(போராடும் கூடங்குளம் மக்களுக்கு ஒருமைப்பாடு தெரிவிப்பதற்காக இகக (மா-லெ) வின் பொதுச் செயலாளர் திபங்கர், அக்டோபர் 1, 2012 அன்று கூடங்குளம் போராட்டக் களம் நோக்கி சென்றார். அவருடன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி, கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், தமிழ்நாடு மாநிலக் கமிட்டியின் உறுப்பினரும் கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாகப் பணியாற்றி வரும் வழக்கறிஞர் ரமேஷ், கோவையைச் சேர்ந்த சந்திரன் ஆகியோரும் சென்றனர். அவர்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்து, போராட்ட களத்திற்குள் நுழைவதைத் தடுத்து நிறுத்தியது. தோழர் திபங்கர் தனது அனுபவத்தை விவரிக்கிறார்)

கூடங்குளம் போராட்டம் ஜனநாயத்திற்கான போராட்டம், உண்மைக்கான போராட்டம்; பகுத்தறிவின் போராட்டம்

- திபங்கர் பட்டாச்சார்யா, பொதுச் செயலாளர், இகக (மா-லெ) விடுதலை

dipankar_bhattacharya_640

செப்டம்பர் 30, 2012 அன்று டெல்லி மாவலங்கர் அரங்கில் டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களின் இடதுசாரி செயல்வீரர்கள் கூடியிருந்தனர். ஆழமடைந்துவரும் தேசிய நெருக்கடியில், ஒரு இடதுசாரி, ஜனநாயக வேலைத் திட்டத்துடன் தலையீடு செய்யும் நோக்கத்துடன் திரண்டிருந்தனர். மிக நீண்ட தூரத்திலிருந்து ஒருவரும் அக்கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசினார். அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் எஸ்பி உதயகுமார் வீடியோ செய்தி மூலம் உரையாற்றினார். கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்க்கத் துணிந்ததற்காக இந்திய ஆட்சியாளர்களால் தண்டிக்கப்பட்டு வரும் தமிழ்நாட்டின் கூடங்குளத்து மக்களுடன் சேர்ந்து நிற்குமாறு இடதுசாரிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். போராடும் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக அக்டோபர் 1 முதல் 15 வரை தேசம் தழுவிய இருவார எதிர்ப்பு இயக்கத்தை நடத்துவதென கருத்தரங்கம் முடிவுசெய்தது. அந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, இகக (மாலெ) கட்சியின் அகில இந்தியத் தலைவர்கள், அரசின் ஒடுக்குமுறைக்கு சவால் விட்டு 400 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் இடிந்தகரைக்கு பகுதிக்கு செல்வது என்றும் முடிவானது. ஆசியாநெட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் ‘உங்களை அங்கே போகவிடுவார்கள்’ என்று நினைக்கிறீர்களா? எனக் கேட்டார். மறுநாள் எங்களுக்கு என்ன காத்திருக்குமோ என்ற சந்தேகம் எனக்குள் பொறிதட்டியது.

போஸ்கோ கம்பெனி தங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஒடிசா மக்களுக்கு ஒருமைப்பாடு தெரிவிப்பதற்காக, நாங்கள் தின்கியாவுக்கும் ஜெகதீஷ்பூரில் உள்ள பல கிராமங்களுக்கும் பல முறை சென்றிருக்கிறோம். ஆயிரக்கணக்கான மக்கள் அந்த கிராமங்களிலிருந்து வெளியேறவிடாமல் தடுக்கப்பட்ட நிலையிலும் கூட வெளியிலிருந்து செல்லும் செயல்வீரர்கள் அங்கே செல்ல முடிந்தது; உள்ளூர் மக்களைச் சந்திக்க முடிந்தது. எந்தப் பிரச்சனையும் இல்லை. நவீன் பட்நாயக்கின் பாதையைத்தான் ஜெயலலிதாவும் பின்பற்றுகிறார். ஒடிசா பாணியைத்தான் தமிழ்நாட்டிலும் செயல்படுத்துகிறார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அக்டோபர் 1 அன்று தூத்துக்குடி விமானநிலையத்தை அடைந்தபோது, தனது புதிய கூட்டாளியை முந்திக்கொண்டு ஜெயலலிதா முன்னே சென்றுவிட்டார் என்பதை உணர்ந்து கொண்டேன். இடிந்தகரையை, நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து போலீஸ் அரண் கொண்டு துண்டித்துவிட ஜெயலலிதா விரும்புகிறார். கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராகப் போராடிவரும் துணிச்சல்மிகு போராளிகளை தமிழ்நாட்டிலும் அதற்கு அப்பாலும் உள்ள கணக்கற்ற நண்பர்கள், ஆதரவாளர்கள் நேருக்கு நேர் சந்திக்கவிடாமல் தனிமைப்படுத்திவிட அவர் முயற்சி செய்து வருகிறார்.

நாங்கள் முதலில் திருநெல்வேலி செல்லத் திட்டமிட்டிருந்தோம். அங்கே உள்ளூர் தோழர்கள் நடத்தும் ஒருமைப்பாடு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு பின்பு இடிந்தகரை செல்வதாகத் திட்டம். அங்கு பெரும் போலீஸ் படை குவிக்கப்பட்டிருக்கிறது, தோழர்கள் இடிந்தகரை செல்வதைத் தடுப்பார்கள் என்ற தகவல் கிடைத்தது. நாங்கள் சட்டென்று திட்டத்தை மாற்றிக்கொண்டோம். நேராக இடிந்தகரை செல்ல முடிவு செய்தோம். நாங்கள் சென்ற வாகனத்தில் கட்சிக்கொடி இல்லை. இகக(மாலெ) தலைவர்கள் அந்த காரில் பயணப்படுகிறார்கள் என்று யாரும் கண்டுகொள்ள முடியாது. நாங்கள் ஏறக்குறைய இடிந்தகரையை நெருங்கிவிட்டோம். ஆனால், நாங்கள் ராதாபுரத்தை அடைந்தபோது போலீஸ் பட்டாளத்தின் தடுப்பரணுக்குள் நுழையும்படி ஆனது. ‘சுதந்திரமாக’ திரும்பிச் செல்லுங்கள். அல்லது கைது செய்யப்படுவீர்கள் என்று போலீஸ் அதிகாரிகள் சொன்னார்கள். சில நாட்களுக்கு முன்பு கூட, கேரளா- தமிழ்நாடு எல்லையில் தோழர் அச்சுதானந்தன் திருப்பி அனுப்பப்பட்டார் என்றும் சொல்லப்பட்டது. நாங்கள் போலீசிடம் வாக்குவாதம் செய்தோம். இது புத்தி பேதலித்தவர்களின் செயல், சுதந்திர குடிமக்கள் தங்கள் நாட்டுக்குள் சுதந்திரமாக நடமாடும் ஜனநாயக உரிமையை மறுக்கும் நடவடிக்கை என்றெல்லாம் வாதிட்டோம். ஒன்றும் பயனில்லை. போலீஸ் எங்களைக் கைது செய்தது. திருநெல்வேலியில் திரண்டிருந்த தோழர்களும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வந்துகொண்டிருந்த தோழர்களும் கூட கைது செய்யப்பட்டார்கள் என்ற தகவல்களும் வந்து சேர்ந்தன.

இடிந்தகரை மக்கள் மீது, இந்திய அரசு, கட்டமைக்கப்பட்ட வகையில் ஒடுக்குமுறையையும் பொய்களையும் ஏவிவரும் சூழலில், அதற்கு எதிராக உண்மை, பகுத்தறிவுப் பதாகையை உயர்த்திப் பிடித்துப் போராடிவரும் தீரமிகுந்த சகோதரிகளுக்கும் சகோதரர்களுக்கும் வணக்கம் செலுத்தவே நாங்கள் இடிந்தகரை செல்ல விரும்பினோம். மக்களின் பாதுகாப்பு முக்கியமான விஷயம் என்று உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆனால், பாதிப்புக்குள்ளான மக்கள்தான் இந்தப் பிரச்சனையில் தீர்மானகரமான உரிமை கொண்டவர்கள் என்பதை உச்சநீதிமன்றம் உணரவில்லை. பகுத்தறிவுக்கு முற்றிலும் புறம்பாகவும் அதிகாரத்துவமாகவும், நிகழக்கூடிய ஒரு பேரழிவை வரவேற்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக உலகத்தையே விழிக்கச் செய்துள்ள, கூடங்குளத்தின் தீரமிக்க போராளிகளுக்கு அனைத்து ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் நாம் அளித்தாக வேண்டும். பேரழிவுகளால் தாக்கப்பட்ட பின்னரே செர்நோபிலையும் புக்கிஷிமாவையும் உலகம் தெரிந்துகொண்டது. ஆனால், ஜெய்தாபூரும் கூடங்குளமும் அப்படியில்லை. அச்சுறுத்தலைக் கொண்டுவரும் அணு சக்தியின் மீது ஆட்சியாளர்களின் ஆட்டிப்படைக்கும் வெறிக்கெதிரான தீரமிகு மக்கள் போராட்டத்தின் காரணமாக இவ்விரு இடங்களையும் உலகமே தெரிந்து கொண்டிருக்கிறது. கூடங்குளம், ஜெய்தாபூர் மக்கள், தங்களின் சொந்த நிலத்தை, வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள போராடவில்லை. வரவிருக்கின்ற தலைமுறைகளின் பாதுகாப்புக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பேரழிவைக் கொண்டுவந்த சுனாமியின் சோகத்தால் தமிழ்நாடு ஏற்கனவே துன்பப்பட்டிருக்கிறது. மக்கள், அணு சுனாமி என்ற அச்சத்தின் நிழலில் காலாகாலத்துக்கும் வாழ்ந்தாக வேண்டும் என்று சபிக்கப்பட வேண்டுமா?

உலகெங்கிலும் வளர்ந்த நாடுகள், அணு ஆற்றல் வேண்டாமென்று விலகிவருகின்றன. பாதுகாப்பான, மலிவான, சுத்தமான சக்தி உற்பத்தியை நோக்கி மென்மேலும் உலகம் சென்று கொண்டிருக்கிறது. இந்திய ஆளும் மேட்டுக்குடியினரோ, பெரும் செலவு பிடிக்கிற 20ஆம் நூற்றாண்டின் காலாவதியான தொழில்நுட்பத்தை 21 ஆம் நூற்றாண்டில் நமது தலையில் கொட்டப் பார்க்கிறார்கள். வேடிக்கை என்னவென்றால், நாங்கள் ராதாபுரத்தில் போலீஸ் காவலில் இருந்தபோது, நாங்கள் இருந்த இடத்தைச் சுற்றிலும், காற்று மின்சாரம் சாத்தியமான ஒரு மாற்று என்பதைக் காட்டும் வகையில் காற்றாலைகள் இயங்கிக் கொண்டிருந்தன.

ஜீவாதாரமான தேசிய நலன்கள் அனைத்தையும் அந்நிய நேரடி முதலீட்டின் பலிபீடத்தில் காவுகொடுக்கும் அரசு, ஏகாதிபத்தியங்களுடன் மானக்கேடான ஒப்பந்தங்களைச் செய்து கொண்டிருக்கிற அரசு, ‘அன்னியக் சக்திகளால் தூண்டப்பட்ட’ போராட்டம் என்று கூடங்குளம் போராட்டத்தை அவதூறு செய்கிறது. உண்மையின் குரலை, நீதியின் குரலை நெரிக்கப் பார்க்கிறது. இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளின் மீது அணு சக்தி நாடுகளின் அதிகாரத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் அந்நிய பிரதேசம் போலவே, கூடங்குளத்தை அரசு நடத்தத் துவங்கிவிட்டது.

கூடங்குளத்தில் உள்ள எமது தோழர்களை நாங்கள் நேரில் சந்திக்க முடியவில்லை. ஆனபோதும், செப்டம்பர் 30 அன்று நாட்டின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, கூடங்குளம் மக்களின் குரல் வந்து சேர்ந்ததைத் தடுக்க முடியாதது போலவே, தோழர் உதயகுமாருடன் நாங்கள் தொலைபேசியில் உரையாடுவதையும் போலீசாரால் தடுக்க முடியவில்லை. நமது பெரிய உரிமைகளுக்கே ஆபத்து நேரும் போது இதுபோன்ற சின்னச் சின்ன சுதந்திரங்களும் ஆகப்பெரிய விஷயங்களாகி விடுகின்றன. கூடங்குளம் போராட்டத்தின் மனஉறுதி சற்றும் குறையாது, போராட்டம் மங்கிப் போகாது என்றும் தோழர் உதயகுமார் எங்களுக்கு உறுதி கூறினார். மாநில சட்டமன்றத்தின் வைரவிழாவின்போது, தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடக்கிவிருக்கின்ற அக்டோபர் 29 அன்று, சட்டமன்றத்தை முற்றுகையிட மக்கள் திட்டமிட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட-லெனினிஸ்ட்)ம் நாட்டின் போராடும் இடது, ஜனநாயக சக்திகளும், சற்றும் பின்வாங்காது; ஆதரவளிப்போமென்று (உதயகுமாருக்கு) உறுதியளித்தோம்.

கூடங்குளத்தின் போராட்டம் ஜனநாயகத்திற்கான போராட்டம். அது பொது மக்களின் பாதுகாப்புக்கான போராட்டம்; உண்மையின் போராட்டம்; பகுத்தறிவின் போராட்டம். நாம் அனைவரும் அந்தப் போராட்டத்தோடு இணைந்தாக வேண்டும். வெற்றி கிட்டும் வரை போராடியாக வேண்டும்.

தமிழ் வடிவம்: சி.மதிவாணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)