சென்னையில் ஒரு மாணவன் ஒரு ஆசிரியையைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டான். அதுவும் அவன் படிக்கிற பள்ளியில். நடந்திருப்பது ஒரு கொலை. அதுவும் கொலை செய்யப்பட்டிருப்பது ஒரு பெண். அவர் பணிபுரியும் இடத்திலேயே கொல்லப்பட்டு உள்ளார். இவை வருந்தத்தக்கது மட்டுமல்ல, வன்மையாகக் கண்டிக்கத்தக்கதும் தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஊடகங்கள் செய்திகளுக்காகக் காத்து இருப்பவை. பத்திகளுக்கான வெற்றுக்கட்டங்கள் கோரப்பசியோடு நிகழ்கிறவற்றை உற்றுக் கவனித்துக் கொண்டு இருக்கின்றன. என்ன நடந்தாலும் நன்றிகூறுகிற இடத்தில் இருக்கிற ஊடகங்களின் பற்சக்கரத்தில் இருந்து பெரும்பாலும் பிணவாடை வீசுகிறது. குருதி வழிந்தோடுகிறது. கருணையற்ற தேவதையின் கையிலிருக்கிற தூண்டிலுக்குக் கோடிகோடி முனைகள்.

செய்திகளாய் செய்திகளைப் பார்க்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. செய்திகளை மக்களுக்குக் கொண்டு செல்கிற இடத்தில் இருக்கிற தொலைக்காட்சி, பத்திரிக்கைகள், இணையதளங்கள் ஆகியவற்றின் நேர்மையில் எந்தவிதமான ஐயமும் இல்லை. பிறகு என்னதான் இந்த ஆதங்கத்தின் முதல்முகமாக எடுத்துக்கொள்ளப் போகிறோம்?

ஒரு சம்பவத்தை எவ்விதம் கையாள்வது என்பதில் இருக்கிற சிக்கல்கள் ஒருபுறம். மறுபக்கத்தில் என்ன தீர்வு என்ற ஒரு கேள்வியின் ஊசலாட்டத்தில் மெல்ல அறுந்துகொண்டிருக்கிறது உயிர்நூல். இந்தமுறை இர்ஃபான் என்னும் மாணவன். வயது 14. தன் பள்ளியில் தனக்குப் பிடிக்காத, தன்னால் பரிமளிக்க முடியாத ஹிந்தி பாட ஆசிரியையைக் கொடூரமான முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்த ஒரு குழந்தை. இப்படியா எழுதப்பட்டன செய்திகள்.. ? அவனொரு குழந்தை இல்லையா.. ? அவனைப் பெற்றவர்கள் என்ன சாதி மதம் என்பனவற்றையெல்லாம் மீறி, ஏழையா பணக்காரரா என்பதைப் புறந்தள்ளி, நாமெல்லாரும் குழந்தைகளின் உலகத்தில் நிகழ்த்தி வருகிற வஞ்சகங்களும் வன்முறைகளும் அடக்குமுறைகளும் இன்னபிறவும் குறித்தெல்லாம் எவ்விதமான குற்ற உணர்வும் கொள்ளாமல் உண்ணுவதற்கும் மலங்கழிப்பதற்கும் அடுத்த கடமையாக மேலோட்டமாக எவன் வீட்டில் எழவானால் எனக்கென்ன என்று பொத்தாம் பொதுவாகப் போகிற போக்கில் கருத்துக்களை எறிந்துவிட்டுப் போவது குற்றமில்லையா... ?

அந்த ஆசிரியை கொடூரமாகக் கொல்லப்பட்டது அக்கிரமம் தான். கொலை செய்தது யார்.. ? அவனொரு சிறுவன். இந்த நாட்டில் எதிர்காலத்திற்கான நுழைவு வாசலைக் கூட மிதிக்காத ஒரு சின்னஞ்சிறுவன். அவனை கொலைகாரன் என்றும் கொடியவன் என்றும் வஞ்சகன் என்றும் முன் ஜென்மங்களில் இருந்தே தீவிரவாதி என்றும் புராண காலத்தில் அவனொரு அரக்கன் என்றும் செய்திகளைக் கட்டமைப்பது அந்தக் கொலையை விடக் கொடியது.

குழந்தைகளுக்கு இருக்கும் பிரச்சினைகள் என்னென்ன.. ?

அடுக்குமாடி வீடுகளில் பணக்காரச் சிறைகளில் ஏற்கனவே பிறந்த தினம் முதல் பொத்திப் பொத்தி வளர்க்கப்படுகிறார்கள் குழந்தைகள். பெரும்பாலான குடும்பங்களில் தாயும் தந்தையும் என இருவருமே பணிபுரிகிறார்கள். ஆயா முதல் டிரைவர் வரை எடுப்பார் கைப்பிள்ளைகளாக வளர்க்கப்படுவது வன்முறை எண் 1.
பெற்றவர்களுடன் முரண்பாடு. பெரியவர்களின் அன்புக்கதை சொல்லல் தொடங்கி, தாத்தா மற்றும் பாட்டி என்ற இரண்டு உறவுகளையுமே குடும்பம் என்ற அமைப்பில் இருந்து எவ்வளவு தொலைவு கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு தொலைவில் இருக்கின்றன முதியோர் இல்லங்கள். அப்புறம் அன்பை இழந்த பிள்ளைகள் அவை பெற்றோரிடமும் கிட்டாப் பொருளாய் வெறுங்கையேந்துகிறார்கள் என்பது வன்முறை எண் 2.

இன்றைக்குக் கூட்டுக்குடும்பம் என்ற ஒரு அமைப்பின் சிதைவும், குடும்பக் கட்டுப்பாடு என்ற நன்மை கொடுத்த தீமையின் காரணமாக பெருமளவு வீடுகள் "ஒரு குழந்தை இல்லங்களாக" மாறி இருக்கின்றன. இதில் ஒரு மகன் ஒரு மகள் என்ற கணக்கில் இரண்டு பிள்ளைகளுக்கு இடையில் 4 அல்லது 5 வயது இடைவெளி இருப்பதும் ஒரு முக்கியக் காரணம். ஒரு பிள்ளை தான் விளையாடத் தனக்குச் சமமான தோழமை இல்லாமல் பூட்டிய கதவுகளுக்கு உட்புறம் தனக்குத் தரப்பட்ட பொம்மைகளுக்கான பொம்மையாக மாற்றப்பட்டிருப்பது வன்முறை எண் 3.

தொடர்ந்து வீடியோ கேம், கேட்பாரற்ற தனியறை வாசம், கையில் அகஸ்மாத்தாக கிடைக்கக் கூடிய செல்பேசி, அளவற்ற இணையத்தின் வாசல்கள், கணக்கற்ற பிராண்டுகளின் எண்ணிலடங்கா தேர்வுகள் ,என அவிழ்த்து விடப்பட்ட குழந்தைகள் பராமரிப்பற்ற தோட்டம் இடிகாடாகும் என்றாற்போல் ஆகிவிடுகின்றனர்.

பணத்தைத் துரத்தும் பெற்றோர் பிள்ளைகளுடன் செலவழிக்கிற நேரம் என்பது மிக மிக அருகிக் கொண்டே வருகிறது. அப்புறம் அந்தப் பிள்ளைக்கு இழைக்கப்படும் அடுத்த கொடுமை "கல்வி"

கல்விமுறையும் தேவையான மாற்றங்களும்:

பொதி சுமக்கிற கழுதைகளுக்குத் தாம் கழுதைகள் என்றோ, சுமப்பது ஆடையழுக்குப் பொதி என்றோ தெரியாது. ஆனால் சுமக்கச் செய்கிறவனுக்குத் தெரியும் ஒரு கழுதையின் மீது எந்தளவு பாரம் ஏற்றமுடியும் என்பது. அவனது கருணை கூட பெற்றோர், அரசாங்கம், கல்வி நிறுவனங்கள் இவை மூன்றுக்குமே இல்லை என்பது தான் வேதனைகளின் உச்சம்.

எதற்கு இத்தனை பாடங்கள்? எதற்கு இவ்வளவு புத்தக நோட்டுக்களின் சுமைகள்.. ?முதுகை வளைத்துவிட்டு மூளை வளர்ப்பது என்ன நியாயம்.. ?

எக்ஸ்ட்ரா கரிக்குலர் என்று நடனம் துவங்கி நீச்சல் வரைக்கும் நடனம் துவங்கி ஓவியம் வரைக்கும் சகல கலைகளையும் ஒதுக்கி மேலதிகமாய்த் திணிக்கிற இக்கல்விமுறைக்குத் தெரிவதே இல்லை அந்த அத்தனை கலைகளும் எத்தனை லட்சக்கணக்கானவர்களுக்கு வேலையாய் வாழ்க்கையாய் மாறி இருக்கிறது என்று. அடிப்படை அறிவியலையும் வரலாற்றையும் தமிழ், ஆங்கிலம் அல்லது இன்னொரு மொழியையும் ஏன் ப்ரிகேஜி துவங்கி 12 வரை பதினைந்து வருடம் ஏன் படிக்க வேண்டும்.. ? வரலாறு என்பதில் ஏன் இவ்வளவு வஞ்சனை... ? அறிவியலில் ஏன் இத்தனை கடினம்.. ? மொழியில் ஏன் இத்தனை சுமை.. ? நோக்கம் நல்ல நோக்கம் தான்... செயல்படுத்தும் முறைகளில் காலத்துக்கு ஏற்றாற்போல் மாறவேண்டாமா.. ? இன்னமும் அசோக‌ர் ஏன் எல்லாப் பிள்ளைகளின் மனங்களில் ஒன்றுக்குதவாத முள் மரங்களை நட்டுக்கொண்டே இருக்கிறார்?

நேற்று முன் தினம் என்பது இன்றைய வரலாறு இல்லையா..? எப்போது தான் கண்களைத் திறக்கப்போகிறது கல்விப் பூனை..?

நடனம், இசை, ஓவியம் உள்ளிட்ட சில பாடங்களை மெயின் ஸ்ட்ரீமிலும் இரண்டு மொழிகள் பேச மற்றும் எழுத அடிப்படை அளவிலும், கொஞ்சம் கணிதம் கால்குலேட்டரை உபயோகிக்கிற அளவிலும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட நிஜத் தேவைகளை கொஞ்சமும் கொஞ்சூண்டு ஆதார அறிவியலும், ஆதார வரலாறும் அடிப்படை சட்டமும் அடிப்படை மனித உரிமைகளும் என எப்படி அதி அற்புதமான கல்வித்திட்டத்தை வகுக்கலாம்? அதை விடுத்து பதினைந்து வருடங்களை புழுக்கை அள்ளச்செய்தால் பிள்ளைகள் என்னவாகும்.. ?

யார் எதிர்க்குரல் எழுப்புவது.. ? நானும் நீங்களுமா... ? நாம் எழுப்ப வேண்டியது இந்த மாற்றத்துக்கான எதிர்க்குரல். அதை விடுத்து என்ன நடந்தாலும் எவனையாவது எதையாவது குறை சொல்லிக்கொண்டு மட்டும் இருந்தால் நாளை உலகம் குற்றங்களின் கோரபீடமாக மாறாமல் வேறென்ன நிகழும்..?

ஆசிரியர்களுக்குத் தேவை அமைதி:

எந்த நாட்டில் ராணுவமோ அதன் துணை அமைப்புக்களோ தேர்தல்களில் பயன்படுத்தப்படுவதில்லையோ, அங்கே தான் ஜனநாயகம் இருப்பதற்கான வாய்ப்பு உண்டு என்பது எந்த அளவுக்கு நிசமோ இன்னுமொரு நிசம் "எந்த நாட்டில், எந்த மாநிலங்களில் ஆசிரியர்கள் கல்வி சொல்லிக்கொடுக்கும் பணி தவிர வேறெந்தப் பணியிலும் பயன்படுத்தப்படாமல் இருக்கிறார்களோ, அந்த சமுதாயம் தான் சிறக்கும். மற்றவை பிறழ்ந்தே தீரும்.. ஆசிரியர்களை அரசாங்கம் மக்கட்தொகைக் கணக்கெடுப்பு உள்ளிட்ட பிற எந்தப் பணிக்கும் பயன்படுத்தக் கூடாது, தேர்தல் உள்பட. ஒரு பணியை செய்வதற்கு அரசாங்கத்தின் ஆயிரக்கணக்கான உட்பிரிவுகளில் அரசு சமரசம் செய்துகொள்வதற்குக் கல்வித்துறை தானா கிடைத்தது? இந்தக் கூடுதற்சுமைகள் ஆசிரியர்களின் உள்ளங்களை பாதிக்கும்.

ஆசிரியர்கள் தனிப்படிப்பு எனப்படும் ட்யூஷன் எடுப்பதை சிறப்புச்சட்டங்கள் இயற்றித் தடை செய்தல் வேண்டும். ட்யூஷனை அரசாங்கத்தின் உப அமைப்புக்கள் வேலையில்லாத பட்டதாரிகள், ஆராய்ச்சி மாணாக்கர்கள், பயிற்சி ஆசிரியர்கள் என சில சிறப்புப் பிரிவினரைக் கொண்டு நடத்தலாம். நேரங்கொத்திகளாய் தம்மையும் மாணாக்கர்களையும் மாற்றுகிற ஆசிரியர்கள் அவற்றைக் கைவிட்டே ஆகவேண்டும். ஆசிரியர்கள் சமீப காலம் வரையில் மாணாக்கர்களை பிரம்பு, ஸ்கேல் என சிலவற்றின் உதவியுடனும், கைகளாலும் அடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர். அரசு உத்தரவிற்குப் பிறகு தற்போது பிள்ளைகளை அடிக்கிற உரிமை ஆசிரியர்களுக்கு இல்லை. ஆண்டாண்டு காலமாகத் தங்கள் செலுத்தி வந்த அதிகாரங்களில் முக்கியமானதொன்று தங்களது கைகளை விட்டுப் பறிக்கப்பட்டதைப் போல் உணர்கின்ற ஆசிரியர்களில் பலர் அதற்கு மாற்றாகச் சொல் அம்பு கொண்டு மாணாக்கர்களைத் தாக்குகின்றனர். சொல் பொறுக்காமல் கல்வியைக் கைவிட்ட மாணவர்களின் எண்ணிக்கையையும் சொற்களால் தாக்குண்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்களின் எண்ணிக்கையையும் மிகக் கவனமாக நோக்கவேண்டியிருக்கிறது.

ஆசிரியர்களுக்கு உளவியல் ஆற்றுப்படுத்துதல்கள் அவசியம். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் பெற்றோர்கள் தவிர சமூகத்தின் உயர்தகுதிகளை எட்டிப்பிடித்த வெற்றியாளர்கள் மருத்துவர்கள் என சான்றோர் குழுவும் பாலமாக இருந்து அடிக்கடி கல்வி தழுவா பொது சந்திப்புக்களை ஏற்படுத்தல்கள் வேண்டும்.. சமூகம் என்ற ஒன்று நாமெல்லாரும் சேர்ந்து கட்டமைக்கிற மாயச்சங்கிலி. அதன் ஒவ்வொரு கண்ணியும் சமமான பொறுப்பு கொண்டவையே. இங்ங‌னம் கல்விமுறை சீர் செய்யப்படுதல் அவசியம். கல்விமுறையில் தேவைப்படுகிற மாற்றமனைத்தும் அதி அவசரமாக நடந்தால் நாட்டுக்கும் எதிர்கால மாணவ சமூகத்துக்கும் நல்லது.

இந்தக் கட்டுரையை முடிப்பதற்கு முன் சமீபத்தில் நான் படித்த ஒரு நாவலின் ஒரு இடைப்பகுதியை முன் வைக்க விரும்புகிறேன்

"ஒரே ஒரு விஷயம்பா.. புள்ளைங்களை ரொம்பக் கடுமையா வளர்க்காதே. அப்புடி வளர்த்தா என்ன ஆகும்னு எனக்குத் தெரியும். அதுங்க சின்ன வயசுல எதிர்பார்க்கிற அன்பைக் குடு. அதுங்களோட நெறைய்ய டைம் ஸ்பெண்ட் பண்ணு. அதுதான் மிகப்பெரிய சொத்து. நாம்ப சேத்து வெக்கிற வீடு நிலம் எல்லாத்தையும் அவங்களே வாங்க முடியும். நாம்ப காட்டுற அன்பு தான் முக்கியம். அதை வெளிப்படையா காட்டினா தான் நல்லது. "

நாவலின் பேர் அவ்வுலகம். எழுதியவர் வெ.இறையன்பு ஐ. ஏ. எஸ்.