ஆர்த்தெழுந்த அரிட்டாபட்டி மக்கள்

arittapatti_600

இயற்கை வளங்கள் எல்லாம் மனிதர்களுக்கு மட்டுமன்றி, இப்பூவுலகில் வாழ்கின்ற அனைத்து விதமான உயிரினங்களுக்கும் பொதுவானதே எனும் பார்வை என்றைக்கு பேராசை பிடித்த நபர்களுக்கும், அரசுகளுக்கும், பெருந்தொழில் நிறுவனங்களுக்கும் வருகிறதோ அன்றுதான் இந்த பூமி அழிவிலிருந்து மீட்கப்படும். ஒவ்வொரு மனிதராலும் அம்மனிதரைச் சுற்றியே நடத்தப்படுகின்ற இயற்கை அத்துமீறல்கள், ஒரு கட்டத்தில் மனிதருக்கு எதிராகவே திரும்பும் என்பதற்கு ஆழிப்பேரலையிலிருந்து, பெருமழை, பெருவெள்ளங்கள் வரை உதாரணம் காட்ட இயலும். ஆனாலும் இந்த மனித இனம் இயற்கையைச் சூறையாடுகின்ற தனது கொள்ளை ஆசையை மட்டும் இப்போதும் கைவிடவில்லை என்பதற்கு அண்மைக்கால தமிழகச்சூழல்களை எடுத்துக்காட்டாய்க் கொள்ளலாம்.

அரிட்டாபட்டி

மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகில் அமைந்துள்ள அழகிய சிற்றூர்ப்புறம். மதுரையிலிருந்து திருச்சி செல்லும் தங்க நாற்கரச் சாலையில் சற்றேறக்குறைய 12 கிமீ தொலைவில் இடதுபுறம் நரசிங்கம்பட்டி என்ற ஊரிலிருந்து திரும்பிச் சென்றால் அங்கிருந்து 4ஆவது கி.மீ.ல் அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த அமைதியான சிற்றூர் என்ற போதிலும், அண்மையில் பெரும் போராட்டத்திற்கு வித்திட்டதுடன், அரிட்டாபட்டி மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதற்குக் காரணம் இவ்வூரைச் சுற்றிலும் அமைந்துள்ள மலைக்குன்றுகள். ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்ற சிறிய ஊராக இருந்தபோதிலும், மிகப் பழமைக்குரிய நாகரிகம் இங்கு இருந்ததற்கான சுவடுகள் தெரிகின்றன. 'ஆண்டு முழுவதும் வேளாண் பணிகள் இருந்ததுடன், மிக வளமான பகுதியாக இருந்த காரணத்தால் வாழ்வாதாரத்திற்கு குறைவின்றி மக்கள் எல்லோரும் வாழ்ந்ததெல்லாம் ஒரு காலம். ஊரைச்சுற்றி இருக்கின்ற எல்லா நீர்நிலைகளிலும் தண்ணீர் எப்போதும் தளும்பி நிற்கும். இதனால் நீர்வளத்திற்கும் குறைவில்லை. அதற்குக் காரணம் இந்த மலைகள் தான்' என்று தனது ஊரைப் பற்றி மிகப் பெருமையுடன் பகிர்ந்து கொண்டார் ஊர்ப் பெரியவர் கருப்பணன்.

arittapatti_350அடுத்தடுத்து வீடுகள்; குறுக்கும் நெடுக்குமாய் தெருக்கள் இவற்றையெல்லாம் கடந்து ஒரு கல் தொலைவு நடந்து சென்றால், அரிட்டாபட்டி மலை என்று சொல்லப்படுகின்ற களிஞ்சமலையின் நெடுந்தொடர் நம் கவனத்தை ஈர்க்கிறது. அம்மலைக்குக் கீழே பரந்து விரிந்து கிடக்கும் கண்மாய், அதில் முக்குளிப்பான்களும் (நீர்க்காகம்), நாரைகளும் மகிழ்ச்சியாய்ப் பறந்து திரிகின்றன. குருவிகள், குயில்கள் என அடர் கானகத்திற்குரிய சூழல் நிலவுகிறது. கரையின் ஓரத்தில் ஆலமரமொன்று விழுதுகள் பரப்பி, பேருருவம் கொண்டு நிற்கிறது. அதன் அருகில் மாட்டுவண்டியும், அதில் தனது கையைத் தலையணையாகவும், வண்டியையே மெத்தையாகவும் கொண்டு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார் பெரியவர் ஒருவர்.

அந்த ஆலமரம் கண்மாய்க்குள்ளும் தனது நிழல்களை விரித்துப் பரப்பியிருந்தது. கரையின் ஓரத்தில் தனது ஆடுகளை மேயவிட்டு, கிழவியொருத்தி கனவுகளோடு படுத்திருந்தாள். கண்மாயின் கிழக்குப்புறம் சற்றே உயரமாய்க் கிடந்த பாறைத் தொடரில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அங்குமிங்குமாய் கிடந்தன. அப்பாறையின் சமதளப் பகுதியில் நெற்கதிர்களையும், சுள்ளிகளையும் விரித்துப் பரப்பி ஆணும், பெண்ணுமாய் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். தற்போது தண்ணீர் வற்றி, சிறிதளவே நீர் இருக்கின்ற காரணத்தால், கண்மாயின் நடுப்பகுதியில் ஆடு, மாடுகள் புற்களை மேய்ந்த வண்ணம் இருந்தன. கண்மாய்க்கு நடுவே தென்னை மரங்கள் சூழ சிறிய தீவொன்றும், அதனருகே அழகிய கிணறும் 'பாரதியின் காணி நிலம் வேண்டும் பராசக்தி'45 என்ற பாடலையே நினைவுபடுத்துகிறது. அதையொட்டிக் கிடக்கும் குட்டையில் ஆண், பெண் இருவர் கொண்ட குழுவொன்று துணிகளைத் துவைத்து, அலசி காயப்போட்டுக் கொண்டிருந்தது.

தண்ணீரில்லா கண்மாயின் குறுக்காக நடந்து சென்று களிஞ்சமலையின் சரிவில் சிறிது தூரம் ஏறினோம். பிறகு சற்றே சரிவாக தொல்லியல் துறையால் அமைக்கப்பட்ட படிக்கட்டுகளும், அதன் இருமருங்கில் பெயருக்கு இருக்கும் கைப்பிடிக்கம்பிகளும் நம்மை வழி நடத்திச் செல்கின்றன. அழகான காட்டுப் பாதை, இப்போது நம்மைச் சுற்றிலும் மலைகளும், பனை மரங்களும், செடி, கொடிகளும், புதர்க்காடுகளும் நிறைந்து கிடக்கின்றன. உருண்டை, உருண்டையாய்ப் பாறைக்கற்கள் ஆங்காங்கே இயற்கையால் சிதறடிக்கப்பட்டிருந்தன. ஒற்றையடிப்பாதையில் பயணிக்கும் போதே, பாதையின் இரண்டு பக்கமும் எலுமிச்சைப் புல் என்றழைக்கப்படுகின்ற 'லெமன் கிராஸ்' கண்டிப்பாக நமது உடலில் படாமல் அப்பாதைகளைக் கடக்க முடியாது. உடன் வந்த ஊர்க்காரர் அதனைப் பிடுங்கி முகர்ந்து பார்க்கச் சொன்னார். வாசனை அவ்வளவு சிறப்பாக இருந்தது. வழழை (சோப்) உள்ளிட்ட அனைத்து வாசனைப் பொருட்களுக்கும் இந்த எலுமிச்சைப் புல்லே மூலப்பொருளாகும். 

arittapatti_640
'அவ்வப்போது இந்த மலைப்பகுதியில் நடந்து சென்றோ அல்லது எங்கேனும் ஓரிடத்தில் அமர்ந்திருந்துவிட்டு வந்தாலே மனதில் எல்லையில்லா மகிழ்ச்சியும், அமைதியும் குடிபுகுந்துவிடும். ஆகையால் இந்த மலையை வேறு எவரைக் காட்டிலும் நாங்கள் மிகவும் மதிக்கிறோம்; வணங்குகிறோம்; போற்றுகிறோம்' என்கிறார் உள்ளூரைச் சேர்ந்த பெரியண்ணன். நடந்து செல்கின்ற நமது காலடிச் சத்தமும், பறவைகள் எழுப்புகின்ற ஒலியையும் தவிர வேறு எந்த சத்தமும் இல்லை. அப்படியொரு பேரமைதி நிலவுகிறது. இந்த மலையா, இன்றைக்கு பெரும் பிரச்சனையைக் கிளப்பியிருக்கிறது என்ற வியப்புடன் நடந்து செல்லும்போதே தொல்லியல்துறையின் அறிவிப்புக் கல்வெட்டு ஒன்று வலதுபுறம் தென்படுகிறது. அதில், 'முற்காலப் பாண்டியர்களின் குடைவரைக் கோயில் பணிக்கு இச்சிவன் கோயில் சிறந்த சான்றாக விளங்குகிறது. எளிய அழகான இக்குடைவரைக்கோயில் கி.பி.7-8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கருவறையிலுள்ள சிவலிங்கம், அப்பாறையின் நடுவிலேயே செதுக்கப்பட்டுள்ளது. இலகுலீசர் எனும் சிவபெருமானின் சிற்பம் தமிழகத்தின் மிக அரிதான சிலைகளில் ஒன்றாகும்' என்ற தகவலைப் பகிர்ந்து கொள்கிறது.

அருகே அமைந்துள்ள படிக்கட்டுகளின் வழியாக ஏறி சிவன் கோயிலை அடைந்தோம். மிகச் சுத்தமாய், தெய்வக் கடமையெனக் கொண்டு 'தவிடன்' என்ற உள்ளூர்ப் பூசாரி, அக்கோவிலைப் பராமரித்து வருகிறார். நாம் சென்றிருந்த நேரத்தில் அவரோடு, சேவுகப்பெருமாள் என்ற மற்றொரு பக்திமானும் பிரதோசத்திற்காக இக்கோவிலைத் தரிசிக்க வந்திருப்பதாகவும், இங்கிருக்கின்ற சிவன் மிகத் துடியான தெய்வமென்றும் கூறினார். தற்போதுதான் அதிகமான மக்கள் இக்கோவிலுக்கு வரத் தொடங்கியிருக்கின்றனர். கோவிலின் நடுவே சிவலிங்க வடிவத்தில் அமைந்துள்ள சிவன், ஐந்து தலை நாகத்தைக் குடையாகக் கொண்டு காட்சியளிக்கிறார். அவரின் வலப்பக்கம் இலகுலீசுவரர் சிற்பமும், இடப்பக்கம் பிள்ளையார் சிற்பமும் பெரிதாய்ச் செதுக்கப்பட்டுள்ளன. அருகே 'வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இச்சின்னம், 1966ஆம் வருடத்திய புராதனச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் எச்சங்கள் என்ற சட்டத்தின் (1966 எண் 25) கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதனை யாராகிலும் சேதப்படுத்தியோ, அகற்றியோ, மாற்றம் செய்தோ, அழிவுக்குட்படுத்தியோ மற்றும் தகாத முறையில் உபயோகப்படுத்தினாலோ சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். இத்தண்டனை மூன்று மாதங்கள் வரை சிறையோ அல்லது ரூபாய் ஐந்தாயிரமோ அல்லது இரண்டும் சேர்த்தோ தொல்பொருள் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 29ன் படி விதிக்கப்படும்' என்று எச்சரிக்கை செய்யும் அறிவிப்புப் பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
 
arittapatti_360இதில் வேடிக்கையென்னவென்றால், இச்சிவன் கோவிலிலிருந்து சரியாக 500 மீட்டர் தொலைவில் கிரானைட் குவாரிக்காக தமிழக அரசின் கனிம வளத்துறை ஒப்புதலளித்து, மலையை பாளம், பாளமாக உடைக்கத் தொடங்கியிருக்கிறது. அரிட்டாபட்டி மலையின் அழிவைத் தொடங்கி வைத்துள்ள கிரானைட் குவாரிக் கொள்ளையர்களிடமிருந்து தங்களின் வாழ்வாதாரமான இந்த மலையைப் பாதுகாக்கத்தான் அரிட்டாபட்டி மக்கள் போராடத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது அண்மைக் கால பரபரப்புச் செய்தி. மதுரை யானைமலைக்குப் பிறகு அரிட்டாபட்டி மக்களின் ஒன்று பட்ட மக்கள் திரள் போராட்டம், மாவட்ட நிர்வாகத்தையும், கனிம வளத்துறையையும், கிரானைட் கொள்ளையர்களையும் கதிகலங்கச் செய்திருக்கிறது. கற்களை வெட்டியெடுத்துக் கொள்ள கிரானைட் குவாரிக்கு ஒப்புதலளிக்கும் அரசின் ஆணையைக் கைவிட்டு, இனிமேல் இந்த மலை எந்த விதத்திலும் சிதைக்கப்படாது என்ற உறுதி ஆணையை வெளியிட வேண்டும் என்று கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை அரிட்டாபட்டி கிராம மக்கள் மதுரையில் நடத்தினர்.

அரிட்டாபட்டி மலையைக் காக்கும் போராட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே தொடங்கிவிட்டது. கிரானைட் குவாரிக்கு ஒப்புதலளித்து டாமின் நிறுவனம் ஆணை வழங்கிய சில நாட்களிலேயே மலைகளில் எதிரொலித்த வெடிச்சத்தம், அச்சிற்றூர் மக்களின் நிம்மதியைக் குலைக்கத் தொடங்கிவிட்டது என்பதுதான் உண்மை. கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் நாள் குவாரி நடத்த உத்தரவிட்டாலும், சிறிது சிறிதாக உடைக்கப்பட்டு, மலையிலுள்ள வரலாற்றுச் சின்னங்களும், நீர்ச்சுனைகளும் பாதிக்கப்படுமளவிற்கு நெருங்கி வரத் தொடங்கியதும் மக்கள் விழித்துக் கொண்டனர். மேலூர் அருகேயுள்ள அரியப்பன்பட்டியைச் சேர்ந்த இரவிந்திரகுமார் என்ற வழக்கறிஞர், இந்தக் கிரானைட் குவாரியைத் தடை செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். அதனடிப்படையில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டாலும், கிரானைட் குவாரி நடத்துவதற்கான அரசின் ஆணையை உடனே கைவிடுவதுடன், இனி அரிட்டாபட்டி மலையில் எந்த வித குவாரி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படக்கூடாது என்ற ஆணையை அரசு பிறப்பிக்க வலியுறுத்தி, மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

arittapatti_400மலையின் பின்புறப்பகுதியில் கி.மு.1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழந்தமிழ்க் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அந்தக் குகைகளில் வாழ்ந்த சமண முனிவர்களுக்கு கற்படுக்கை செய்து கொடுத்தோரின் பெயர்கள் அதில் பொறிக்கப்பட்டுள்ளன. சமண முனிவர்கள் இம்மலைக்குன்றுகளில் இயற்கையாய் அமைந்த குகைத் தளங்களில் தங்கி, அங்குள்ள மக்களுக்கு ஆன்மீகப் பணிகளுடன், கல்வி, மருத்துவ சேவைகளையும் ஆற்றி வந்துள்ளனர். அதே போன்று கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அச்சணந்தி என்ற சமண முனிவரால் உருவாக்கப்பட்ட, சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரான ஆதிநாதரின் புடைப்புச் சிற்பமும் காணப்படுகிறது. அதன் கீழே அமைந்துள்ள தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டுகளில் பாதிரிக்குடியைச் சேர்ந்த பொற்கோட்டு கரணத்தார் இக்குகையையும், சமணர் படுக்கைகளையும், சிற்பங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற தகவல் பொறிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமன்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இம்மலை திருப்பிணையன்மலை என்ற பெயரால் வழங்கப்பட்டுள்ள செய்தியும் இக்கல்வெட்டுகளின் வாயிலாக அறிய முடிகிறது. பண்டைய வரலாற்றைச் சுமந்து கொண்டிருக்கும் பெட்டகங்களாகத் திகழும் இந்த மலைகளைத்தான் கிரானைட் குவாரிகளுக்காக ஒப்பந்ததாரர்கள் கைப்பற்ற முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் இந்த பொறுப்பற்ற செயல்பாட்டிற்கு தமிழக அரசின் கனிமவளத்துறையும் பங்காளியாக நிற்கிறதே என்கிற வேதனை அரிட்டாபட்டி மக்களின் அடிவயிற்றில் நெருப்பாய் தகித்துக் கொண்டிருக்கிறது.

களிஞ்சமலை உட்பட இராமாயிமலை, தாக்குண்டுமலை, கழுகுமலை, பெருமாள்மலை என்ற பெயர்களில் நீண்ட பெரிய மலைத்தொடர் சற்றேறக்குறைய 600 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரவிக்கிடக்கிறது. இந்த மலைகளில் பொழியும் மலை நீரனைத்தும் சரிவில் வழிந்து ஆங்காங்கே அழகிய நீர்நிலைகளை உருவாக்கியுள்ளன. இம்மலைகளைச் சுற்றி குறைந்தபட்சம் என வைத்துக் கொண்டாலும் கூட, பத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருப்பதைக் காண முடிகிறது. இந்த நீர்நிலைகளின் வாயிலாக 800 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதுமட்டுமன்றி அரிட்டாபட்டி மக்களுக்கு இந்த நீர்நிலைகளே குடிநீராதாரமாகவும் திகழ்கின்றன. 'எங்களின் வாழ்வோடும், உணர்வோடும் பின்னிப் பிணைந்து கிடக்கும் இந்த மலைகளை வெட்டுவது என்பது, எங்களையும், எங்களின் தலைமுறைகளையும் வெட்டுவதற்கு ஒப்பானதாகும். அரிட்டாபட்டி மக்களை ஒட்டு மொத்தமாகக் கொன்று குவித்துவிட்டு, இந்த மலையை எடுத்துக் கொள்வதில் எங்களுக்கொன்றும் வருத்தமில்லை' என்று தழுதழுத்த குரலில் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் சாந்தி என்ற பெண்மணி.

மலையின் தெற்குப் புறம் அமைந்துள்ள அழகிய தாமரைத் தடாகத்தில் தான் தங்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர் இம்மக்கள். தண்ணீரை முழுவதுமாக மறைத்து, வெண் தாமரைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. தாமரைக் கொடியிலுள்ள இலைகள் அனைத்தும் தண்ணீரை மறைத்து பசுமைத் தடாகமாகக் காட்சியளிக்கின்றன. 'எங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாங்கள் போராடுகிறோம். அரிட்டாபட்டியைச் சுற்றியுள்ள ஒட்டு மொத்த மலைகளும் எங்கள் ஊரின் சொத்து. இதில் ஒரு கல்லைக் கூட பெயர்த்தெடுப்பதற்கு தனியார் மட்டுமல்ல, அரசைக் கூட எங்களால் அனுமதிக்க முடியாது' என்று கொதிப்புடன் கூறுகிறார் உள்ளூர்ப் பெண்மணி கக்கத்தாள். சமணர்கள் மலைகளையெல்லாம் கலைகளாய்ப் பார்த்தனர். ஆனால், சம காலத்தில் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களோ அதனை வெறும் குவாரிகளாய்ப் பார்ப்பதை என்னவென்று சொல்வது?

மதுரையிலிருந்து மேலூர் மற்றும் திருப்பத்தூர் செல்லும் சாலை வரை தனியார் நிறுவனமொன்று கிரானைட் குவாரிகளால் தனது சாம்ராஜ்யத்தை மிகப் பெருமளவில் விரிவுபடுத்தியுள்ளது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தனது செல்வாக்கைச் செலுத்தும் இந்நிறுவனத்தாரின் ஊழல்கள் குறித்தும், கடந்த திமுக ஆட்சியாளர்கள் இந்நிறுவனத்தோடு இணைந்து நடத்திய கொட்டங்கள் பற்றியும் தினபூமி நாளிதழ் ஒரு கையேட்டினை வெளிக் கொணர்ந்துள்ளது. சட்டத்திற்குப் புறம்பாக இக்கொள்ளைக் கும்பல் நடத்தும் கிரானைட் குவாரிகளால், பொதுமக்கள் மட்டுமன்றி, இந்த மண்ணின் இயற்கை வளம் பெருமளவு பாதிப்பிற்கு ஆளாகி வருகிறது. இதற்கு தமிழக அரசின் கனிமவளத்துறையும் உடந்தையாக இருக்கிறது என்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது.

சிற்ப நகரம் அமைக்கிறேன் பேர்வழி என்று யானைமலையை உடைக்கும் திருப்பணியை மேற்கொள்ளவிருந்த முந்தைய திமுக அரசு, அந்த மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தால் மூக்குடைபட்டு அவ்வாணையை திரும்பப் பெற்றுக் கொண்டது. இப்போது அரிட்டாபட்டி மலையில் கல்குவாரி அமைக்கும் ஆணையும் கடந்த திமுக ஆட்சியில்தான் வழங்கப்பட்டிருக்கிறது. தற்போதுள்ள அதிமுக அரசு இதனை உடனடியாக இரத்து செய்வதுடன், வரலாற்றுப் பெருமைமிக்க அந்த மலையில், இனி எந்த வித குவாரி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது என்ற உறுதியையும் உடனடியாக வழங்க வேண்டும் என்பதே அரிட்டாபட்டி மக்களின் ஒட்டு மொத்தக் கோரிக்கை. இதனை ஏற்றுச் செயல்பட முனைந்தால், இப்போதைய அதிமுக அரசை அந்த மக்கள் கொண்டாடி மகிழ்வார்கள். முதல்வர் ஜெயலலிதா நினைத்தால் அரிட்டாபட்டி மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு அடித்தளமிட முடியும். செய்வார் என நம்புவோம்..!  

மூலிகை மருந்து தயாரிக்கும் கல் உரல்

arittapatti_345குடைவரைச் சிவன் கோயிலுக்கு அருகிலும், ஆதிநாதர் சிற்பம் அமைந்துள்ள மலைக்குகைக்கு அருகிலும் தரையில் சமண முனிவர்கள் கல் உரல் ஒன்றை அமைத்துள்ளனர். அப்பகுதியில் கிடைக்கும் மூலிகைகளை அரைத்து அதில் மருந்து தயாரித்து உள்ளூர் மக்களுக்கு மருத்துவம் செய்துள்ளனர். அக் கல் உரல் இன்றைக்கும் சமணர்களின் ஒப்பற்ற மருத்துவப் பணிக்கு சான்றாய் விளங்குகிறது.

இயற்கையாய் அமைந்த முதலைப் பாறை

மலையின் அடிவாரத்திலுள்ள தாமரைத் தடாகத்திற்குள் நீண்டிருக்கும் ஓர் ஒற்றைப் பாறை, அச்சு அசலாக முதலை படுத்திருப்பதைப் போன்றே தோற்றம் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே உள்ளூர் மக்கள் இதனை முதலைப் பாறை என்று அழைக்கின்றனர்.

அருகருகே சமணர் வாழ்ந்த மலைக்குன்றுகள்

அரிட்டாபட்டி மலைக்கு அருகில்தான் மாங்குளம் மலை அமைந்துள்ளது. முற்காலப் பாண்டிய மன்னனும், கண்ணகியிடம் நீதி தவறி, அத்தவறுக்காக தனது உயிரையே மாய்த்துக் கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியன் பெயர் இம்மலையில் பழந்தமிழ் (தமிழ் பிராமி) எழுத்துப் பொறிப்பாகக் காணப்படுகிறது. அதே போன்று கீழவளவு மலைக்குன்றிலும் சமணர் படுக்கைகள் உள்ளன. இம்மலை கிரானைட் குவாரிக்காக வெட்டப்பட்டு தற்போது பாதியாய்ப் பிளந்த நிலையில் காட்சியளிக்கிறது. அழகர்கோவில் மலை, யானைமலை என்று தொடர்ச்சியாக சமணர்களின் வரலாற்றைச் சொல்லும் மலைக்குன்றுகள் அடுத்தடுத்து அமைந்திருப்பது தனிச்சிறப்பிற்குரியது.

ஆசீவகர்களே சமணர்கள்

தமிழர்களின் தனிப் பெரும் சமயமாக உருவெடுத்த ஆசீவகமே, சமணம் என்ற பொருளில் வழங்கப்படுவதாக வரலாற்றறிஞரும், முனைவருமான பேராசிரியர் நெடுஞ்செழியன் தனது ஆய்வில் தொடர்ந்து உறுதி செய்து வருகிறார். சில தொல்லியல் அறிஞர்கள் கூறுவதைப் போன்று வடக்கிலிருந்து வந்த சமண முனிவர்களால்தான் சமணம் இங்கு பரவியது என்ற கூற்றில் உண்மையில்லை. உண்மையிலேயே தமிழர்களுக்கென்று தனிச் சமயமாக உருவான ஆசீவகமே சமணம் என்பதாக திரித்துக் கூறப்பட்டுள்ளது. ஆகவே சமணம் என்பதை ஆசீவகம் என்ற தத்துவத்தின் பெயரில் தான் அணுக வேண்டும் என்பது பேராசிரியர் நெடுஞ்செழியன் ஆய்வின் முடிவாகும். தமிழர்களுக்கென்று உருவான தனித்த சமயமாகத் திகழும் ஆசீவகத்தின் தோற்றுநரே மற்கலி கோசலர் என்பவர். ஆகையால் சமண மலைகள், பாண்டவர் படுக்கைகள் என்று சொல்லப்படுகின்ற அனைத்து மலைகளுமே ஆசீவக முனிவர்களுக்குரியது குறிப்பாக தமிழர்களுக்குரியது என்கிறார். பேராசிரியர் நெடுஞ்செழியன் கூற்றின்படி நம் தமிழர்களால் உருவாக்கப் பெற்ற ஆசீவக சமயத்தையும், அதன் அழியாத் தடங்களையும் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையன்றோ..!   

-இரா.சிவக்குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
படங்கள்: கௌ.அழகர்