தமிழ்நாட்டைப் பற்றியும், தமிழ் மொழியைப் பற்றியும் ஆராய்ந்து வருகின்ற ஜப்பான் நாட்டுப் பேராசிரியர் நோபுரு கரஷிமா, சென்னைக்கு வந்தபோது அவர் அளித்த செவ்வி, ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது. அதில் அவர் சொல்லுகிறார்:

‘எனக்கு 70 தலைமுறை முன்னோர்களின் பெயர்கள் தெரியும். ஜப்பான் நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களிலுமே, குறைந்தது 30 முதல் 50 தலைமுறைகளைப் பற்றி அறிந்து இருக்கிறார்கள். முன்னோர்களைப் பற்றிய தகவல்களை, எளிதாகத் தேடிக் கண்டுபிடிக்க முடியும்.

Kodivali_360ஏனெனில், கடந்த பல நூற்றாண்டுகளாக, ஒவ்வொரு ஊரிலும் உள்ள புத்த மடாலயங்களில் வாழ்ந்த புத்த பிக்குகள், அந்த ஊரில் பிறந்தவர்களின் பெயர்களையும், அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் எழுதி வைத்து இருக்கிறார்கள். ஜப்பான் அரசு, அவற்றை அப்படியே அரசாங்க ஆவணங்களாக ஆக்கி விட்டது. இணையத்திலும் இதுபற்றிய குறிப்புகள் உள்ளன.

எனவே, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், நூறு ஆண்டுகள் அயல்நாட்டில் வசித்துவிட்டுத் திரும்பி வந்து, தம்முடைய பெயரைச் சொன்னால் போதும்; அவருடைய குடும்பத்தைப் பற்றிய தகவல்களை எளிதாகப் பெற்று விட முடியும்’ என்று கூறி இருந்தார். வியப்பாக இருந்தது.

இதுகுறித்து மேலும் அறிய, இணையத்தைத் துழாவினேன். ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோ குடும்பத்தைப் பற்றிய செய்திகள் மலைக்க வைத்தன.

அதாவது, மன்னரது யமாட்டோ குடும்பம், கி.மு. 660 ஆம் ஆண்டில் இருந்து ஜப்பானை ஆண்டு வருகிறதாம். அவர்களது வழியில், இவர் 125 ஆவது பேரரசர். (சிலர் 136 ஆவது பேரரசர் என்கிறார்கள். சிலர், முதல் 25 பேரரசர்கள் பற்றிய குறிப்புகளை மறுக்கிறார்கள். எப்படியும், 100 க்குக் குறைவு இல்லை.)

உங்கள் பாட்டனார் பெயர் என்ன?

இந்தத் தகவலைப் படித்ததற்குப் பின்னர், நான் யாரைச் சந்தித்தாலும், ‘உங்கள் தாத்தாவுக்குத் தாத்தா பெயர் என்ன?’ என்று கேட்கத் தொடங்கினேன்.

ஒருசிலரால் மட்டுமே ஒன்றிரண்டு தலைமுறை முன்னோர்களைப் பற்றிச் சொல்ல முடிந்தது. பெரும்பாலானவர்களால் சொல்ல முடியவில்லை. ஏன்?

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலும்கூட, எல்லோருக்கும் கல்வி கிட்டவில்லை. இப்போது உள்ளது போல, எண்ணங்களை, எழுத்துகளைப் பதிவு செய்வதற்கான கருவிகள் எதுவும் இல்லை. நமது முன்னோர்கள் பதிவு செய்த பல ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் நமக்குக் கிடைக்கவில்லை. கரையான் அரித்தும், நெருப்பில் எரிந்தும், மழை வெள்ளத்தில் நனைந்தும் வீணாகின. அதனால், நமக்குக் கிடைக்கவில்லை. முகப்படம் எடுப்பது பற்றிச் சிந்தித்துக்கூடப் பார்த்து இருக்க முடியாது.

எனவே, நமது முன்னோர்களைப் பற்றி நமக்குத் தெரியவில்லை.

இதே நிலை நமக்கும் வரக்கூடாது. உங்களுடைய பேரனுக்குப் பேரன், உங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லையா? அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

உங்களைப் பற்றிய பற்றிய தகவல்களை எழுதி வைக்க வேண்டும். படங்களைத் தொகுத்து வைக்க வேண்டும். குடும்ப உறவினர்களை முகப்படம் எடுத்துப் பாதுகாத்து வையுங்கள். மின்னணு கேமராக்களைக் கொண்டு படங்கள் எடுத்து, கணினிகளில், குறுவட்டுகளில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். அவ்வப்போது பார்த்து மகிழலாம். தேவைப்பட்டால் நகல் எடுத்துக் கொள்ளலாம்.

நான் சந்திக்கின்ற ஒவ்வொருவரிடமும், ‘ஒருமுறையேனும் உலகத்தைச் சுற்றி வாருங்கள்; உங்கள் வாழ்க்கையைப் புத்தகமாக எழுதுங்கள்’ என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

தமிழகத்தில்...

ஓய்வு பெற்ற நீதிபதி திருப்பதி அவர்களை, எழும்பூர் தொடர்வண்டி நிலைய நடைமேடையில் சந்தித்தபோது, நோபுரு கரஷிமா தெரிவித்த தகவலைக் கூறினேன்.

அப்பொழுது அவர் சொன்ன தகவலைக் கேட்டவுடன், எனக்கு ஏற்பட்ட பரவசத்தில், உடம்பெல்லாம் புல்லரித்தது. மயிர்க்கால்கள் அனைத்தும் குத்திட்டன. என் கையை அப்படியே அவரிடம் காண்பித்தேன். அவரும், அருகே நின்று கொண்டு இருந்த அவருடைய நண்பரிடம் பார்க்கச் சொன்னார்.

அப்படி என்ன தகவலை அவர் சொன்னார்? எதனால் நான் பரவசமானேன்?

‘நம்முடைய தமிழ்நாட்டிலும் இதுபோன்ற தகவல்கள் இருக்கின்றன’ என்றார்.

‘நம்மால் ஐந்து அல்லது ஆறு தலைமுறைக்கு மேல் சொல்ல முடியாதே?’ என்றேன்.

சொத்துப் பத்திரங்கள்

‘முடியும். 1977 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நான் நீதிபதியாகப் பணி ஆற்றிக் கொண்டு இருந்தபோது, ஒரு வீட்டின் உரிமை தொடர்பான வழக்கு வந்தது. அதில், ஒரு குடும்பத்தினர் கொண்டு வந்த ஆவணத்தில், கடந்த 300 ஆண்டுகளாக அவர்களது குடும்பத்தில், யாருக்கு யார் பிள்ளை? யாருக்குச் சொத்து உரிமை இருக்கிறது? என்பது பற்றிய தகவல்கள் இடம் பெற்று இருந்தன’ என்றார்.

‘அந்த ஆவணத்தைப் பார்க்க முடியுமா?’ என்று கேட்டேன். ‘கன்னியாகுமரி மாவட்ட அரசு இதழிலும் (கெசட்), தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகத்திலும் பார்க்க முடியும்’ என்று சொன்னார். இதுதான் எனது பரவசத்துக்குக் காரணம்.

கொடிவழி

அவரிடம் பேசி முடித்துவிட்டு விடைபெற்றுத் திரும்பினேன். சிறிது நேரம் கழித்து அவரிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பேசினேன். ‘நீங்கள்‘குடும்ப மரத்தை’ உருவாக்குங்கள் என்று சொன்னீர்கள். ஆங்கிலத்தில் அதை ‘Family Tree’ என்று சிலர் சொல்லுகிறார்கள். அது சரி அல்ல. ‘Geneological Tree’ என்பதுதான் சரி.

நமது வட்ட ஆட்சியர் அலுவலகங்களில், ‘கொடிவழி ஜாபிதா’ என்று ஒரு பட்டியல், வழக்கில் இருக்கிறது. கேட்டு வாங்கிப் பாருங்கள். கூடுதல் விவரங்கள் கிடைக்கும்’ என்றார். அரிய தகவல் ஒன்றை அறிந்து கொண்டதில், என் மகிழ்ச்சி பெருகியது.

என்னுடைய கொடிவழியைப் பற்றிச் சிந்தித்தேன். ‘வை.மு.சு.அ.ப. அருணகிரி’ என்பது என்னுடைய கொடிவழி ஆகும். ‘வையாபுரி-முத்துசாமி-சுப்பிரமணியன்-அருணகிரி-பழநிசாமி-அருணகிரிநாதன்’ இவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். அதாவது ஆறு தலைமுறை.

செட்டிநாட்டில் ஒவ்வொரு குடும்பத்தினரும் பத்துப் பதினைந்து தலைமுறைப் பெயர்களைச் சொல்லுகிறார்கள், எழுதுகிறார்கள். தமிழகத்தின் வேறுசில இடங்களிலும் அந்த வழக்கம் இருக்கிறது.

கிரேக்கர்கள், அரேபியர்கள், ஜப்பானியர்கள், தங்கள் மூதாதையர்களின் பெயர்களையும் சேர்த்துத்தான் சொல்லுகிறார்கள்.

எடுக்காட்டாக, ‘முகமது பின் அல் தானி’ என்ற பெயரில்,

‘முகமது’ என்பது தனி நபரின் பெயர்;

‘பின்’ என்பது மகனைக் குறிக்கும்;

‘பிந்த்’ என்பது மகளைக் குறிக்கும்;

‘கலீபா’ என்பது தகப்பனாரின் பெயர்;

‘அல் தானி’ என்பது குடும்பப் பெயர்.

தொலைக்காட்சிகளில் நாள்தோறும் முகம் காட்டுகிற சேலம் சிவராஜ் சித்த வைத்தியர், செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகளில் கொடுக்கின்ற விளம்பரங்களில், அவருடைய மூதாதையர்களாக 9 தலைமுறை வைத்தியர்களைப் படமாகக் காட்டுகிறார். அதுபோல, தமிழ் நாட்டில் எத்தனையோ வீடுகளில் அரிய தகவல்கள் இருக்கலாம். இதைவிடக் கூடுதலாகக் கொடி வழியை நீங்கள் அறிந்து இருந்தால், எனக்குச் சொல்லுங்கள் என்று, இதே நூலின் முந்தைய பதிப்புகளில் எழுதி இருந்தேன்.

தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் பலர் தொடர்பு கொண்டு தகவல்களைச் சொன்னார்கள். அவற்றையெல்லாம் தொகுத்து, ஒரு புத்தகமாக எழுதிக்கொண்டு இருக்கின்றேன்.

நான் எழுதிய இந்தக் கட்டுரை, ‘கொடிவழி’ என்ற தலைப்பில், 2007 ஆம் ஆண்டு, ‘கலைமகள்’ தீபாவளி மலர், பக்கம் 149 இல் வெளியானது. அதைப் படித்துவிட்டுப் பலர் என்னைத் தொடர்பு கொண்டார்கள்.

குறிப்பாக, சென்னை, மேற்கு மாம்பலம் எம்.ஆர்.சீனுவாசன், (94440-81834) ஒரு கடிதம் எழுதி இருந்தார். பல ஆண்டுகள் தேடலுக்குப் பிறகு, உலகம் முழுவதும் பரவிக்கிடந்த தனது சொந்தங்கள் 400 பேர்களை ஒன்றுதிரட்டி, ஒரே இடத்துக்கு வரவழைத்து, சந்திக்கச் செய்து இருக்கிறார். 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் நாளிட்ட தினமலர் வாரமலர் இதழில், அந்தச் சந்திப்பு குறித்த கட்டுரை வெளியாகி இருக்கின்றது. அதை அவர் எனக்கு அனுப்பி இருந்தார்.

british-royal-family

ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ராஜ்மோகன் ஐ.பி.எஸ்., தமது குடும்பக் கொடிவழியை ஒரு மரமாக வரைந்து, பத்து ஆண்டுகளுக்கு முன்பே அச்சிட்டு வெளியிட்டு இருக்கின்றார். செட்டிநாட்டுப் பகுதியில் நான் ஆய்வு செய்த போது, பல குடும்பங்களில், குடும்ப வரைபடத்தைக் கையால் வரைந்து வைத்து இருக்கின்றார்கள்.சிலரிடம் கேட்டு வாங்கி, நகல் எடுத்து வைத்து இருக்கின்றேன்.

சென்னையில் என் பக்கத்து வீட்டுக்காரர், செட்டிநாடு இராயவரத்தைச் சேர்ந்த சிதம்பரம், 1993 ஆம் ஆண்டிலேயே தமது குடும்பக் கொடிவழியை ஒரு ஆலமரம் போல, வரைந்து வைத்து இருக்கிறார். சங்கரன்கோவிலில் எனது தாத்தா, நினைவில் வாழும் என்.கே.எஸ். இராஜகோபால், 1980 லேயே, தமது உறவுகள் குறித்த ஒரு வரைபடத்தை வரைந்து வைத்து இருக்கிறார். மற்றொரு தாத்தா அருணகிரியின் மகன் சங்கரலிங்கம், அவரது தாத்தா பயன்படுத்திய எழுத்து ஆணி ஒன்றை வைத்து இருக்கின்றார். திருவெட்டநல்லூர் மணிகண்டன் என்பவர், ஒரு குடும்பத்தினர் பல தலைமுறைகளாக வைத்து வணங்கி வருகின்ற பொருள்களை என்னிடம் காண்பித்தார்.

வைகோ அவர்களிடம் ஒருமுறை இந்தக் கருத்தைப் பேசிக்கொண்டு இருந்தபோது, ‘எங்கள் வீட்டில், முன்னோர்கள் பயன்படுத்திய பல பொருள்களை வைத்து இருக்கிறோம்’ என்றார். தமிழகத்தில் பல குடும்பங்களில் முன்னோர்கள் பயன்படுத்திய பொருள்களை வைத்து வணங்கி வருகின்றார்கள். அவற்றின் தொன்மம் குறித்து அந்தக் குடும்பத்தினரிடம் கேட்டு எழுதினால், நிறையத் தகவல்கள் கிடைக்கும். தற்போது, 60, 70 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் அனைவரிடமும், அவர்களது வாழ்க்கை வரலாறை, அவர்களது கதைகள், பாடல்களைக் கேட்டு எழுதி பதிவு செய்கின்ற பணியை, ஆங்காங்கு உள்ள இளைஞர்கள் செய்ய வேண்டும்.

உங்கள் வீட்டில் உள்ள பத்திரங்களை எடுத்துப் படித்துப் பாருங்கள். அந்தப் பழைய எழுத்துகளை, இப்போது உள்ள பத்திர எழுத்தர்கள், நன்றாகப் புரியக்கூடிய வகையில் தட்டச்சு செய்து தருகிறார்கள். நான் அப்படி தட்டச்சு செய்து வாங்கி வைத்து உள்ளேன். நீங்களும் தட்டச்சு செய்து படியுங்கள். ஏதேனும் தகவல் கிடைத்தால் எனக்குத் தெரிவியுங்கள். இணையத்தில், தேடிப் பாருங்கள்; பல்லாயிரக்கணக்கான கொடிவழி வரைபடங்கள் காணக் கிடைக்கின்றன. அதுபோல, நீங்களும் வரைந்து வைக்கலாம்.

கிராமங்களில் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு குலதெய்வத்தை வழிபடுகிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறை பொங்கல் வைத்துக் கொண்டாடுகிறார்கள். அப்படி ஒரு தெய்வத்தை வணங்குபவர்கள் அனைவரும் உறவினர்களாகத்தான் இருப்பார்கள்.

ஓலைச்சுவடிகளில் புதைந்து கிடந்த தமிழ் இலக்கியச் செல்வங்களை, ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா. ஊர் ஊராகச் சென்று தேடி எடுத்து அச்சிட்டுத் தந்தார் அல்லவா? அதுபோல, நமது கொடிவழியை, சிதறிக் கிடக்கின்ற சொந்தங்களை நாம் தேடுவோம். அதன் வழியாக தமிழகத்தின் வரலாறு குறித்த பல செய்திகள் கிடைக்கும்.

2007 ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசு, ஓலைச்சுவடிகளைத் தேடுகின்ற பணியைப் பெருமளவில் நடத்தியது. சங்கரன்கோவில் பகுதியில் ஏராளமான ஓலைச்சுவடிகள் கிடைத்தன. ஆனால், அவற்றுள் பெரும்பாலானவை சோதிடக் குறிப்புகளே! இருப்பினும், அவையும் ஒரு ஆவணம்தானே!

முகப்படங்கள்

என்னுடைய தாத்தா அருணகிரி, 1962 ஆம் ஆண்டு இறந்தார். அவர் உயிரோடு இருந்த வரையிலும் ஒரு படம்கூட எடுத்துக்கொண்டது இல்லை. அவர் இறந்தபோது, அவருடைய தம்பி முப்பிடாதி என்பவருக்கு, அண்ணனைப் படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து இருக்கிறது. உடனடியாக, ஒரு முகப்படக் கலைஞரை அழைத்து வந்து, இறந்துபோன என் தாத்தாவை ஒரு சேரில் உட்கார வைத்துப் படம் எடுத்து இருக்கிறார். அந்த ஒரு படம்தான் இன்றைக்கு எங்கள் குடும்பத்தினரிடம் இருக்கிறது. அதேபோன்று, ஒருவர் இறந்தபிறகு எடுத்த படங்களை, தமிழகத்தின் பல கிராமங்களில் வீடுகளில் மாட்டி வைத்து இருப்பதைப் பார்த்து இருக்கிறேன்.

இது பரவாயில்லை. 1995 ஆம் ஆண்டு என்னுடைய பாட்டி இறந்து போனார். அப்போது நான் தில்லியில் இருந்தேன். ஊருக்குத் திரும்பிச் சென்றபிறகு, நான் விசாரித்தபோதுதான் தெரிந்தது, அவரை ஒரு படம் கூட எடுக்கவில்லை என்பது. இன்றைக்கும் எனக்கு அது வருத்தமாக இருக்கிறது.

எனவே, சங்கரன்கோவில் நகரில், வசதி இல்லாத என்னுடைய சில உறவினர்களை, என் கேமராவில் படம் எடுத்துக் கொடுத்தேன். அவர்களுள் இரண்டு முதியவர்கள் இறந்ததற்குப் பின்னர், நான் எடுத்துக் கொடுத்த ஒரு படம்தான் அந்தக் குடும்பத்தினரிடம் இருந்தது. பெரிதாகப் படமாக்கிக் கொடுத்தேன், வீட்டில் மாட்டி வைத்து இருக்கிறார்கள். அதுபோல, வசதி இல்லாத உங்கள் உறவினர்களை, நீங்கள் படம் எடுத்துக் கொடுங்கள். அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

வேர்கள்

அலெக்ஸ் ஹேலி என்ற அமெரிக்கக் கருப்பு எழுத்தாளருடைய தாத்தா பாடிய ஒருபாடல் மட்டுமே அவருக்கு நினைவு இருந்தது. ஆனால், அது என்ன மொழி? என்றுகூட அவருக்குத் தெரியவில்லை. ஓய்வு பெறுகின்ற வரையிலும் அதைப்பற்றி அவர் சிந்திக்கவில்லை. அதற்குப்பிறகு, அந்தப் பாடலின் பொருளை அறிந்து கொள்ள முயன்றார்.

தமது நண்பர்கள் அனைவரிடமும் அந்தப் பாடலைப் பாடிக்காட்டி, அது என்ன மொழி? என்று அறிய முயன்றார். ஒருவராலும் சொல்ல முடியவில்லை. பொது இடங்களில் நின்று சத்தம் போட்டுப் பாடிப் பார்த்தார். அதைக் கேட்டு யாராவது திரும்பிப் பார்க்கின்றார்களா? என்று சோதித்தார். பயன் இல்லை.

இவ்வாறு, 12 ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட தேடலுக்குப் பிறகு, மேற்கு ஆப்பிரிக்காவில், காம்பியா என்ற நாட்டில், ஜப்பூர் என்ற காட்டுப்பகுதியில் இருந்த சுமார் 70 பழங்குடிகள் கொண்ட ஒரு சிறு இனக்குழுவினர், அந்தப் பாடலைப் பாடுவதைக் கேட்டார். சில நூறு பேர்களே பேசி வருகின்ற மொழி அது என்பதைக் கண்டு அறிந்தார். அங்கிருந்துதான் அவரது முன்னோர்கள் சிறைப் பிடிக்கப்பட்டு, அடிமைகளாக அமெரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்டார்கள் எனபதைக் கண்டு அறிந்தார்.

தமது தேடல் முயற்சிகளை அவர் எழுதிப் பதிவு செய்தார். ‘ வேர்கள்’ (சுடிடிவள) என்ற தலைப்பில் நூலாக வடித்தார். அருமையான பதிவு. படித்துப் பாருங்கள். தமிழிலும் உள்ளது. (வெளியீடு: சவுத் விஷன், 251, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை - 600 086).

அதுபோல, முன்னோர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்கின்ற விருப்பம் உங்களுக்கும் இருக்கிறது. தேடுங்கள்; கண்டு அடைவீர்கள்.

நாளிதழ்களில் அவ்வப்போது சில செய்திகளைப் படித்து இருக்கிறேன். அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கு, முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தத்துக் கொடுக்கப்பட்ட குழந்தைகள், வளர்ந்து பெரியவர்கள் ஆனதும், தங்கள் பெற்றோரைத் தேடி தமிழகத்துக்கு வருகின்றனர். ஒருசிலர் தேடிக் கண்டு பிடிக்கின்றனர். பெற்றோருடன் இணைந்து பேட்டி கொடுக்கின்றனர்.

தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள், தேவாரம், திருவாசகப் பாடல்களைப் பாடுகிறார்கள். ஆனால், அதன் பொருள் அவர்களுக்குத் தெரியாது. தங்கள் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த பாடல்களை, மனனம் செய்து, வழிவழியாகப் பாடிக்கொண்டு வருகிறார்கள்.

மலேசியத் தமிழர்களின் தேடல்

சில ஆண்டுகளுக்கு முன்பு, மலேசியாவில் இருந்து 32 தமிழ் எழுத்தாளர்கள் தமிழகத்தைச் சுற்றிப்பார்க்க வந்தார்கள். சென்னை வானூர்தி நிலையத்தில் அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றேன். அவர்களுள் பலருக்கு, தமிழகத்தில் தங்களது முன்னோர்களின் சொந்த ஊர் எது என்பது தெரியவில்லை. அதை அறிந்துகொள்ளும் ஆவலுடனேயே வந்ததாக என்னிடம் சொன்னார்கள். சிலருக்கு, சில ஊர்களின் பெயர்கள் தெரிந்து இருந்தன. அங்கே போய்ப் பார்க்கப் போவதாகவும், தங்கள் உறவுகளைத் தேடப் போவதாகவும் என்னிடம் கூறினார்கள்.

family_tree_630

மூத்த இனம் எது?

உலகில் முதன்முதலில் மனிதன் எங்கே தோன்றினான்? என்பது குறித்து ஆராய்ந்து வருகிறார்கள். தற்போதைய கருத்துப்படி, அனைவருமே ஆப்பிரிக்காவில் இருந்து புறப்பட்டு, உலகம் முழுமையும் பரவியவர்களே என்கிறார்கள்.

மனித உடற் கூறின் அடிப்படை மரபு அணு, (Genetic Code) 15 விழுக்காடு கண்டு அறியப்பட்டு உள்ளது. கடந்த ஆயிரம் ஆண்டுகளில் மிகப்பெரிய கண்டுபிடிப்பு இதுதான். மேற்கொண்டு ஆராய்ச்சிகள் விரைவாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில், வியக்கத்தக்க தகவல்கள் கிடைக்க இருக்கின்றன.

உடலில் மொத்தம் 10 கோடி செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லின் மையத்தில் இருக்கும் உட்கரு என்று சொல்லக் கூடிய நியூக்ளியஸில், 23 இணை குரோமோசோம்கள் உள்ளன. அவற்றுள், ‘டி.என்.ஏ.’ என்று சொல்லக்கூடிய ‘டி ஆக்ஸ்ரிபோ நியூக்ளிக் அமிலம்’ உள்ளது. முறுக்கப்பட்ட ஏணி வடிவம் கொண்ட இந்த டி.என்.ஏ.வை விரித்தால், 5 அடி நீளம் இருக்கும். இதில்தான் மரபு அணுக்கள் (ழுநநே) உள்ளன.

நாம் கருவில் இருக்கும்போது, நமது பெற்றோர்களின் உடல் அமைப்பு, குணங்கள், பரம்பரை நோய்கள் போன்றவற்றை, மரபு அணுக்கள்தாம் நமக்குக் கொண்டுவந்து சேர்க்கின்றன.

நமது உயிரின் ரகசியமே மரபு அணுக்களில்தான் பொதிந்து உள்ளது என்பதை அறிஞர்கள் கண்டு அறிந்து உள்ளனர். ‘ஹியூமன் ஜீனோம்’ என்ற விதிப்படி, மரபு அணுக்களுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்பதை, பிரித்து ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

நமது பிறப்பின் ரகசியத்தை விரைவில் நாம் முழுமையாக அறிந்து கொள்ள இருக்கிறோம்.

மாந்த இனம் முதலில் தோன்றியது எங்கே? மூத்த கொடிவழியினர் யார்? என்பன போன்ற தகவல்கள் எல்லாம், நமது குருதியிலேயே பதிந்து கிடக்கிறது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மரபு அணுக்கள் குறித்த ஆய்வுகளை, நான்கு ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தது. நூற்றுக்கணக் கானவர்களுடைய குருதியை எடுத்து ஆராய்ந்து வந்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த விருமாண்டி என்பவருடைய உடலில் உள்ள மரபு அணுக்கள், 50,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் இருந்து புறப்பட்டு, இந்தியா வழியாக, ஆஸ்திரேலியாவுக்குச் சென்று குடியேறிய பழங்குடிகளின் மரபு அணுக்களோடு ஒத்துப் போகின்றது (The Hindu, 28.7.2007) என்பதைக் கண்டு அறிந்தனர். இதே மரபு அணுக்களைக் கொண்டவர்களுள், பத்து விழுக்காட்டினரே தற்போது எஞ்சி உள்ளதாகவும் அந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.

அமெரிக்காவின் நேஷனல் ஜியாகிரஃபிக், ஐபிஎம் கணினி ஆகிய நிறுவனங்கள் இணைந்து, 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இத்தகைய ஆய்வுகளை உலகம் முழுமையும் மேற்கொண்டு இருக்கின்றன. அதன் ஒருபகுதியாகத்தான் மதுரையிலும் ஆய்வுகள் நடைபெற்றன. உலக மாந்தர்கள் அனைவரும் ஒரே இனம் என்பதை நிறுவுகின்ற முயற்சிகளை மேற்கொண்டு உள்ளனர்.

ஓவியங்கள்

லியனர்டோ டாவின்சி வரைந்த, உலகப் புகழ் பெற்ற மொனாலிசா ஓவியம், ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில், லுhவர் அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருக்கிறது. அந்தக் கட்டடத்தின் உள்பக்க நடைவழிகள் மட்டும் ஆறு கிலோ மீட்டர் நீளம் என்றால், அது எத்தனை பெரிய மியூசியம் என்பதைக் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். உலகிலேயே பெரிய மியூசியம் அதுதான்.

எகிப்திய மம்மிக்கள் உள்ளிட்ட, உலகின் அரிய, பழமையான கலைப்பொருள்கள் எல்லாம், இந்த மியூசியத்தில்தான் சேகரித்து வைக்கப்பட்டு இருக்கின்றது. லண்டன் மியூசியம், இரண்டாம் இடம் பெறுகிறது.

இரண்டரை அடி உயரம், இரண்டடி அகலம் மட்டுமே உள்ள மொனாலிசா ஓவியத்தின் மதிப்பு, தற்போதைய நிலையில் சுமார் 3000 கோடிக்கும் அதிகம் என்று ஒரு செய்தி படித்தேன். அதைவிடக் கூடுதலாகவும் இருக்கலாம்.

2010 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் நாள், நான் அந்த ஓவியத்தைப் பார்த்தேன்.

அங்கே, ஆயிரக்கணக்கான, பிரமாண்டமான ஓவியங்கள், பளிங்குக் கல் சிலைகள் எல்லாம் உள்ளன. ஆனாலும், மொனாலிசா ஓவியம் வைக்கப்பட்டு இருக்கின்ற அறையில்தான், ஒட்டுமொத்தப் பார்வையாளர்களும் குவிந்து கிடக்கின்றனர். நெருக்கியடித்துக் கொண்டு, ஓவியத்தைப் படம் எடுத்துக் கொள்கின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில், ஓவியத்துக்கு அவ்வளவு மதிப்பு. ஒவ்வொரு குடும்பத்தினரும், தங்களது முன்னோர்களின் ஓவியங்களை, குடும்ப ஆவணங்களாகப் பெருமிதத்துடன் பாதுகாத்து வருகிறார்கள். சில நூறு ஆண்டு ஆவணங்களையே அவர்கள் அரிய பொருளாகக் கருதுகிறார்கள்.

100 ஆண்டுகள் கடந்து விட்ட ஒரு வீட்டை, பாரம்பரியச் சின்னமாக அறிவித்து விடுகிறார்கள். யுனெஸ்கோ அமைப்பும் அப்படித்தான் அறிவித்து வருகின்றது. தமிழகத்தில் நீலகிரி மலையில் ஊர்ந்து செல்லுகின்ற தொடர்வண்டி, தில்லி நாடாளுமன்றத் தெருவில் உள்ள காவல்நிலையம் கூட, 100 ஆண்டுகளைக் கடந்து விட்டது என்பதால், அவற்றை யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமாக அறிவித்து இருக்கின்றது.

அதைவிடப் பெருமை தமிழ் மண்ணுக்கு இருக்கிறது. ஆம்; நம்முடைய கோவில்களில் செதுக்கப்பட்டு இருக்கின்ற சிலைகள் அனைத்துமே ஆயிரம், ஆண்டுகளுக்கும், அதற்கும் முற்பட்டவை ஆகும்.

அந்தச் சிலைகள் யாருடைய உருவங்கள்?

அன்றைய காலத்தில் வாழ்ந்த நம்முடைய முன்னோர்களைப் பார்த்துத்தான் செதுக்கி இருக்கிறார்கள். அவர்களுடைய உருவங்களை, சிலையாக இன்றைக்கும் நாம் பார்க்க முடிகிறது அல்லவா? அது நமக்குப் பெருமைதானே! அந்த ஒவ்வொரு சிலையும் விலைமதிப்பு அற்றது அல்லவா?

நமது பண்பாட்டுக் கலைச் செல்வங்களை எண்ணி எண்ணிப் பெருமிதம் கொள்வோம். அவற்றைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இன்று ஒன்றாகத் திரிந்து, நாளை பிரிந்து போகின்ற காதலர்களின் பெயர்களைக் கிறுக்கி, சிலைகளைச் சீரழிப்பது குற்றம்.

எதையும் ஆக்குவது கடினம்; அழிப்பது ஒரு நொடிதான்.

வரலாற்றில் இடம் பெறுங்கள்

உங்கள் வாழ்க்கையும் வரலாறு ஆகலாம்; பதிவு செய்யப்பட்டு இருந்தால்! பதிவுகள் இல்லையேல், நீங்கள் வாழ்ந்த சுவடே இந்த மண்ணில் இருக்காது.

தலைவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் நாள்குறிப்புப் பதிவுகளில் இருந்துதான், இன்றைக்கு நாம் படிக்கின்ற உலக வரலாற்றின் பல பக்கங்கள் எழுதப்பட்டன.

உங்கள் வாழ்க்கையை புத்தகமாக வெளியிடுவது செலவு என்று கருதினால், கணினியில் தட்டச்சு செய்து, அதைப் படிகள் எடுத்து, கம்பிச்சுருள் கட்டு (Spiral Binding) செய்து, வீட்டுப் பத்திரங்களோடு சேர்த்து வைத்து விட வேண்டும். 200 ரூபாய்தான் செலவு ஆகும். பத்திரங்களைப் போல, அவையும் பாதுகாப்பாக இருக்கும். உங்களது எதிர்காலத் தலைமுறையினர் எடுத்துப் படிப்பார்கள்.

ஒரு மனிதன் வாழ்ந்து மறைந்தான் என்பதற்கு மூன்று அடையாளங்கள்: 1. ஒரு குழந்தையைப் பெற்று இருக்க வேண்டும். 2. ஒரு வீட்டைக் கட்டி இருக்க வேண்டும். 3. தன் வாழ்க்கையை ஒரு நூலாக எழுதி இருக்க வேண்டும்.

- அருணகிரி (கலைமகள் தீபாவளி சிறப்பு மலர் - 2007, பக்கம் 149)

(திருத்தங்களுடன்)