்கும் காலம் உருவாகி இருக்கிறது.

சமீபத்தில் கெயில் நிறுவனம் தன் எரிவாயுக் குழாய்களை கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் விளைநிலங்களின் வழியாக பதிக்க திட்டமிட்டது.விவசாயிகளின் தன்னெழுச்சியான போராட்டம் வெடித்தது. பரபரப்புச் செய்தி வேண்டியாவது, ஊடகங்கள் அதைப் படம் பிடித்தன.போராட்டத்தின் விளைவாக, அரசு, பணிந்தது. நெடுஞ்சாலை வழியாக எரிகுழாய்கள் பதிக்கும் திட்டமாக மாறிப்போனது. அதைப் போலவே, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டமும், மக்கள் எழுச்சிக்கு முன்னால் பணிய நேரிட்டது.இது அரசின் கருணையினால் நிகழ்ந்தது அல்ல. காவல் துறையால் கட்டுப்படுத்தப் பட முடியாத போது, உளவுத்துறையை கையில் வைத்திருக்கும் அரசின் புத்திசாலித்தனமான முடிவு.

சர்வ வல்லமை படைத்த மத்திய அரசு, கூடங்குளம் மக்கள் முன்னால், கையறு நிலையில் இருப்பதும் இதே போன்ற ஒரு நிலை தான். ஒரு கால கட்டத்தில் தமிழர்களின் தலைவர்கள் எல்லாம், அழகியல் சார்ந்து உருவானார்கள்.கலைத்துறையைச் சார்ந்த நடிகர்கள், தலைவர்களாக வளர்ச்சிப் பெற்றது இதன் தொடர்ச்சியே எனலாம். இன்றும் கூட, தோழர் நல்லகண்ணுவைத் தவிர, பலரும் மேக்கப் இல்லாமல் மக்களை சந்திப்பது இல்லை. ஆனால், சுப.உதயகுமார் கறுப்பாக, மெலிந்த தோற்றத்தில் உள்ளார். மேடைப்பேச்சிலும் வல்லவராக இல்லை. மயக்கும் சொற்களின் வசீகரம், அவரிடம் இல்லவே இல்லை.ஆனால், அவரின் நேர்மையான போராட்டத்திற்காக, மக்கள் உயிரையும் பணயம் வைக்கிறார்கள்.இன்றைய கால கட்டத்தில், சிறு இயக்கங்கள் மட்டுமே, மக்களோடு நிற்கின்றன.வெகுஜன இதழ்கள் செய்யத் தவறிய சமூகக்கடமைகளை, சிற்றிதழ்கள் எப்படி அறம் சார்ந்து இயங்குகிறதோ, அதைப் போன்ற ஒரு நிலை தான் சிறு இயக்கங்களின் நிலைப்பாடும் எனலாம்.

எல்லா ஊடகங்களும் தங்கள் முதலாளிக்கு விசுவாசமான குரலில் பேசிக்கொண்டிருக்கும் போது, சமூக வலைத் தளங்களும் முகநூல் போன்றவை மட்டும், அச்சமின்றி அறச்சீற்றம் பொங்க உண்மைகளை உரைத்து வருகின்றன.எதன் பொருட்டும் சமரசமின்றி, தங்கள் கருத்தைப் பதிவு செய்யும் இளைஞர்களின் களச்செயல்பாடாகவே, மாணவர்களின் அறப்போராட்டம் திகழ்கிறது. தனிநபர் சார்ந்த கதாநாயக பிம்பம், எந்த ஒரு தலைவனுக்கும், இல்லாமல் போய் விட்டது.பொதுப்புத்தியில்நெடுங்காலமாகவே, படிந்து போயிருக்கும் தூசுகள் துடைக்கப்படும் சூழல் வளர்ந்து வருகிறது.

ஜெயிக்கிற கட்சிக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்கிற மனோபாவம் தான், நம்மை மீண்டும் மீண்டும் ஊழல் செய்கிற கட்சிகளிடமே, நாட்டை ஒப்படைக்கிறது. இந்நிலை மாற வேண்டும். வாக்களிப்பது என்பது, என்  கருத்தை தெரிவிப்பது என்கிற நிலையாக அனைவராலும், புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

தேசத்தின் இருளைக்கிழிக்க, இளைஞர்கள் கூட்டம் கிளம்பி விட்டது. எனவே, இது போராட்டங்களின் காலம் மட்டுமல்ல. நம்பிக்கைகளின் காலமாகவும் மலர்ந்து கொண்டிருக்கிறது.