சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவகர், அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆய்வு பட்டத்திற்கான (பி. எச்டி. ,) மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில் அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள்தான் இருக்கின்றன என்று கூறியுள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னால் தமிழகத்திற்கு வந்த ராகுல்காந்தி கல்விக் கூடங்களையும், இருக்கைகளையும் அதிகப்படுத்தினால் இட ஒதுக்கீடு தேவை இருக்காது என்று பேசிவிட்டுச் சென்றார். துணைவேந்தரின் பேச்சும், இராகுல்காந்தியின் பேச்சும் சீட்டுகள் அதாவது எண்ணிக்கையை அடிப்படையாக வைத்துப் பார்க்கப்படுவதுதான் இடஒதுக்கீடு என்பது போலத் தோற்றமளிக்கிறது.

இடஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனம் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசு கொடுக்கும் சலுகையல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்த மக்கள் சாதி மத ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்டுள்ளார்கள். இவர்களின் சமூக , பொருளாதார நிலை இவர்களின் வாழ்வியலில் இருந்து பிடுங்கப்பட்டுள்ளது.

பார்ப்பனர்களின் கல்வியோடு, பிற்படுத்தப்பட்டவர்கள் போட்டியிட முடியாது. பிற்படுத்தப்பட்டவர்களின் (பார்ப்பனர் களையும் சேர்த்து) கல்வியுடன் தாழ்த்தப்பட்ட பழங்குடி இன மக்கள் போட்டியிட முடியாது. சாதிய ஒடுக்கு முறைகளினால் கல்வியிலும் கூட சமத்துவம் அற்ற ஏற்றத் தாழ்வுகள் நிலவிவிட்டன. இவைகளை எல்லாம் கருத்தில் கொண்டுதான் டாக்டர் அம்பேத்கரின் கடுமையான போராட்டத்தால், இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றது. தந்தை பெரியாரின் கடும் முயற்சியால்தான் இடஒதுக்கீடு பற்றிய இந்தியாவின் முதல் சட்டத்திருத்தமே நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இடஒதுக்கீடு எண்ணிக்கையைப் பொறுத்தது அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக மேம்பாடு குறித்தது. இது அவர்களின் உரிமை. அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் தம் கருத்தை மறுபரிசீலனை செய்வார் என்று நம்புகிறோம்.

தீயிட்டுக் கொளுத்துவாரா தொகாடியா!

பசுவின் மூத்திரத்தைப் பிடித்து மருந்து செய்யச் சொல்லிக் கொண்டிருக்கும் பிரவின் தொகாடியா, பசுவதை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் கடுமையான சட்டம் தேவை என்று திருச்சியில் பேசி இருக்கிறார். அப்படியானால் திரிசூலங்களை வழங்கி மனித கொலை வெறிப் பேச்சு பேசிய தொகாடியாவுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும்?

உலக அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் மரண தண்டனை என்ற தண்டனையையே முற்றாக நீக்கிவிட்டன. அப்படி இருக்க, பசுவை வதை செய்தால் மரண தண்டனையாம். ரிக்வேதம் மாட்டு இறைச்சியுடன் மதுவைச் சேர்த்து ‘ மதுபர்க்கா ’ என்ற உணவைச் செய்து ஆரியர்கள் சாப்பிட்டதாகச் சொல்கிறது. சோமபானமும், மாட்டு விதைகளையும் இந்திரனுக்குப் பார்ப்பனர்கள் படைத்ததாக அதே ரிக்வேதம் சொல்கிறதே. 11 பசுக்களையும், 18 பசுக்களையும் பலிகொடுத்து யாகங்கள் செய்த கதை வேதங்களில் இருக்கிறதே! பசுவின் இறைச்சியும், காளைமாட்டு இறைச்சியும் பார்ப்பனர்களின் விருப்பமான உணவு என்று சூக்தங்கள் சொல்கிறதே!

அப்படியானால் இவைகளை எல்லாம் சொல்லும் ரிக் போன்ற வேதங்களையும் , சூக்தங்களையும் தீயிட்டுக் கொளுத்தச் சொல்வாரா பிரவின் தொகாடியா?

- எழில்

Pin It