வருடத்தின் இரு பருவ மழையைப் பெற்றும், மேற்குத் தொடர்ச்சி மலையை வாழ்வாதாராமாகவும் கொண்டு அதன் நிழலில் வாசம் கொண்டிருக்கும் பதினோரு இலட்சம் மக்கள், சுமார் இரண்டேகால் இலட்ச குடும்பங்களைச் சுமந்து கொண்டு அந்த மக்களுக்கென்று தனிக் கலாச்சார அடையாளத்தைக் கொண்டிருக்கிறது தேனி மாவட்டம், (முந்தைய மதுரை மாவட்டத்தின் ஒரு பிரிவு). சுதந்திரத்திற்குப் பிறகு வந்த அரசியல் கட்சிகளின் விளம்பரத்திற்கும், தலைவர்களின் குடும்ப முன்னேற்றத்திற்கும், இனத்தின் பெயரைச் சொல்லி வன்முறைகளுக்கும் இரையாகிப் போகின்ற‌ கள்ளம் கபடமற்ற மக்கள் நடமாடும் பூமி. இந்த அரசியல் சதிகளில் இரைகளாகிப் போவது என்னமோ விவசாயக் கூலிகளும் சிறு விவசாயிகள் மட்டுமேதான்.

1965 ஆம் ஆண்டு திமுக-மாணவர் அணி "இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை" ஆயுதமாகக் கையில் எடுத்துக் கொண்டு காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேலை செய்தது. வசதி படைத்தவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக வலம் வந்த காங்கிரஸ் மத்தியில் திக-காரன் என்றும் பின்பு திமுக-காரன் என்றும் சொல்லிக் கொள்வதற்காகவே ஏழை இளைஞர்கள் ஒன்று திரண்டார்கள். திமுக-காரன் என்று சொல்லிக் கொள்வது ஒருவிதமான ஃபேசனாக இருந்தது. அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பச்சையப்பன் கல்லூரி இவைகளை முன் நிறுத்தி தமிழகத்தின் மற்ற கல்லூரி மாணவர்களும் பெரும் திரளாக ஒன்று கூடினார்கள். இந்தியை கட்டாயப் பாடமாக நடத்தி தமிழினத்தை வடக்கத்தவர்கள் அடிமை ஆக்கப்பார்க்கிறார்கள் எனவும் அது மிகவும் கடினமான பாடமாதலால் எளிதில் தேர்ச்சி பெற முடியாதென்றும் பள்ளி மாணவர்கள் மத்தியில் பீதி பரவியது. பள்ளி மாணவர்களும் களத்திலே இறங்கி  "இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை" வழிமொழிந்தார்கள். சாலை மறியல், இரயில் மறியல், அரசு அலுவலக‌ங்கள் சூறையாடல், அரசுப் பொருள்களுக்குச் சேதாரம் எனத் தமிழகம் முழுதும் போராட்டம் வன்முறையாக ஆங்காங்கே வெடித்தது. அதிலே தன் பங்காய் முதல் நெருப்பை அள்ளிப் போட்டது என்னுடைய மண் கூடலூர்.

கூடலூரில் "இந்தி எதிர்ப்புப் போராட்டம்" சிறிய சலசலப்போடு துவங்கி சாலை மறியலில் சென்று முடிந்தது. கேரளாவுக்குள்ளே எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. ஆண்களும் பெண்களும் பழைய பேருந்து நிலையத்திற்கு (அருகிலேயே காவல் நிலையம்) முன்பு திரளாகக் குழுமி கோஷங்கள் எழுப்பினர். அப்போதைய தமிழக அரசு கேரளப் பகுதியிலிருந்து கேரள ரைஃபில் படையினரைக் கொண்டு வந்து நிறுத்தியது. இதைக் கண்டு வெறுப்புற்ற சில மாணவர்கள் போலிஸ் ஜீப்பை எரித்தனர். நிலைமையைக் கட்டுக்குள் கொணர கேரள இன்ஸ்பெக்டர் கூட்டத்தை நோக்கிச் சுடுவதற்கு ஆணை பிறப்பித்தார். போலிஸார் கூட்டத்தினரை நோக்கிச் சுட்டனர். அவர்கள் சுட்ட தோட்டாக்களில் ஒன்று ஒரு மாணவரை  பலியாக்கியது. இன்னும் மூன்று பேர் பெருத்த காயம் பெற்றார்கள். இவர்கள் நான்கு பேரையும் ஏற்றிக் கொண்டு போலிஸ் வாகனம் கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தது. அங்கு போதிய வசதியில்லாததால் மதுரை பெரிய (இராஜாஜி) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். கொதித்தெழுந்த ஊர் மக்கள் ஆணை பிறப்பித்த மலையாள இன்ஸ்பெக்டரை பிடித்து உயிரோடு எரித்துக் கொன்றார்கள். இன்னொரு கான்ஸ்டபிளைக் கொன்று கேரளாவிற்கு வைக்கோல் ஏற்றிச் செல்லும் வாகனத்தில் போட்டு அனுப்பினார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே ஊரடங்கு உத்தரவை (144) முதன் முறையாய் எனது ஊரிலேப் பிறப்பித்தது காங்கிரஸ் அரசு.

சுமார் 57 பேர்களைக் கைது செய்து மதுரை மத்திய சிறைச்சாலையிலே அடைத்தார்கள். ஊரில் தென்படும் அனைத்து ஆண்களையும் கைது செய்ய உத்தேசித்திருப்பதாய் செய்தி காட்டுத்தீ போல பரவியது. அனைத்து ஆண்களும், இளைஞர்களும் காடு மலை வயக்காட்டுப் பகுதிகளில் ஓடி ஒளிந்தனர். பணக்காரக் கணவான்கள் கேரள பண்ணை வீடுகளில் போய் ஒளிந்து கொண்டனர். கூடலூரிலே நடந்த துப்பாக்கிச்சூடு தமிழ்நாடு முழுதும் பரவியது. திருப்பூரிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் பெரிய புரட்சியே வெடித்தது. ஆயிரமாயிரம் திமுகத் தொண்டர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து 1967லே காங்கிரஸாரின் ராஜ்யம் (சுதந்திரா காங்கிரஸ்) முடிவுக்கு வந்தது. தமிழகம் முழுதும் திமுகவின் கரங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டது.

மாணவர் அணியை ஊக்குவித்த பேராசிரியர்களும் இன்னும் பிற அரசாங்க அலுவலர்களும், ஆசிரியர்களும் எம்.எல்.ஏ (சட்டமன்றம்)க்களாகவும், எம்.எல்.சி (மேலவை)க்களாகவும் ஆக்கப்பட்டார்கள். மாணவர் அணித் தலைவர்களுக்கு கல்லூரிகளிலும் பல்கலைக்கழங்களிலும் பேராசிரியர் பதவி கிடைத்தது. பின்னாட்களில் இவர்களே துணைவேந்தர்களாகவும் நியமிக்கப்பட்டார்கள். படித்தவர்களும் அரசியல்வாதிகளும் பெரும் பயனை அடைந்து பவனி வந்தார்கள். சிறைக்குச் சென்ற சாதாரண மாணவர்களும், கூலி விவசாயிகளும் சிறு விவசாயிகளும் ஓட்டுப் போடும் தொண்டர்களாகவே தொடர்ந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்த வழக்குகளை 1968லே தமிழக அரசு வாபஸ் பெற்றது.

1975லே மத்தியில் இந்திராகாந்தி அவசரப் பிரகடனச் சட்டத்தின் மூலமாய் திமுக அரசைக் கலைத்து "மிசா" சட்டத்தினை அமல்படுத்தினார். மீண்டும் எனது ஊரிலே 144 அவசரச் சட்டம் அமலுக்கு வந்தது. இரவு 11.30 மணிக்கு எங்களது எல்லோர் வீட்டுக் கதவினைத் தட்டி 1965லே கைது செய்த 57 பேட்க‌ளில் உயிரோடு இருந்தவர்களை கைது செய்து திருச்சி மத்திய சிறைச்சாலையிலே 25 நாட்கள் அடைத்து வைத்தனர்.

1985லே ஊரின் பொதுக்கிணறு உரிமை கோரி இரு சாதியினர் மோதிக் கொண்டனர். ஒரு சாதிக் காரர்கள் இன்னொரு சாதியினரின் தெருக்களுக்குள் புகுந்து பொருள்களைச் சூறையாடினர். மீண்டும் 144 அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 1990களிலே நெல்லையிலே நடந்த சாதிப்பிரச்சினை கோட்டுர், சீலையம்பட்டி மக்களுக்குள்ளே புகுந்து கொண்டதில் சாலைமறியல், மூன்று கொலைகள் என நீண்டு கொண்டிருந்த வன்முறைகள் 144 சட்டத்தின் மூலமாய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கோவை குண்டுவெடிப்பின் எதிரொலியாய் உத்தமபாளையத்தில் இந்து முஸ்லீம் மதக் கலவரம் வெடித்தது. கம்பம் மற்றும் உத்தமபாளையம் பகுதிகளில் ஒவ்வொரு டிசம்பர் 6ம் தேதியும் பீதியைக் கிளப்பிக் கொண்டிருந்தன . கடந்த மாத பரமக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த தினத்தில் இருந்து அடுத்த ஏழு நாட்களும் வத்தலக் குண்டு முதல் சின்னமனூர் வரைக்கும், கம்பம் முதல் கூடலூர் வரையிலும் ஆயுதப் படை வீரர்களின் பாதுகாப்பிலே அரசுப் பேருந்துகளும் மற்ற தனியார் வாகனங்களும் வரிசையாய் அனுப்பப்பட்டன. போலிஸ் ஜீப் முன்னேயும் அதற்கு பின்னால் ஒரு ஆயுதப் படை வீரர்களின் வேனும், பின்னர் வரிசையாக பொது மக்கள் வாகனங்களும் இறுதியாக ஒரு ஆயுதப் படை வீரர்களின் வேனும் என்று பாதுகாப்போடு அழைத்துச் செல்லப்பட்டவிதம் ஒரு பதவி போதையை எனக்குள்ளே கிளப்பியது. எவ்வளவு இராஜமரியாதையுடனான பயணங்கள் அவைகள்.

காலங்கள் எவ்வளவு கடந்தாலும் ஊரடங்கு உத்தரவும் - அவசர காலச் சட்டம் 144 ம் எங்களது ஊர்களை விடுவதாயில்லை. நேற்றைய இரண்டு தினங்கள் என்னை ஊரோடு கட்டிப் போட்டுவிட்டது. வேறென்ன பெரியார் அணை-999 பிரச்சினைதான். அரசியல்வாதிகளின் விளையாட்டுக்கு பாதிக்கப்படுவது என்னமோ ஏழை விவசாயக்கூலிகளும் அன்னாடங்காய்ச்சிகளும்தான். கேரளாவிற்குள் நுழைவதற்கான பனிரெண்டு வழிகளில் கூடலூர்-குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய மூன்று முக்கியப் பாதைகள் தேனி மாவட்டத்தில் உள்ளது. மொழி வாரியான மாநிலங்கள் பிரிப்பதற்கு முன்னால் (1951) பெரியார், இடுக்கி அணைகள் இருக்கக் கூடிய இடுக்கி மாவட்டம் தமிழர்களின் நிலமாகத்தான் இருந்தது. இன்றைக்கும் இந்தப் பகுதிகளில் இருக்கக்கூடிய விளைநிலங்கள் (ஏலக்காய் எஸ்டேட்) கூடலூர், கம்பம், போடி, தேவாரம், சுருளிப்பட்டியிலே இருக்கக் கூடிய பெரும் பணக்காரர்களின் நிலங்கள்தான். இவர்களின் நிலங்களிலே தோட்ட வேலை செய்வதற்கும், மலைகளிலே கிணறுகள் தோண்டுவதற்கும், கட்டிடம் கட்டுவதற்கும் தமிழக உழைக்கும் வர்க்கத்தினர்தான் செல்ல வேண்டும். இந்தப் பழக்கம் கடந்த 50-60 ஆண்டுகளாகவே பின்பற்றப்படுகிறது. கூடலூர் கூலியாட்கள் கூடலூர்-குமுளிப் பாதையிலும், சுருளிப்பட்டி, காமயகவுண்டன் பட்டி, குள்ளப்பகவுண்டன் பட்டி, நாராயணதேவன் பட்டி, புதுப்பட்டி கூலியாட்கள் கம்பம் மெட்டு வழியாகவும், கோம்பை, தேவாரம்,ஏரசை நாயக்கன் பட்டி மற்றும் போடியைச் சுற்றியுள்ள கிராம கூலியாட்கள் போடி மெட்டு வழியாகவும் பயணப்பட வேண்டும். தினமும் காலை 5 மணிக்கு ஜீப்கள் வரிசையாய் வந்து ஏற்றிச் செல்லும். கேரள கூலி வேலையை நம்பி சுமார் 40000 பேர் இருக்கிறார்கள்.

கேரளக்காரர்கள் உணவு, மருத்துவ வசதி, கல்லூரி வசதிக்காய் தேனி மாவட்டத்தை நம்பியேத் தீர வேண்டும். கம்பம்(செவ்வாய்), போடி(வியாழன்), தேனி(ஞாயிறு) வாரச் சந்தைகளை நம்பி மொத்த இடுக்கி மாவட்டமே இருக்கிறது. இவர்களுக்கு தமிழகத்தில் வியாபாரம் செய்வது மூலமாய் சுமார் 4000 தமிழக சிறு வியாபாரிகளும், மளிகைக் கடைக்காரர்களும், மருத்துவமனைகளும் வருமானம் பெறுகிறார்கள். பால் பொருட்களும் காய்கறிகளும் விற்பனை செய்து வருமானம் பெறக்கூடிய விவசாயிகளும் நிறைய இருக்கிறார்கள். இப்படி தமிழகத்தின் தேனி மாவட்ட மக்களும், கேரளாவின் இடுக்கி மாவட்ட மக்களும் ஒன்றிப் பிணைந்து வாழ்ந்து வருகையில் மீண்டும் நம் கேரள அரசியல் வியாபாரிகள் கடைகளை விரிக்கத் துவங்கிவிட்டனர். 05.12.2011 அன்று காலையில் என்றைக்கும் போல் கூலி வேலைக்குச் சென்ற தமிழகக் கூலியாட்களை கம்பம் மெட்டுப் பகுதியிலே சில கேரள அடியாட்கள் சிறைபிடித்து வைத்த‌னர். சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மாலை ஆறு மணிக்கு மேலும் வீட்டிற்கு வராததினாலே அவர்களின் சொந்தக்காரர்கள் கம்பத்தில் முற்றுகையிட்டனர். குமுளியிலே கூடலூர் கூலியாட்கள் மூன்று பேரை மலையாளிகள் தாக்கிய சம்பவம் எனது ஊர் மக்களைக் கொதித்தெழச் செய்தது. எப்பொழுதும் போல், குமுளி நோக்கி விரைந்த கேரள ஜீப் ஒன்றையும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மக்கள் எரித்தார்கள். வேலைக்குச் சென்றவர்களை உடனடியாகத் திருப்பி அனுப்ப வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்கள்.

என்றைக்கும் பிரச்சினையே கண்டிராத கம்பம் நகரத்தில் மலையாள வாசகம் பொருந்திய கடைகளின் போர்டுகள் அடித்து நொறுக்கப்பட்டன. கேரளக்காரர்களுக்கு சிகிச்சை செய்யும் மருத்துவமனைகள், ஹோட்டல்கள், கடைகள், கொசமற்றம் பைனான்ஸ், முத்தூட் ஃபைனான்ஸ், கேரள நகைக்கடைகள் என கேரளக்காரர்களின் கடைகளைத் தாக்கத் தொடங்கினர். இறுதியில் இரவு 9 மணிக்கு தேனி மாவட்ட கலெக்டர் கம்பம் மெட்டுப் பகுதிக்குச் சென்று தமிழக மக்களை போராட்டக்காரர்களிடம் இருந்து மீட்டுக் கொண்டு வந்தார். ஐயப்பப் பக்தர்களையும், தமிழக சகோதரர்களையும் கேரளப் பகுதியிலே மலையாளிகள் தாக்கினர். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு மலையாளி கூட துன்புறுத்தப்படவில்லை. தகுந்த பாதுகாப்போடு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

நிலைமை மோசமாவதை உணர்ந்தவுடன் ஒரு ஐஜி, மூன்று டிஐஜி, ஆறு எஸ்பி, 600 காவலர்கள் வந்து முகாமிட்டிருக்கிறார்கள். கேரள அரசியல்வாதிகள் அச்சுதானந்தன் தலைமையில் குமுளியில் போராட்டம் நடத்துகிறார்கள். கூடலூரிலிருந்து நடைபயணம், கம்பத்தில் உண்ணாவிரதம் என நம் தரப்பிலிருந்து வைகோவும் பழ.நெடுமாறனும் போராடுகிறார்கள். வேறு எந்த கழகக்/கலகக் கட்சிக்காரர்களும் உண்மையான உணர்வோடு, உரிமையோடு உண்மை உணர்ந்தவர்களாய் வரவில்லை. கேரளத்தில் சொத்தைக் குவித்து வைத்துக் கொண்டு ஒன்றுமே அறியாதவர்களாய் வேடம் தரிக்கின்ற தேனி மாவட்டத்தின் பணக்கார விவசாயிகள், பெரியார் அணையின் துணை கொண்டு பாசனம் பயன்படக்கூடிய திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம் என மற்ற மாவட்டத்து விவசாயிகள் யாரும் இன்றுவரை பெரும் குரல் எழுப்பவில்லை.

பிழைப்பு தேடி சொந்த மாநிலம் விட்டு அடுத்த மாநிலத்தில் வாழ்ந்து வருகின்ற கூலித் தொழிலாளர்கள் இரு மாநிலத்திலும் இருக்கிறார்கள். கடந்த நான்கு நாட்களாய் மலைக்கு கூலி வேலைக்குச் செல்லும் தேனி மாவட்ட அன்றாடங்காய்ச்சிகளின் நிலைமை யாருக்குப் புரியும்? கூடங்குளம் பிரச்சினை கூடலூர்காரனுக்கும் கூடலூர் பிரச்சினை கூடங்குளம் காரனுக்கும் புரிவதில்லை என்பதை விட ஒருவன் மீது மற்றவன் அக்கறை செலுத்துவதில்லை என்பதுதான் சரியாய்ப் பொருந்தும். பாரதத்தின் எந்த மூலைக்குப் போனாலும் மலையாளி பிழைத்துக் கொள்கிறானே!!! ஒற்றுமை கொள்கிறானே!!! த‌னது மாநில‌த்துக்காய் ஒன்று சேர்ந்து குர‌ல் உய‌ர்த்துகிறானே!!! எப்ப‌டி அவ‌னால் ம‌ட்டும் முடிகிறது? நாம் கற்றுக் கொள்ள‌ வேண்டிய‌ பாட‌ங்க‌ள் நிறைய‌வே இருக்கிற‌து. முப்பது இலட்சம் மலையாளிகள் தமிழகத்தை வாழ்வாதாரமாய்க் கொண்டு வாழ்பவர்கள். ரௌத்ரம் பழகு என்று சொல்லிச் சென்றான் பாரதி. எஞ்சோட்டுக்காரன் புதிதாய் பழக வேண்டியதில்லை. இரத்தத்திலேயே ஊறி இருக்கிறது. ஆனால் கூடலூர் முதல் கூடங்குளம் வரை ஒன்றிணைய‌ வேண்டும். ந‌ம்மில் இறுதி இர‌த்த‌ம் சிந்தும் தருவாயிலாவ‌து.

- சோமா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)