பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது சிரிப்பதற்குரிய செய்தியல்ல. இருப்பினும் ஆந்திரப்பிரதேச சிறுபாசனத்துறை அமைச்சர் திரு.டி.ஜி. வெங்கடேஷ் அதை ஒரு நகைச்சுவைக்குரிய விடயமாக நடத்தக்கூடியது என்று எண்ணுவதாகத் தெரிகிறது. செப்டம்பர் 25, 2011 நாளிட்ட டெக்கான் ஹெரால்டு இதழில் வெளியான ‘அடிப்பதைக் காசாக்குவது: பதி,பத்தினி மற்றும் பத்தாயிரம்’ என்ற தலைப்பிட்ட முதல் பக்கச் செய்தியின்படி, மோசமான கணவர்களைக் கையாளுவது என்று கருதி அறிவித்துள்ள ஒரு புதிய திட்டத்தை திரு.வெங்கடேஷ் அறிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

“உங்கள் குடிகாரக் கணவர் உங்களைத் தொட்டால் அடித்துவிடுங்கள், அதற்காக அரசாங்கம் உங்களுக்கு ரூ.1000 வெகுமதி வழங்கும். நீங்கள் அவரை எந்த அளவுக்கு அடிக்கிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் ரூ.10,000 வரை பெற முடியும்” என்று கர்நூலில் ஒரு கூட்டத்தில் பெண்களிடையே அவர் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தங்கள் குடிகாரக் கணவர் அல்லது இழிவுபடுத்தும் கணவரை தெருவில் வைத்து ஒவ்வொருவரும் பார்க்கும் வகையில் அடியுங்கள், அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறியட்டும் என்று அவர் பெண்களுக்கு அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. “இதை நீங்கள் செய்தால் உங்களுக்கு வெகுமதி கிடைக்கும், உங்கள் கணவர் உங்களைத் துன்புறுத்துவதை நிறுத்தி விடுவார்” என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் இத்திட்டத்திற்கு “பதி, பத்தினி மற்றும் ரூ.10,000 திட்டம்” என்று அழைக்கப்படலாம் என்றும் கூறிச் சென்றிருக்கிறார். குடிப்பதையும் குடும்ப வன்முறையையும் குடிகாரர்களை அடிப்பதன் மூலமும் கொலைகளை மரண தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் நிறுத்திவிட முடியும் என்றால் வாழ்க்கை எவ்வளவு எளிதாகிவிடும்!

சிக்கலான நிகழ்ச்சிப்போக்கு

பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கையாளுவது அததகைய ஒரு எளிய விடயம் அல்ல. முதலாவது, பெரும்பாலான வன்முறை குடும்பத்திற்குள் நடக்கிறது. இரண்டாவது, பெண்கள் சமூகமயமாக்கப்படும் முறையில், குடும்ப வன்முறை திருமணம் செயவிக்கப்படுவதன் ஒரு இன்றியமையாத பகுதியாக இருக்கிறது என்பதைப் பெரும்பான்மையினர் ஒப்புக்கொள்கின்றனர். இருப்பினும், வெகு சிலரே அதை வெளியில் தெரிவிக்கிறார்கள்.

தேசிய குற்றப் பதிவுகள் துறை (NCRB) ‘பெண்களுக்கு எதிரான குற்றங்களை’ ‘கணவர் மற்றும் உறவினர்களால் கொடுமை இழைக்கப்படுதல்’ என்ற தலைப்பில் வகைப்படுத்துகிறது. 2009ல் ‘பெண்களுக்கு எதிரான வன்முறை’யாகப் பதிவுசெய்யப்பட்ட 2,93,804 குற்றங்களில் 89,546 ‘கணவர் மற்றும் உறவினர்களால் இழைக்கப்பட்ட கொடுமை’க் குற்றங்கள் ஆகும். மேலும் தற்செயலாக ஆந்திரப்பிரதேசம் தான் நாட்டில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 12.5 விழுக்காடு பெற்று முதலிடத்தில் இருக்கிறது. அதற்கடுத்து மேற்கு வங்காளம்.

எனவே ஒருவேளை திரு.வெங்கடேஷ் இந்த வகையில் தனது மாநிலம் முன்னணியில் இருப்பதால் பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கையாள்வதற்கு ஒரு திட்டத்தை வகுக்கவேண்டும் என்று எண்ணியிருக்கலாம். ஆனால் அவரது தீர்வு, அது உணமையிலேயே ஒரு நகைச்சுவையாக இல்லாமல் தீவிரமானதாக இருக்குமானால், இது பிரச்சனையைக் கேலிக்குரியதாக ஆக்குகிறது. குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் எதிர்த்துப் போராடும் நிலையில் பெரும்பாலும் இருப்பதில்லை. படித்த பெண்கள் கூட, வெளியில் சொல்வதற்கு அல்லது காவல்துறையிடம் முறையிடுவதற்குப் பதிலாக, அன்றாட அவமதிப்பையும் உடல்ரீதியான வன்முறையையும் தாங்கிக் கொள்கின்றனர் என்பதையே இந்தியாவில் பல ஆண்டுகளின் சான்றுகளும் ஆவணங்களும் காட்டுகின்றன. அவர்களில் பலர் தங்களையே நொந்து கொள்கின்றனர். பிறர் தாங்கள் ஆதரவற்று விடப்பட்டு விட்டால் அது இந்த வன்முறையை விட மோசமான விதியாக இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

உண்மையான ஆதரவு

பெண்கள் எதிர்த்துப் போராட வேண்டும் தான். மேலும் 2005ல் இயற்றப்பட்ட குடும்ப வன்முறைச் சட்டம் அதைச் செய்வதற்கு ஒரு முக்கியமான உதவியாக இருக்கிறது. ஆனால் அவ்வாறு செய்வதற்கான துணிச்சலை அவர்கள் வரவழைத்துக் கொள்வதற்கு முன்பாக, கொடுமைப்படுத்தும் நபரிடமிருந்து உடல்ரீதியாக விலகிச் சென்று வன்முறையைப் பற்றி முறையிடுவது தவிர வேறு வழியில்லாத நிலைமையில் தங்கும் இல்லங்கள் போன்ற இடங்கள் உட்பட அவர்களுக்கு ஆதரவு தேவைப்படுகிறது. அதுபோன்ற ஆதரவு இல்லாதவரை, எதிர்த்துப் போராடுவதன் மூலம் மேலும் வன்முறையைத் தருவித்துக் கொள்ளும் அபாயத்தை தடுப்பதற்கு வாய்ப்பில்லை.

பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த தேசிய குற்றப் பதிவுகள் துறை பாலியல் வன்முறையைச் சேர்க்கவில்லை, அது தனியாக வன்முறைக் குற்றங்கள் என்ற தலைப்பில் வகைப்படுத்தப்படுகிறது. இது ஒட்டுமொத்தமாக குறைத்து மதிப்பிடப்படும் குற்றம் என்று நாம் அறிவோம். இருப்பினும் பாலியல் வன்முறைக் குற்றம் அதிகரிக்கும் தரவுகள் கடுமையாக இருக்கின்றன. 1971லிருந்து 1991 வரை இரண்டு பத்தாண்டுகளில் ஒவ்வொரு பத்தாண்டும் இரு மடங்கு அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது. 2001லிருந்து 2009 வரை அந்த நிகழ்வுகள் 16075 லிருந்து 21397க்கு உயர்ந்துள்ளன. இந்த வழக்குகளில் 94.2 விழுக்காடு குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் 26.9 விழுக்காடு அளவில் மட்டுமே தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் தயக்கத்தை விடுத்து பாலியல் வன்முறைக் குற்றதைத் பதிவு செய்த போதிலும் ஏன் வழக்குகளில் விடாமுயற்சியுடன் தொடர்வதில்லை என்பதற்கு இதுவே காரணம். பலநேரங்களில் வழக்கு எவ்வளவு நாட்களுக்கு நீண்டுகொண்டே செல்லும், தண்டனை பெறச் செய்வது எவ்வளவு கடினம் என்பதை அறிந்ததும் அவர்கள் வழக்குகளிலிருந்து பின்வாங்கிக் கொள்கிறார்கள்.

இது தொடர்பாக டெல்லியில் சமூக ஆய்வுக்கான மையம் பாலியல் வன்முறை குறித்து மேற்கொண்ட ஒரு சிறிய ஆய்வு, பெண்களுக்கு எதிரான வன்முறையின் இன்னொரு அம்சத்தை வெளியே கொண்டுவந்துள்ளது. அந்த மையம் 2009லிருந்து 2011 வரை பாலியல் வன்முறை குறித்த 58 முதல் தகவல் அறிக்கைகளை ஆராய்ந்தது. அந்த ஆய்வு பாலியல் வன்முறை குறித்த பிரபலமான பல கற்பிதங்களைப் பொய்யாக்கியிருக்கிறது. எடுத்துக்காட்டாக, பாலியல் வன்முறை நிகழ்வுகள் அதிகரிப்பது குறித்த கூச்சல் இருக்கிறது, காவல்துறை அதிகாரிகள் உடனடியாக பெண்கள் இரவில் வெளியில் செல்லவேண்டாம் என்று அறிவுரை கூறுகிறார்கள். பெண்கள் இரவில் மட்டும் தான் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்று கருதப்படுகிறது. இருப்பினும், 7 நிகழ்வுகள் காலை 6 மணியிலிருந்து 12க்கு இடையிலும் 17 நிகழ்வுகள் மதியம் 12 மணியிலிருந்து மாலை 6 மணிக்கு இடையிலும், 12 நள்ளிரவிலும் நிகழ்ந்துள்ளதை அந்த சமூக ஆய்வு மையத் தரவு காட்டுகிறது. வேறு சொற்களில் சொல்வதானால் மிகுதியான பாலியல் வன்முறைகள் பகல் நேரத்தில் காலையில் அல்லது மாலையில் தான் நடந்துள்ளன.

குற்றங்கள் குறித்த உண்மைத் தகவல்கள்

பெண்கள் வீடுகளில் தான் ‘பாதுகாப்பாக’ இருக்கிறார்கள் என்ற அபாயகரமான பொது நம்பிக்கையை இத்துடன் இணைத்துக் காணும்போது, அந்த 58 நிகழ்வுகளில் 9 பலியானவர்களின் வீடுகளில் தான் நடந்துள்ளது. மேலும் பாலியல் வன்முறைகளில் பெரும்பான்மை பெண்களுக்குத் தெரிந்த ஆண்களாலேயே நடந்துள்ளன. உண்மையில், ஆய்வு செய்யப்பட்ட 58 வழக்குகளில் குற்றவாளிகளில் 51 பேர் உறவினர்கள், அண்டைவீட்டுக்காரர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் அல்லது தெரிந்தவர்களாக இருந்தார்கள். இன்னும் மோசமானது பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் 20 வயதுக்குட்பட்டவர்கள், அவர்களில் 22 விழுக்காடு 10 வயதுக்கும் குறைவானவர்கள். இவ்வாறாக, பெண்கள் வெளியில் போலவே வீடுகளிலும் பாதுகாப்பற்றவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் புதிய ஆட்களைப் போலவே அறிந்தவர்களாலும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள், மேலும் வயது, குழந்தைகளானாலும் கூட, பாலியல் வன்முறைக்கு தடையாக இருப்பதில்லை.

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒரு மோசமான நகைச்சுவை; ஆனால் நாம் அதைக் கேட்டு சிரிக்க முடியாது.           

தி இந்து-02.10.2011.

கல்பனா சர்மா   
தமிழில்: வெண்மணிஅரிநரன்