நவம்பர் 2011 மற்றும் ஜனவரி 2012 மாதங்களில் வெளிவந்த சங்க முழக்கம் இதழ்களில் கூடங்குளம் அணு உலை திட்டதிற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள கருத்துகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் வண்ணமும் வாசகர்கள் உண்மை நிலையை அறிந்து கொள்ளும் விதமாகவும் இந்த கடிதத்தை எழுதுகிறேன். முதலில் போராட்டத்தின் தன்மைகள் குறித்தும், இரண்டாவது அணு உலையின் அவசியம் குறித்தும் தாங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் மீதான விளக்கங்களை இப்போராட்டத்தை துவக்கம் முதலே உற்று நோக்கி வருபவன் என்ற முறையில் தர விரும்புகிறேன்.

kudankulam_340இது மீனவர்களின் போராட்டம் என்று அடையாளப்படுத்தி பிற சமூகத்தினர் இப்போராட்டத்தில் கலந்து விடாமல் பார்த்து கொள்ள ஒரு பொய் பரப்பல் நடந்தது. ஆனால் உண்மை என்னவென்றால் திருநெல்வேலி மாவட்ட கடற்கரை கிராமங்களில் வாழும் கிறிஸ்தவம் தழுவிய மீனவர்களான பரவர்களும், கிறிஸ்தவம் தழுவிய மற்றும்(அய்யா வழி மற்றும் அம்மன் வழி பிரிவுகள் ) ஏனைய நாடார் சமூகத்தவர்களும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் வாழும் கூடங்குளம், செட்டிகுளம், வைராவிக்கிணறு, எஸ்.எஸ்.புரம் போன்ற உள்நாட்டு கிராமங்களை சார்ந்தவர்களும் விஜயாபதி போன்ற கிராமங்களில் வாழும் இசுலாமியர்களும் இடிந்தகரை லூர்துமாதா ஆலயத்திற்கும் சித்தி விநாயகர் திருக்கோவிலுக்கும் இடைப்பட்ட மைதானத்தில் பந்தல் அமைத்து சாதி, சமய வேறுபாடு கருதாமல் "இது தமிழர் போராட்டம்" என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு போராடி வருகிறார்கள். இது யாரும் எந்த நேரமும் நேரடியாக போய் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும் உண்மை நிலையாகும். இது மீனவர்களின் போராட்டம் என்ற பொய் பரப்பலுக்குப் பின்னணியில் இருந்த இன்னொரு காரணம் இதை கிறிஸ்தவர்கள் போராட்டமாக சித்தரிக்க தயாரிக்கப்பட்ட சூழ்ச்சி திட்டமாகும்.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடலோரத்தை தங்கள் பூர்வீக வாழ்விடமாகக் கொண்ட பாரம்பரிய மீனவர்களான பரவர்களும், முக்குவர்களும் முழுக்க முழுக்க கிறிஸ்தவம் தழுவியவர்கள் ஆவர். எனவே மீனவர் போராட்டம் என்றாலே அது கிறிஸ்தவர் போராட்டம் என்று அடையாளம் காட்ட விரும்பும் சூழ்ச்சியாகும். அதன் பின்னர் இது அந்நிய நாடு தூண்டுதல் என்பதும், வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்பதும், பணத்திற்கும் பிரியாணிக்கும் மக்கள் போராட வருகிறார்கள் என்பதும், கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களை குறி வைத்து ஆய்வு என்ற பெயரில் நெருக்கடிகள் கொடுப்பதும் மெல்ல மெல்ல விரியும் ஒரு பெரிய சதி திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

போராட்டத்தின் நியாயங்களை நேரடியாக சந்திக்க முடியாத காரணத்தால் போராட்டத்தை களங்கப்படுத்துவது என்ற மோசடி திட்டத்தை அரங்கேற்றி வருகிறது காங்கிரஸ் அரசு. அயல் நாடுகளிலிருந்து நிதி பெறும் தொண்டு நிறுவனங்கள் இந்திய அரசின் அனுமதி பெற்று, ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு இயங்கி வருவது இங்கு ஒன்றும் புதிதில்லையே. இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, சமயம் சாராத நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் இருக்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள சில கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களில் மட்டும் வெளிநாட்டு பணம் வந்துள்ளதாக கூப்பாடு போடுவதேன்? வேறு எந்த நிறுவனங்களும் வெளிநாட்டு நிதி பெறவில்லையா? அவை பற்றி பேசாதது ஏன்? ஆதரவாக போராடும் தொண்டு நிறுவனங்களுக்கு போராட்டத்திற்காக வெளிநாட்டு பணம் வந்ததிற்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா? அப்படி ஒன்றும் இதுவரை கிடைத்ததாக செய்திகள் இல்லையே. பொய்ச் செய்திகள் மட்டும்தான் வருகின்றனவே தவிர ஆதாரங்கள் முற்றிலும் இல்லை.

எளிய மீனவர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் தங்கள் அன்றாட வருமானதிலிருந்து தரும் பங்களிப்புகள்தான் போராட்டத்தின் பொருளாதாரப் பின்னணி என்று உண்மையை விளக்கினால் அதற்கு கணக்கு காட்ட வேண்டாமா என்கிறார்கள். அந்த கணக்கை காட்ட சொல்லும்போது இதுவரை நாங்கள் சொன்னதெல்லாம் தவறுகள் என்று மன்னிப்பு கேட்பதல்லவா நாகரீகம். வெளிநாட்டு பணத்தில் போராட்டம் நடக்கவில்லை என்பதை அந்த கருத்தை பரப்பியவர்கள் நாட்டு மக்களுக்கு உண்மையை அறிவிப்பதுதானே நேர்மை. தங்கள் வாழ்வுரிமை மற்றும் வாழ்வாதாரங்களை காக்க ஈகங்கள் செய்து பெரும் எழுச்சியுடன் எளிய தமிழ்ச்சமுகத்தினர் நடத்தி வரும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்தின் நியாயங்களுக்கு பதில் சொல்ல முடியாத இந்திய அரசு, ஒன்றுபட்டு நிற்கும் சமுகத்தை சாதி, சமய அடிப்படையில் பிளவுப்படுத்தி அப்பகுதியில் பெருவாரியாக வாழ்ந்து வரும் கிறிஸ்தவர்கள் மீது "தேசவிரோதிகள்" என்ற முத்திரையை குத்த முயற்சிக்கும் சூழ்ச்சிதான் இது.

இதுவரை வகுப்புவாத சக்திகள் செய்து வந்த இந்த பொய் பரப்பலை இப்பொழுது காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையிலான அரசாங்கமும் செய்கிறது. அடிப்படையில் இது மதவாதம் கூட இல்லை, இது ஆதிக்க சாதித் திமிர். ஏனெனில் தென் தமிழகத்தில் அதுவும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் செறிந்து வாழும் நாடார், ஒடுக்கப்பட்டவர், பரவர், முக்குவர் கிறிஸ்தவம் தழுவியது ஆதிக்க சாதி மற்றும் ஆதிக்க வர்க்கத்தினரின் கொடுமையிலிருந்து தங்களை தற்காத்து கொள்ளத்தானே. இச்சமுகங்களின் மீதான தங்களின் சுரண்டலும், மேலாதிக்கமும் தளர்ந்து போன ஆத்திரத்தை தீர்துக்கொள்ளத்தானே இன்று கிறிஸ்தவர்கள் மீது இந்த பாய்ச்சல். வகுப்புவாத சக்திகளுக்கு மாற்றாக இந்த மக்கள் காங்கிரசினைக் கருதியதால் அல்லவா இன்றைக்கு அக்கட்சிக்கு தமிழக சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவமானது மிஞ்சி இருக்கிறது. இப்பொழுது காங்கிரசின் வகுப்பு, வர்க்க நலன்கள் அம்பலமாகிவிட்டதால் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையோர் நடுவில் சாயம் வெளுத்த நரியாகி நிற்கிறது காங்கிரஸ்.

யாருக்குப் பின்னால் அந்நிய நாடுகள் உள்ளன? சில்லறை வர்த்தகம் வரை நேரடி அந்நிய முதலீட்டை கொண்டு வரத்துடிக்கும் காங்கிரசின் பின்னணியிலா? இல்லை அன்றாட வருவாயில் போராட்டத்தை மட்டுமல்ல நாட்டின் பொருளாதாரத்தையே தாங்கும் விவசாயிகள், வணிகர்கள், மீனவர்கள் பின்னணியிலா? ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா என்று அந்நிய நாட்டின் பின்னணியில் இயங்குகிறது இந்திய அணுசக்தி துறை. அவர்களின் பின்னணி இல்லாமல் இந்த அலம்பல், புலம்பல் விஞ்ஞானிகள் நாட்டு மக்களுக்காக அவர்களது நல்வாழ்விற்க்காக ஒரு சிறு துரும்பைக் கண்டுபிடித்து தந்தார்கள் என்று சொல்ல முடியுமா? கூடங்குளம் அணு உலையை மூடும் கோரிக்கையில் வென்றால் நாட்டின் பிற பாகங்களில் உள்ள அமெரிக்க, பிரான்ஸ் கூட்டு அணுஉலை திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களும் உத்வேகமடையும் என்று அமெரிக்காவிற்குத் தெரியும் என்பது இங்கே உள்ள உலக மகாஞானிகளுக்கு தெரியாமல் போனதேன். பிறகு எப்படி அவர்கள் அணு உலைகளுக்கு எதிரான போராட்டத்தை தூண்டி விட முடியும்?

கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வை காத்துக் கொள்ள போராடக்கூடாது என்று என்று இந்தியாவில் ஏதேனும் சட்டமிருக்கிறதா? இல்லை கிறிஸ்தவ மக்கள் பங்கேற்கும் போராட்டங்களுக்கு ஆயர் பேரவை, பாதிரியார்கள் உள்ளிட்ட கிறிஸ்தவ திருச்சபை அமைப்புகள் தங்கள் ஆதரவைத் தருவது எந்த விதத்தில் ஒரு சனநாயக நாட்டில் தவறாகும்? தாங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களை பார்க்கும்பொழுது இந்த வகுப்புவாத முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சூழ்ச்சிகளுக்கு தாங்களும் இரையாகிருப்பதைக் கண்டு வருந்துகிறேன். இது வருந்தத்தக்கதும் திருத்தப்பட வேண்டியதுமாகும். 2011 செப்டம்பர் 11 ஆம் தேதி தொடங்கிய அணுஉலை எதிர்ப்பு போராட்டம் குறித்து அடுத்த மாதம் 24 -26 தேதிகளில் தங்கள் கட்டுரையில் குறிப்பிடும் திருச்சியில் கூடிய தமிழக ஆயர் பேரவை போராடும் மக்கள் தரப்பு நியாயங்களை தாங்கள் அங்கீகரிப்பதாக கருத்து தெரிவித்தது. ஆனால் தங்கள் கட்டுரையோ மேற்கண்ட ஆயர் பேரவை தீர்மானத்தையே கூடங்குளம் பகுதி மாதாகோவில்கள் நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிடுகிறது. அப்படியானால் பேரவை கூட்டத்திற்கு பிறகல்லவா போராட்டம் ஆரம்பித்திருக்க வேண்டும்? சங்க முழக்கத்தில் இது போன்ற தவறான தகவல் பதிவாக நேர்ந்தது துரதிர்ஷ்டமே!

ஒடுக்கப்படும் சமுகத்து மக்கள் தங்கள் அரசியல், பொருளாதார, சமுக உரிமைகளை காத்துக்கொள்ள கிறிஸ்தவம் தழுவினார்கள் எனில் இன்றும் அதே உரிமைகளை நிலை நாட்ட மக்கள் போராடும்போது கிறிஸ்தவம் எப்படி ஒதுங்கியிருக்க முடியும்? தயவு செய்து வரலாற்றை உன்னிப்பாக கவனியுங்கள். அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களின் கண்னசைவுக்கேற்ப அரசாங்கம் நடத்துகின்ற பா.ஜா.க, காங்கிரஸ் கட்சிகள் உள்ளிட்ட ஏனையோரின் ஆதிக்கசாதி மனோபாவமும் முதலாளித்துவ கருத்தாக்கங்களும் கொண்ட தேச விரோத சக்திகள்தான் இன்றைக்கு தங்கள் உழைப்பால் இந்த நாட்டை தாங்கும் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், மீனவர்களின் வாழ்வை, வாழ்வாதாரங்களைப் பிடுங்கி ரஷ்ய, பிரெஞ்சு முதலாளிகளின் பணப்பையை நிரப்ப கூலி வாங்கிக் கொண்டு அடியாள் வேடம் பூண்டு நிற்கிறார்கள். கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில் அந்நிய தூண்டுதல் இல்லை என்று ரஷ்ய நாட்டு தூதுவரே தனது நேர்காணலில் சொன்னாரே, அதற்கு ஏன் பதிலே இல்லை?(13-12 -2011 - இந்தியன் எக்ஸ்பிரஸ்)

Koodankulam_370போராட்டம் பற்றி பேசும்போது "உற்பத்தி துவக்கும் நேரத்தில் எதிர்ப்பு என்பது சற்றே உதைக்கிறது" என்று எழுதி இருக்கிறீர்கள். மேலும் "கல்பாக்கம் கண்டு அச்சம் இல்லை, கூடங்குளம் கண்டு நேற்று வரை அச்சம் இல்லை" என்று போராட்டத்தின் நேர்மை குறித்து சந்தேகத்தை எழுப்பி இருக்கிறீர்கள். 1998-இல் இந்திய -ரஷ்ய ஒப்பந்தம் செய்யப்பட்ட நாளிலிருந்தே இந்த திட்டதிற்கு எதிரான போராட்டங்களும் துவங்கிவிட்டன என்பதுதான் உண்மை. அடிக்கல் நாட வரவிருந்த பிரதமரும், முதல்வரும் மக்கள் எதிர்ப்பின் காரணமாகவே வருகையை ரத்து செய்தனர். 1989 மே 1 இல் கன்னியாகுமரியில் நடைபெற்ற எதிர்ப்புப் பேரணியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் கூட நடைபெற்று இருக்கிறது. அதன் பின்னர் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்பதற்கு மக்கள் அஞ்சிய காரணமும் அதுதான். ஆனாலும் சின்ன சின்ன அளவிலான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. ஊடகங்கள் அவற்றை வெளிக்கொணரவில்லை. பின்னர் சோவித் யூனியன் சிதறுண்டதால் இங்கே திட்டம் கிடப்பில் போடப்பட்டதும் போராட்டங்களும் ஓய்ந்தன. சுமார் 10 ஆண்டு இடைவெளிக்குப் பின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்ட பின் மீண்டும் போராட்டங்களும் தொடங்கின. பேச்சிப்பாறை தண்ணீரை எடுக்கப்போவதில்லை என்ற வாய்மொழி உறுதியை நம்பி கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு குறைந்தது. இது குறித்து ஒப்பந்தந்தில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வேலைவாய்ப்பு என்னும் ஏமாற்று வித்தையாலும் மக்கள் பெருமளவில் ஏமாற்றப்பட்டனர். ஆனால் அதெல்லாம் எவ்வளவு ஆபத்தான படுகுழியில் தள்ளிவிடும் பித்தலாட்டம் என்பதை மக்கள் உணர, ஜப்பான் நாட்டில் புகுஷிமாவில் அணுஉலைகள் வெடித்துச் சிதறியதை தொலைகாட்சிகளில் மக்கள் நேரில் கண்ணால் கண்டதே போதுமானதாக இருந்தது. ரஷ்யாவின் செர்நோபில் அணு உலை வெடித்துச் சிதறியபோது ஊடக வசதிகள் இத்தனை தூரம் மேன்மையுற்று இல்லாததால் மக்கள் போதிய அளவு விழிப்புணர்வு பெற முடியாமற் போனது. வெப்ப நீர் சோதனை, விபத்து பாதுகாப்பு ஒத்திகை போன்றவை மக்களை விழிப்புணர்வின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. இனி எதுவாகினும் இதை அனுமதிப்பதில்லை என்று போராட்ட களம் கண்டனர் மக்கள். ஆறு மாதங்களுக்கு மேலாகத் தொடரும் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தின் உண்மைத்தன்மை இதுவாகும்.

மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி பொதுமக்கள் ஒப்புதலைப் பெற்று இருந்தால் இப்போது போராடுகிறார்களே என்ற விமர்சனம் நியாயமானதாக இருந்திருக்கும். கருத்து கேட்பே நடத்தாமல் சனநாயக மரபுக்கு விரோதமாகவும், விதிமுறைகளை மீறியும், அரச வன்முறையை ஏவிவிட்டும், பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசியும் மக்கள் மீது சுமத்தப்பட்டதுதான் இந்த திட்டம். இந்தப் போராட்டதிற்கு மட்டுமல்ல எந்த போராட்டத்திற்கும் மக்களின் விழிப்புணர்வு மிக முக்கியம். கிழக்கிந்திய கம்பனி எப்போதே வந்துவிட்டதே, அப்போது ஏன் போராடவில்லை, இப்போது போய் வெள்ளையனே வெளியேறு என்று போராட்டம் நடத்துவது சரியா என்று யாரவது கேட்பார்களா? கேட்டால்தான் அது சரியாகுமா அல்லது அறிவுடைமை ஆகுமா ? அணுசக்தி ஆணையத்தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி கூட போராட்டத்தின் நிஜமான காரணமாக இருக்கும் நியாயமான அச்சத்தை அல்லது போரட்டத்தின் நேர்மையை சந்தேகப்படவில்லை (18 -10 -2011 -தினமணி).

இப்போது அச்சம் குறித்து அத்தனை பேரும் மேதைகள் போல வியாக்கியானங்கள் செய்து வருவது வியப்பை தருகிறது. கல்பாக்கத்தினால் எந்த பாதிப்பும் இல்லை என்பது தவறு. அப்பகுதியில் இருக்கும் பாதிப்புகளை மருத்துவர் புகழேந்தி ஆதாரத்துடன் தெளிவாக விளக்கியுள்ளார். சென்ற மாத இந்தியா டுடே இதழ் இது குறித்து விரிவாக செய்தி வெளியிட்டுள்ளது. அங்கே போராடுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தும் நீதிமன்றம் போய் அனுமதி பெற்று போராட்டங்கள் துவங்க போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. உண்மை நிலையை மூடி மறைப்பதற்கு அணுசக்தித் துறை முழு முயற்சியும் செய்து வருகிறது. முறைகேடான வழிகளிலும், சதி வேலைகளிலும் ஈடுபட்டு மக்களை ஏமாற்றியும் வருகிறது என்பதுதான் உண்மை. வெறும் 450 மெகாவாட் தயாரிக்கும் கல்பாக்கத்திலேயே இந்த அளவிற்கு பாதிப்பு என்றால் இப்போதைக்கு 2000 மெகா வாட் தொடர்ந்து பல உலைகள் என்று திட்டமிடப்படும் கூடங்குளம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சுடுகாடாக்கும் சக்தி கொண்டதாக இருக்கும் என்றால் அது மிகையல்ல.

விமான, ரயில், பேருந்து விபத்துக்கள் நடப்பதால் யாரும் பயணங்கள் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்வதில்லை என்று ஒரு தவறான ஒப்பீட்டை அணுஉலை விபத்தோடு பொருத்தியுள்ளீர்கள். வாகன விபத்துக்கள் நடந்தால் அதன் பாதிப்பு அந்த விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான். அணு உலை விபத்து என்பது அணுகுண்டு வெடிப்பிற்கு ஈடானது மட்டுமல்லாமல் தொடர்ந்து வெளிப்படும் கதிர்வீச்சால் பல ஆண்டுகளுக்கு ஆபத்துகளை விளைவிக்கக் கூடியதாக இருக்கும். பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வாழும் லட்சக்கணக்கான மக்களை மீள்குடியமர்வுக்கு வாய்ப்பே இல்லாமல் அவர்களின் பூர்வீக வாழிடங்களை விட்டு இடம்பெயரசெய்து மறு வாழ்விற்குத் தேவையான நிவாரணங்களை செய்ய வேண்டியிருக்கும். உயிருள்ள எதுவும் வாழ முடியாத நஞ்சூட்டப்பட்ட பாலை நிலமாக மாறும். இத்தகைய கடும் விளைவுகளை கொண்ட அணு உலை விபத்தினை பயண நேர விபத்துகளுடன் ஒப்பீடு செய்வது மிக மிகத்தவறான ஒரு போக்கு. அணு உலை விபத்து ஏற்பட்டால் இழப்பீடு தருவதிலிருந்து பன்னாட்டு முதலாளிகளே பின்வாங்குவதும், தாங்கள் எந்தவிதமான பொறுப்பையும் ஏற்க முடியாது என்று கூறுவதும், அணுஉலை கழிவுகளையும் தாங்கள் திரும்பப் பெற முடியாது என்று ஒப்பந்தங்கள் போடுவதையும் இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். அணு உலை வெடிப்பின் பாதிப்புகளுக்கு யாராலும் இழப்பீடு செய்ய முடியாது என்பதும் அதன் விளைவுகளை யாராலும் தடுக்க முடியாது என்பதும் பேருண்மையாகும்.

செர்நோபில் விபத்திற்குப் பின் ரஷ்யா இன்று வரை புது அணுஉலைகள் எதுவும் நிறுவவில்லை. இத்தாலியில் பொது வாக்கெடுப்பில் 95% மக்கள் அணு உலைகள் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். மூன்று மைல் தீவு அணு உலை விபத்துக்குப் பின் கட்டி முடித்து இயக்கிய சோர்ஹம் அணு உலையை எரிபொருள் மாற்றி இயற்கை எரிபொருள் கொண்டு இயக்கினர். வேறு அணு உலைகள் அமைக்கப்படவே இல்லை. 2022இல் அனைத்து அணுஉலைகளையும் மூடிவிட ஜெர்மனி முடிவு செய்துள்ளது. புகுஷிமா விபத்திற்குப் பின் 28 பழைய அணு உலைகளை ஜப்பான் மூடிவிட்டது. கட்டப்பட்டுக் கொண்டிருந்த 10 அணுஉலைகளையும் கை விட்டு விட்டது. சுவிட்சர்லாந்த், மெக்ஸிகோ போன்ற நாடுகள் இருக்கும் அணு உலைகளை மூடுவது என்றும் புதிய அணு உலைகள் வேண்டாம் என்றும் முடிவு செய்துள்ளன‌. இந்தியாவில் மேற்கு வங்கம் அணு உலைகளே வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது. ஏன் கூடங்குள‌ம் திட்டமே ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களினால் துரத்தப்பட்டு தமிழர் தலையில் வஞ்சகமாகக் கட்டபட்டதுதானே.

மின்சாரம் தேவையில்லையா?

தொடரும் மின்வெட்டால் தமிழகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறதே என்னும் கேள்விகளை முன்வைத்து அதற்காக அழிவுசக்தியான அணுமின்சாரம்தான் வேண்டும் என்று அடம் பிடிப்பது போராட்டத்திற்கு எதிராக தூண்டப்படும் ஓர் அரசியல் சூழ்ச்சி என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் மின்தேவையை ஈடுகட்ட மத்திய தொகுப்பில் இருந்து நிறுத்தப்பட்ட 1000 மெகா வாட் மின்சாரத்தை திரும்ப வழங்க வலியுறுத்துவது, திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் மூலம் மின்சாரம் வீணாகாமல் தடுப்பது, மின்தேவைகளுக்காக மத்திய அரசினை வலியுறுத்துவது போன்ற வகையில் போராட்டங்கள் நடைபெற வேண்டுமே அன்றி தங்கள் வாழ்வையும், வாழ்வாதாரங்களையும் காத்துக்கொள்ள போராடும் எளிய மக்களுக்கு எதிராக மின்வெட்டால் அவதியுறும் பொது மக்களையும், பாதிக்கப்படும் சிறுகுறு தொழில் முனைவோரையும் தூண்டிவிடுவது மிகப்பெரிய சதிவேலையாகும். மின்சாரமும் தராமல், தமிழ்நாட்டின் மின்திட்டங்களுக்கான நிதியையும் தராமல் இருந்துவிட்டு, மின்வெட்டினால் எழும் மக்களின் ஆத்திரம் தங்கள் மேல் திரும்பாமல் பார்த்துக்கொள்ளவே மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது கட்சியினையும், சாதி சமய அமைப்புகளையும் தூண்டிவிட்டு அணுஉலைக்கு ஆதரவான போராட்டங்களில் இறக்கியும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்கும் விதத்தில் வன்முறைசெயல்களில் ஈடுபடுத்தி வருகிறது.

கூடங்குளம் திட்டத்தைப் பொருத்தவரை அதை யுரேனியும் எரிபொருளால் இயங்கும் தொழில்நுட்பத்தை மாற்றி அமெரிக்காவின் ஷோர்ஹாம் உதாரணத்தை பின்பற்றி இயற்கை எரிவாயுவால் இயங்கச் செய்தால் மின்சாரமும் கிடைக்கும். இதுவரை செலவிட்ட பணமும் வீணாகாது, மக்களுக்கும் பாதிப்பில்லை என்ற நிலை ஏற்படும். போராட்டங்களும் ஓய்ந்து சுமூக நிலை திரும்ப வழி ஏற்ப்படும். அதை விடுத்து அணுஉலைகள் இல்லாவிட்டால் மின்சாரமே இல்லை என்பதைப் போன்ற ஒரு மாயபிம்பத்தை உருவாக்குவது விஞ்ஞானத்திற்கு முரணானது. கழிவு மேலாண்மை, அணுஉலை ஆயுள் முடிந்த பின்னர் அதனைப் பிரித்து எடுக்க, அதன் பின்னர் அதனை பாதுகாக்க ஆகும் செலவீனங்களை சேர்க்காமல் அணுமின்சாரத்திற்கான செலவு குறைந்தது என்று கூவி கூவி விற்கப் பார்க்கிறார்கள். மேற்சொன்ன செலவுகளைச் சேர்க்கும்போது அணுமின்சாரம் பலமடங்கு கூடுதல் செலவு பிடிக்கக்கூடியது என்பது புரியும்.

 நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 97% சதத்திற்கு மேல் அணுமின்நிலையங்கள் இன்றி நம்மால் இயங்க முடியுமெனில் 3% குறைவான மின்னுற்பத்திக்கு இத்தகைய பாதிப்பு உள்ள அணு உலைத் திட்டங்களை சுமப்பது அவசியமா? அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தால் ஒன்று மட்டும் மிகத் தெளிவாகப் புரியும். அணு உலைகளைத் திணிப்பவர்கள் அந்நிய நாட்டு முதலாளிகளின் லாப வேட்கைக்கு நமது வளங்கள் கொள்ளை போக அயராது உழைக்கும் உள்ளூர் தரகு முதலாளிகள் ஆவர். இவர்கள்தான் இன்று காங்கிரஸ், பா.ஜா.க என்று மத்தியில் ஆளும் எந்தக் கட்சியாக இருந்தாலும் நாட்டை கொள்ளை அடிக்கும் கொள்ளைக்காரர்கள். இவர்களுடன் கூட்டாளியாகவும் உள்ளூர் இடைத்தரகர்களாகவும் இருப்பது மாநில அரசுகள், கட்சிகள் ஆவர். இவர்களுக்கு உதவி செய்து காலைப் பிடித்து எலும்புத் துண்டுகளை பொறுக்கிக் கொள்பவர்கள்தான் மதவாத, சாதிய குழுக்கள்..

இடிந்தகரை-கூடங்குளம் எழுச்சி

இவர்கள் அத்தனை பேரின் தொடர் தாக்குதல்களுக்கு ஈடுகொடுத்து முன்னோக்கி செல்கிறது இடிந்தகரை-கூடங்குளம் எழுச்சி. இவர்களுக்கு ஆதரவாக புரட்சிகர மக்கள் சார் இடதுசாரி அமைப்புகள், தமிழ்த்தேசிய அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், ஆர்வலர்கள், உண்மையை சீர்தூக்கி பார்க்கும் சமய-சமுக அமைப்புகள், அரசின் அடக்குமுறைக்கு அஞ்சாத தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக போராடும் மக்களுக்கும், இயக்கங்களுக்கும் ஆதரவு காட்டும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்த இந்த போராட்டமானது இன்றைக்கு ஒரு புதிய வரலாற்றினை எழுதிக் கொண்டிருக்கிறது. இத்தகைய வரலாற்றினை படைக்கும் மாபெரும் மக்கள் இயக்கத்திற்கு நாமும் தோழமை சக்தியாக மாறுவதுதான் காலம் நமக்கு இடும் கட்டளை......

- அன்ரனி க்ளாரெட்