மகஇக, தனது அரசியல் ஏடான புதிய ஜனநாயகத்தில், கடந்த மே 2012 இதழில் அனுபவங்களும், படிப்பினைகளும்’ என கூடங்குளம் போராட்டம் குறித்ததொரு அருள்வாக்கை வெளியிட்டிருக்கிறது. நம் காலத்தில் நடைபெற்ற ஒரு உணர்வுப்பூர்வமான மக்கள் போராட்டத்தை, தன்னெழுச்சியாக உதித்ததும், சலியாததுமான ஒரு போராட்டத்தை, விமர்சனம் என்ற பெயரில் மகஇக-வினர் எவ்வாறு கொச்சைப்படுத்துகிறார்கள் என்பதை, அரசியல் செயற்பாட்டாளர்கள் அனைவரது கவனத்திற்கும் கொண்டு வருவது அவசியமானதாகப் படுகிறது.

புதிய ஜனநாயகம் முன்வைக்கும் ‘படிப்பினைகளில்’ முதன்மையாதைப் பரிசீலிப்போம். “போராட்டங்களுக்கு அணிதிரண்ட மக்கள் மீது, அவர்களை வழிநடத்திய தலைமை மற்றும் முன்னணியாளர்கள் முழு நம்பிக்கை வைக்கவில்லை. அம்மக்களைப் பற்றிய குறை மதிப்பீடு கொண்டிருந்தார்கள். இது மத்திய தர அறிவுஜீவி வர்க்கத்தினர் உழைக்கும் மக்கள் மீது வழக்கமாகக் கொண்டிருக்கும் கீழானதொரு கண்ணோட்டம்தான். “என்னதான் எடுத்துச் சொன்னாலும் மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். மேலும், எல்லா உண்மைகளையும் மக்களிடம் சொல்லக் கூடாது; சொல்லவேண்டிய அவசியம் இல்லை; சொன்னால் பயந்து விடுவார்கள்; போராடத் துணியமாட்டார்கள்; போராட முன் வரமாட்டார்கள்; பின்வாங்கி விடுவார்கள்” என்று அறிவுஜீவிகள் கருதுகிறார்கள். உண்மையில் இது அறிவுஜீவிகளிடமே உள்ள குறைபாடு; இருப்பதையும் இழந்துவிடுவோம் என்ற அச்சம் தான் இதற்குக் காரணம். உண்மையில் உழைக்கும் மக்கள் பாட்டாளிகள் மட்டுமல்ல; வரலாற்றுப் படைப்பாளிகள்.”

வேடிக்கை என்னவென்றால், தமது ‘அரிய கண்டுபிடிப்பிற்கு’ மகஇக மேதாவிகள் எவ்வித ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்கள், அதாவது அணு உலை எதிர்ப்புக் கூட்டமைப்பினர், போராடிய மக்களைக் குறித்து இவ்வாறு கருத்து கொண்டிருந்ததற்கான பேச்சு அல்லது நடைமுறை என எந்த ஆதாரங்களும் முன்வைக்கப்படவில்லை. மாறாக, கிசுகிசு பாணியில் ஒரு கருத்தை சொல்லி விட்டு, அதிலிருந்து உழைக்கும் மக்கள் பற்றி நமக்கு வகுப்பெடுக்கிறார்கள். இதன் மூலம் போராட்டத் தலைமையை கொச்சைப்படுத்தவும், ஒட்டுமொத்த போராட்டத்தைத் திரிக்கவும் முயல்கிறார்கள்.

koodankulam_udayakumar_640

உண்மையில், இப்போராட்டத்தின் துவக்கத்திலேயே நாம் கேள்விப்பட்டது என்ன? அணிதிரண்டிருக்கும் மக்களிடம் தமது கருத்துக்களையும், முடிவுகளையும் சுப.உதயகுமார் உள்ளிட்ட முன்னணியாளர்கள் முன்வைப்பதும், அவற்றில் மக்கள் ஏற்கும் கருத்துக்கள், முடிவுகளையே அமல்படுத்தவும் செய்தார்கள் என்பதே. சென்னையில் நடைபெற்ற சில பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் கூட இடிந்தகரையின் சாதாரண பெண்கள்தான் தமது கருத்துக்களை எடுத்து சொன்னார்கள். தலித் முரசு பிப்ரவரி 2012 இதழில், மீனா மயில் எழுதிய கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். “'ஒன்றுமறியாத மக்களிடம் அணுஉலை வெடிக்கும் என்ற அச்சத்தைக் கிளப்பி மக்களைத் தூண்டிவிடுகிறார்’ என மத்திய அமைச்சர் நாராயணசாமியும் அணுமின் நிலைய விஞ்ஞானிகளும் வைக்கும் குற்றச்சாட்டை சுப.உதயகுமார் வன்மையாகக் கண்டிருக்கிறார். மக்களை ஒன்றுமறியாதவர்களாக சித்தரிப்பதை அவர் எதிர்க்கிறார். அணு விஞ்ஞானிகளை கேள்வி கேட்கும் அளவிற்கு அறிவோடும் துணிவோடும் மக்கள் இருக்கிறார்கள் எனில், அதற்குக் காரணம் இவ்வியக்கமும் அதன் தலைமையும்! வெளிப்படைத்தன்மை, கல்வி மற்றும் பங்கேற்பு இவை மூன்றுமே இவ்வியக்கத்தின் முதுகெலும்பு.”

ஒரு வகையில் நாம் இப்படி சொல்லலாம், நாராயணசாமி சொன்னதை வேறு சொற்களில் புதிய ஜனநாயகம் சொல்கிறது. தமிழக அரசுதான் முன்னணியாளர்கள் மீது தனியாகவும், மக்கள் மீது தனியாகவும் வழக்குகள் போடுகிறதென்று பார்த்தால், ‘புதிய ஜனநாயக’ அரசும் மக்களைக் கைவிட்டு, முன்னணியாளர்களைக் குறி வைக்கிறது.

மேலும், “கூடங்குளம் அணுஉலைகளையும், அணு மின்நிலையத்தையும் இழுத்து மூடவேண்டும், அவை வரவிடாமல் செய்ய வேண்டுமானால், எத்தகைய எதிரிகளை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டும் என்ற உண்மை அங்கு போராடும் மக்களிடம் சொல்லப்படவே இல்லை.” என நீண்ட பத்தியில் விளக்கம் சொல்கிறது புதிய ஜனநாயகம். அரசு எத்தகைய முறையிலும், அடக்கியொடுக்கிதான் போராட்டத்தை முறியடிக்கும் என்பது கூடங்குளம் மக்கள் அறியாதததல்ல. ஆனால், சுப.உதயகுமார் முன்வைத்த காந்திய வழிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டங்களின் மீது, மக்கள் நம்பிக்கை வைக்கிறார்கள். அதனைப் பின்பற்றி நடக்க முயல்கிறார்கள். சட்டவிரோதப் போராட்டம் நடத்த வேண்டுமா, கூடாதா என்பதை போராட்டத் தலைமை மட்டுமல்ல, போராடிய மக்களுமே தீர்மானித்தார்கள். எனவே, இது ஏதோ முன்னணியாளர்கள் மட்டுமே தீர்மானித்ததைப் போல பிரித்து விட முடியாது. அதாவது, தமது போராட்ட முறைகளின் வடிவத்தையும், எல்லையையும் தீர்மானித்தே இடிந்தகரை மக்கள் போராடினார்கள். எத்தகைய எதிரிகளை எதிர்கொண்டிருக்கிறோம் என்பது குறித்த புரிதல் குறைபாடு அம்மக்களிடம் நிலவியதாக கூறுவதற்கு எந்த அடிப்படையுமில்லை.

சரி, ஒரு வாதத்திற்கு போராடிய மக்களின் தலைமைதான் ‘பால்குடம் எடுப்பதும், பட்டினி கிடப்பதுமாக’ நின்று விட்டனர் என்றே வைத்துக் கொள்வோம். மகஇக புரட்சியாளர்கள் என்ன செய்தார்கள்? இரு மாதங்களுக்கும் மேலாக கூடங்குளம் போராட்டம் கொந்தளித்த பொழுது எந்த முணுமுணுப்பும் இல்லை. பின்னர், இறுதிக் கட்டத்தில் முல்லைப் பெரியாறுக்கான பிரச்சார இயக்கத்தோடு, கூடங்குளத்திற்காகவும் பிரச்சாரம் செய்யத் துவங்கினார்கள். அவர்கள் ஆரவாரமாக அறிவித்த கூடங்குளம் அணு உலை ‘முற்றுகைப் போராட்டத்தில்’ என்ன நடந்தது? நெல்லையில் கூடிய கூட்டத்திலிருந்து ஐநூறு பேரை மட்டும் வேனில் அழைத்துச் சென்று ‘சட்டப்பூர்வமாக’ கைதாகி விடுதலையானார்கள். தற்பொழுது, கூடங்குளம் போராளிகளுக்கும், மக்களுக்கும் படிப்பினை வகுப்பெடுக்கும் மகஇக தங்களது முற்றுகைப் போராட்டத்தை முழுவீச்சில் நடத்திக் காட்டி, நடைமுறைரீதியாக இடிந்தகரை மக்களுக்குப் புரிய வைத்திருக்கலாமே? ஆனால், இந்தக் கேள்விக்கு இவர்கள் அணிகள் மத்தியில் கசிய விட்டுள்ள கிசுகிசு பதில் என்ன தெரியுமா? கூடங்குளம் போராட்டத் தலைமை எதுவும் பிரச்சினை வேண்டாம் என இவர்களிடம் சொன்னார்களாம். அதனால் தான் இவர்கள் பேருக்கு முற்றுகை செய்து கைதாகி விட்டார்களாம். அடேயப்பா, இப்பொழுது அனுபவங்களை நேர்த்தியாக தொகுக்கும் சூரப்புலிகள், அப்பொழுதே சுப.உதயகுமாருக்கு விளக்கிச் சொல்லி, இரண்டிலொரு முடிவு கண்டிருக்கலாமே! அது சரி, விமர்சனம், படிப்பினை, அனுபவமெல்லாம் மற்றவர்களுக்குத்தானே!

மேலும், “கூடங்குளம் போராட்ட முன்னணியாளர்கள் ஜெயலலிதா போன்ற பிழைப்புவாதக் கழிசடைகளின் மீது நம்பிக்கை வைக்கும்படி சொன்னார்கள். இப்போது அவர்கள் நம்ப வைத்து வஞ்சகம் செய்து விட்டதாகப் புலம்புகிறார்கள்.” என எழுதியுள்ளார்கள். இது உண்மைதானா? அரசியல் சூழலின் அடிப்படையில், மத்திய அரசை எதிர்க்கும் அதே நேரத்தில் மாநில அரசையும் எதிர்க்க வேண்டிய அவசியமில்லாத வேளையில், ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசாமலிருந்தார் சுப.உதயகுமார். இது புரிந்து கொள்ளக் கூடியதே. ஜெயலலிதா மீது நம்பிக்கை வைப்பதுதான் நோக்கமாக இருப்பின், சென்னையில் அணு உலை எதிர்ப்பு மாநாடு நடத்தவும், அம்மாநாட்டிலேயே மாநில அரசு தமக்கு எதிராகப் போனாலும் கூட தாங்கள் உயிருள்ள வரை போராடுவோம் என சுப.உதயகுமார் பேசவும் அவசியம் என்ன?

ஒரு கிளைக் கதையையும் பார்த்து விடுவோம். தமிழகத்திலுள்ள ஏறத்தாழ அனைத்து முற்போக்கு அமைப்புகளும் கலந்து கொண்ட சென்னை அணு உலை எதிர்ப்பு மாநாட்டில் மகஇக ஏன் கலந்து கொள்ளவில்லை? அம்மாநாட்டிற்கு முதல் நாள் திடீரென சென்னையில் ஏன் பொதுக் கூட்டம் நடத்தினார்கள்? அதாவது, மறுநாள் தமிழகம் முழுவதுமிருந்து அரசியல் முன்னணியாளர்களும், இடிந்தகரை மக்களும் கலந்து கொள்ளும் மாநாட்டைப் புறக்கணிக்கும் நேரத்தில், தமது அணிகளிடம் தாங்களும் போராடுகிறோம் என்று காட்டிக் கொள்வதற்காகவன்றி, வேறென்ன உயர்ந்த நோக்கத்திற்காக அப்பொதுக்கூட்டம் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது? முதல் நாள் பொதுக் கூட்டத்தில் மறுநாள் மாநாட்டைப் பற்றி மகஇகவினர் எதுவும் பேசவில்லை. மறுநாள் மாநாட்டில் மகஇக குறித்து யாரும் பேசவில்லை. அது ஏன்? ஏனென்று விசாரித்தால், தமது அணிகளிடம் மகஇக தலைமை கசிய விட்டுள்ள கருத்து என்ன தெரியுமா? “அணு உலை எதிர்ப்புக் கூட்டமைப்பில் சில என்.ஜி.ஓக்கள் (தன்னார்வக் குழுக்கள்) உள்ளனர். அதனால் தான் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை!!” என்ன, மறுபடியும் நாராயணசாமி குரல் போலவே ஒலிக்கிறதா? தற்செயலான ஒற்றுமைதான் என நம்புவோம்.

சரி, நீங்கள் என்ன அவ்வளவு பரிசுத்தவான்களா மகஇக தோழர்களே? மகஇக அணிகளில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், மகஇக நடத்திய 2002 தஞ்சை பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்ட முக்கிய பேச்சாளரான தீஸ்தா சேதல்வாத் ஒரு ஊரறிந்த தன்னார்வக் குழு நபர்தான். அம்மாநாட்டில் குஜராத் முசுலீம்களின் உரையை மொழிபெயர்த்தவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த தன்னார்வக் குழு நபர் தான். இது குறித்தெல்லாம், குறைந்தபட்சம் ஒரு சுயவிமர்சனமேனும் தங்கள் அணிகளிடம் மகஇக தலைமை வெளியிட்டதுண்டா? மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடமா?

மேலும், சென்னையில் நடைபெற்ற திடீர் பொதுக் கூட்டத்தில் அணு உலை எதிர்ப்புக் கூட்டமைப்பின் மனோ.தங்கராஜை மேடையேற்றியதாக இருக்கட்டும், அல்லது தங்களது வேறு சில நிகழ்ச்சிகளில் சுப.உதயகுமாரை மேடையேற்றியதாக இருக்கட்டும், அப்போதெல்லாம் மகஇகவின் புனிதம் கெட்டுப் போய் விடவில்லையா? ஏனெனில், அதே மனோ.தங்கராஜூம், சுப.உதயகுமாரும் என்.ஜி.ஓ-க்களுடன் இணைந்து வேலை செய்பவர்கள்தானே? அவர்கள் சுத்தமானவர்கள், அவர்களது அமைப்பு, அவ்வமைப்பு நடத்தும் மாநாடு அசுத்தமானதா? இவ்வேளையில், மாவோயிஸ்டுகள் இவர்களைக் குறித்து எழுதியதுதான் நினைவுக்கு வருகிறது. கூட்டு நடவடிக்கை, தற்காலிக ஐக்கியம் அடங்கிய முன்னணி அமைப்பது குறித்து மாநில அமைப்புக் கமிட்டிக்கு (SOC) ஆனா ஆவன்னா கூடத் தெரியாது என தமது பத்திரிக்கையான மக்கள் பேரணியில் எழுதினார்கள்.(http://bit.ly/JJAnwB – “Obviously the SOC does not know the abc of the principles of forming a front.”) மாநில அமைப்புக் கமிட்டி தான் மகஇக-வை, புதிய ஜனநாயகம் ஏட்டை வழிநடத்தும், தலைமை தாங்கும் கம்யூனிஸ்டுக் கட்சி என்பதை வாசகர்கள் அறிந்திருக்கலாம்.

இறுதியில், தமது கட்டுரையை முடித்து வைக்கும் இலட்சணம்தான் மகஇக குறித்த முழுமையான புரிதலை நமக்குத் தருகிறது. அதாவது, இவர்கள் எடுத்துக் கூறும் உண்மைகளையெல்லாம் கூடங்குளம் போராட்டத் தலைமை புரிந்து கொள்ளவில்லையாம். அதனால், கூடங்குளத்தைத் தாண்டி, மக்கள் ஆதரவைப் பெற முடியவில்லையாம். ஆனால், இவர்கள் (மகஇக) கூடங்குளத்திலிருந்து தொலை தூரத்திலிருக்கிற சென்னை மக்களிடம் ‘தமது பிரச்சார முயற்சியில் அழுந்தி நின்று’, தமது கருத்துக்கு ஆதரவு தருபவர்களாக அம்மக்களை மாற்றி விட்டார்களாம். அப்படி சென்னை மக்களிடம் இப்பிரச்சாரத்தில் மகஇக பெற்ற அபார ஆதரவைப் பற்றி தமிழகத்தில் யாருக்கேனும் தெரியுமா? இவர்களது கருத்துக்களால் ‘எழுச்சியுற்ற’ சென்னை மக்கள் என்ன கூடங்குளத்திற்காக சேத்துப்பட்டில் கொரில்லா யுத்தம் தொடங்கி விட்டார்களா?

“ஒவ்வொரு விமர்சனத்திலும் ஒரு சுயவிமர்சனம் அடங்கியிருக்கிறது” என மந்திரம் போல மீண்டும் மீண்டும் உச்சரிப்பார் இவர்களது மாநிலச் செயலாளர் மருதையன். ஆனால், இந்தக் கட்டுரையிலோ, இவர்கள் பாணியில் சொன்னால், விமர்சனமும் இல்லை, சுயவிமர்சனமும் இல்லை, ஒரு வெண்டைக்காயும் இல்லை. கூடங்குளம் போராட்டம் ஒரு கூட்டுத் தோல்வி. தமிழகத்தின் முற்போக்கு, புரட்சிகர சக்திகள் அனைவரும் தமது தோல்வியாகப் பரிசீலிக்கவும், புரிந்து கொள்ளவுமான போராட்டம். ஆனால், மகஇக-வும், புதிய ஜனநாயகமும் தமது அணிகளை ஏய்க்க எழுதும் ஒரு கட்டுரையில் எத்தகைய ஆணவமும், சுயதிருப்தியும் வெளிப்படுகிறது பாருங்கள். தமது சுயதிருப்தி மனப்பான்மையிலிருந்து விளையும் புரட்சிகர மேட்டிமைத்தனத்தை எவ்வாறு கொஞ்சமும் கூச்சமின்றி வெளிப்படுத்துகிறார்கள் என்பதைக் கவனியுங்கள்.

இதன் பொருள், கூடங்குளம் போராட்டத்தில் தவறுகளே நடக்கவில்லை என்பதல்ல. மாறாக, சுயவிமர்சனமாகப் பரிசீலிக்கையில் பல்வேறு அம்சங்கள் குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒன்று, பூகோள ரீதியில் இடிந்தகரையில் போராட்டம் நடைபெற்றது அரசுக்கு சாதகமாக அமைந்தது. அதனால் தான் இடிந்தகரை மக்களை ஊருக்குள்ளாகவே முற்றுகையிட்டு அடக்கவும், பத்து கிலோமீட்டர் தொலைவிலிருந்த அணு உலையை போலிசு, இராணுவத்தைக் குவித்து துவக்கவும் முடிந்தது. ஒரு வேளை துவக்கத்திலிருந்தே கூடங்குளம் அணு உலை வாயிலிலேயே போராட்டம் நடைபெற்றிருந்தால், போராட்டத்தை இத்துணை எளிதாக ஒடுக்கியிருக்க முடியாது.

koodankulam_641

இரண்டு, இடிந்தகரைக்கு வெளியே அரசு நடத்திய பலமான எதிர்ப்பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் இன்னமும் பலமான பிரச்சாரமும், வீச்சான போராட்டங்களும் பல்வேறு சக்திகளால் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நமது பிரச்சாரம், போராட்டங்களின் பலம் போதவில்லை என்பதையே நிகழ்வுகள் காட்டுகின்றன. இடிந்தகரை முற்றுகையிடப்பட்ட பொழுது, தமிழகத்தின் பிற பகுதிகளில் அதனை அசைக்கும் விதமான எழுச்சிகளோ, போராட்டங்களோ நடைபெறவில்லை. இது தமிழகத்திலுள்ள, கூடங்குளம் போராட்டத்தை ஆதரித்த அனைத்து முற்போக்கு அமைப்புகளும் சுயவிமர்சனத்தோடு பரிசீலிக்க வேண்டிய விசயமாகும்.

மூன்று, உள்ளூர் அளவில், இடிந்தகரைக்கு வெளியே, “கூடங்குளத்துக்காரர்கள் நல்ல விலைக்கு அன்று நிலத்தை விற்று விட்டு, இன்று போராடுவது பித்தலாட்டம்” என்ற கருத்து நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் வலுவாக இருந்தது. ஒரு வகையில் சொன்னால், இது இடிந்தகரை மீனவ மக்களின் போராட்டமாகவே துவங்கி, அங்கேயே பின்னடைவுக்குள்ளாகி, அங்கேயே தடுமாறிக் கொண்டுமிருக்கிறது. இதனைத் தாண்டி, தமிழகம் தழுவிய அளவில், பரவலாக எடுத்துச் சென்று, அரசை நெருக்கடிக்குள்ளாக்க நாம் அனைவரும் தவறியுள்ளோம். மேலும், மேதா பட்கரின் நர்மதை அணைப் போராட்டத்தைப் போல, சத்தீஸ்கரில் ஹிமான்சு குமாரின் போராட்டத்தைப் போல, சுப.உதயகுமாரின் காந்தியவாதம் சந்தித்த தோல்விகளில் ஒன்றாகவே, இப்போராட்டத்தின் வடிவத்தைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதனை அப்பகுதி மக்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே பரிசீலிக்க வேண்டியுள்ளது. ஜெய்தாபூரில் நடைபெற்றது போல, நந்திகிராமத்தில் நடைபெற்றது போல, தற்காப்பு, எதிர் வன்முறையைக் கையிலெடுக்காமல் அரசு இயந்திரம் எந்த ஜனநாயகக் கோரிக்கையையும் அங்கீகரிக்கும் நெருக்கடிக்கு ஆளாகப் போவதில்லை என்ற உண்மையை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு கேள்வியோடு முடித்துக் கொள்வோம். கூடங்குளம் போராட்டத்திற்கு அனுபவம், படிப்பினைகளைப் பட்டியலிடும் மகஇக மேதாவிகள், தாம் நெல்லை கங்கை கொண்டானில் நடத்திய கோகோ கோலா போராட்டம் ஏன் படுதோல்வியடைந்தது, தமது ரிலையன்ஸ் ஃபிரஷ் எதிர்ப்புப் போராட்டங்கள் ஏன் பிசுபிசுத்துப் போயின என்பது குறித்தெல்லாம் என்றேனும் தமது புதிய ஜனநாயகத்தில் அனுபவங்களையும், படிப்பினைகளையும் தொகுத்து எழுதியிருக்கிறார்களா? எல்லாம் தெரிந்த தலைமைதானே அப்போராட்டங்களை நடத்தியது? அதாவது மேற்கூறிய கட்டுரையில் அவர்களே அருளியிருக்கிறபடி, எதை, எப்படி மக்களிடம் சொல்லி, எவ்வாறு வெற்றிக் கனியை பறிக்க வேண்டும் எனத் தெள்ளத் தெளிவாகக் கற்றுணர்ந்த அதிமேதாவித் தலைமைதானே அப்போராட்டங்களை நடத்தியது? அப்புறம் ஏன் அப்போராட்டங்கள் தோல்வியடைந்தன ஐயன்மீர்?

...

கட்டுரையாளர் சென்னையில் வசித்து வருகிறார். அவரது எழுத்துக்களின் தொகுப்பை http://sandhippizai.wordpress.com/ எனும் பதிவுத் தளத்தில் காணலாம். தொடர்புக்கு: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.