அன்பார்ந்த மாணவத் தோழர்களே! வணக்கம்.

     தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு போராட்டத்தை நடத்தி வருகின்றீர்கள். போராட்டத்தின் முதற்கட்டம் முடிந்து அடுத்த கட்டம் குறித்து சிந்தித்துக் கலந்தாய்வு செய்து வரும் உங்கள் பார்வைக்குச் சில முன்மொழிவுகளை அன்புரிமையோடு படைக்கிறோம்.

     ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சென்ற 2012 மார்ச்சில் அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டுவந்த போதே, இது தமிழர்களுக்கு எதிரான தீர்மானம், இனக்கொலைக் குற்றவாளிகளான சிங்கள இராசபட்சே கும்பல் தப்ப்பித்துக் கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுக்கும் தீர்மானம் என்று எமது இயக்கத்தின் சார்பில் எச்சரித்தோம். எங்கள் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல், தமிழகத்தின் அரசியல் கட்சிகளும், சிலபல ஈழ ஆதரவு அமைப்புகளும் கூட அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று சேர்ந்திசை பாடின.

     இந்த முறை மாணவர்களாகிய நீங்கள் சில அரசியல் தலைவர்களின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காமல், உள்ளது உள்ளபடி அமெரிக்கத் தீர்மானத்தின் உள்ளடக்கத்தையும் உண்மை நோக்கத்தையும் சரியாக எடுத்துக் காட்டிப் போராடியதால் தமிழினம் விழித்துக் கொண்டது.

     இனக்கொலையை இனக்கொலை என்றுதான் சொல்ல வேண்டும். அதை மறைக்க மனித உரிமை மீறல் போன்ற சொற்களை யார் பயன்படுத்தினாலும் ஏற்க மாட்டோம், ஏமாற மாட்டோம். டப்ளின் தீர்ப்பாயம், ஐநா மூவல்லுநர் குழு அறிக்கை, இலண்டன் சேனல் - 4 வெளியிட்ட ஆவணப் படங்கள்... இவற்றை எல்லாம் மூடிமறைத்து விட்டு இராசபட்சேவின் செல்லப்பிள்ளையான படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் (LLRC) அறிக்கையை வலியுறுத்துவதும், ஆதரவு எதிர்ப்பு என்று சிணுங்குவதும் உலகின் கண்ணில் மண்ணைத் தூவும் வேலை என்பதை உரக்கச் சொல்வோம்.

உலகத் தமிழர்களின் கோரிக்கைகளும் நம் கோரிக்கைகளும் ஒன்றே:

இந்தக் கோரிக்கைகளுக்கான போராட்டத்தை ஐநா மனித உரிமை மன்றத்தை மையப்படுத்தி நடத்தினோம். இனி என்ன செய்வது? மனித உரிமை மன்றம் அடுத்த முறை கூடட்டும் என்று நாம் காத்திருக்க முடியாது. இராசபட்சே கும்பலை மென்மேலும் தனிமைப்படுத்துவதன் மூலம் தமிழீழ மக்கள் போராடுவதற்கான வெளியை உருவாக்கி விரிவாக்குவதுதான் நம் போராட்டத்தின் நோக்கமும் விளைவும் என்பதை மறந்து விடக் கூடாது. உலக அரங்கில் என்றாலும் உள்நாட்டில் என்றாலும் இந்த விளைவை நோக்கியே நம் போராட்டங்கள் அமைய வேண்டும்.

     இனக்கொலைக் குற்றம் புரிந்த சிங்கள அரசை அனைத்து நாடுகளும் அனைத்து மக்களும் புறக்கணிக்கும் படி செய்வோம். பொருளியல், அரசியல், பண்பாடு, கலைத்துறை, விளையாட்டு, சுற்றுலா... என்று எந்தத் துறையையும் விட்டு வைக்காமல் சிங்களத்தைப் புறக்கணிக்கும் இயக்கத்தை வீரியத்துடன் முன்னெடுத்துச் செல்வோம்.

இந்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவாக அனைத்து மாணவர்களையும், அனைத்துப் பொதுமக்களையும், அனைத்து இயக்கங்களையும், அனைத்து ஆதரவாளர்களையும் திரட்டுவதற்குப் பொருத்தமான போராட்ட வடிவங்களை நீங்களே முடிவு செய்யுங்கள்.

அதேபோது நம் கோரிக்கைகள் அனைத்திற்கும் மையமாக இருக்க வேண்டிய முழக்கம்:

இலங்கையைப் புறக்கணிப்போம்!

BOYCOTT SRILANKA!

            உலகெங்கும் ஒலிக்கும் இந்த முழக்கம் தமிழகத்திலும் ஓங்கி ஒலிக்கட்டும். இது இனக் கொலைகாரர்களின் இந்தியக் கூட்டாளிகளை அம்பலப்படுத்தும். இன்னமும் குழம்பிக் கிடக்கும் தமிழர்களின் தடுமாற்றத்தைப் போக்கவும் துணை செய்யும்.

இலங்கையைப் புறக்கணிப்போம்!

BOYCOTT SRILANKA!

வெல்க மாணவர் போராட்டம்!

- தியாகு,பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

தொடர்புக்கு: o44-23610603, 98651 07107, 9715417170